நீயா நானா- சல்லிக்கட்டு!

எனக்கு, மாடு அணையும் விருப்பம் இன்னும் உண்டு!

நீயா நானா நிகழ்ச்சியில் சல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள், என்ன மனநிலையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள் என விளங்கவில்லை!

எங்கள் குடும்பங்களில் எங்களுக்குத் “தெரிந்து” யாரும் சல்லிக்கட்டுக்குப் போனார்களா எனத் தெரியவில்லை.  ஆனாலும் பெரியப்பா/சித்தப்பாக்கள் பிச்சைராஜன், நடராஜன், சந்திரசேகர் (அட.. அனைவரும் மாடசாமிகள் வெண்விடையேறும் வீமன் நாமம் கொண்டோர்!), மேல் நிறைய சந்தேகம் உண்டு!

என் அப்பா சில முறை “பார்ப்பதற்காக” சென்றதாகக் கூறியதாக ஞாபகம், நான் மாடு அணைய வேண்டும் எனக் கேட்கும் போதெல்லாம், என் அம்மா மிக எளிதாகத் தடுத்துவிடுவார்கள்.  சிறுவயதில், அவனியாபுர சல்லிக்கட்ட்டைத் தாண்டி ஓடிவரும் காளைகள், திடீர் திடீரென்று அங்கங்கு வெறித்து ஓடிவருவதைக் கண்டிருக்கிறேன்.  சிறுபயலாக நின்று கொம்பைப் பிடித்து அப்படியேத் தலைக்கு மேல் சுற்றி விட்டடிக்கவேண்டும் எனத் தோன்றும்.  ஆனால், சல்லிக்கட்டு இல்லாத நேரத்திலேயே, சும்மா போய்க் கொண்டிருக்கும் காளைகள் பலமுறைக் குத்தித் தூக்கி எறியப்பட்ட அனுபவங்கள் பல உண்டு.

எனக்கென்னவோ என்னுடைய இந்த அனுபவத்தை வைத்து எதிர்த்திருந்தால் கூட, அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும் போல.. நிகழ்ச்சியில் பேசியவர்கள் எதற்கு எதிர்த்தார்கள் எனத் தெரியவேயில்லை.  மண்ணுக்குத்திக் காளையிடம் தூரத்தில் நின்று வீரவசனம் பேசியது போல் ஆகிவிட்டது.   ஆனால் சல்லிக்கட்டு வேண்டுமெனும் அந்த அறிவார்ந்த ‘கிராமத்தான்கள்’ bibliography-பனுவல் உசாத்துணை முதற்கொண்டு தந்தும்,  நாகரீகவாதிகளின் சொல்லாடல்கள் மிருகவதை,  கிராமத்தான், காட்டுமிராண்டி, புலியையடக்குக, கொஞ்சமேக் கொஞ்சமாய் பெண்ணியம்- சல்லிக்கட்டு செல்பவரின் அம்மா/பெண்டாட்டி உணர்வுநிலை வழியாக, என்பனத் தாண்டி கொஞ்சம் கூட நகரவில்லை.

ஒரு கொரியன் படத்தை (தமிழ்ப்படுத்தியதை)ப் பார்க்கும் போது, அதில் உள்ளக் குழந்தை அப்பாவை “டாடி” என அழைப்பது போல் குரல்படுத்தியிருந்தார்கள், தமிழில் பேசியவர்கள்; (என் மனநிலை அடப்பாவிகளா..!) இதில் கூத்து, அவர்கள் மொழியில், “அப்பா, அம்மா”வென்றே அக்குழந்தை அழைத்திருக்கும்!  அடடே! எப்படியானது எம் தமிழ்ச்சமூகம்…  இம்மாதிரி விவாதங்களில், தமிழ் “பண்ணி” மொழியாக ஆகியே விட்டது!  கடைசியில், பரிசு நிறைய ஆங்கிலம் பேசிய அந்த தமிழ் அம்மையாருக்கு வழங்கப்பட்டது, ஆயினும் அவர் அதைக் கவனித்தது போல் தெரியாதது கண்டு, கோபிநாத் அவர்களின் நக்கல் “ரொம்ப தமிழ் பேசியதால் உங்களுக்குப் புரியவில்லை போல!!”  😛

கிராம வழக்கங்கள் முழுவதும் புரியாத, ஆடு மாடு நேரடியாக வளர்க்காத ஒரு கிராமத்தான் எனினும், எனக்கும் மாடு அணையும் விருப்பம் இன்னும் உண்டு!
#SaveJallikkattu