பிறமொழி எதிரியா? அல்லது மொழித்திணிப்பு எதிரியா ? – ஒரு மேலோட்டமான வாதம்!

ஏன் இப்பொழுது #StopHindiImposition #StopHindiImperialism போராட்டம் எனவும், தமிழ் தமிழ் என எதற்குப் பேசுகிறீர்கள், மற்ற மொழிகளைக் கற்க வேண்டாமா எனவும் கேட்ட நண்பருக்கானப் பதில் இது.

எனக்கும் தங்களின் கேள்விகளில் எந்தப் பிரச்சினையுமில்லை.  இது அரசியல் சார்ந்த மொழிப் போராட்டம், இதை இப்பொழுது தடுத்தால் தான் உண்டு, இந்தி சொல்லித்தருபவர்களும் படிப்பதற்கு வசதியும் நம்மிடத்தில் இல்லாமல் இல்லை, அதையும் தாண்டி உட்புகுத்துவது தானேப் பிரச்சினை.

பிரதமர், எனக்கு இந்தித் தெரியாமல் போயிருந்தால்?? என்று கூறுவதும், நேதன்யாகு இந்தியில் வாழ்த்து அனுப்பியிருந்தார் போன்ற சப்பைக்கட்டையும் என்னவென்று சொல்ல? எனக்குக் கூடத் தான், தமிழேத் தெரியாத, என் செர்மன் நண்பர்கள் தமிழில் வாழ்த்துக் கூறுவார்கள்.  அவர்களுக்கு அப்படிக் கூற வேண்டிய அவசியம் என்ன வந்தது. ஒரு மனிதன் எதில் கேட்டால் மகிழ்ச்சியுறுவானோ அதில் வாழ்த்துகிறார்கள்.  நாம் அவர்கள் மொழியை மதிக்கிறோம், அவர்கள் நம்மொழியை ஏற்றுகிறார்கள்.

ஆயினும் என்னுடைய செர்மன் பேராசிரியர் நண்பர்கள், நாம் பேசுவதை விட நல்ல தமிழ் பேசுபவர்கள்!!  அதில் ஒருவர், தமிழுக்காக அகராதி எழுதுகிறார்.  அவர் சொல்வது ஒரு விசயம் தான், நூற்றாண்டுக் கணக்கான ஒரு மொழிக்கு (செர்மன்) ஆயிரக்கணக்கில் அகராதி, அதுவும் ஒரே மொழிக்கு, வட்டார வழக்குக்கான அகராதியே அவ்வளவு உள்ளன; ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையானத் தமிழுக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அகராதிகள் உள்ளன.. அப்படியெனில் எந்த அளவுக்கானது உங்களுடைய தமிழின் மீதான மரியாதை என்பது.   இதற்கு கட்டாயம் நம்மிடம் பதில் கிடையாது, தவிர, கணித்தமிழ், மற்றும் புதிய துறைசார்ந்த வார்த்தைகள், தொல்காப்பியம் நன்னூல் கூறும் வழியில் உருவாக்கும் நண்பர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.  அவர்களால் தான் தமிழ் விக்கிப்பீடியாவும், விக்சனரியும் உருவாக்கப்படுகிறது.

எல்லா மொழியையும் பயில்வோம், ஆனால், திணிக்க முற்படுவது நல்லதல்ல.  சப்பான், செர்மன், பிரான்சு, ஸ்பெயின், போர்த்துகல், இரஷ்யன் என எல்லா ஊரிலும் அந்த மொழியிலேயே விஞ்ஞான ஆய்வுகள் நடக்கிறது. இவ்வளவு ஏன், என்னுடைய ஆய்வுக்கழகத்தில் (செர்மனி), பக்கத்தில் உள்ள ஒரு ஆய்வுக்குழு மொத்தப் பேரும் ரஷ்யர்கள், அவர்களின் ஆய்வறிக்கை, பேசுவது, ஆய்வுக் கூட்டம் என அனைத்தும் ரஷ்யன் தான்.  ஆய்வு வெளியில் வரும் பொழுது, ஆங்கிலத்தில் வர வேண்டியது அவசியம் தான்.  அதற்காக ரஷ்யனில் வேலையாற்றக் கூடாது என எதாவது உள்ளதா என்ன?!

ஆங்கிலக் கலப்பில்லாமல்.. என்பது சரியானக் கேள்வி தான், அதற்காக அது சரியில்லை என்பதால், ஆங்கிலத்திலேயோ அல்லது வேறு மொழியிலேயோ மொத்தமாக மாற்றுதல் என்பதும் சரியன்று.    மொழியானது வளரும் பரிணமிக்கும் முன்னும் பின்னும் போகும், ஆனால் அதற்கு காரணம் மக்களூம் சமூகமும் தான்.  இது தான் உயர்ந்தது என்று சொல்வது எதன் அடிப்படையிலானது என்பதும் மிக முக்கியம், அதற்கு விஞ்ஞான ரீதியாகவும், இலக்கியரீதியாகவும் ஆய்வுகள் நடக்க வேண்டும்.   விட்ட இடத்திலிருந்து ஆய்வினைத் தொடர வேண்டும், அதற்குப் பணம் வேண்டும், அதற்கு நம்மை நம் அரசாங்கம் மதிக்க வேண்டும். அதனால் விளையும் போராட்டம் இது. தங்களுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை, தமிழில் ஆய்வு செய்வதற்கும், தமிழ் தொல்லியலில் ஆய்வு செய்வதற்கும் எவ்வளவு முட்டுக்கட்டைகள் உள்ளன என?  தொல்லியல் துறை ஆட்களிடம், அதுவும் வட இந்தியர்களாய் இருந்தால், சிந்து சமவெளி பற்றியோ, ஆதிச்ச நல்லூர் பற்றியோப் பேசினால், வெகு எளிதாக உங்களை அடுத்த முறை காணும் போது ஒதுக்கிவிடுவார்கள், அதில் ஏன் ஆய்வு செய்ய வேண்டும் என முட்டாள்தனமாய் கேட்ட ஆய்வாளர்களையும் பார்த்திருக்கிறேன்.

தமிழை வைத்து ஏன் உங்களால் ஏதும் செய்ய முடியவில்லை? சில ஆயிரம் வருடங்கள் பழமையான, தமிழில் எழுதப்பட்ட சட்டியும் பானையும் உலகில் பல மூலைகளில் கிடைக்கின்றன. எகிப்தியர்களுடனும் ரோமானியர்களுடனும் வணிகம் செய்வதனால், நம் முன்னோர்கள் எல்லோரும் அந்த மொழியைக் கற்றுத் தான் வணிகம் செய்தனரா? பிற மொழியைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருக்கட்டும் நல்லது. நாம் ஏன் நம் பெற்றோருக்குப் பிறந்தோம், புகழ் பெற்ற ஆட்களுக்குப் பிறந்திருக்கலாமே போன்று பேசுவதே இப்படி உரைப்பது. இவ்வளவு யோசிக்கும் தங்களுக்கு, நம் மொழியை வைத்து ஏன் ஏதும் செய்ய முடியவில்லையென யோசியுங்கள், அதற்குரிய மாற்று என்னவோ அதை யோசிப்போம், அதை விட்டு விட்டு மொழியை அழிப்பதற்கான வேலைகளைச் செய்வது எவ்விதத்திலும் அழகல்ல.

மேலோட்டமான வாதத்தில் எனக்கும்  நம்பிக்கை கிடையாது, இருந்தாலும் எல்லோரும் ஆய்வாளராய் இருந்து தான் இதைச் செய்யவேண்டும் என்ற அவசியமும் கிடையாது.  அதனால், இதைச் சரியான ஓட்டமாக உணர்ந்தால், ஆதரவு தாருங்கள்! 🙂

#வாழ்க_தமிழ் #StopHindiImposition #StopHindiImperialism.