நிரந்தர அண்டக் கோட்பாடு- இறைவன் – விவாதம்

இராய் சௌதுரி சமன்பாடு (Raychaudhuri equation) என்பது ஆரம்பமும் முடிவும் இலாத அண்டத்தைப் பற்றியது.  அதனடிப்படையில் இராய் சௌதுரியின் மாணாக்கரான சூர்ய தாஸ் அவர்களின் ஆய்வைப் பற்றி வந்த செய்தியை [1]மொழியியல் பேராசிரியர். தெய்வசுந்தரம் அவர்கள் பகிர்ந்ததனால் விளைந்த விவாதம் இது.

அண்டத்தின் அடிப்படையை, ஈர்ப்பியல் மற்றும் இழைக் கோட்பாடுகள் வழியாக பார்க்கலாம் என நினைக்கிறார்கள். குவாண்டம் ஈர்ப்பியல், இழைக் கோட்பாடுகள் சார்ந்த அளவீடுகளைக் காண சரியானக் கருவிகள் நம்மிடம் இல்லை. அதாவது, அப்படிக் கருவிகள் இருக்கும் பட்சத்தில், அக்கருவிகளே, இயற்கையின் மீச்சிறு அல்லது மீப்பெரு அளவுகளைக் கண்டறியக்கூடியனவாக (எ.கா. மீச்சிறு நேரம் 10^{-50} நொடிகள், பேரண்ட மாறிலி 10^{-123}, கருந்துளை அடர்த்தி 10^{+100}\, kg/m^3— எல்லாம் தோராய அளவுகள்!) இருக்கும். இதற்கு மறைமுக அர்த்தம், நம்மால் அம்மாதிரியானக் கருவிகளை உருவாக்க முடியாது!

மேலும், தற்பொழுதுள்ள இயற்பியற் கோட்பாடுகளின் அடிப்படையில், இம்மாதிரியான அடிப்படைக் கேள்விகளைக் கேட்கும் போது, அடிமனதில் ஒருவித விழிப்புணர்வுடனேயே அணுகும், ஏனெனில் எந்நேரமும் கட்டமைக்கப்பட்ட இயற்பியல் உடைபடலாம் என்பதே ஆகும்! நண்பர் ஒருவர் சொன்னது போல், ஊகங்கள் என்பது வெற்று யோசனைகள் அளவிலானவை கிடையாது, சில ஆய்வுகளில் வெற்றிகளைக் காணும் ஒரு கோட்பாட்டை, அவ்வெற்றிகளைத்தாண்டி/புரிதலைத் தாண்டி அங்கிட்டும் இங்கிட்டும் நீட்டியமைத்தால், பல விதங்களில் புதிய விடைகள் கிடைக்கும். அதனடிப்படையில் ஆனது தான் இது. ஸ்டெடி ஸ்டேட் அல்லது நிரந்தர அண்டக் கோட்பாடு ஒரு பக்கம், பெருவெடிப்பு, பெருங்குறுக்கக் கொள்கையைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது!

பேரா. தெய்வசுந்தரம்: ” அனைத்துமே பல பருண்மையான தரவுகள் ( material basis) அடிப்படையில்தான் முன்வைக்கப்படுகின்றன. அத்தரவுகள் , கணிதத்தையும் பிற அறிவியல்துறைகளின் அடிப்படைகளையும் கொண்டு அறிவியல் அறிஞர்களால் விளக்கப்படுகின்றன. அந்த விளக்கங்களில் சில ஊகங்கள் ( hypotheses) முன்வைக்கப்படுகின்றன. இந்த ஊகங்கள் எல்லாம் வெறுமையிலிருந்து (from “nothing”) உருவாக்கப்படவில்லை. இந்த ஊகங்களுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கலாம். அண்டத்தின் பண்புகள் பற்றி … இன்றுவரை வைக்கப்பட்டிருகிற ஊகங்கள் அனைத்தும் …. (எனக்குப் புரிந்தவரையில்) அண்டத்திற்கு ”படைப்பாளி” … ”இயக்குநர்” இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.”

Material basis என்பது சற்று இடறக் கூடியது, உதாரணத்திற்கு குவாண்ட புலக் கோட்பாட்டின் அடிப்படையே, வெற்றிடத்தில் ஏற்படும் அதிர்வுகளின் விளைவுகள் தாம். மேலும், இழைக் கோட்பாட்டிலும், அடிப்படைப் பருப்பொருளாக இழையைக் கொண்டாலும். அதுவும் ஒரு குறியீடு தான், மற்றபடி அதன் பரிமாணம் ஆற்றலாலானது. பெருவெடிப்புக் கொள்கை எனக் கொண்டாலும், ஆதிப்புள்ளியில் அனைத்தும் சக்தி வடிவமாகத் தான் இருந்தது. திரும்பவும் ஆதிப்புள்ளியில் உள்ளப் பிரச்சினை–singularity எனப்படும் முடிவிலி. நமக்கு வெடிப்புக்கு அப்புறம் ஒவ்வொரு நொடியிலும் என்னென்ன உருவாகியிருக்கும் என ஓரளவுக்கு ஊகிக்க முடிவதற்கு காரணம், தற்பொழுதுள்ள அண்டத்தில், நம்மால் உணரப்பட்ட விதிகள். இது ஒருப் பக்கம்.

நாகார்ச்சுனர் (மூலமத்தியம காரிகை) போன்ற தத்துவவியலாளர்கள், வெறுமையின் நீள அகலங்களைக் காணச் செய்த முயற்சிகளையும் நம்மால் காண முடிகிறது. குவாண்டவியலின் கட்டமைப்பும், அதன் முடிவுகளில்-அறுதியற்றத் தன்மையும் வெவ்வேறு விளக்கங்களைத் தேடுவதற்கான வாய்ப்புகளை இன்னும் திறந்தே வைத்திருக்கிறது. உடலில் புரதச்சேர்க்கை நிகழும் அளவில் கூட, ஐசன்பர்க்கின் அறுதியற்ற முடிவுகளைத் தற்பொழுது காண முடிகிறது, என கடந்த வார ஆய்வுக்கட்டுரை ஒன்று விளக்குகிறது. இதன் பொருள், நாம் ஏற்கனவே குவாண்டவியலின் கரைகளில்/எல்லைகளில் நடக்க ஆரம்பித்துவிட்டோம் எனினும் அதன் எல்லைகளை உடைக்கவியலுமா எனத் தெரியவில்லை. இது இன்னொருப் பக்கம்.

இறைவனின் இருப்பை இவற்றை வைத்து சொல்ல இயலுமா என்பது மிகவும் கடினமானக் கேள்வி. இப்படி அண்டசராசரத்தை பெரிய அளவில் நாம் பேசினாலும், பெரும்பொருள் இயற்பியலிலேயே (classical physics) பல புரிந்து கொள்ள முடியாதத் தன்மையுடன் உள்ளன. வெறும் தனி ஊசலின் அலைவைப் புரிந்து கொள்வதற்கு கடுமையானக் கணக்கீடுகளும் ஆற்றல் கொண்டக் கணினிகளின் தேவைகளும் உள்ளன. இறையின் அம்சத்தை மிகப் பெரிதாகக் கொண்டால், நாம் உணர்ந்த விதிகள் அனைத்தும் சிலப் பண்புகளை அளந்து அதனால் விளைந்த அறிவில் இருந்து பெறப்பட்டனவே. அதாவது, முழுமையானப் புரிதல் என்பது நிறையநேரங்களில் தேவைப்படாது. முகநூலைப் பயன்படுத்துவதற்கு, உலாவி, அது இயங்கும் செயலி, அதன் பின் செயல்படும் எலெக்ரானிக்ஸ் என அதையும் அறியத் தேவையில்லை. ஆனால், உயர்நிலையில் அண்டம் பற்றி ஆய்வுசெய்வோர்கள் கூட இப்படி மீச்சிறு அளவில், மிக சிலப் பண்புகளை மட்டுமே வைத்து இவ்வண்டத்தின் நிலைகளை ஆய்வு செய்கிறோம். இதன் அடிப்படையில் காண்கையில் இயக்குனர் பற்றியக் கேள்விக்கு நம்மால் பெரிய அளவில் பதிலளிக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஹாகிங் அவர்கள் அவ்வப்போது இது சார்ந்து சிலக் கருத்துகளைக் கூறுகிறார்கள், அதில் நான் புரிந்தவரையில், ஒரு பொருளின் தன்மையினை, ஒரு சிலப் பண்புகளை வைத்தே, அப்பொருளைப் பற்றி முழுவதுமாக ஊகிக்க முடிகின்ற பொழுது, நம் இயற்பியலும் கணிதமும் சரியானப் பாதையில் செல்கிறது எனப் பொருள், அப்படியிருக்கும் பட்சத்தில் இயக்குனரின் தேவை எவ்வகையானது என்பதாக இருக்கலாம். ஆயினும் அவருடைய சிலக் கருத்துகள், அவருடைய சொந்த வாழ்க்கையின் அடிப்படையிலும் உள்ளது, அதை அவ்வளவுக்கே எடுத்துக் கொள்ள முடியும் என நினைக்கிறேன்.

உதாரணத்திற்கு, ஏரியில் தவளைக் கல்லெறிதல் [2], செல்டிக் கல்லின் இயக்கம் [3], மிதிவண்டியின் இயக்கம் [4] இப்படி சிறுசிறு விசயங்களில் கூட பெரிய அளவில் இயற்பியல் உள்ளது, அவை அதிசயிக்கத்தக்க வகையில் நமக்குத் தெரிந்த இயற்பியல் விதிகளுக்குட்பட்டே இயங்குகின்றன. அதாவது, இப்படி ஒவ்வொரு விசயத்திலும் அந்தந்த இயக்கத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யும் பொழுது, ஏதாவதொன்றில், இயற்பியலின் விதிகள் திருத்தியமைக்கப்படலாம். எப்பொழுதும் பரிநிர்வாணநிலையில் இருப்பதே நமக்கு நல்லது எனத் தோன்றுகிறது! 😀

தெய்வ சுந்தரம் நயினார் // Material basis என்பது சற்று இடறக் கூடியது,……. ஆதிப்புள்ளியில் அனைத்தும் சக்தி வடிவமாகத் தான் இருந்தது. // என்று நண்பர் நாகேஸ்வரன் ஈஸ்வர் கூறியுள்ளார். நான் பருண்மை (material) என்று கூறுவது…. இயங்கியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தில் கூறக்கூடிய பருண்மை அல்லது பருப்பொருள்.. இதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கம்….. நமது மனதிற்கு … புலனறிவுக்கு வெளியே …. புறவயமாக. ( Objective reality) … நமது மனத்தைச் சாராமல்…. நாம் நினைப்பதால் அது இல்லாமல், மாறாக அது இருப்பதால் நாம் அதை நினைக்கிற ( reflected in our mind) .. ஒன்றே பருண்மைத் தன்மை என்பதாகும்… எனவே சக்தி (energy) என்பதும் பருண்மைத் தன்மை உடையதே. அந்த சக்தியானது இயற்பியலில் கூறக்கூடிய பொருள்திணிவு (mass), இடம் (space ), காலம் (time) ஆகியவை உள்ள பொருளாக ஒரு காலகட்டத்தில் மாறியுள்ளது. அந்த சக்தியில் ஏற்பட்ட மாற்றம்தான் இது. வெறுமையில் (nothing) இருந்து அது தோன்றவில்லை.

தாங்கள் கூறுவது விளங்குகிறது… நான் பேச விழைவது, ontological realism, அது பார்வையாளரின் மனது அல்லது இருப்பைத் தாண்டியது. வெறுமையில் ஏற்படும் மாற்றம் எனவொன்றைக் காண இயன்றால் மிகவும் நன்றாக இருக்கும், உதாரணத்திற்கு காஸிமிர்-போல்டர் விளைவு போல். ஆயினும், இது பெருவெடிப்புக்கு அடுத்த நிலையே அதாவது, நம் இயற்பியல் விதியின் அடிப்படையில் இயங்கும் ஒன்று!

அதே போல் தாங்கள் சொல்லும் வெறுமையில் இருந்து வந்திருக்க இயலாது என்பதும் நாம் உணர்ந்த விதியின் அடிப்படையில் நாம் யோசிப்பதால் விளைவது. அதனால் தான் நான் விதிகளை உடைப்பதையோ விதிகளை மாற்றுவதையோப் பற்றிக் குறிப்பிடுகிறேன். இதில் இன்னொரு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒன்று , எனக்குப் பிடித்த சீனோ (Zeno of Elea) தோற்றமுரண்கள்.. அதிலும் நேரம் சார்ந்த முரண். அதாவது, மாறக்கூடிய ஒன்றை, மாறாததாகவே/ மாறாதது போல் இருக்கச் செய்வது. இதுவும் தெரிந்த தத்துவ விதிகளுக்கு உட்பட்டது தான், இருந்தாலும், நினைப்பதற்கு மாறான (counter-intuitive) விசயங்களை உள்ளடக்கியது. இங்கு மாற்றத்தின் அளவானது மாறுகிறது. இதையும் Gödel incompleteness theorem தாங்கிக் கொள்வதும் ஆச்சரியமானது. (எனினும், இந்த வாக்கியத்தை, தத்துவ நோக்கில், தீவிர ஆய்வுக்குட்படுத்த வேண்டும்). தங்களுடைய வெறுமையின் வரையறை பெருவெடிப்புக்குப் பிந்தையது, முந்தைய சக்தி பின்னர் மாறிப் பருப்பொருள் ஆக மாறிவுள்ளது என்பதாக உள்ளது. முந்தைய ஆதிசக்தியின் வடிவம் பற்றிய இயற்பியல் நம்மால் உருவாக்க இயலவில்லை, ஆதலால் முற்றுமுழுதாக முன்னிருந்த அனைத்துக்கும், வெடிப்புக்குப் பிந்தைய நிகழ்வுகளின் வழியாக பதில் தெரியுமாவெனத் தெரியவில்லை.

மேலும் எதிர்மத்துகள்களின் அளவு வேறுபாடு ஒரு சின்ன குறை, இது ஒன்று மற்றொன்றாக மாறும் போது சீரில்லாமல் நடந்ததையும் குறிப்பிடுகிறது. எப்படியாயினும், நான் குறிப்பிடுவன குவாண்ட வெறுமை, இழையதிர்வுகள், மற்றொருவகையில் ஒன்றுமில்லாத வெறுமை, அதாவது, வெளிகூட இல்லாதநிலை எனக் கொள்ளலாம், ஆனால் இந்த இரண்டாவது வெறுமை பற்றிய வாதம் மிகவும் அர்த்தமற்றதாகக் காணலாம், தற்பொழுதுள்ள விதிகளின் பிரகாரம், இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் அதை வைத்திருக்கிறேன்.

[1] http://phys.org/news/2015-02-big-quantum-equation-universe.html
http://arxiv.org/pdf/1404.3093v3.pdf    Cosmology from quantum potential
http://arxiv.org/pdf/1411.0753v3.pdf    Dark matter and dark energy from Bose-Einstein Condensate

[2] http://www.nature.com/news/1998/031229/full/news031229-8.html

[3] http://www.nature.com/news/the-bicycle-problem-that-nearly-broke-mathematics-1.20281?WT.mc_id=FBK_NA_1607_NEWSFBICYCLEPROBLEM_PORTFOLIO

[4] http://arxiv.org/abs/1202.6506

மொழிபெயர்ப்பும், அறிவியற்தமிழும்

தமிழாக்கம் செய்வதில் உள்ளப் பெரியப் பிரச்சினை, ஒரு மாற்றுமொழி வார்த்தையை அப்படியேத் தமிழ்ப்படுத்துவது தான். இதைப் பல நிலைகளில் விவாதிக்க வேண்டியக் கட்டாயம் உள்ளது.

எடுத்துக்காட்டாக, பொதுவாக பொருட்களின் பௌதீக நிலைகளாக அறியப்பட்ட திண்ம திரவ வாயு நிலைகள் தாண்டிய, நான்காம் நிலையான Plasma என்பதற்கு (உயர்/அதிவெப்ப)அயனிக்குழம்பு என்று தமிழில் எழுதலாம் . முதன் முதலில் பிளாஸ்மாவைக் கண்டறிந்தவர் இரத்தத்தில் இருக்கும் நிணநீர் போல் இவைப் பார்ப்பதற்கு இருந்ததால், அதை அதே பெயரால் ப்ளாஸ்மா எனக் குறிப்பிட்டார். ஆதலால், இரத்தத்தில் உள்ள ப்ளாஸ்மாவைத் தமிழில் நிணநீர் என எழுதுவதால், இதையும் இப்படியே எழுதவேண்டும் என ஒருவர் கூறினார். இப்படி ஆங்கிலத்தில் புழக்கத்தில் உள்ளதால், நாமும் எழுதினால், எப்படி அந்தப் பொருளின் தன்மையை விளக்க முடியும்? இது மாதிரி பலக் குழப்பங்களைக் காணும் போது, அறிவியற் தமிழ் இலக்கணம் வகுக்குங்கால், தமிழாசான்களுடன், அறிவியலாளர்களும் இணைந்தால் தான் சரிப்பட்டு வரும்.

விஞ்ஞானிகளும் தமிழறிஞர்களும் இணைந்து இதைச் செய்ய வேண்டுமெனும் போது, எதோவொரு இடத்தில் இரு துறையாளர்களும் இடறி நிற்குங்கால், நாம் நம் பாட்டுக்கு எழுதும் படி ஆகிறது! ஆனால் இப்படிச் சில பேர் (குறிப்பாக விக்கியில் எழுதுபவர்கள்) குந்தாங்கூறாக, சில அறிவியல் விசயங்களை மாற்றிவிடுகிறதைப் பார்க்க முடிகிறது. நான் பள்ளிப்படிக்கும் காலத்தில் பள்ளிப்புத்தகத்தில் இருந்த தமிழாக்கங்களூம் தமிழ்வழியில் எழுதப்பட்டவையும் மிக நன்றாக இருந்தன,(எ.கா. Europe -ஐரோப்பா, Euler-ஆயிலர், etc) இருப்பினும் சிலப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை (Huygens-ஹைஜன்ஸ் (இது கூட பிரச்சினையில்லை ஏனெனில் டச்சுக் காரர்களைத் தவிர மற்றவர்கள் உச்சரிப்பதுக் கடினம்), L’Hospital-லாஸ்பிட்டல், Einstein – ஐன்ஸ்டீன்.. ). ஆனால், தற்பொழுது ஆங்கிலம் பேசுபவர்கள் எப்படிப் பேசுவார்களோ, அப்படியேத் தமிழில் எழுதுகிறார்கள், ஆயிலர் (சரியான உச்சரிப்பு) – யூலர் ஆகிறது.தமிழ்நாடு பாடநூல் நிறுவன நூல்களில், தங்கள் இஷ்டங்களுக்கு ஆசிரியர்கள் மாற்றி விடுகிறார்கள். ஏற்கனவே இருக்கும் நூல்களைப் படித்தோ, தமிழாசிரியர்களுடன் கலந்தோ மாற்றுவதில்லையென்றேத் தெரிகிறது.

இப்பொழுதுத் திரும்பவும் மொழிமாற்றத்துக்கு வருவோம். சில வார்த்தைகளை, அப்படியேப் பயன்படுத்துவதில், எனக்கும் பெரிய பிரச்சினை ஏதும் இல்லை. ஆயினும் சில வார்த்தைகளைக் கையாளும் போது, அவை முழுமையானத் தகவல் பரிமாற்றத்தைத் தர முடிந்தால், மாற்றுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை என்பது என் எண்ணம்!

உதாரணமாக, quantum entanglement எனும் பதத்தை, “குவாண்ட நிலைகள் பின்னிப் பிணைந்திருத்தல்” என்று சொல்வதும் சரி தான், ஆயினும் குவாண்ட தொடர்பில்லாத் தொடர்பு / தொடர்பில்லாப் பிணைப்பு எனும் போதும், படிப்பவருக்கு, தொடர்பில்லாமல் எப்படித் தொடர்பு–இது குவாண்டவியற்பியலின் சில ‘குதர்க்கமான’ விசயங்களின் அறிமுகம்– எனும் போதும்; தொடர்பு சரி, அது அத்தொடர்பின் வேகம் எத்தகையது, எனும் போதும், பின்னால் ஒளிந்துள்ள சார்பியல் கொள்கையின் நிலையை உணர வைத்தல் எளிது. இதில் வெகு எளிதாகப் பல விசயங்களைப் புகுத்திவிடலாம்.

ஆங்கில வார்த்தை, entanglement என்பதே சரியான வார்த்தை இல்லை. அது அந்நிலையை சரியாக விளக்குவதில்லை, அதன் மூலச் சொல்லான, verschränkung லிருந்து, அரைகுறையாக மாற்றம் செய்யப்பட்டது, அதை, நாம் entanglement லிருந்து மாற்றம் செய்வது சரியானதாக எடுக்க முடியாது.

மேலும் சில விசயங்களை அதை உருவாக்கும் பொழுதும் ஒரு பெயர் வழங்கப்படும், காலம் ஆனப் பின்னர் வேறு பெயர் கொண்டோ, அல்லதுப் படைத்தவரின் பெயர் கொண்டோ அழைக்கப்படும், ஆரம்பக் கால கட்டத்தில் அதனை விளக்குவதற்கு ஆகும் வார்த்தைகளின் எண்ணிக்கைக் கணக்கும் வாதமும், வேறு ஒரு காலக் கட்டத்தில் எழுதப்படும் போது, தேவையான விளக்கங்களும் வார்த்தைகளும் மாறுபடும். ஆக, நமக்கு அக்கால கட்டத்திற்கு தகுந்தாற் போல எழுத முடியவேண்டும். அதனால் தான், பிளாஸ்மா என்றப் பெயர், அறியப்படாக் காலத்தில் இருந்ததற்கும், தற்பொழுது அதை விளங்கிக் கொண்டு, பெயர் கொடுப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளது எனக் கூறுகிறேன்.

குவாண்டப்படுத்துதல்:Quantization: துளியாக்கம், சொட்டாக்கம் என்றுக் கூறினால் என்ன??

ம்ம்.. ஆனால், அதைப் பயன்பாட்டில் காணும் போது, சிலக் குழப்பங்களை உண்டாக்கக்கூடியக் காரணிகளைக் காண வேண்டியுள்ளது. இடத்தையோ, உந்தத்தையோ குவாண்டப் படுத்துதலை. உந்தத் துளியாக்கம், இடச் சொட்டாக்கம் என்பதைப் படித்து விளங்கியப் பின்னரே உணர முடியும். உதாரணத்துக்கு இட அறுதி, உந்த அறுதி என்பது குவாண்டத் தன்மையை முழுமையாக உணர்த்த வில்லையெனினும், இடம் உந்தம் என்று இல்லாமல், கூடுதலாக உள்ள அறுதியின் அளவைக் காட்ட முடியும். ஆனாலும் இவையும் போதாது. அறுதியற்ற அறுதி அது. மேலும் துளியாக்கம், சொட்டாக்கம், பழங்கால குவாண்டவியலில் இருந்து வந்தவை. அப்பொழுது சக்தி சொட்டுக்களாக ஒளித்துகள் வருவதைக் கணக்கில் கொண்டனர். இதே ஃபோட்டான் துகளின் சுழற்சியாகப் பார்த்தால், சக்தி சொட்டு சுழற்சி என்பதுத் தவறான அர்த்தத்தைக் கற்பிக்கும்.

ஆயினும் தத்துவம் பாதிக்கவில்லையெனில், நல்லது என நினைக்கிறேன். நம் மக்களுக்கு தத்துவம் பாதித்தாலும் பரவாயில்லை, மொழிமாற்றம் செய்தே தீருவேன் என்பது சரியான நிலைப்பாடாகக் கருத முடியாது, அப்படி சிலர் செய்வதைக் காண முடிகிறது.