குழந்தையுடனொருக் கற்றல்

எங்கள் வீட்டிலேயே மூன்றுக் குழந்தைகள் எனக்கடுத்து வளரக் கண்டிருக்கிறேன், அதுவும் நல்ல வயதுவித்தியாசங்களுடன். தவிர, சுற்றி எப்பொழுதும் குழந்தைகள் இருக்கும் மாதிரியானதொரு சூழல். பக்கத்திலேயே உறவினர்கள். பெரும்பாலும் குழந்தைகள் வளரும் விதம் ஒரேமாதிரி தான் இருக்கும். செய்யும் சேட்டைகள், கற்கும் விதம், பெரியவர்கள்போல் அவர்களாக உருவகப்படுத்தும் விதம் இதுமாதிரி பல்வேறு விசயங்கள்..

இதில் என் அம்மா எங்களின் கடைத்தம்பி சரவணன் செய்த சேட்டைகளை அவர்களின் நாட்குறிப்பில் தினம் எழுதிவைக்கத் தொடங்கினார்கள், பின்னர், அது நாங்கள் நித்தம் செய்யும் சேட்டைகளையும் சேர்த்து எழுதுவதாகவும் அமைந்தது. எதுவரை எழுதினார் எனத் தெரியவில்லை. அதேபோல், என் இரண்டேமுக்கால் வயது மகனார் சிவதண்டீசுவரர் பற்றி அவ்வாறு எழுதலாம் எனத்தோன்றும், ஏனோ செய்வதில்லை.

குழந்தைகளின் மூளை பஞ்சுமாதிரி இழுத்துத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை என ஆய்வுகள் கூறுவதை அவ்வப்போது காணநேரிடும். அதை வீட்டிலேயேக் கண்கூடாகக் காண்பதும் அடிக்கடி நிகழும்! அவ்வாறு இன்றைக்கும் நேற்றும் நடந்த சில நிகழ்வுகள்…

சற்றுநேரம் முன், ஒரு இழைக்கோட்பாட்டு (string theory) ஆய்வுக்கூட்ட உரையில், K3-பரப்பையும் (surface) R^4 இரீமன் பரப்பின் (R4 Riemann Surface) துண்டையும் இடவியலைக் (Topology) கொண்டு இணைத்து ஒரு படத்தை ஒரு ஆய்வாளர் விவரித்துக் கொண்டிருந்தார். என் இரண்டே முக்கால் வயது சிவதண்டீசர் அதைப் பார்த்துவிட்டு “என்னப்பா இது நுங்கா?” எனக் கேட்டதும் அட ஆமா எனத் தோன்றிற்று. அச்சிறு கண்களுக்கும் இடவியல் கண்ணோட்டம் அத்தனைத் தெளிவாக இருப்பதைக் காணமுடிகிறது! போனவாரத்தில் தான் நுங்கு என்பதை முதன்முறைப் பார்த்தான்!  

இழைக்கோட்பாட்டு ஆய்வுரைக்கு சற்றுமுன், என் மனைவி வேலைசெய்யும் ஆய்வுக் குழுவுக்கு யாரையோ நேர்கண்டு பேட்டிக் கண்டிருக்க, நாங்கள் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தோம், இவன் திடீர் என்று “எனக்கு கத்தி வேண்டும், தண்ணீர்ப்பழம் நறுக்க…” என்று ஒரே ஆர்ப்பாட்டம்– மதியம் அவன் அழுகையை திசைதிருப்ப அப்படிச்செய்தனர் போல. நான் சிறுபிள்ளை கத்தியை எடுக்கக்கூடாது என.. உடனே அம்மாவின் துணைநாடி அம்மாவெனக் கத்திகொண்டே மனைவியின் அலுவல் அறைக்குச் சென்றுக் கதவைத் திறந்தான். அங்கே சூம் மீட்டிங்கில் அவள் இருப்பதைப் பார்த்துவிட்டு, கதவை சத்தமில்லாமல் மூடிவிட்டு, தலையில் கையைவைத்து “ஐய்யோ.. ” என சத்தம்போட்டு அழ.. எனக்கு சிரிப்புத் தாளவில்லை.

கொழுந்தியாளின் பிள்ளைகள் வந்திருக்கின்றனர், அவர்களில் சிறியவன் விசுவேசன் “பெரியப்பா.. சிவதண்டீசு, சேட்டைபண்ணுகிறான்” என்றான், “சேட்டைப் பண்ணாதே” என்றும் கூறினான், சிவதண்டீசர் ஏதோ யோசித்துக் கொண்டே, அவன் செய்ததை அவனைப் பார்த்துக்கொண்டே செய்துகொண்டிருந்தான். எனக்கு சிவதண்டீசருக்கு விசுவேசன் சொன்னது புரியவில்லையோ என சந்தேகம். பெரும்பாலும் நேராகச் சொன்னால் உடனே சரிசெய்துவிடுவான். அதனால், “நீ சேட்டையென்று எதைச் சொல்கிறாயோ, அதை, அவனிடம் சொல்லி அதைச் செய்யாதே என சொல்” என்றேன். காலை வைத்து இடித்துக் கொண்டே ஏதோ விளையாடி இருப்பான் போல, அது விளையாட்டு மும்முரத்தில், அவனுக்கேத் தெரியவில்லை, விசுவேசன் “காலை வைத்து இடிக்காதே” என்றதும், சிவதண்டீசர் தள்ளிப்படுத்துவிட்டான். போதாதென்று, அண்ணனுக்கு ஒரு முத்தம் வேறு.. அண்ணனை துன்புறுத்திவிட்டானாம்..

குழந்தைகளின் செயல்பாடும் எண்ணமும் நேர்கோட்டில் எளிமையாக இருப்பதால், அவன் கற்றுக்கொள்வது வேகமாகவும் தெளிவாகவும் இருக்கிறது போலும். அதைவிட, நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறோம் என்ற பேரில், மொத்தமாக உழட்டுவதை இன்னும் தெளிவாகக் காணவியலுகிறது.

Leave a comment