குழந்தையுடனொருக் கற்றல்

எங்கள் வீட்டிலேயே மூன்றுக் குழந்தைகள் எனக்கடுத்து வளரக் கண்டிருக்கிறேன், அதுவும் நல்ல வயதுவித்தியாசங்களுடன். தவிர, சுற்றி எப்பொழுதும் குழந்தைகள் இருக்கும் மாதிரியானதொரு சூழல். பக்கத்திலேயே உறவினர்கள். பெரும்பாலும் குழந்தைகள் வளரும் விதம் ஒரேமாதிரி தான் இருக்கும். செய்யும் சேட்டைகள், கற்கும் விதம், பெரியவர்கள்போல் அவர்களாக உருவகப்படுத்தும் விதம் இதுமாதிரி பல்வேறு விசயங்கள்..

இதில் என் அம்மா எங்களின் கடைத்தம்பி சரவணன் செய்த சேட்டைகளை அவர்களின் நாட்குறிப்பில் தினம் எழுதிவைக்கத் தொடங்கினார்கள், பின்னர், அது நாங்கள் நித்தம் செய்யும் சேட்டைகளையும் சேர்த்து எழுதுவதாகவும் அமைந்தது. எதுவரை எழுதினார் எனத் தெரியவில்லை. அதேபோல், என் இரண்டேமுக்கால் வயது மகனார் சிவதண்டீசுவரர் பற்றி அவ்வாறு எழுதலாம் எனத்தோன்றும், ஏனோ செய்வதில்லை.

குழந்தைகளின் மூளை பஞ்சுமாதிரி இழுத்துத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை என ஆய்வுகள் கூறுவதை அவ்வப்போது காணநேரிடும். அதை வீட்டிலேயேக் கண்கூடாகக் காண்பதும் அடிக்கடி நிகழும்! அவ்வாறு இன்றைக்கும் நேற்றும் நடந்த சில நிகழ்வுகள்…

சற்றுநேரம் முன், ஒரு இழைக்கோட்பாட்டு (string theory) ஆய்வுக்கூட்ட உரையில், K3-பரப்பையும் (surface) R^4 இரீமன் பரப்பின் (R4 Riemann Surface) துண்டையும் இடவியலைக் (Topology) கொண்டு இணைத்து ஒரு படத்தை ஒரு ஆய்வாளர் விவரித்துக் கொண்டிருந்தார். என் இரண்டே முக்கால் வயது சிவதண்டீசர் அதைப் பார்த்துவிட்டு “என்னப்பா இது நுங்கா?” எனக் கேட்டதும் அட ஆமா எனத் தோன்றிற்று. அச்சிறு கண்களுக்கும் இடவியல் கண்ணோட்டம் அத்தனைத் தெளிவாக இருப்பதைக் காணமுடிகிறது! போனவாரத்தில் தான் நுங்கு என்பதை முதன்முறைப் பார்த்தான்!  

இழைக்கோட்பாட்டு ஆய்வுரைக்கு சற்றுமுன், என் மனைவி வேலைசெய்யும் ஆய்வுக் குழுவுக்கு யாரையோ நேர்கண்டு பேட்டிக் கண்டிருக்க, நாங்கள் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தோம், இவன் திடீர் என்று “எனக்கு கத்தி வேண்டும், தண்ணீர்ப்பழம் நறுக்க…” என்று ஒரே ஆர்ப்பாட்டம்– மதியம் அவன் அழுகையை திசைதிருப்ப அப்படிச்செய்தனர் போல. நான் சிறுபிள்ளை கத்தியை எடுக்கக்கூடாது என.. உடனே அம்மாவின் துணைநாடி அம்மாவெனக் கத்திகொண்டே மனைவியின் அலுவல் அறைக்குச் சென்றுக் கதவைத் திறந்தான். அங்கே சூம் மீட்டிங்கில் அவள் இருப்பதைப் பார்த்துவிட்டு, கதவை சத்தமில்லாமல் மூடிவிட்டு, தலையில் கையைவைத்து “ஐய்யோ.. ” என சத்தம்போட்டு அழ.. எனக்கு சிரிப்புத் தாளவில்லை.

கொழுந்தியாளின் பிள்ளைகள் வந்திருக்கின்றனர், அவர்களில் சிறியவன் விசுவேசன் “பெரியப்பா.. சிவதண்டீசு, சேட்டைபண்ணுகிறான்” என்றான், “சேட்டைப் பண்ணாதே” என்றும் கூறினான், சிவதண்டீசர் ஏதோ யோசித்துக் கொண்டே, அவன் செய்ததை அவனைப் பார்த்துக்கொண்டே செய்துகொண்டிருந்தான். எனக்கு சிவதண்டீசருக்கு விசுவேசன் சொன்னது புரியவில்லையோ என சந்தேகம். பெரும்பாலும் நேராகச் சொன்னால் உடனே சரிசெய்துவிடுவான். அதனால், “நீ சேட்டையென்று எதைச் சொல்கிறாயோ, அதை, அவனிடம் சொல்லி அதைச் செய்யாதே என சொல்” என்றேன். காலை வைத்து இடித்துக் கொண்டே ஏதோ விளையாடி இருப்பான் போல, அது விளையாட்டு மும்முரத்தில், அவனுக்கேத் தெரியவில்லை, விசுவேசன் “காலை வைத்து இடிக்காதே” என்றதும், சிவதண்டீசர் தள்ளிப்படுத்துவிட்டான். போதாதென்று, அண்ணனுக்கு ஒரு முத்தம் வேறு.. அண்ணனை துன்புறுத்திவிட்டானாம்..

குழந்தைகளின் செயல்பாடும் எண்ணமும் நேர்கோட்டில் எளிமையாக இருப்பதால், அவன் கற்றுக்கொள்வது வேகமாகவும் தெளிவாகவும் இருக்கிறது போலும். அதைவிட, நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறோம் என்ற பேரில், மொத்தமாக உழட்டுவதை இன்னும் தெளிவாகக் காணவியலுகிறது.

கற்றலும் சமூகமும்

அப்பொழுது நான் இளநிலை மாணவன், என்னுடைய இயற்பியலர் நண்பர்கள் கார்த்திக் மற்றும் சாயல்குடி கண்ணன் — எங்கள் கல்லூரி வகுப்பைத் துறந்து– பல்கலைக்கழக நூலகத்திலும் இயற்பியற்பள்ளியிலும் கணிசமான நேரம் அமர்ந்திருப்போம். அது பெரிய விசயங்களுக்கான காலமாகத்தான் இருந்திருக்கவேண்டும். அந்நேரம் வீட்டில் காசு வாங்கி பேருந்து பயணம் செய்து எல்லாம் போகும் நிலையில் நான் இல்லை. ஆதலால், கண்ணன் அவர்களின் மைத்துனர் நடத்திய மாலைநேரப்பள்ளியில் நானும் கண்ணனும் பயிற்றுவிப்பாளர்களாக இருந்தோம்.

நண்பர்களோடும் அவர்கள் இல்லாமலும் இயல்பானவகுப்பைத் தவிர்த்து மதுரைப் பல்கலைக்குப் போகவர இருக்க, அங்குபணியாற்றிய அக்காலத்தைய பேராசிரியர்கள், பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் ( பேரா. சீனிவாசனின் ஒரு ஆய்வுக்காகிதத்தை இதில் குறிப்பிட்டிருக்கிறேன். https://paramaaanu.wordpress.com/2015/09/04/infiniteckts-cmphys-numberth/) சிலர் பழக்கமானார்கள். அவர்கள் இன்னும் பெரிதாகப் பார்க்கப் பழகித் தந்தார்கள். எவ்வளவு அதிகமாக உண்ணுதற்கு இருந்தாலும் வாய்திறக்குமளவுக்குத்தானே சாப்பிட முடியும் அதுமாதிரி, என்னால் எவ்வளவுப் பார்க்கமுடியுமோ அவ்வளவேக் கற்றுக்கொண்டேன். இருக்கட்டும்! பேசப்போவது சில கசந்தஅனுபவந்தான் எனினும், அப்பேராசிரியர்களின் சிறுபிள்ளையென நினைக்காமல் கற்றுத்தந்ததும் கேள்விகேட்க வைத்ததும் என அவர்களின் நினைப்பே இனிக்கிறது.

சரி.. கதை, இது தான். பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் எங்களைத் தத்தெடுத்தப் பிள்ளைகள் போல், நாங்கள் என்னத்தைக் கேட்டாலும் சொல்லிக் கொடுத்துக் கொண்டும், ஊக்குவித்துக் கொண்டும் இருக்க, நான் போகும்போதும் வரும்போதும் ஒரு பல்கலைப் பேராசிரியர் தொடர்ந்துப் பார்த்துக்கொண்டிருப்பார். இவரிடமும் ஏதோவொருநாள் பேசிவிடவேண்டும் என நினைத்திருந்தேன், அவரே ஒரு நாள் என்னைப் பிடித்துக் கொண்டார். ஆனால்.. ஆங்கிலத்தில் சகட்டுமேனிக்கு நீ யார், ஏன் இங்கு வருகிறாய், அதுவா இதுவா எனக் கோபத்தில் கத்திக்கொண்டிருந்தார். நானும் தொண்டைவறள இன்னார்மகன் தொள்ளக்காதன் இதற்குத்தான் வந்தேன் எனக் குழப்பத்தில் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தேன்.

என் குழப்பம் என்னவெனில் இவர் பேராசிரியர்களோடு அவர்கள் அலுவலகத்திலும் துறைக்குவெளியில் உணவகங்களிலும் உட்கார்ந்துப் பேசும்போது பார்த்திருக்கிறாரே, ஏதோ இப்போது தான் பார்ப்பது மாதிரி கேட்கிறாரேயென. சட்டாம்பிள்ளைத்தனம் அப்படித்தான் பேசும்போல.

எல்லாவற்றையும் கேட்டபிறகு அவர், நவநீதகிருட்டிணனுக்கும் சீனிவாசனிடமும் பேசவேண்டுமானால், இப்பள்ளிக்கு/துறைக்கு வெளியே வைத்துக்கொள். உள்ளே எல்லாம் வரக்கூடாது என விரட்டினார். இதில் கூற்று என்னவென்றால், நவநீதகிருட்டிணர் துறைத்தலைவர். துறைத்தலைவராக இருந்தால் பெரிய ஆளா என்றத் தொனியில் பேசியதோடு, ஒரு கல்லூரிப் பையனைப் பலங்கொண்டமட்டும் தட்டுதற்கு ஏனோ அவர் முயன்றார். நான் சரி சரியென்றுக் கேட்டுக்கொண்டாலும் கொஞ்சம் பயந்துபோனேன். சரி என்னசெய்வது, என்னை வைத அதேப் பேராசிரியரின் அறைக்கு எதிர்ப்புறம் இருந்த நவநீதகிருட்டிணரின் அறைக்குச் சென்று அவர் சொன்னதையே சொல்லி, நான் இப்பொழுது என்ன செய்யவென்றுக் கேட்டேன்.

அந்த பேராசிரியர் நவநீதகிருட்டிணர் சொன்னது என்னை ஒருவாறு பண்படுத்தியது, ஆனால் அவர்கூறிய அளவுக்கு பண்பட்டேனா எனத்தெரியவில்லை. அவர் சொன்னது இங்கு இப்படித்தான் ஏதாவது இருந்துகொண்டேயிருக்கும், ஆனால் அதைக் கண்டு சோராதே, உனக்கு எப்பொழுது என்னவேண்டுமானாலும் நீ இங்குவா, யார் என்ன சொன்னாலும் என்னைப் பார்ப்பதற்காகவே வந்தாய் எனக் கூறு, கவலைகொள்ளாதேப்போவென வழியனுப்பினார்.

எனக்குப் புரியாத விசயம் யாதெனில், பல்கலையின் நோக்கம் என்னவென்பதும் இப்பேராசிரியர்களுக்கு அவர்களின் கடமையாதென்பதும் உண்மையிலேயேப் புரிகிறதா. வயதிலும் கல்வியிலும் மூத்தோர்கள் வளருந்தலைமுறையோடு நேரடியாகத் தொடர்பில் இருக்கும் இடம் தானே பல்கலைக்கழகம். சிறியவர்களை வளர்த்தெடுப்பது தானே அவ்வமைப்பின் நோக்கம்.

இதில் சமீபகால விரக்தி என்னவெனில், எந்நண்பர் பழைமைவாய்ந்த ஒரு பல்கலையில் துணைப் பேராசிரியர் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்க்கிறார். ஆனால் அவரைப் போட்டுப் பாடாய்ப்படுத்துகின்றார்கள். அவர் ஆய்வுக்கட்டுரை எழுதும்போது துறை முகவரியைக் கட்டுரையில் வேலைபார்க்குமிடமாகக் குறிப்பிட்டால், கூப்பிட்டு இப்படியெல்லாம் துறைப் பெயரைப் போடக்கூடாது எனவும் இன்னும் நிறைய ஒப்பந்தத்தில் இல்லாத, ஆனால் வாய்மொழியாக ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள் போல் தெரிகிறது.

மாணவனாக இருந்தாலும் பேராசிரியராக இருந்தாலும் ஒரு அமைப்பு மிரட்டிக்கொண்டேயிருக்கிறதே எனக் கோபம் வரத்தான் செய்கிறது. இது கோபப்பட்டாலும் சரியாகக்கூடிய விசயமாகத் தெரியவில்லை. ஒரு அமைப்போ அல்லது அமைப்பின் கூறோ ஒரு சிறுவனை அச்சமுறவைப்பதிலும் சகஊழியரை அச்சுறுத்துவதிலும் இவ்வளவு முனைப்பாக இருப்பதை அவ்வமைப்பின் ஆய்விலோ பயிற்றுவிப்பதிலோ காண்பித்ததுபோல் தெரியவில்லை.

இதை சரிசெய்ய மாணவர்களையும் பொதுமக்களையும் கேள்விகேட்கவும், கேள்விகேட்பவரை பெரியவர்கள்/அதிகாரிகள் ஊமைக்குத்தாகக் குத்தி முடக்கினாலும் இன்னும் ஆழ்ந்து கேள்விகேட்டுக் கொண்டேயிருக்கவும் பயிற்றுவிக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.

பெரும்பாலாக, சிறியவரின் கேள்வி பெரியோரின் செவிக்கு ஏறாததும், ஏறினாலும் கேள்வியின் தன்மைசாராமல் விட்டேற்றியாக, சிறியவர்களின் இயலாமையை அவர்களுக்கேத் திருப்பிவிட்டு, சிறியோரை மட்டம் தட்டுவதும் — எடுத்துக்காட்டாக, படிக்கும் பிள்ளை ஏதாவது கேள்விகேட்டால், நீ ஒழுங்காகப் படிப்பதில்லை, இதையெல்லாம் பேசு என மட்டம் தட்டுவது,– கேள்விகேட்க ஊக்கப்படுத்தாததும் கேள்விகேட்போரையே அசிங்கமாக நினைக்கவைப்பதுமாக அடக்கவேப்பார்க்கிறது. இது இன்றைக்கு மாணவர்களின் பிரச்சினையெனில், பின்னாளில் அது மாணவன் சமூகவூடாடலின் போது பொதுமக்களின் பிரச்சினையாகும். இவ்வாறு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்பேயில்லாதமாதிரி கல்விக்கூடங்களும் அரசுஅலுவலகங்களும் இன்னும் இருப்பது வருத்தத்திற்குரியது.

இப்படியாக உருவாக்கப்பட்ட அச்சங்கள், வெவ்வேறுநிலைகளில் வெவ்வேறு வடிவில் என்வாழ்வில் முக்கியமானத் தருணங்களில் தடையாக வந்திருக்கிறது, சிலநேரங்களில் என்னால் எதிர்கொள்ளமுடியாமலும் போக இம்மாதிரியான அச்சங்கள் தடையாக இருந்திருக்கிறது. எவ்வளவு விழிப்போடு தவிர்க்கும்போதும் அது ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதற்போல் குந்தாங்கூறாக குதித்து முன்வந்து நிற்கும்.

பல்கலைக்கழகம், காவல்நிலையம், அரசு அலுவலகம், உணவுப்பகிர்வுத் துறையின் கடைகள்/ரேசன் கடைகள், இ-சேவை மையம் என எதில் வேலைபார்ப்பவர்களாக இருந்தாலும் அவர்தம் பயனாளரை ஒருவித பயமுறுத்தலோடே அணுகுவது என்பது அக்காலத்தைய சமீந்தாரிய முறைகள் ஏதோவொரு மாற்றுவடிவில் இன்னும் உலாவருவதையேக் குறிக்கிறது… இவ்வளவு அறிவியற்றொழினுட்ப வளர்ச்சிக்கு அப்புறமும், மற்ற வளர்ந்தசமூகங்களில் உள்ள மாற்றங்கள் வளர்ச்சிகளும் அதன் செய்திகளும் நம்மால் பார்த்து உய்த்துணர வாய்ப்புகள் இருக்கும்போதும், இதுமாதிரி அச்சுறுத்தல்களோடேயே வாழ்வது, நாம் ஒரு தற்செயலாக சுமாராக இயங்கிவரும் ஒரு கட்டமைப்பில்தான் இருக்கிறோமோ என்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

பொருளற்றவாழ்க்கை / nihilism – ஒரு எளிய வெள்ளோட்டம்

பொருளில்லாத் தத்துவத்தின்/nihilism மூலம் அன்றாடவாழ்வைக் காணுங்கால் சராசரி உணர்வுநிலைத்தாண்டிய முழுமையுணர்வை எப்படிக்காணலாம் என்பதையறிய விழைந்ததால் உண்டானது இக்கட்டுரை.

1. உள்ளுணர்ந்து ஒருவர் இயங்குகிறாரோ இல்லையோ, பொதுவாக, அவருடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவருடைய உள்ளம் மகிழ்வாகவோ துன்பமாகவோ, இல்லை, எந்தவுணர்வுநிலையையும் சாராமலோக் கூட இருக்கலாம்.

2. அல்லது இறந்தும் விடலாம்

3. அவரின் இருப்பும் இறப்பும், உணர்வுப்பூர்வமாக மற்றோருக்கும் பாதிப்பை உண்டாக்கலாம்.

4. ஏதும் தேங்குவதில்லை, தங்குவதுமில்லையென்று எல்லாரும் உணர்ந்திருந்தாலும், ஒரு உந்துதலைப் பெற்றிருப்பதனாலேயே வாழ்க்கையை வாழ்கிறோம்.

4அ. ஆயினும் அவ்வகையான உந்துதல் பெரும்பாலும் அர்த்தமற்றது அல்லது தொலைநோக்குப் பார்வையில்லாது, அந்தந்த நேரத்துக்குத் தேவைக்காக செயல்படுவது.

5. இதில், பிரச்சினையென்னவெனில், இவற்றையெல்லாம் கற்றோர் கல்லாதார் எந்த நிலையில் இருந்தாலும், ஒரே மாதிரியான, படிவத்திற்குள்ளேயே சிக்குண்டிருக்கிறோம்.

6. சில படிவங்கள் கவித்துவமானவை (artisitic interpretations மெய்ஞானப் புலம்பல் போல), சில பொதுவோட்டத்தில் இருப்பவை (சொந்தபந்தங்களிடம் புலம்புவது). எப்படியிருப்பினும், திரும்பவும் முதலாம் கருத்திலிருந்தே தொடர்ந்து ஓடும்.

7. இவ்வகையில் எதுவாக இருந்தாலும், வாழ்க்கை ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

8. இடாய்ச்சு/(David Deutsch, a quantum physicist) அவர்கள் கூறியதாக சேது (@Sethu Subbar)க் (https://www.facebook.com/sethu.subbar/posts/1827768703971737?comment_id=1832085526873388&reply_comment_id=1834432536638687&comment_tracking=%7B%22tn%22%3A%22R%2321%22%7D) குறிப்பிட்டிருந்தது போல், மொத்த சூரியக்குடும்பமும், பேருணர்வுப் பெற்று சத்யயுகம் போல் இருந்தாலும், இதே போன்றநிலையிருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

9. இப்படியெல்லாம் பொருளற்றதாக இருப்பதனாலேயே, எதன்மீதும் பற்றற்று அன்பாக இருக்க வாய்ப்பு உண்டு. இடாய்ச்சுமுறையில் பேருணர்வு கொண்டு இயங்குவதாக இருந்தாலும் அன்பையுணராத் தன்மை சமூகத்தில் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

(விட்கன்சுடைன்/Ludwig Wittgenstein போல ட்ரேக்டடஸ் போல கூற்றுவகையில் எழுதத் தலைப்பட்டேன். குழப்பங்களைத் தவிர்க்க, விளக்கித் தொடர்கிறேன்.)

இதற்கெல்லாம் மொத்த அர்த்தந்தான் என்ன? ஊழ்வினை போன்றவற்றை நம்பினாலும், நம் தேவைக்கேற்ப நடப்பில் அவரவர் வசதிக்கு வாழும் முறைமையும் உள்ளது. முழுமையுணர்வையெட்ட பலவழிகள் என்பதும் ஒருவழியென்பதும் அவரவரின் வரையறைகளைப் பொருத்தது. இங்குள்ளப் பெரும்பாலான பிரச்சினைகளுக்கானக் காரணம், வழிகள் இருக்கிறதா இல்லையா என்பதும், நாம் செய்வது சரிதானா என்ற ஒப்புமைக் குழப்பத்தினாலும் தான்.

ஓர்ந்த ஓர்நிலையென்றுக் (union) கூறிக்கொண்டே, ஈர்நிலைகளையோ (நான், மற்றவர்கள்), பல்நிலைகளையோ (நான், சார்ந்தோர், சாராதார்) தேவைக்கேற்பப் பார்க்கவேண்டியிருக்கிறது. இங்கு பல்நிலைகள் என்பது, நான் என்பதற்கும் நான்-தவிர்த்த மற்றவர்களுக்கும் இடையேயானத் தொடர்பு. செய்யவேண்டியதற்கும், செய்யவியலாதநிலைகளுக்கும் இடையேயானத் தொடர்புகளையும் குறிக்கிறேன். இவ்வளவு விவாதம் நடைபெறும்போது, நாம் நம்முடைய உணர்வுகளை உருக்கி வார்க்கக்கூடிய வார்த்தையைத்தான் தேடுகிறோமேயொழிய அந்த ஓருணர்வைப் பெறுவதில்லை.

அதுபாட்டுக்கு இயங்குமொன்றுக்கு விளக்கங்கள் தந்து அதன் வடிவத்தைப் பெறமுயல்கிறோம்.

இதில் புறத்தில் உள்ளதா, அகத்தில் உள்ளதா என்பதும், இக்குழப்பங்களினால், இன்னும் பிரச்சினைகளையுண்டாக்கும் என்பதும் என் எண்ணம். வெளியெல்லாம் இழைகளாக/strings, ஆற்றற்றுடிப்புகளாக/vibrations இருக்கும் என இயற்பியல் கூறுகிறது. அவற்றைக் காணவும் இயலவில்லை, அதேநேரம் உணரவும் (lhc experiments) இயலவில்லை, ஆனால் அது இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.

இருப்பதற்குவாய்ப்பேயில்லையெனினும், நானொரு தொடர்-பருப்பொருளில்லையென்பதையும் (continuous body) இவ்வுடலத்திற்கென ஒரு அணுக்கட்டமைப்பும், அக்கட்டமைப்பில் உள்ள அணுக்களுக்கிடையே இடைவெளியுள்ளது என்பதையும், ஓரளவு இயற்பியல் விளக்கமுடியும். அப்படியானால், ஒரு சல்லடைபோல், இந்த நேர-இடப்புள்ளிகளில் இயங்கித்திரிகிறேன். அதாவது, அணுக்களுக்குள்ளும் புறமும் வெளி/space உள்ளது. ஆக, நாம் நம்மை முப்பரிமாண சல்லடையெனலாம். (நம்மில், அதிகப்பரிமாணங்கள் மற்ற அடிப்படைத்துகள்களுக்குத் தெரியலாம், புரியவில்லையெனில் விட்டுவிடலாம்)

ஒருப்புள்ளியிலிருந்து இன்னொருப்புள்ளிக்கு நகரும் ஊடுருவக்கூடியக் கதிர்கள், நாமாக மாறி, பின் வெளியேறி வேறொன்றாக வெளியேறவும் இயலும், இதனாலேயே, எனக்கு எல்லோரும் ஒருவகையில் சம்பந்தப்படலாம் எனத் தோன்றும். என்னுடலில் நுழைந்து மற்றோர் உடலில் நுழைந்து வெளியேறும், இழைகளோ/strings அல்லது துகளோ/particles இவ்வாறுத் தொடர்பை உண்டாக்கலாம், அந்தத் தொடர்பு அதிகநேரமோ, குறைந்தநேரமோ இருக்கலாம். இதனாலேயேக் கூட, ஒரு வேளை, இடாய்ச்சு அப்படியொரு முடிவுக்கும் கூட வந்திருக்கலாம். (அல்லது, உயிர்பொறியியல், சைபர்னெடிக் உயிரினம் சார்ந்த ஆய்வுத்துறை வளர்ச்சியினால் கூட கூறியிருக்கலாம்)

அதாவது, ஆரம்பத்தில் இருந்தே, ஒரு விசயத்தைக்கூறிவருகிறேன், வைரஸ், வயிற்றிலுள்ள நுண்ணுயிர் பாதிப்பினால், ஏற்படும் உயிரியல் கொந்துதல்/hacking, வேதிக்கொந்துதல், வேறுவகையானத் தொழிற்நுட்ப கொந்துதல் மூலம் எந்நேரமும் நாம் நாமாக இருப்பதாக நினைக்கிறோம், செய்கிறோம், ஆனால், அது உண்மையில் நாமாக இல்லாமலும் இருக்கலாம் என்பது.

ஆக, நான் என்று யோசித்திருப்பதை சரிவர செய்கிறோமா என்பதே நமக்குத் தெரியவில்லையெனில். எது சரியாக இருக்கமுடியும்.

நாம் முழுமையுணர்வுபெறுவதற்கு பற்பல வழிகளையமைத்திருக்கிறோம், ஆனால், அவ்வழிகள் பெரும்பாலானோர்க்கு எதையும் காண்பிப்பதில்லை. நாம் முழுமையுணர்வுக்கான வழியில் இருக்கிறோம் என்பதும் இல்லையென்பதும், இயல்பில் ஒப்புமைப்படுத்துதலில் வருவது. மேலும், ஒருவேளை முழுமையுணர்வு பெறுவதற்கான வழிமுறைகளாக நாம் கொண்டிருக்கும் வழிமுறைகளைக் கடந்த வேறொன்றாகவும் இருக்கலாம்.

தவிர, எனக்கு முழுமையுணர்வு பெற்றவர்கள் ( புத்தர், சித்தர்கள்) எதையும் பெரிதாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுமில்லை. வாழ்வின் போக்கு எவ்வளவு மோசமாக இருந்தாலும், அது சரியானதாகத் தான் இருக்கிறது என்பதே அவர்களின் பதிலாக இருக்கும் எனத் தோன்றும், அவ்வாறே இதுவரை இருந்திருக்கிறது. சொடுக்கிடும் நேரத்தில் நம்மாலேயே பலவேலைகள் செய்யவியலும் போது, வல்லமையுள்ளவர்களால் இன்னும் பெரிதாகவே செய்யவியலும் என்பது, எந்தவொரு பாமரனின் கருத்தாகவேயிருக்கும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை, இல்லையெனில், மொத்தமாக, எல்லோருக்கும் மோட்சகதி அருளியிருக்கலாம்.

ஆக, சமூக வளர்ச்சி அதுபாட்டுக்குப் போகும், மாந்த உளப்போக்கு சீரடைவதும் அதுபாட்டுக்கு நடைபெறும், இந்த இடைவெளியில் நாம் தத்துவங்கள் பழகுவதெல்லாம், உளப்போக்கு மென்மேலும் சீராவதற்கும் சமூகத்தின் ஓட்டத்திற்கும்/நடைமுறைத் தேவைக்கும் இடையேயான இடைவெளியை சரிசெய்வதற்கென்று எண்ணுகிறேன். உதாரணத்திற்கு, ஞானியருக்கு சரி தவறென்று ஏதுமில்லையென்பர். அதையொரு சமூகம் அல்லது சாதாரண மனிதர் ஒப்புக்கொள்ளமுடியாது, சரி தவறு பகுக்கப்படவேண்டியது முக்கியமானதாகவேக் கருதுவர்.

அதாவது, ஒரு சமூகம் தீங்குவிளைவிப்போருக்கென்று சட்டங்களை இயற்றியிருக்கும். அதற்கு நல்லதகெட்டதைத் தேர்ந்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும். அது சாதாரண மக்களுக்கும், ஒரு கொலைகாரருக்கும்/பெருஞ்சண்டைக்காரருக்கும் இடையேயான உளப்போக்கின் வித்தியாசங்களைக் கணக்கில் கொண்டு, பெருஞ்சண்டைக்காரரினால், உண்டாகக்கூடிய கேடுகளிலிருந்துக் காப்பதற்கு விதியமைக்கும்.

விதிகளைப் படைத்ததனாலேயும், அதை எல்லோருக்கும் உணர்த்துவதன்மூலமும் சமூகம் சரியாக ஆகிறதா?! விதிகளை சரிவரக்கடைப்பிடித்தால் எல்லாம் சரியாகுமா?? ஒரு வேளை, சமூகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் துறவியானால் எல்லாம் சரியாகுமா? இரண்டிலும் வழிதவறி அர்த்தமற்றதாகும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே, வாழும்வரையில் செய்யவேண்டியவை என நமக்கு உணர்த்தப்பட்டதையும், அந்நேரத்துக்கு ஆகவேண்டியதையுமேச் செய்கிறோம். அதாவது இயல்புநிலையிலேயே இருக்கிறோம்.

முழுமையுணர்வு வாய்த்திருக்கவேண்டியதொரு தருணத்தை ஒருவர் தவறவிட்டுவிட்டார் எனக் கொண்டால், அதற்கான தீர்வுதான் என்ன? கிரியா யோகம் போன்று மனத்தையும் உடலையும் தீட்டிவைத்தும், முழுமையுணர்வை எட்டாதக் கதைகளைக் கேட்டிருக்கிறோம் தானே. ஆதலால், கடவுளர் பத்தியென்பது எல்லாம், இவ்வளவுக் குழப்பங்களின் நடுவே நடத்தவேண்டியதை நடத்துவதற்கென்பது என் எண்ணம்.

அது சரியான நேரத்தில் தூங்காமல் சுகம்பெறுவதாகக்கூட இருக்கலாம், அல்லது வேறெதாவதாகவும் இருக்கலாம். இப்படி இருநிலைகளில்–அதாவது, 1. எனக்கு வழிமுறைத் தெரியும், 2. ஆனால் இன்னும் போய்ச்சேரவேண்டிய இடத்திற்குச் சென்றடையவில்லையென்று உணர்வது –இவ்விருநிலைகளினால் ஏற்படும், உடல்-உளத்தாக்குதல்களும் (affecting psychosomatically) பெரும்விளைவை உண்டுபண்ணக்கூடியவையென யோகசூத்திரங்கள் சொல்கின்றன.

இருப்பின் புதிருக்கானத் தீர்வுகள், மேற்குறிப்பிட்ட ஒழுங்கிலாமுறைகளிலும், அதாவது கட்டமைக்கப்பட்டவழிகளில் இல்லாமல், கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. எல்லாம் பொருளற்றதாக ஆகும்போது எல்லாம் எளிதானதாகவும் ஆகும், அதாவது, தேவையற்றதைச் செய்வதால் முழுமையுணர்வுத் தருணம் தவிர்க்கப்படலாம், அது முழுமையுணர்விற்கானப் பயிற்சியென்று நாம் நினைத்துக் கொண்டிருக்க, அது அதனாலேயே வாய்க்காமல் போகலாம்.

ஆக, சாதாரணமாக இருப்பதும், முழுமையுணர்வை அருளலாம். கடைசியாக, முழுமையுணர்வும் ஒன்றுமில்லாததாகப் பொருளற்றதாக இருக்கலாம்.

#நூலகத்தொடர் – 3: Sophie’s world

Day 3:
Sophie’s World: A Novel about History of philosophy
-Jostein Gaarder

இந்த நூலின் மூலம் என் குழந்தைத்தனம் வெளிப்பட்டுவிட்டிருக்குமே எனத்தோன்றினாலும், சும்மா தத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ள உகந்த நூல். பதின்ம வயதுப் பெண்ணான சோபிக்கு, யாரென்றுத் தெரியாத ஒரு “தத்துவவியலாளத்தாத்தா” தத்துவத்தைப் போதிப்பதுபோல புனைந்து எழுதியிருப்பார், தத்துவவியல் ஆசிரியரான யோஸ்டைன் கார்டர்.

இவ்வாறு தாத்தா அனுப்புங்கடிதங்களைக் கொண்டு அம்மாவிற்குந் தெரியாமல், படிப்படியாக தத்துவவியலின் வரலாறு மற்றும் சிறுசிறு விசயங்களைக் கற்று வளர்வாள். “நீ யார்?” எனக்கேட்கும் முதல்கேள்வியிலிருந்து, சாக்ரடீஸிற்கு முந்தைய எகிப்திய இந்தியச் சிந்தனைகள் முதற்கொண்டு, கிரேக்க தத்துவத்தின் தத்துவவியலர்கள் பற்றியக்குறிப்புகளையும், அப்படியேக் காலத்தில் வளர்ந்து, நடுவாந்தர ஐரோப்பியத் தத்துவவழி வந்து, புதுக்காலம் வரைக்கும் உள்ள தத்துவவியலாளர்களின் பொருண்மைவாதம், இருப்பியல், என எல்லாவற்றையும் பற்றியுணர்த்தக்கூடிய நூல். சுவாமி விவேகானந்தர், சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் போன்றோரையும் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார்.

#நூலகத்தொடர்

#நூலகத்தொடர் – 2: American Prometheus

Day 2:

 

American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer
– K Bird & M J Sherwin

முதன்மையாக நண்பர்கள் Kathir Krishnamurthi, Ramasamy Selvaraj, Pitchaimuthu Sudhagar, Devanurpudur DrAnbu Selvan, Harinarayanan Janakiraman ஆகியோரை, இந்த நூலகத்தொடரில் பங்குகொள்ளுமாறு அழைக்கிறேன்!

நான் மிகவும் மதிக்கும் விஞ்ஞானிகளுள் ஓப்பனைமரும் ஒருவர். இந்தியத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்த விஞ்ஞானிகளில் இவரும் முக்கியமானவர். இவரின் பெற்றோர், வடஅமெரிக்காவுக்கு செர்மனியில் இருந்து, வியாபாரம் பொருட்டு புலம்பெயர்ந்து, அமெரிக்காவில் வாழ்ந்துவந்தனர். அங்கேயேப் பிறந்து வளர்ந்த ஓப்பனைமர் சிறுவயது முதலேயே பல்புலப்புலமைக் கொண்டிருந்தார். சமக்கிருதம் முதலான மொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர். சப்பானில் மீதெய்யப்பட்ட அணுக்கருக் குண்டைப் பரிட்சிக்கும்போது, பகவத்கீதையைக் குறிப்பிட்டதைப் பலர் அறிந்திருக்கலாம்.

பின்னர், இயற்பியல் கோட்பாடுகளில் பலவிசயங்களைக் கண்டறிந்தவர் ஓப்பனைமர். மன்னட்டன் செயல்திட்டத்தின்/Manhattan Project மூலம் இரண்டாம் உலகப்போரில் சப்பானில் இடப்பட்டக் குண்டுகளை உருவாக்கியக் குழுமத்துக்குத் தலைமைவகிக்க அழைக்கப்பட்டார். ஆயினும், அவருடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் ஆரம்பித்தது, இரண்டாம் உலகப்போருக்கு முன்னரேயாயினும், இயல்பிலேயே கம்யூனிச சிந்தனைமிகுந்தவராக இருந்ததால், பனிப்போர்சிக்கலில் இரகசியங்களை மாற்றாருக்குக் கொடுத்ததாகவும், சதியாலோசனைகளுக்காகவும் சிறையிலடைக்கப்பட்டு, பின்பு அவருடைய கம்யூனிசத்தொடர்புகளுக்காக மன்னிப்புக் கேட்க வற்புறுத்தப்பட்டார்.

ஆகமொத்தம் கிரேக்க இதிகாசத்தில், ப்ரோமெத்தியஸ் (Prometheus) எப்படி விண்ணுலகில் இருந்த நெருப்பை, சாதாரண மானிடருக்காக மிகப்பிரயத்தனப்பட்டுக் கொண்டுவந்தாரோ, அது போன்ற ஒருவரேயெனப் பேசி, ஓப்பனைமரின் வாழ்க்கைவரலாற்றைக்காட்டும் நூல்!

#நூலகத்தொடர்

#நூலகத்தொடர் – 1: கோடல் எஷர் பாஹ்

மணி மணிவண்ணன் அண்ணன் நூலகத்தொடருக்கு என்னையும் நம்பி இணைத்துள்ளார்.

சிறுவயதில், ஒரு சயிண்டிஸ்ட்டான எனக்கு வாசிப்பனுபவம் என்பது மிக/வெகு/– எனப் பெயரடைக்கேப் பெயரடைத்தந்து– தீவிரமாகமட்டுமே இருக்கவேண்டுமென்று, வெற்று ஆய்வறிக்கையையேப் புரிகிறதோ இல்லையோ மாங்குமாங்கென்றுப் படித்தேன் ஒரு காலத்தில்! அப்பொழுது எல்லாம் பாப்புலர் சைன்ஸ் நூல்களே ஒத்துக்கொள்ளாது!! ஃபெயின்மேன் மட்டுமே அக்காலத்தில் விதிவிலக்கு! இம்மாதிரியான தேவையற்றக் கருத்தால், ஸ்டீபன் ஹாகிங்கெல்லாம் கிடப்பில் கிடக்கிறார். 😛

அப்படியெல்லாம் இருந்த நான், இந்திரா சௌந்தரராஜன், என்.கணேசன் போன்றோரின் ஆன்மீகக்கதைகளையும், நளவெண்பாவையும் தவிர்த்து, பெரிதாக ஏதும் சமீபத்தில் படிக்கவில்லை.

ஆனால் எனக்கு மிகவும் பிடித்த, கதைக்குள் கதையென வித்தினுள்வித்தையே fractal காண்பது போல் அமைந்த நூல். பலமொழிகளில் பெயர்த்திருந்தாலும் தமிழில் உள்ளதாவெனத் தெரியவில்லை!

Gödel, Escher, Bach — An Eternal Golden Braid
எழுதியவர் கணிதவியலாளரான பேராசிரியர் Douglas Hofstadter.

குர்த் கோடல் (Kurt Gödel) – கணித-தத்துவவியலாளர் ;எஷர் (M C Escher) – ஓவியர்;யோஹான் பாஹ் (Joachann Bach) – இசையறிஞர்

இப்படி (மேலோட்டமாக) புல அளவில் சம்பந்தமேயில்லாத மூன்றுபேரின் மூளையும் எப்படிவேலைசெய்திருக்கும் என்று யோசிப்பதுபோல யோசித்தெழுதினால் இவ்வாறு தான் இருக்கும். மொழியியல், கணிதவியல், ஓவியம், இசை, சேதிமறைவியல்(Cryptography/Steganography),சமூகவியல், ஆட்டக்கோட்பாடு என அனைத்துவகையிலும் நமது மூளை இம்மனிதச்சமூகத்தை உருவாக்கிய விதம் எவ்வாறு அமைந்தது என அனைத்தையும் பின்னி மினுமினுக்க வைத்து புலிட்சர் வாங்கிய சனரஞ்சக நூல்.

ஹோப்ட்ஸ்டட்டர் அவர்களிடம் இந்நூலிலுள்ள சில விசயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். இந்நூலுக்காக உழைக்கும்போது, தமிழ்க்கற்றுக்கொண்டதாகவும் இன்னும் அந்தக்கால விகடன் இன்னும் அக்காலத்தில் வெளிவந்த இதழ்களை எல்லாம் பத்திரமாகவைத்திருப்பதாகவும், தமிழ் மிகவும் அழகான மொழியெனவும், தமிழெழுத்துகள் வடிவியற்கணக்கில் மிகவும் அவரை ஈர்த்தததாகவும் கூறியிருந்தார்!

நூலும் இதேபோல் தான், விளையாட்டாக ஒன்றுக்குள் ஒன்றாக ஊடாடிவிளையாடும். நம்மூர் விடுகதைகள் போல், அதேநேரம் நவீன கணித தத்துவ அறிதற்பின்புலத்தில் உள்ள செயல்பாடுகளைப் படம்பிடிப்பதாய் இருக்கும்.

இந்நூலின் அடிநாதத்திலிருந்தே அமைந்தது, ஹோப்ச்டட்டரின் விளையாட்டுத்தனமான விதி, இது சிக்கலமைவில்/complexity குறிக்கப்படுகிறது. விதிசொல்வது யாதெனில்,

“எப்பொழுதும் நாம் நினைப்பதைவிட காலமெடுக்கும், ஹோப்ஸ்டட்டரின் விதியினைக் கருத்தில் கொண்டாலும்!”

ஆயினும் இவ்விதியின் பகுவல்/fractal தன்மை ஒரு முகம்பார்ர்க்கும் கண்ணாடிக்குள் இன்னொருக் கண்ணாடியைக் காண்பிப்பது போன்றது! இரண்டே கண்ணாடியானாலும், ஒன்றில் எதிரொளிக்கப்பட்டவை, மற்றொன்றில் விழுந்து, அது திரும்பவும் விழுந்து என முடிவிலாத் தொடர்பினை/கண்ணாடிகளைக் காணலாம்.

இது கிட்டத்தட்ட ஐன்ஸ்டைனின் ஒளியின் திசைவேகத்தில் செல்லும் ஒருவருக்கு, இன்னொரு ஒளியன்/photon அவருடைய திசைவேகத்தில் செல்லாமல், அவருக்கும் அவ்வொளியன் ஒளியின் திசைவேகத்திலேயே செல்லும் என்பதையும் போன்றது!

எதிர்வினை: கற்றலும் சமூகமும் -7 சமூக தாக்கம்

என்னுடைய முந்தையக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய ஒருவர் இவ்வாறுக்குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம் என்ற கட்டமைப்பை நாசிச / பாசிச படைகளோடு ஒப்பிட்டால், நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த சாதியின் அடிப்படை படிநிலையே குடும்பத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது. வேண்டுமென்றால், யாரும் யாருடனும் வாழ்ந்து விட்டு போகலாமென்ற மேலை நாடுகள் போல வாழ பழகிக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு சாதி தேவையில்லை என்று சொல்லும் ஒரு சாரார், காலப்போக்கில் அதன் அடிப்படை வேரான குடும்பம் என்ற கட்டமைப்பும் தேவையில்லையென்றே வாதிவாடுவார்கள். அதுவும் இப்போதுள்ள சாதி வெறுப்பு போல எடுத்துக்கொள்ளப்பட்டு, குடும்பம் என்பதற்குள் அடக்குமுறை உள்ளனதென பலராலும் சொல்லக்கூடும். அடுத்து ஒரு பெண் என்பவளோ அல்லது ஓர் ஆண் என்பவனோ திருமணம் செய்து தான் வாழ வேண்டியது கட்டாயமில்லை. திருமணம் செய்யாமலே சாதி மறுப்பு போல திருமண மறுப்போடு வாழ்ந்து கொள்ளலாம். அது தான் முன்னேற்றம்; அதுதான் பகுத்குத்தறிவு என போற்றப்படவும் வாய்ப்புண்டு. இங்கே யார் நலல்வன் கெட்டவன் என்பதை கேம் தியரிக்கள் போன்ற எந்தவொரு கோட்பாடுகளும் முடிவு செய்யப்போவதில்லை. எல்லாவிதமான கோட்பாடுகளும் இங்குண்டு. இல்லையென்றால் அப்படியோரு கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு இமல் தியரி என்று எதோவொரு புதுப்பெயரை கூட இட்டுக்கொள்ளலாம். நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி. இன்று சாதி வேண்டுமென்பதும், நாளை குடும்பம் வேண்டாம் என்பதும், பெண்ணொ ஆணோ வாழ்நாளெல்லாம் துணையாக மற்ற ஒருவரோடு மட்டும் தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லையென்று சொல்வதும், எல்லாமே ஏதோவொரு தியரிக்கள் தான் முடிவு செய்யுமெனில் அப்படியான ஒரு தியரி தேவையேயில்லை.

// குடும்பம் என்ற கட்டமைப்பை நாசிச / பாசிச படைகளோடு ஒப்பிட்டால், நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்.//

எப்படி??

//ஆனால் இந்த சாதியின் அடிப்படை படிநிலையே குடும்பத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது.//

ஆம், அப்படித்தான்.

// வேண்டுமென்றால், யாரும் யாருடனும் வாழ்ந்து விட்டு போகலாமென்ற மேலை நாடுகள் போல வாழ பழகிக்கொள்ள வேண்டும். //

தவறு. சமூகபிரசித்தி பெற்ற வெளிநாட்டு சினிமாக்காரர்களின் விளையாட்டுவீர்ர்களின் குடும்பங்களூம் அவர்களின் வாழக்கைமுறைமை மட்டும் அந்தந்த சமூகத்தைப் பிரதிபலிக்கும் காரணியாகா , எல்லா நாடுகளிலும் தாத்தாப்பாட்டியுடன் வாழும் குடும்பங்கள், குடும்பப் பிணைப்பு, பண்பாடு என்று ஏராளம் உண்டு, வளர்ச்சி சார்ந்த நகர்ப்புற வாழ்க்கை, நம்மூர் போலவே, குடும்பங்களைப் பிரிக்கிறது, அவ்வளவு தான். எல்லாநாடுகளிலும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணவில்லை, பிள்ளைபெற்றுக்கொள்ளவில்லை என்றுகேட்கும் அதே கலாச்சாரம் இங்கேயும் உண்டு.

//இப்போதைக்கு சாதி தேவையில்லை என்று சொல்லும் ஒரு சாரார், காலப்போக்கில் அதன் அடிப்படை வேரான குடும்பம் என்ற கட்டமைப்பும் தேவையில்லையென்றே வாதிவாடுவார்கள். //

சாதிபோன்ற அமைப்பைத் தாண்டிவந்து பொருளாதார வளர்ச்சிக்காக வேலைசெய்து, அதுவே பின்பு சமூகவளர்ச்சியாக மேலைநாடுகள் மாற்றத்தான் செய்துள்ளது. என் மனைவி வசிக்கும் உற்றெச்ட் நகரில் நகரின் ஓரத்தில், மிகப்பெரிய மடு உண்டு. அம்மடு சாதியில்/மதத்தில் குறைந்தோராகக் கருதப்பட்ட மக்களை, காலையில் எழுந்தவுடன் பார்க்கக்கூடாது என்று சாதியில் பெரியோர் சேர்ந்து அரசுக்குக் கூறி அம்மடுவை செயற்கையாக உருவாக்கினார்கள், இது நடந்தது இருநூறு வருடத்துக்கு முன்னர்.

சாதியை அறுத்தப்பின்னரும் அச்சமூகமும் வளரத்தான் செய்துள்ளது, இன்னும் பண்ணைவீடுகளில் இருந்து வளர்ந்து வரும் பிள்ளைகள் விஞ்ஞானிகளாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

//அதுவும் இப்போதுள்ள சாதி வெறுப்பு போல எடுத்துக்கொள்ளப்பட்டு, குடும்பம் என்பதற்குள் அடக்குமுறை உள்ளனதென பலராலும் சொல்லக்கூடும்.//

குழு என்றாலே அடக்குமுறை உண்டு. மென்மையானதா அல்லது கடுமையானதா என்பது அக்குழுவில் வாழும் மனிதர்களின் சிந்திக்கும் திறனைப் பொறுத்தது. பதின்பருவப்பிள்ளைகள் எம்மாதிரியானக் குடும்பத்தில் இருந்தாலும், புரட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பது அறிவியல் உண்மை. அதற்காக, நாம் பிள்ளைகளை அடக்குவதை அடக்குமுறை எனக் கருதுவோமா? ஆனால் அவர்கள் பார்வையில் பெற்றோர் அடக்குமுறையாளர்களே. ஆக என்ன நோக்கத்தில் நாம் செய்கிறோம் என்பதை சிந்தித்து செயல்படவேண்டும்.   மனிதர்கள் சமூகவிலங்குகள் என்பது இயற்கைவிதி, அது மாறினால் மட்டுமேக் குடும்பம் வேண்டாம் என்று கூறுவது மாறும்.

//திருமணம் செய்யாமலே சாதி மறுப்பு போல திருமண மறுப்போடு வாழ்ந்து கொள்ளலாம். அது தான் முன்னேற்றம்; அதுதான் பகுத்குத்தறிவு என போற்றப்படவும் வாய்ப்புண்டு. //

அதை நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. தெளிவான சிந்தனைகொண்டிருக்கிறவர்கள் அவர்கள் வாழ்வை வளப்படுத்துவார்கள். இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதன் வரையறை, சமூகவொழுங்கில் உண்டானது. அதற்காக சமூகவொழுங்கு மட்டுமே ஒருவரை வளர்த்தெடுததுவிடமுடியாது.
கிரேக்க தத்துவமேதைகளாகட்டும், தமிழ் சமற்கிருத தத்துவமேதைகளாகட்டும். அவர்கள் கொல்லப்பட்டதும் வணங்கப்பட்டதும், சிந்தியுங்க்ள் என்று சொன்னதற்காகத் தான். விதண்டாவாதத்தில் இது முன்னேற்றம் பகுத்தறிவு என்று யாராவது கூறுகிறார்கள் என்றால், அவர்களை அவர்களின் முடிவுகளை அவர்கள் வாழ்க்கையேப் பார்த்துக்கொள்ளும். அதையெல்லாம் நம்மால் மாற்றமுடியாது, கருத்துக்களை முன்வைக்கலாம், அதை அப்படியே பின்பற்றுக என்று வலியுறுத்துவது எதேச்சதிகாரம், சிறுபிள்ளைகளை அடித்துத் திருத்துவது, இக்காலத்தில் தவறாக ஆனது கூட இம்மாதிரிதான்.  வழிப்படுத்துங்கள், நெறிப்படுத்துங்கள், அது மட்டுமே நம் வேலை, மிச்சர் அவரவர் கைகளில் தான்.

 

//இங்கே யார் நலல்வன் கெட்டவன் என்பதை கேம் தியரிக்கள் போன்ற எந்தவொரு கோட்பாடுகளும் முடிவு செய்யப்போவதில்லை. எல்லாவிதமான கோட்பாடுகளும் இங்குண்டு.//

உங்களின் கேள்வியின் அடிப்படையேத் தவறானது.  இருப்பதை இருப்பதுபோல் படித்துச்சொல்வது தான் சமூக அறிவியலும், அதுசார்ந்த ஆட்டக்கோட்பாடும், இல்லாததைச் சொல்வது எதுவும் நிலைத்தும் நிற்காது, அறிவியலின் வேலையும் அதுவல்ல.  மேலும், எல்லாவிதமானக் கோட்பாடுகளும் நிலைத்துநிற்கும் என்றுக் குறிப்பிட்டது எப்படியெனத் தெரியவில்லை. அணுக்களைப் பற்றி நம்மவர்கள், சாக்ரடீஸ் காலத்திற்கு முன்னிருந்தகிரேக்கர்கள் முதற்கொண்டு பலபேர் உரைத்திருக்கின்றனர். இன்றும் தத்துவார்த்தமாகவும் கோட்பாட்டு அறிவியல் சார்ந்தும் அதைப்பற்றி சோதித்துவருகிறோம். அதேநேரம் அணுக்கொள்கைகளாகக் கூறப்பட்டப் பலவும் அறிவியலால் தூக்கியெறியப்பட்டுள்ளது.   அறிவியலல்லாதக் கோட்பாடுகளெல்லாம் பயன்படாவிட்டால் களையெடுக்கப்படும்..

ஐன்ஸ்டைனின் சார்புக்கொள்கையைக் கூறி நூறுவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அவ்விதியை ஐன்ஸ்டைன பகன்று இருபது வருடங்களிலேயே புதன் கிரகத்தின் ஒளியை வளைப்பதில் இருந்து அவர் விதிசரிதான் என்று அறியப்பட்டது. ஆனால் அந்த ஒரேயொரு வாதத்தை மட்டும்  அவரின் விதி சரியென அறிவியல் ஒத்துக்கொள்ளாது.   நூறாண்டுகள் கடந்தப்பின்னும், இன்றுவரைக்கும் வெவ்வேறு சோதனைகளும் அதன்மேல் கட்டப்பட்ட வெவ்வேறுக்கோட்பாடுகளும் அவ்விதிகளை சந்து சந்தாக அறுத்து ஆய்வுசெய்கிறது.

நல்லவன் கெட்டவன் என கோட்பாடு சொல்வதாகக் குறிப்பிடவில்லை, நல்லவரும் கெட்டவருமாக முரணோடு சேர்ந்திருப்பதில் தான் சமூகத்தின் ஓட்டம் இருக்கும் என்பதாய் இருப்பதை இருப்பதாகவேக்கூறுகிறது.   இதுதான் நாம் அனைவரும் அறிந்ததேயென்றுக் கூறினாலும்,  அறிவியலின் வீச்சுஅதோடு நிற்பதிலில்லை, மாறாக மாற்றத்தில் எவ்வளவு வேகம், எப்படி என்றெல்லாம் கேள்விகள் கேட்கும். இதற்கு எடுத்துக்காட்டு உலகப்போர்கள். இரண்டே இரண்டு உலகப்போர் உலகத்தின் வளர்ச்சியை திடீரென மாற்றியதோடு மட்டுமல்லாமல், இன்னொரு உலகப்போர் வந்தால் அனைவரும் அழிந்துவிடும் அளவுக்கு மாற்றிவிட்டது.

//இல்லையென்றால் அப்படியோரு கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு இமல் தியரி என்று எதோவொரு புதுப்பெயரை கூட இட்டுக்கொள்ளலாம். நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி.//

இப்படி ஒருக்கருத்தைக்கூறி மிகவும் அவசரப்பட்டுவிட்டீர்கள். இதற்கானப் பதில் முந்தைய கருத்திலிருந்தும் தங்களுக்குப் புரியும் என்றாலும், ஆட்டக்கோட்பாடோ/அறிவியலோ எப்படி இயங்குகிறது என்று கூறுவதற்கு உங்கள் கேள்வியை ஒரு சாக்காக எடுத்துக்கொள்கிறேன்.

எதையாவது எகனைமுகனையாகத் தங்கள் வீட்டில் பேசிவிட்டு, இதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நம்வீட்டினரிடம் கூட கூறிவிடமுடியாதுதானே?    அப்படியிருக்க, அறிவியல் என்பது உங்கள் வீட்டுப்புழக்கடையில் வளரும் நாய்க்குட்டி போல் இருக்கும் த்வனியில் நீங்கள்கூறியுள்ளீர்கள். அறிவியலில் ஆய்வுசெய்யவேண்டும் என்று விரும்பும் மாணவன் கூட இம்மாதிரி உரைக்கமாட்டார்.    என்னப்பா, ஒரு பல்கலைக்கழகத்தில் வேலைபார்ப்பவர் நீங்கள், இப்படியா எடுத்தோம் கவிழ்த்தோமென அறிவியலைப் பற்றிப் பேசுவது?

ஒரு தியரி உருவாகும் கதையை உரைக்கும் முன்னர், முதலில் நீங்கள் கூறுவதுபோல் இமல் தியரி எனும் பெயரை நமக்கு நாமே தரவும்முடியாது பிரஸ்தாபிக்கவும் முடியாது என்பதை உணர்தல் நலம். அதன்படிநிலைகள் இவ்வாறு செல்லும்:

  1. உங்களின் கோட்பாட்டை உருவாக்கும் முன்னர், பல நூறு ஆய்வுக்கட்டுரைகளைத் தேடிப்பிடித்துப் படித்து, அதைப் படிக்கும்போது ஏதோவொன்று உங்கள் மனதில் உதித்து, இதில் வேலைசெய்வோம் என்று ஏதோவொரு சின்னக் கேள்வியை எடுத்து, இதன் பின்னர், திரும்பவும் அக்கேள்வி சார்ந்த பல நூறு ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து, அதில் நீங்கள் யோசித்ததை ஏற்கனவே செய்திருக்கிறார்களா எனப் பார்த்து, அவ்வாறெனில், நீங்கள் யோசிப்பது புதிதா பழையதா என்றுக் கண்டறிந்து, பழையதானால், திரும்பவும், முதலில் இருந்து துவங்குவீர்கள். இதற்கே பலவருடங்களாகலாம். பின்னர், நீங்கள் நினைத்ததை வடித்து, அதற்குரிய கணித அல்லது ஏரண/logic வடிவங்களை அமைத்த பின்னர், அதற்கான சரியான உதாரணங்களையும், சரியான வடிவங்களையும்/மாடல்கள் தரவேண்டும். இவையெல்லாம் உங்கள் திருப்திக்கு வளர்ந்தப்பின்னர், பொதுவில் உங்களுடையக் கருத்தை வைப்பீர்கள்.  முதலில்
  2.  உங்களின் ஆய்வு, அறிவுசார்பாக முக்கியமானது என்று நீங்கள் கருதும் பட்சத்தில், முதலில் நீங்கள் வேலைபார்க்கும் பல்கலைக்கழக அல்லது ஆய்வுக்குழுவில் உரையாற்றுவீர்கள்.   ஒரு மனிதன் எல்லாவற்றையும் எல்லாநேரத்திலும் சரியாக செய்துவிடமுடியாது, ஆக சுற்றி வேலைபார்ப்பவர்கள், நீ சரியாகத்தான் கூறியுள்ளாய் என்றோ அல்லது, அவர்களுடைய அனுபவத்திலும் அறிவிலும் உதித்ததை சேர்க்க சொல்வார்கள். சரியானதென்றால் சேர்ப்பீர்கள், இல்லையென்றால் விடுவீர்கள்.   ஒரு வேளை யாருமே ஒத்துக்கொள்ளவில்லையெனினும், அடுத்தக்கட்டமாக.
  3.  நீங்கள் ஆய்வுசெய்யுந்துறையில் ஆய்விலுள்ளோர் அதிகம் வாசிக்கும் ஒரு நல்ல பனுவலுக்கு/journal அனுப்பிவிடுவீர்கள், அவர்கள் அதைத் தகுந்த அந்தந்த புலத்தில் வேலைசெய்யும் பெரிய ஆய்வாளர்கட்கு அனுப்புவார்கள். அவர்கள் உங்கள் கருத்தை ஒருவரி விடாமல் படித்து, நான் இப்பொழுது எழுதுகிறேனே, அது போல், ஒவ்வொரு வரிக்கும் கேள்விகளும் கருத்துகளுமாய் கொட்டித்தீர்ப்பார்கள்.
  4.  அவர்கள் கேட்டக் கேள்விக்கெல்லாம் ஒருவரி விடாமல் பதில் அனுப்பி, திரும்பவும் அவர்கள் நீங்கள் பதிலளித்ததிலிருந்து திரும்ப கேள்விகள் பல கேட்டு என 3, 4 முறையாவது தொடர்பாடல் நடந்தப்பின்னர், நீங்கள் அளித்த மொத்தத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டால், அப்பனுவலில் பதிப்பார்கள்.
  5.  ஒரு வேளை, உங்களுடையப் பதில்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லையெனில், மொத்தமாக உங்கள் ஆய்வை ஒதுக்கிவிடுவார்கள், அப்படி பதிக்கமுடியாது என்றுக்கூறிவிட்டால், அடுத்த பனுவலுக்கு அனுப்பவேண்டியது, அங்குமில்லையென்றால், அடுத்தது, இப்படிப் போகும்.
  6.  ஒரு வேளை, நீங்கள் எழுதியது அறிவுசார்ந்து இருக்கிறது என்றால், ஒருவருக்கொருவர், உங்களின் கோட்பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவர், இது பல வருடங்களுக்கு நடந்தால் மட்டுமே, இமல் தியரி என்று பெயர் வரும், அதையும் மற்றோர்தான் குறிப்பிடுவர்.

    விஞ்ஞானிகள் சிம்மங்கள் போன்றவர்கள், அவர்களிடம் போய் வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனறெல்லாம் பேசமுடியாது. அக்குவேறு ஆணிவேராக நாம் உரைத்தவற்றை கீறிப்பார்த்து அதனுள் உண்மை இருக்கிறதா எனப் பார்க்கும் அதேநேரம், அவர்களுக்கு ஒன்றைத் தெரியவில்லையென்றால், தெரியவில்லையென்றும் கூறிக்கடந்துவிடுவர்.   அதே விஞ்ஞானிகளில் பலர், தங்களின் பெயரில் வெளியானக் கோட்பாட்டைக் குறிப்பிடும்போது, தன் பெயரை தவிர்த்து சொல்லும் பணிவுடனும் இருப்பர்.  இருக்கட்டும்!

  7.  ஒரு வேளை எங்குமேப் பதிக்கவில்லையெனில், நம் ஆய்வை, நம் டைரியில் குறித்துவைத்துக்கொள்ளவேண்டியது தான். அத்தனைவருடம் நாம் செய்த ஆராய்ச்சியும் வீண் என்று அர்த்தம்.

    இத்தனைபேர் குறிப்பிட்டும் நம் ஆய்வுப்புலமையை நாம் சந்தேகிக்கவில்லையெனில்… ஒரு உதாரணம், நானிருக்கும் கட்டிடத்துக்கு பக்கத்துக்கட்டிடத்தில் தான் நோபல் விஞ்ஞானி பேரா. எரார்ட் டூப்ட் /Gerard t’Hooft இருக்கிறார். அவருக்கு, பிரபஞ்சத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்ததாகவோ ஐன்ஸ்டைன் போன்ற பெரிய விஞ்ஞானிகள் தவறிழைத்தார்கள் என்றோ, இயற்கை எல்லாவற்றையும் கண்டறிந்துவிட்டேனென்றோ, கான்ஸ்பிரசி தியரியென்றோ குறிப்பிடும் ஆயிரம் கடிதங்கள் அனுதினமும் வரும் என்று அடிக்கடி குறிப்பிடுவார். அதுபோல் ஆகிவிடும்.

  8.  ஒரு வேளை, பெரியதாகப் பாராட்டப்பட்ட ஒரு கோட்பாடு, செயல்முறையில் தவறு என்றுத்தெரிந்தால், அதன் மேல் கட்டப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளின் தரம் என்ன, அதாவது சரியாக இருக்கிறதா என்று அப்பொழுதும் ஆய்வுகள் நடக்கும். அறிவியலும் அறிவியல்சார் ஆய்வுகளும் பெருமுயற்சியாகும்.

ஆக விட்டேற்றியாக எதையும் சொல்லி செல்வது என்பது, மட்டமான sci-fi படங்கள் போன்றவை. தற்பொழுதெல்லாம், அறிவியற்கதைகள் கொண்டப் படங்களையே/ இண்டர்ச்டெல்லார், நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியரை/கிப் தார்ன்– வைத்து எடுக்கிறார்கள், அதில் செய்த ஆராய்ச்சியும் ஆய்வுக்கட்டுரையாகவும் வந்திருக்கிறது.

//நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி.//

அது நாம் மட்டும் வசிக்கும்வீட்டில் நடக்கலாம், நம்மோடு இன்னொருவர் இருந்தால் கூட நமக்குப் பிடித்ததையும் பிடிக்காததையும் வளைக்கவேண்டி வரும். நம் பேச்சை நம் வீட்டு நாய் கூட எல்லாநேரமும் கேட்காது என்பதுதானே உண்மை. அதை உணரும்பட்சத்தில் நாம் சற்று நிதானிக்கலாம். பொதுவுண்மையாக ஏதோவொன்றைக் குறிப்பிட்டால் வரும் பிரச்சினையும் அதன் பின்னாலான விசயங்களும் நம்மை சார்ந்தது.  சமூகம் வேறு அறிவியல் வேறல்ல, அறிவியல் வேகமாக செய்வதை, சமூகம் மெதுவாக செய்யலாம் அவ்வளவு தான் வித்தியாசம். ஆக நாம் குறிப்பிடுவது சரியானதெனில், சமூகமும் அங்கீகரிக்கவேச் செய்யும்.

// இன்று சாதி வேண்டுமென்பதும், நாளை குடும்பம் வேண்டாம் என்பதும், பெண்ணொ ஆணோ வாழ்நாளெல்லாம் துணையாக மற்ற ஒருவரோடு மட்டும் தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லையென்று சொல்வதும், எல்லாமே ஏதோவொரு தியரிக்கள் தான் முடிவு செய்யுமெனில் அப்படியான ஒரு தியரி தேவையேயில்லை.//

ஒன்றேயொன்று தான், தக்கனப் பிழைக்கும் அவ்வளவே!  இன்று நாம் தூக்கிவைத்துக்கொண்டாடும் சாதியை, 1400 வருடம் முன் நாம் செய்யவில்லையென்கிறார்கள், ஆங்கிலேயர் வரவுக்குப்பின்னும் மற்ற இனங்களின் வரவுக்குப்பின்னும் நடந்ததாகவும் கூறுகிறார்கள்.  ஆக நம் சமூகத்தில் இல்லாதது பெரிதாக வளர்ந்திருக்கிறது, ஆனால், அது தான் நம்மிடம் இல்லாதிருந்ததே, அப்படியானால் இல்லாதநிலைக்குப் போவோம் என்றும் கூட நாம் யோசிக்கலாம்.

நானும் நீங்களும் பேசுவதால் சிறுசிறுமாற்றங்கள் நிகழலாம், அதெல்லாம் தான் உண்மையாக நடந்துவிடும் என்றெல்லாம் கூறுவது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமம்.

மீண்டும் கூறுகிறேன் கோட்பாடுகள் வானத்திலிருந்து குதிப்பவை என்று நீங்கள் நினைத்திருந்தால், தத்துவார்த்தமாக நீங்கள் புரிந்திருப்பதில் மாறுபாடு தேவை.. இருப்பதைத்தான் தியரைஸ் பண்ணமுடியும், இல்லாததை அல்ல. நீங்கள் எப்படியிருக்கவேண்டும் என்றெல்லாம் தியரி கூறமுடியாது, ஆனால், இப்படியெல்லாம் இருக்கிறீர்கள் என பிரதிபலிக்கும் கண்ணாடியே சமூக அறிவியற்கோட்பாடுகள். நம் கண்ணாடியின் அளவீட்டை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் நம் விருப்பம் அவ்வளவு தான், அது கண்ணாடியைப் பாதிக்காது.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது தங்களுடைய நம்பிக்கையைத்தானே தவிர்த்து, சமூகமாற்றத்திற்கான தத்துவமோ, அல்லது அறிவியலின் கட்டுமானம் சார்ந்த கேள்வியோ அல்ல. ஆனால், நான் பதிலளித்திருப்பது எல்லாநிலைக்கும் பொதுவான ஒன்று. இதை எந்த அடிப்படையில் இருந்தும் புரிந்துகொள்ளலாம். அதாவது கேள்விகள் கேளுங்கள், அதன் அடியாழம் வரை. இருப்பதை சரியாகப் புரிந்துகொள்ளுங்கள், அப்படித்தான் இருக்கிறோமாவெனவும் சோதிக்க வேண்டும் என்பதே அதன் சாரம்.

போகிறப்போக்கில்…

மாற்றங்கள் நம்மிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும் என்றக் கருத்து மிகவலியது. அப்படித்தான் செய்யப்படுதல் வேண்டும், நம்மைச்சுற்றி எவ்வளவு அழகாக வைக்கமுடியுமோ அதிலேயே பெரிய மாற்றங்கள்நிகழும். பள்ளியிலிருந்து ஒழுக்கப்பாடங்களையும் தீண்டாமைப் பற்றி அறிவுறுத்த ஆரம்பிப்பதும் மிகவும் முக்கியமானது தான். ஆசிரியர் பெற்றோர் எல்லோரும் வாழ்க்கைவெற்றி என விரட்டும் அதே நேரம், கொஞ்சம் வேகத்தைக் குறைப்பது போல் அமைத்தால் சிறப்புற அமையும்.
மிகுந்த சாதித்தகராறுகள் நடைபெறும் இடத்தில் இருந்து வந்தவன், அதுவும் உட்சாதிகளுக்குள்ளேயே நடக்கும் சண்டைகள் நிறைய. ஆயினும் இப்பொழுது உள்ளது போல் சின்னப்பிள்ளைகளே சாதிகள் பேசும் தன்மை அக்காலத்தில் இல்லை. முதலியார் பெரியப்பாவும் கவுண்டர் அம்மாச்சியும் அரசின்பட்டியல் சாதிகளாகக் கருதப்படும் வீட்டைச்சார்ந்தவர்கள், என் அப்பாவினை சித்தப்பா என்று அழைப்பதுமாக இருந்தது,
உடனே அதற்காக பாலாறும் தேனாறும் ஓடியதாய் கூறவில்லை, குறைந்தபட்சம் ஒரு சிறுவனாக, நான் அவர்களை உறவினர்கள் என்றே நினைக்கும் அளவுக்கே ஒரு அன்னியோன்யம் இருந்தது. திடீரென பற்பல சாதிக்கட்சிகள் முளைக்க நிலைமை, ஒரே நாளில் அந்தலை சிந்தலையானது, சிறுசிறு சண்டைகளும் முரண்பாடுகளும் திடீரெனப் பெரிதாகத் தெரிய ஆரம்பித்துவிட்டன.
என் தந்தையார் “அவனெல்லாம் முன்னாடி நல்லாப்பேசுவாண்டா, இப்பெல்லாம் பார்த்தா அப்படியேப் பார்க்காதமாதிரி ஒதுங்கிப் போயிர்றான்” என்பார்கள். அதில் வருத்தங்களும் வேறுசில பதற்ற உணர்வுகளும் கூடத் தெரிகிறது. நான் எல்லாம் கூட என் சத்துக்கு வம்புசண்டைக்குப் போயிருக்கிறேன், ஆனால் அவர்கள் மிக அமைதியானவர்கள்.
மென்மையான கம்யூனிச சித்தாந்தம் பரவியிருந்த எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களே சாதிக்குழுக்களில் அங்கம்வகிக்கும் அளவுக்கு மாறிப்போனது. இப்பொழுது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி ஓரளவு தெளிந்தபின்னரே, சாதிய தளைப்பில் இருந்து வெளியேறும் நிலையும் வந்துவிட்டது.
பெற்றது வளர்த்தது என பல பேர் பலமாதிரி கருத்து சொல்லிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், உண்மையான முனனேற்றம் பயமில்லாது இருக்கவேண்டும் என்பதில் இருந்து யோசிக்கத் துவங்க வேண்டும். பிரிவுவந்துவிட்டாலே பயவுணர்வு மிகச்சாதாரணம் தானே.
 

போகிறப்போக்கில்…

போனவருடம் நான் ஊருக்குப் போயிருந்தபோது, ஏதோவொரு உரையாடலில், என் தங்கை விக்னேஷ் அரசின் ஏதோவொருக் கொள்கையைக் குறிப்பிட்டுப் பேசும்பொழுது “நம்ம மாப்பிள்ள அப்படித்தான் செய்யப்போறாரு” என்றுக்கூற, “யார்ரா அது” எனக்கேட்டதற்கு, எல்லாம் “நம்ம மோடி மாப்பிளதேன்” என்றாள்!
 
மாநில சட்டப்பேரவைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு நீரிலிறங்கும் விமானத்தில் வந்திறங்கிய மோடி மாப்பிள்ளை “இவை அனைத்துமே 125 கோடி இந்திய மக்களுக்காகதான்” என்று குறிப்பிட்டுள்ளார்”
 
அதற்கு நான் “125 கோடியில் குமரிக் கோடியும் உண்டு தானே. அங்கும் இது மாதிரி ஒரு சேவையைத்தான் தேடுகிறார்கள்” என என் திராணிக்கு ஒரு கருத்துட்டிருந்தேன்!
 
மோடி ஆதரவர் ஒருவர், “இந்தாக் கண்டபயலும் சொல்லுவான்னு சொன்னேன், இந்தா நீ சொல்லிட்டல்ல” எனும் தொனியில், எங்கே எத்திட்டம் கொண்டாந்தாலும் ஊரைக்கூட்டி எதிர்த்தால் என்னசெய்வதென்றுக் கூறி, கூடங்குளத்தை தடுக்கிறாய்ங்க என்றுக் குறிப்பிட்டிருந்தார். எதை எதோடு ஒப்பிடுவது?
 
நான் வசிக்கும் கிராமத்திலுள்ள ஆய்வுக்கூடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அணுவாய்வுக்கூடம் இயங்கிக்கொண்டு இருந்தது, பல வருடங்களுக்கு முன்னரே அது முடிவுக்கு வந்தாலும், இன்னும், அதன் கழிவுகள் அகற்றப்படாதநிலையில் (நான் வசிக்கும் மாநிலச்சட்டத்தின் பிரகாரம் அணுக்கழிவை தொடர்வண்டியில் எடுத்துச்செல்லமுடியாது) அந்நிறுவனம் பாதுகாப்புக்காக செலவழிக்கும் தொகை, கொஞ்சம் நஞ்சமல்ல.
 
அணுவுலைகள் இயங்கும் நிறுவனங்களில் வேலைசெய்பவர்களுக்கும், அதைச்சுற்றியுள்ள கிராமங்களுக்கும் அந்த கிராம ஆட்சிஅலுவலகம் எல்லோருக்கும் ஆபத்துக்காலத்தில் சாப்பிடவென மாத்திரைகள், என்னென்ன செய்யவேண்டும் என்றப் பயிற்சிகளையும் தந்திருக்கும். உண்மையில், கூடங்குளம் சுற்றியுள்ளப்பகுதிகளில் இம்மாதிரி ட்ரில்கள் நடக்கவேயில்லையென்றேக்குறிப்பிடுகிறார்கள்.
 
சர்வதேசத்தரம் என்று நாம் ஒப்புமைப்படுத்தும் அதே சர்வதேச நாட்டில், அணுமின்னிலையம் தூரத்தில் இருக்கும் போதே, ஆங்காங்கே கதிரியக்கக்கசிவு இருக்கலாமென எச்சரிக்கைப்பதாகைகள் உள்ளன. சர்வதேசத்தரம் என்று நாம் சொல்லிக்கொண்டே, ஆய்வுநிறுவனத்துக்குள்ளேயே, அணுக்கசிவு என்பதேக் கிடையாது என்றுக்கூறித்திரிகிறோம்.
நிறுவனத்தைச்சுற்றிலும் காவலைமட்டும் அதிகப்படுத்துகிறோம், இது என்ன கதிரியக்கவீச்சா, இல்லைத்திருடனா, பார்த்துப் பயந்து வெளியேவராமல் இருக்க. போதாதற்கு யாராவது எதாவது பேசினால் குறிப்பிட்ட நபர் காணாமல் போவதும், பணியாளர்கள் இறப்பு பற்றிய தெளிவில்லா நிலைகளும் இருக்கின்றன. (கல்பாக்கம் மருத்துவர் ஒருவர், சமீபத்தில் ஒரே நாளில் உடல்நலங்குன்றி இறந்துபோன பொறியாளர் ஒருவர்).
 
அதிகம் வேண்டாம், ஆதார் இயந்திரம், அதன் அட்டை, ஏ டி எம் இயந்திரம், என எந்த இயந்திரத்தை நாம் உளைச்சல் இல்லாமல் பயன்படுத்தமுடிகிறது, நம் நாட்டில், அடியிலிருந்து மேல்மட்டம் வரை எந்தவொருப் பிரச்சினையையும் சர்வசாதாரணமாக எடுக்கப்பழகிவிட்டோம். சரியானத் தீர்வுகள் வேண்டுமேத் தவிர்த்து, மின்னிலையத்துக்கும் அரசுக்கும் ஹவிர்பாகமாக ஊரையோ மாநிலத்தையோத் தரக்கூடாது, நாம் அரசர்கள் அரசாளும் யுகத்தில் இல்லை.
 
இப்பொழுதெல்லாம், மாப்பிள்ளையோ பெண்களோ எலியாப்டர்/helicopter-ல் கல்யாணத்திற்கு/விசேசங்களுக்கு வந்திறங்கவேண்டுமென ஏதோவொரு டிவி நிகழ்ச்சியில் பெண்கள் கூறினார்களென கொஞ்சநாள் முன்னர் படித்த ஞாபகம்! இச்செய்தியைப் பார்த்ததும் என் தங்கச்சியின் மோடி மாப்பிள்ளை கமெண்ட் சடுதியில் நினைவுக்கு வந்துவிட்டது.