வட்டாரமொழிவழக்கும் நுரைக்கும் நுரையின் இயக்கமும்!

சிறுவயதில் ஆர்வத்தை அள்ளியள்ளித்தரும் சிலவிசயங்களைச் சார்ந்து, இந்த ஆராய்ச்சியின்[1] சில அம்சங்கள் அமைந்ததால் என கவனத்தை மிகவும் ஈர்த்துவிட்டது!   அச்சிலவிசயங்கள்: சோப்பு நீரில் நுரைக்கும் விதம், நுரைத்த வாளியில் நுரைகளைப் பிரித்துவிட்டாலும் ஒன்றையொன்று கூடும் விதம், நீர்மம் பாயும் விதம், வெட்டிபோட்ட சிறு சிறுக்குழாய்களை இணைத்து, நீரோட்டத்தை உண்டுபண்ணி சுழிகளை உண்டுபண்ணுவது,  பின்னர் என்னைச்சுற்றிப்பேசப்பட்ட வட்டாரமொழிவழக்குகள்! இவையெல்லாவற்றையும் ஒன்றாகக்கூட்டி ஆய்வுசெய்திருக்கிறார் ஆய்வாளர்.

வட்டாரவழக்குகள்கூட பரவாயில்லை, ஒரு மாநிலத்திலிருந்தோ அல்லது நாட்டிலிருந்தோ இன்னொரு நாட்டிற்கு மாநிலத்திற்கு செல்லும்போது, சட்டென மொழிமாறுவது எப்படியிருக்கும் எனப் பார்க்க ஆசைகொண்டிருக்கிறேன். அவ்வாறு நிஜமாகவேக் காணநேரும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். சமீபத்தில் கூட, செர்மன் – நெதர்லாந்து எல்லையைக்கடக்கும் போது எப்படி சட்டென மொழிமாறுகிறதென்பதை வழக்கம்போல பார்த்துக்கொண்டேக் கடந்தேன். பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் முறைமை, கலாச்சாரப் பரிமாறுதல்கள் என எல்லாமும் யோசிக்க யோசிக்க சிக்கல்கள் கலந்த இனிமையாக இருக்கும் என்பது என் மனவோட்டம்!

ஒரு ஊரின்/மாநிலத்தின்/நாட்டின்எல்லைக்கோடு ஏதோவொரு வீட்டின் வழியாகப் போகுமாவென்பது எனக்கு சிறுவயதில் தோன்றியக்கேள்வி, இம்மாதிரியானக் கேள்வியை நிலஅளவைத்துறையில் வேலைசெய்த என் அப்பாவிடமும் அடிக்கடிக் கேட்பேன்.   என் அப்பாவும் சலிக்காமல் எப்படி (ஒரு இடத்தில்) நேரத்தை வரையறுக்கிறோம், எப்படி எல்லையை வரையறுக்கிறோம் என எதுவானாலும் சிறுபையனுக்கு புரியும் என்பது போலேயே விளக்குவார்கள், (abstract understanding?!) எனக்கும், பள்ளிக்கூடத்தில் வாத்தியார், ஆயிரம் அடியடித்து ஆயிரம் முறைசொன்னாலும் நினைவில் வாராத அளவுக்கான எனக்கு,  இம்மாதிரி புரியாத பரிபாசையில் பேசுவதுமட்டும், ஒரு மாதிரி சொல்மாறாமல் ஞாபகம் இருக்கிறது.  இருக்கட்டும், அப்படி எல்லைக்கோடு ஒரு வீட்டை இரண்டாகப் பிரிக்குங்கால், எல்லைக்கோட்டுக்கு அப்பக்கமும் இப்பக்கமும் தாண்டும் போதெல்லாம் என்ன மொழி பேசுவார்கள் என்பதெல்லாம், சிறுபிள்ளைத்தனமான ஆர்வங்களும் கேள்விகளும்!

 

மொழிகளில் உண்டாகும் திரிபையும் வட்டாரவழக்குகளிற்கிடையேயான வேறுபாட்டையும் ஒரு இயற்கை மாதிரிப்படிவமான (physical model) நீர்மத்தின் நுரைத்தல் பண்பைக் கொண்டு விளக்கவியலுமாவென (பரப்பிழுவிசை – ஆர்டர் பேராமீட்டர் மாதிரி கொள்ளலாமென நினைக்கிறேன் (?)), இந்தாய்வில் பேசியுள்ளார், ஆய்வாளர். இரண்டு நுரைக்கூட்டம் இருக்கிறதெனக் கொண்டால், அருகிலேயே இருந்தாலும், பரப்பிழுவிசையினால் மட்டும்,  அது ஒன்றையொன்றுக்கூடிவிடும் என சொல்லிவிடமுடியாது,  பள்ளி-வேதியியற்பியல், சோப்பிலிருந்து அயனிகள் உருவாகும் எனப்படித்தபோது, மின்னூட்டப்பண்பினாலும் ஏற்படுவதால் கூட இப்படியிருக்குமோவெனத் தோன்றும்.  இங்கு பரப்பிழுவிசை பண்பினால் நுரைக்கூடுவது போல வட்டாரவழக்கில் எப்படிமொழியானது பரிணமிக்கிறது என்றும், எப்படி சுற்றியுள்ள வழக்குகளையும் தன்னகத்தே உட்கொண்டு வளர்கிறதுஎனவும் இயற்பியல் மாதிரிகளைக் கொண்டு விளக்கியுள்ளார்.

 

கிட்டத்தட்ட மதுரை, தேனி, விருதுநகர், நெல்லைப்பக்கத்தின் உச்சரிப்பு விதத்தைக்கூட, இதன் (handwaving, qualitative)உதாரணமாகக் காண இயலும் எனத் தோன்றுகிறது.  என்னுடைய மாப்பிள்ளையொருவன், தேனிக்காரன், அவன் பேசும் வார்த்தைகளின் விகுதிகளில் தேனிவழக்கு நன்றாக ஒலிக்க்கும், (நானும் கிட்டத்தட்ட அவ்வாறுதான் பேசுவேன், ஆயினும் என்னுடையது சற்றுக்கலவையானது), உதாரணத்துக்கு
தேனி: என்னடா -> என்றியா (அதில் ‘றியா’ ஒலிப்பு மெலிதாக இருக்கும், என்றா) என ஒலிக்கும். அதே வார்த்தைக்கு மற்ற ஊர்களில்
விருதுநகர்/தூத்துக்குடி- என்னவே,
நெல்லை -> என்னலே,
சிவகங்கை -> என்னாஞ்ச (இருபாலருக்கும்).

மதுரையைச்சுற்றியுள்ள ஊர்களில் பேசப்படும் தமிழைப் புரிந்துகொள்ளவும், ஓரளவு மாறாத தொனியின்ஏற்ற இறக்கங்களும் விகற்பத்தை உண்டுபண்ணாது.  ஆனாலும், நெல்லைத்தமிழிலுள்ள ஏற்றவிறக்கங்கள் சற்று வேறுதிசையில் செல்வதை உணரலாம், அதிலும் கன்னியாகுமரி தமிழ் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபடுவதாகவே உணர்கிறேன். ஆயினும் விருதுநகரில், சுற்றியிருக்கும் மாவட்டங்களின் தமிழ் மொத்தமாகக் கலந்து, அனைத்துவிதமாகவும் பேசப்படுவதுபோல் உணர்ந்திருக்கிறேன். இவை என்னுடையத் தனிப்பட்டக் கருத்து, மொழியியல் வல்லுநர்களின் கருத்து எப்படியெனத் தெரியவில்லை. எனினும் இந்த ஆய்வு சொல்வதைக் காணும்போது, அப்படித்தானோவென்றேத் தோன்றுகிறது.

 

இதில் எனக்குத்தோன்றும் ஒரு Conjecture/கணிப்பு: (என் அப்பா எனக்குக்கூறியவை)
நான் முன்னர் குறிப்பிட்டது போல், இருவேறு நபர்களுக்கிடையே அறிவளவில் வேறுபாடு இருக்கும்போது, ஒருவர்கூறும் விசயத்தை, மற்றொருவர் புரிந்துகொள்ளும் விதத்தை abstract understanding என்று கொண்டால், அதையும் கூட நுரைப்பரப்பு ஒன்றையொன்றுசேர்ந்து பூசிமெழுகியமாதிரி (rounded, without edges) உருவாகும் வடிவம் போல் எனத் தோன்றுகிறது.  நம் முன் அனுபவங்களும்-பின் அறிவு பரிணமிக்கும் விதமும் நுரைபோன்ற மாதிரிவடிவாலேயே விளக்கப்படலாம் என நினைக்கிறேன்.
ஆய்வுக்கட்டுரையைப்படிக்கவிரும்புபவர்களுக்கு : (அது இலவசம், யார் வேண்டுமானாலும் தரவிறக்கலாம்)
https://journals.aps.org/prx/pdf/10.1103/PhysRevX.7.031008

வெகுசனத்தோருக்கான சேதியிணைப்பு:
https://phys.org/news/2017-07-physics-language-patterns.html