மொழிபெயர்ப்பும், அறிவியற்தமிழும்

தமிழாக்கம் செய்வதில் உள்ளப் பெரியப் பிரச்சினை, ஒரு மாற்றுமொழி வார்த்தையை அப்படியேத் தமிழ்ப்படுத்துவது தான். இதைப் பல நிலைகளில் விவாதிக்க வேண்டியக் கட்டாயம் உள்ளது.

எடுத்துக்காட்டாக, பொதுவாக பொருட்களின் பௌதீக நிலைகளாக அறியப்பட்ட திண்ம திரவ வாயு நிலைகள் தாண்டிய, நான்காம் நிலையான Plasma என்பதற்கு (உயர்/அதிவெப்ப)அயனிக்குழம்பு என்று தமிழில் எழுதலாம் . முதன் முதலில் பிளாஸ்மாவைக் கண்டறிந்தவர் இரத்தத்தில் இருக்கும் நிணநீர் போல் இவைப் பார்ப்பதற்கு இருந்ததால், அதை அதே பெயரால் ப்ளாஸ்மா எனக் குறிப்பிட்டார். ஆதலால், இரத்தத்தில் உள்ள ப்ளாஸ்மாவைத் தமிழில் நிணநீர் என எழுதுவதால், இதையும் இப்படியே எழுதவேண்டும் என ஒருவர் கூறினார். இப்படி ஆங்கிலத்தில் புழக்கத்தில் உள்ளதால், நாமும் எழுதினால், எப்படி அந்தப் பொருளின் தன்மையை விளக்க முடியும்? இது மாதிரி பலக் குழப்பங்களைக் காணும் போது, அறிவியற் தமிழ் இலக்கணம் வகுக்குங்கால், தமிழாசான்களுடன், அறிவியலாளர்களும் இணைந்தால் தான் சரிப்பட்டு வரும்.

விஞ்ஞானிகளும் தமிழறிஞர்களும் இணைந்து இதைச் செய்ய வேண்டுமெனும் போது, எதோவொரு இடத்தில் இரு துறையாளர்களும் இடறி நிற்குங்கால், நாம் நம் பாட்டுக்கு எழுதும் படி ஆகிறது! ஆனால் இப்படிச் சில பேர் (குறிப்பாக விக்கியில் எழுதுபவர்கள்) குந்தாங்கூறாக, சில அறிவியல் விசயங்களை மாற்றிவிடுகிறதைப் பார்க்க முடிகிறது. நான் பள்ளிப்படிக்கும் காலத்தில் பள்ளிப்புத்தகத்தில் இருந்த தமிழாக்கங்களூம் தமிழ்வழியில் எழுதப்பட்டவையும் மிக நன்றாக இருந்தன,(எ.கா. Europe -ஐரோப்பா, Euler-ஆயிலர், etc) இருப்பினும் சிலப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை (Huygens-ஹைஜன்ஸ் (இது கூட பிரச்சினையில்லை ஏனெனில் டச்சுக் காரர்களைத் தவிர மற்றவர்கள் உச்சரிப்பதுக் கடினம்), L’Hospital-லாஸ்பிட்டல், Einstein – ஐன்ஸ்டீன்.. ). ஆனால், தற்பொழுது ஆங்கிலம் பேசுபவர்கள் எப்படிப் பேசுவார்களோ, அப்படியேத் தமிழில் எழுதுகிறார்கள், ஆயிலர் (சரியான உச்சரிப்பு) – யூலர் ஆகிறது.தமிழ்நாடு பாடநூல் நிறுவன நூல்களில், தங்கள் இஷ்டங்களுக்கு ஆசிரியர்கள் மாற்றி விடுகிறார்கள். ஏற்கனவே இருக்கும் நூல்களைப் படித்தோ, தமிழாசிரியர்களுடன் கலந்தோ மாற்றுவதில்லையென்றேத் தெரிகிறது.

இப்பொழுதுத் திரும்பவும் மொழிமாற்றத்துக்கு வருவோம். சில வார்த்தைகளை, அப்படியேப் பயன்படுத்துவதில், எனக்கும் பெரிய பிரச்சினை ஏதும் இல்லை. ஆயினும் சில வார்த்தைகளைக் கையாளும் போது, அவை முழுமையானத் தகவல் பரிமாற்றத்தைத் தர முடிந்தால், மாற்றுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை என்பது என் எண்ணம்!

உதாரணமாக, quantum entanglement எனும் பதத்தை, “குவாண்ட நிலைகள் பின்னிப் பிணைந்திருத்தல்” என்று சொல்வதும் சரி தான், ஆயினும் குவாண்ட தொடர்பில்லாத் தொடர்பு / தொடர்பில்லாப் பிணைப்பு எனும் போதும், படிப்பவருக்கு, தொடர்பில்லாமல் எப்படித் தொடர்பு–இது குவாண்டவியற்பியலின் சில ‘குதர்க்கமான’ விசயங்களின் அறிமுகம்– எனும் போதும்; தொடர்பு சரி, அது அத்தொடர்பின் வேகம் எத்தகையது, எனும் போதும், பின்னால் ஒளிந்துள்ள சார்பியல் கொள்கையின் நிலையை உணர வைத்தல் எளிது. இதில் வெகு எளிதாகப் பல விசயங்களைப் புகுத்திவிடலாம்.

ஆங்கில வார்த்தை, entanglement என்பதே சரியான வார்த்தை இல்லை. அது அந்நிலையை சரியாக விளக்குவதில்லை, அதன் மூலச் சொல்லான, verschränkung லிருந்து, அரைகுறையாக மாற்றம் செய்யப்பட்டது, அதை, நாம் entanglement லிருந்து மாற்றம் செய்வது சரியானதாக எடுக்க முடியாது.

மேலும் சில விசயங்களை அதை உருவாக்கும் பொழுதும் ஒரு பெயர் வழங்கப்படும், காலம் ஆனப் பின்னர் வேறு பெயர் கொண்டோ, அல்லதுப் படைத்தவரின் பெயர் கொண்டோ அழைக்கப்படும், ஆரம்பக் கால கட்டத்தில் அதனை விளக்குவதற்கு ஆகும் வார்த்தைகளின் எண்ணிக்கைக் கணக்கும் வாதமும், வேறு ஒரு காலக் கட்டத்தில் எழுதப்படும் போது, தேவையான விளக்கங்களும் வார்த்தைகளும் மாறுபடும். ஆக, நமக்கு அக்கால கட்டத்திற்கு தகுந்தாற் போல எழுத முடியவேண்டும். அதனால் தான், பிளாஸ்மா என்றப் பெயர், அறியப்படாக் காலத்தில் இருந்ததற்கும், தற்பொழுது அதை விளங்கிக் கொண்டு, பெயர் கொடுப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளது எனக் கூறுகிறேன்.

குவாண்டப்படுத்துதல்:Quantization: துளியாக்கம், சொட்டாக்கம் என்றுக் கூறினால் என்ன??

ம்ம்.. ஆனால், அதைப் பயன்பாட்டில் காணும் போது, சிலக் குழப்பங்களை உண்டாக்கக்கூடியக் காரணிகளைக் காண வேண்டியுள்ளது. இடத்தையோ, உந்தத்தையோ குவாண்டப் படுத்துதலை. உந்தத் துளியாக்கம், இடச் சொட்டாக்கம் என்பதைப் படித்து விளங்கியப் பின்னரே உணர முடியும். உதாரணத்துக்கு இட அறுதி, உந்த அறுதி என்பது குவாண்டத் தன்மையை முழுமையாக உணர்த்த வில்லையெனினும், இடம் உந்தம் என்று இல்லாமல், கூடுதலாக உள்ள அறுதியின் அளவைக் காட்ட முடியும். ஆனாலும் இவையும் போதாது. அறுதியற்ற அறுதி அது. மேலும் துளியாக்கம், சொட்டாக்கம், பழங்கால குவாண்டவியலில் இருந்து வந்தவை. அப்பொழுது சக்தி சொட்டுக்களாக ஒளித்துகள் வருவதைக் கணக்கில் கொண்டனர். இதே ஃபோட்டான் துகளின் சுழற்சியாகப் பார்த்தால், சக்தி சொட்டு சுழற்சி என்பதுத் தவறான அர்த்தத்தைக் கற்பிக்கும்.

ஆயினும் தத்துவம் பாதிக்கவில்லையெனில், நல்லது என நினைக்கிறேன். நம் மக்களுக்கு தத்துவம் பாதித்தாலும் பரவாயில்லை, மொழிமாற்றம் செய்தே தீருவேன் என்பது சரியான நிலைப்பாடாகக் கருத முடியாது, அப்படி சிலர் செய்வதைக் காண முடிகிறது.