குழந்தையுடனொருக் கற்றல்

எங்கள் வீட்டிலேயே மூன்றுக் குழந்தைகள் எனக்கடுத்து வளரக் கண்டிருக்கிறேன், அதுவும் நல்ல வயதுவித்தியாசங்களுடன். தவிர, சுற்றி எப்பொழுதும் குழந்தைகள் இருக்கும் மாதிரியானதொரு சூழல். பக்கத்திலேயே உறவினர்கள். பெரும்பாலும் குழந்தைகள் வளரும் விதம் ஒரேமாதிரி தான் இருக்கும். செய்யும் சேட்டைகள், கற்கும் விதம், பெரியவர்கள்போல் அவர்களாக உருவகப்படுத்தும் விதம் இதுமாதிரி பல்வேறு விசயங்கள்..

இதில் என் அம்மா எங்களின் கடைத்தம்பி சரவணன் செய்த சேட்டைகளை அவர்களின் நாட்குறிப்பில் தினம் எழுதிவைக்கத் தொடங்கினார்கள், பின்னர், அது நாங்கள் நித்தம் செய்யும் சேட்டைகளையும் சேர்த்து எழுதுவதாகவும் அமைந்தது. எதுவரை எழுதினார் எனத் தெரியவில்லை. அதேபோல், என் இரண்டேமுக்கால் வயது மகனார் சிவதண்டீசுவரர் பற்றி அவ்வாறு எழுதலாம் எனத்தோன்றும், ஏனோ செய்வதில்லை.

குழந்தைகளின் மூளை பஞ்சுமாதிரி இழுத்துத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை என ஆய்வுகள் கூறுவதை அவ்வப்போது காணநேரிடும். அதை வீட்டிலேயேக் கண்கூடாகக் காண்பதும் அடிக்கடி நிகழும்! அவ்வாறு இன்றைக்கும் நேற்றும் நடந்த சில நிகழ்வுகள்…

சற்றுநேரம் முன், ஒரு இழைக்கோட்பாட்டு (string theory) ஆய்வுக்கூட்ட உரையில், K3-பரப்பையும் (surface) R^4 இரீமன் பரப்பின் (R4 Riemann Surface) துண்டையும் இடவியலைக் (Topology) கொண்டு இணைத்து ஒரு படத்தை ஒரு ஆய்வாளர் விவரித்துக் கொண்டிருந்தார். என் இரண்டே முக்கால் வயது சிவதண்டீசர் அதைப் பார்த்துவிட்டு “என்னப்பா இது நுங்கா?” எனக் கேட்டதும் அட ஆமா எனத் தோன்றிற்று. அச்சிறு கண்களுக்கும் இடவியல் கண்ணோட்டம் அத்தனைத் தெளிவாக இருப்பதைக் காணமுடிகிறது! போனவாரத்தில் தான் நுங்கு என்பதை முதன்முறைப் பார்த்தான்!  

இழைக்கோட்பாட்டு ஆய்வுரைக்கு சற்றுமுன், என் மனைவி வேலைசெய்யும் ஆய்வுக் குழுவுக்கு யாரையோ நேர்கண்டு பேட்டிக் கண்டிருக்க, நாங்கள் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தோம், இவன் திடீர் என்று “எனக்கு கத்தி வேண்டும், தண்ணீர்ப்பழம் நறுக்க…” என்று ஒரே ஆர்ப்பாட்டம்– மதியம் அவன் அழுகையை திசைதிருப்ப அப்படிச்செய்தனர் போல. நான் சிறுபிள்ளை கத்தியை எடுக்கக்கூடாது என.. உடனே அம்மாவின் துணைநாடி அம்மாவெனக் கத்திகொண்டே மனைவியின் அலுவல் அறைக்குச் சென்றுக் கதவைத் திறந்தான். அங்கே சூம் மீட்டிங்கில் அவள் இருப்பதைப் பார்த்துவிட்டு, கதவை சத்தமில்லாமல் மூடிவிட்டு, தலையில் கையைவைத்து “ஐய்யோ.. ” என சத்தம்போட்டு அழ.. எனக்கு சிரிப்புத் தாளவில்லை.

கொழுந்தியாளின் பிள்ளைகள் வந்திருக்கின்றனர், அவர்களில் சிறியவன் விசுவேசன் “பெரியப்பா.. சிவதண்டீசு, சேட்டைபண்ணுகிறான்” என்றான், “சேட்டைப் பண்ணாதே” என்றும் கூறினான், சிவதண்டீசர் ஏதோ யோசித்துக் கொண்டே, அவன் செய்ததை அவனைப் பார்த்துக்கொண்டே செய்துகொண்டிருந்தான். எனக்கு சிவதண்டீசருக்கு விசுவேசன் சொன்னது புரியவில்லையோ என சந்தேகம். பெரும்பாலும் நேராகச் சொன்னால் உடனே சரிசெய்துவிடுவான். அதனால், “நீ சேட்டையென்று எதைச் சொல்கிறாயோ, அதை, அவனிடம் சொல்லி அதைச் செய்யாதே என சொல்” என்றேன். காலை வைத்து இடித்துக் கொண்டே ஏதோ விளையாடி இருப்பான் போல, அது விளையாட்டு மும்முரத்தில், அவனுக்கேத் தெரியவில்லை, விசுவேசன் “காலை வைத்து இடிக்காதே” என்றதும், சிவதண்டீசர் தள்ளிப்படுத்துவிட்டான். போதாதென்று, அண்ணனுக்கு ஒரு முத்தம் வேறு.. அண்ணனை துன்புறுத்திவிட்டானாம்..

குழந்தைகளின் செயல்பாடும் எண்ணமும் நேர்கோட்டில் எளிமையாக இருப்பதால், அவன் கற்றுக்கொள்வது வேகமாகவும் தெளிவாகவும் இருக்கிறது போலும். அதைவிட, நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறோம் என்ற பேரில், மொத்தமாக உழட்டுவதை இன்னும் தெளிவாகக் காணவியலுகிறது.

கற்றலும் சமூகமும்

அப்பொழுது நான் இளநிலை மாணவன், என்னுடைய இயற்பியலர் நண்பர்கள் கார்த்திக் மற்றும் சாயல்குடி கண்ணன் — எங்கள் கல்லூரி வகுப்பைத் துறந்து– பல்கலைக்கழக நூலகத்திலும் இயற்பியற்பள்ளியிலும் கணிசமான நேரம் அமர்ந்திருப்போம். அது பெரிய விசயங்களுக்கான காலமாகத்தான் இருந்திருக்கவேண்டும். அந்நேரம் வீட்டில் காசு வாங்கி பேருந்து பயணம் செய்து எல்லாம் போகும் நிலையில் நான் இல்லை. ஆதலால், கண்ணன் அவர்களின் மைத்துனர் நடத்திய மாலைநேரப்பள்ளியில் நானும் கண்ணனும் பயிற்றுவிப்பாளர்களாக இருந்தோம்.

நண்பர்களோடும் அவர்கள் இல்லாமலும் இயல்பானவகுப்பைத் தவிர்த்து மதுரைப் பல்கலைக்குப் போகவர இருக்க, அங்குபணியாற்றிய அக்காலத்தைய பேராசிரியர்கள், பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் ( பேரா. சீனிவாசனின் ஒரு ஆய்வுக்காகிதத்தை இதில் குறிப்பிட்டிருக்கிறேன். https://paramaaanu.wordpress.com/2015/09/04/infiniteckts-cmphys-numberth/) சிலர் பழக்கமானார்கள். அவர்கள் இன்னும் பெரிதாகப் பார்க்கப் பழகித் தந்தார்கள். எவ்வளவு அதிகமாக உண்ணுதற்கு இருந்தாலும் வாய்திறக்குமளவுக்குத்தானே சாப்பிட முடியும் அதுமாதிரி, என்னால் எவ்வளவுப் பார்க்கமுடியுமோ அவ்வளவேக் கற்றுக்கொண்டேன். இருக்கட்டும்! பேசப்போவது சில கசந்தஅனுபவந்தான் எனினும், அப்பேராசிரியர்களின் சிறுபிள்ளையென நினைக்காமல் கற்றுத்தந்ததும் கேள்விகேட்க வைத்ததும் என அவர்களின் நினைப்பே இனிக்கிறது.

சரி.. கதை, இது தான். பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் எங்களைத் தத்தெடுத்தப் பிள்ளைகள் போல், நாங்கள் என்னத்தைக் கேட்டாலும் சொல்லிக் கொடுத்துக் கொண்டும், ஊக்குவித்துக் கொண்டும் இருக்க, நான் போகும்போதும் வரும்போதும் ஒரு பல்கலைப் பேராசிரியர் தொடர்ந்துப் பார்த்துக்கொண்டிருப்பார். இவரிடமும் ஏதோவொருநாள் பேசிவிடவேண்டும் என நினைத்திருந்தேன், அவரே ஒரு நாள் என்னைப் பிடித்துக் கொண்டார். ஆனால்.. ஆங்கிலத்தில் சகட்டுமேனிக்கு நீ யார், ஏன் இங்கு வருகிறாய், அதுவா இதுவா எனக் கோபத்தில் கத்திக்கொண்டிருந்தார். நானும் தொண்டைவறள இன்னார்மகன் தொள்ளக்காதன் இதற்குத்தான் வந்தேன் எனக் குழப்பத்தில் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தேன்.

என் குழப்பம் என்னவெனில் இவர் பேராசிரியர்களோடு அவர்கள் அலுவலகத்திலும் துறைக்குவெளியில் உணவகங்களிலும் உட்கார்ந்துப் பேசும்போது பார்த்திருக்கிறாரே, ஏதோ இப்போது தான் பார்ப்பது மாதிரி கேட்கிறாரேயென. சட்டாம்பிள்ளைத்தனம் அப்படித்தான் பேசும்போல.

எல்லாவற்றையும் கேட்டபிறகு அவர், நவநீதகிருட்டிணனுக்கும் சீனிவாசனிடமும் பேசவேண்டுமானால், இப்பள்ளிக்கு/துறைக்கு வெளியே வைத்துக்கொள். உள்ளே எல்லாம் வரக்கூடாது என விரட்டினார். இதில் கூற்று என்னவென்றால், நவநீதகிருட்டிணர் துறைத்தலைவர். துறைத்தலைவராக இருந்தால் பெரிய ஆளா என்றத் தொனியில் பேசியதோடு, ஒரு கல்லூரிப் பையனைப் பலங்கொண்டமட்டும் தட்டுதற்கு ஏனோ அவர் முயன்றார். நான் சரி சரியென்றுக் கேட்டுக்கொண்டாலும் கொஞ்சம் பயந்துபோனேன். சரி என்னசெய்வது, என்னை வைத அதேப் பேராசிரியரின் அறைக்கு எதிர்ப்புறம் இருந்த நவநீதகிருட்டிணரின் அறைக்குச் சென்று அவர் சொன்னதையே சொல்லி, நான் இப்பொழுது என்ன செய்யவென்றுக் கேட்டேன்.

அந்த பேராசிரியர் நவநீதகிருட்டிணர் சொன்னது என்னை ஒருவாறு பண்படுத்தியது, ஆனால் அவர்கூறிய அளவுக்கு பண்பட்டேனா எனத்தெரியவில்லை. அவர் சொன்னது இங்கு இப்படித்தான் ஏதாவது இருந்துகொண்டேயிருக்கும், ஆனால் அதைக் கண்டு சோராதே, உனக்கு எப்பொழுது என்னவேண்டுமானாலும் நீ இங்குவா, யார் என்ன சொன்னாலும் என்னைப் பார்ப்பதற்காகவே வந்தாய் எனக் கூறு, கவலைகொள்ளாதேப்போவென வழியனுப்பினார்.

எனக்குப் புரியாத விசயம் யாதெனில், பல்கலையின் நோக்கம் என்னவென்பதும் இப்பேராசிரியர்களுக்கு அவர்களின் கடமையாதென்பதும் உண்மையிலேயேப் புரிகிறதா. வயதிலும் கல்வியிலும் மூத்தோர்கள் வளருந்தலைமுறையோடு நேரடியாகத் தொடர்பில் இருக்கும் இடம் தானே பல்கலைக்கழகம். சிறியவர்களை வளர்த்தெடுப்பது தானே அவ்வமைப்பின் நோக்கம்.

இதில் சமீபகால விரக்தி என்னவெனில், எந்நண்பர் பழைமைவாய்ந்த ஒரு பல்கலையில் துணைப் பேராசிரியர் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்க்கிறார். ஆனால் அவரைப் போட்டுப் பாடாய்ப்படுத்துகின்றார்கள். அவர் ஆய்வுக்கட்டுரை எழுதும்போது துறை முகவரியைக் கட்டுரையில் வேலைபார்க்குமிடமாகக் குறிப்பிட்டால், கூப்பிட்டு இப்படியெல்லாம் துறைப் பெயரைப் போடக்கூடாது எனவும் இன்னும் நிறைய ஒப்பந்தத்தில் இல்லாத, ஆனால் வாய்மொழியாக ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள் போல் தெரிகிறது.

மாணவனாக இருந்தாலும் பேராசிரியராக இருந்தாலும் ஒரு அமைப்பு மிரட்டிக்கொண்டேயிருக்கிறதே எனக் கோபம் வரத்தான் செய்கிறது. இது கோபப்பட்டாலும் சரியாகக்கூடிய விசயமாகத் தெரியவில்லை. ஒரு அமைப்போ அல்லது அமைப்பின் கூறோ ஒரு சிறுவனை அச்சமுறவைப்பதிலும் சகஊழியரை அச்சுறுத்துவதிலும் இவ்வளவு முனைப்பாக இருப்பதை அவ்வமைப்பின் ஆய்விலோ பயிற்றுவிப்பதிலோ காண்பித்ததுபோல் தெரியவில்லை.

இதை சரிசெய்ய மாணவர்களையும் பொதுமக்களையும் கேள்விகேட்கவும், கேள்விகேட்பவரை பெரியவர்கள்/அதிகாரிகள் ஊமைக்குத்தாகக் குத்தி முடக்கினாலும் இன்னும் ஆழ்ந்து கேள்விகேட்டுக் கொண்டேயிருக்கவும் பயிற்றுவிக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.

பெரும்பாலாக, சிறியவரின் கேள்வி பெரியோரின் செவிக்கு ஏறாததும், ஏறினாலும் கேள்வியின் தன்மைசாராமல் விட்டேற்றியாக, சிறியவர்களின் இயலாமையை அவர்களுக்கேத் திருப்பிவிட்டு, சிறியோரை மட்டம் தட்டுவதும் — எடுத்துக்காட்டாக, படிக்கும் பிள்ளை ஏதாவது கேள்விகேட்டால், நீ ஒழுங்காகப் படிப்பதில்லை, இதையெல்லாம் பேசு என மட்டம் தட்டுவது,– கேள்விகேட்க ஊக்கப்படுத்தாததும் கேள்விகேட்போரையே அசிங்கமாக நினைக்கவைப்பதுமாக அடக்கவேப்பார்க்கிறது. இது இன்றைக்கு மாணவர்களின் பிரச்சினையெனில், பின்னாளில் அது மாணவன் சமூகவூடாடலின் போது பொதுமக்களின் பிரச்சினையாகும். இவ்வாறு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்பேயில்லாதமாதிரி கல்விக்கூடங்களும் அரசுஅலுவலகங்களும் இன்னும் இருப்பது வருத்தத்திற்குரியது.

இப்படியாக உருவாக்கப்பட்ட அச்சங்கள், வெவ்வேறுநிலைகளில் வெவ்வேறு வடிவில் என்வாழ்வில் முக்கியமானத் தருணங்களில் தடையாக வந்திருக்கிறது, சிலநேரங்களில் என்னால் எதிர்கொள்ளமுடியாமலும் போக இம்மாதிரியான அச்சங்கள் தடையாக இருந்திருக்கிறது. எவ்வளவு விழிப்போடு தவிர்க்கும்போதும் அது ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதற்போல் குந்தாங்கூறாக குதித்து முன்வந்து நிற்கும்.

பல்கலைக்கழகம், காவல்நிலையம், அரசு அலுவலகம், உணவுப்பகிர்வுத் துறையின் கடைகள்/ரேசன் கடைகள், இ-சேவை மையம் என எதில் வேலைபார்ப்பவர்களாக இருந்தாலும் அவர்தம் பயனாளரை ஒருவித பயமுறுத்தலோடே அணுகுவது என்பது அக்காலத்தைய சமீந்தாரிய முறைகள் ஏதோவொரு மாற்றுவடிவில் இன்னும் உலாவருவதையேக் குறிக்கிறது… இவ்வளவு அறிவியற்றொழினுட்ப வளர்ச்சிக்கு அப்புறமும், மற்ற வளர்ந்தசமூகங்களில் உள்ள மாற்றங்கள் வளர்ச்சிகளும் அதன் செய்திகளும் நம்மால் பார்த்து உய்த்துணர வாய்ப்புகள் இருக்கும்போதும், இதுமாதிரி அச்சுறுத்தல்களோடேயே வாழ்வது, நாம் ஒரு தற்செயலாக சுமாராக இயங்கிவரும் ஒரு கட்டமைப்பில்தான் இருக்கிறோமோ என்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

புல்வாமா தொடர்ந்த நிகழ்வுகள் – ஒரு சாதாரணனின் பார்வை

(நேற்று எழுதியது) இந்திய விமானங்கள் பாகிசுதான் எல்லைக்குள் சென்று அடித்த இச்சூழ்நிலையில்,  கருத்தைக் கூறி ஏதும் செய்யவியலாது. இந்நேரத்தில், முரட்டடி அடித்ததால், அவர்களுக்கும் இதேமாதிரியான சூழ்நிலையை நாம் உருவாக்கிக்கொகொடுத்துவிட்டோம் என்பதை உணரவேண்டும், அதன் விளைவால், எல்லாவற்றுக்கும் அணியமாய் இருக்கவேண்டும்.  அவர்கள் நாட்டிலும் மக்கள்-அவர்தம் விருப்பம், அவர்களைத் திருப்திப்படுத்துதலுக்கான அரசியல் என கொடுக்கல்வாங்கல் கணக்குகள் உண்டென்பதையும் நாம் உணர்ந்தாலே போரைப் பற்றி நினைக்கவேமாட்டோம்.

விஞ்ஞானிகள் பெரும்பாலானோர் போருக்கு ஆதரவளிப்பதில்லை, விஞ்ஞான வளர்ச்சி உலகப்போர்களின் போதே அசுரத்தனமாக இருந்தது, ஆனால் அது மானுடத்துக்கு ஏற்படுத்தியப் பாதிப்பு அதைவிட அசுரத்தனமானது.  எனக்கும் எல்லைகள், போர்களில் விருப்பமில்லையெனினும், அடித்த தீவிரவாத அமைப்பு,  இவ்வளவு தீர்க்கத்தை உணர்ந்தே இந்தியவீரர்களின் மேல் தாக்குதல் நடத்தியதாவெனத் தெரியவில்லை– அவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் பெரியக் கருத்திருந்திருக்கும் எனத்தோன்றவுமில்லை.   மேலும், பதிலுக்கு நாமும் சண்டைக்கிழுத்தப் பின்னர், இதில் பேசி ஏதும் ஆகப்போவதுமில்லை.

இருப்பினும், இந்த காசுமீரத்தின் மீதானக் கருத்தும், ஐக்கியதேசங்களின் நாடான இந்தியத்தின் மீதானக் கருத்தும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையில் மாறுபடும் என்பதை எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன். இவ்வளவு ஏன், இந்தியப்பழங்குடியினர் காட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான, உச்சநீதிமன்றத்தின் நேற்றுவந்தத் தீர்ப்பைக் கவனியுங்கள்.  இந்தியர்களான நாமே தான், இந்தியப் பழங்குடிகளான அவர்களை அவர்களின் இடத்திலிருப்பதற்குரிய உரிமையை மறுக்கிறோம்,  அதே நேரம் இன்று ஆக்கிரக்கப்பட்ட-காசுமீரத்தில் அடித்ததை,  இறந்த இந்திய வீரர்களுக்காகப் பழிவாங்கும் தாக்குதல் என்கிறோம். ஆக, நாம் யாருக்காகத் தான் போராடுகிறோம்? தொடர்ந்து, இலங்கைக் கடற்படையினால் துயரம் என்பது, பலவருடப்பிரச்சினை, இதற்கும் சரியானத் தீர்வுக்கு வழியில்லை.

ஐஐடி, ஐஐஎஸ்சி காலங்களில் வெவ்வேறுவகையான தேசிய, கம்யூனிச குழுமங்களுடன் வெவ்வேறுவகைகளில் தொடர்புடைய நண்பர்களுடன் எப்போதும் கருத்துகளைப் பகிர்ந்துவந்திருக்கிறேன். பெரும்பாலும் வடகிழக்கு மாநிலத்தவர்கள், அவர்தம் கருத்துகளையும் அனுபவங்களையும் முன்வைக்கும்போது, அவர்கள் வருந்திக்கூறும் இராசரீக வழிமுறைகள் கேட்பதற்குக் கூட மிகவும் உவப்பானதாக இருந்ததில்லை.

அதே நேரத்தில்-இடத்தில், எனக்கு குவாண்ட இயற்பியல் கற்றுக்கொடுத்த பேராசிரியர் தேசுமுக் போன்றோர்களின் காசுமீர முயற்சிகளையும் கண்டிருக்கிறேன். காசுமீரம் ஏன் இந்தியாவுடன் இருக்கவேண்டும் என அமெரிக்க பாராளுமன்றம் மூலம், அவர் எடுத்த முயற்சிகள். மேலும், பேராசிரியர் அனிதா போசு (நேதாஜி அவர்களின் மகள் – அவர் ஒரு செர்மானியர்) போன்றோரைக் கொண்டு மாநாடு அமைத்து, தேசியம்சார்–பெரும்பாலும் காசுமீரம் சார்ந்த– விவாதங்களை அரங்கேற்றியது என எனக்குத் தெரிந்தவைசில. இதனால், அவருக்குத் தொடர்ந்து கொலைமிரட்டல்கள் இருந்ததாகவும் கூறுவர்.

இம்மாதிரி ஒரே இடத்திலுள்ள மக்கள், வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதும், அதனால் விளையும் போராட்டங்களும், அவரவர் தரப்பு நியாயங்களும் கோரிக்கைகளும் என இவையெல்லாம் ஒருபக்கமென்றால், இவற்றையெல்லாம், எப்பொழுதும் தீர்க்கவியலாப் பிரச்சினை போலவே வைத்திருப்பதைக் காணும் போது, இவையெல்லாம் நம் வீடுகளில் ஏற்படும் உறவினர்களுக்கிடையேயானப் பிரச்சினைகள் போல் தீர்க்கவே முடியாத் தன்மையவையோ எனத் தோன்றும்.

வடகிழக்குமாநில நண்பர்களின் கருத்தையொத்த காசுமீர நண்பர்களின் ஒருங்கிணைந்த இந்தியதேசம் சார்ந்த பார்வையைக் கேட்கும்போது இந்தியம், தேசியவுணர்வு என்பதெல்லாம், துயர் அனுபவிப்பவர்களுக்கு வேறுமாதிரியானது என்பதெல்லாம் எனக்கு விளங்கியது, ஏன் நமக்கே, ஈழமக்களின் நிலை, மீனவர்களின் நிலையைக் கண்டால் குறைந்தபட்சம் பதறவாவது செய்கிறது.  இங்கு இவையெல்லாம் அரசியல் சார்ந்த விசயம் என்பதால், இதற்குத் தீர்வு என்பது சற்றுக்கடினமானது. அதேநேரத்தில், நமக்கே ஏதாவது ஒருதலைப்பட்டத் தீர்வை நோக்கித்தான் நகரமுடியும் என்பதைப்போல் தான் நிலைமையுள்ளது.

உதாரணத்துக்கு, நமக்குக் கற்றுத்தரப்பட்ட தேசியமானது நமக்கு காசுமீரம் வேண்டும் என்று சொல்லும்; நம்முடையத் தமிழுணர்வு நமக்கு ஈழம் வேண்டும் என்றும் சொல்லும்.  ஈழவிடுதலையும், காசுமீரத்துமக்கள் விரும்பும் இந்திய-பாகிசுதான் தலையீடற்ற சுதந்திரமும் ஒரேமாதிரியானவை, அது மிகுதியான காசுமீரத்து மக்களின் நிலைப்பாடும் கூட.  அப்படிக் காண்கையில் நம்முடைய பெரும்பாலான (தமிழர்களின்) உள்ளக்கிடக்கையான இவ்விருவிசயங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது என்பதெல்லாம், கொஞ்சம் யோசித்தாலே விளங்கிவிடும்.

போரும் அதன் தாக்கமும், தமிழ்நாட்டுக்கு கடந்த 100 ஆண்டுகளில் பெரிதாக இருந்ததில்லை, இரண்டாம் உலகப்போரின்போது, எம்டன் (Emden) கப்பல் வீசிய குண்டு/கள் கூட எவ்விதப்பாதிப்பையும் உருவாக்கவில்லை. ஆக, நமக்கு போரின் தாக்கம் நேரிடைப் பாதிப்பை உருவாக்கவில்லை, ஈழப்போரிலும் நம்மால் உணர்ச்சிவசப்படமுடிந்ததேத் தவிர, எவ்விதத்திலும் தமிழ்மக்கள் ஒருசேர ஈழவர்களுக்கு உதவவோ, ஆதரவு தரவோக் கூட முடியவில்லை.

தீவிரவாதத்துக்கு எதிரானத் தாக்குதல் என்று இன்றையப் பதிலடிக்குக் கூறுவதும், நாட்டின் நன்மைக்காக ஒரு ஊரை அழிக்கலாம் என்பது மாதிரி மற்ற உள்நாட்டுப்பிரச்சினைகளில் கூறுவதும், வெவ்வேறுதரப்பட்ட மக்களின் பார்வையைப் பொறுத்தது.  இருப்பினும், போரைப்பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் பார்வையில்லாதவர்கள் (குறிப்பாக, எவ்விதத்திலும் போரைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாதவர்கள்), விட்டேற்றியாக போரைப்பற்றிப்பேசுதலும், சுற்றியிருப்பவர்களைத் தியாகம் செய்யத் தூண்டிவிடுதலுமாக நடப்பதுபோல் தெரிகிறது. தன்னால் முடிந்தததை தியாகம் செய்கிறேன் என்றுவேண்டுமானால் கூறினால் பரவாயில்லை, போரையும் உயிரிழப்பையும் கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பது போல் பேசுவது நம் போன்ற பண்பட்ட சமூகத்துக்கு நல்லதில்லை. சமூகம் என்றொரு அமைப்பே, நாம் எல்லோரும் சமவுரிமையோடு, நன்றாக வாழவேண்டும் என்பதற்கு தான் உருவாக்கிவைத்திருக்கிறோம். ஆனால், எல்லாம் வெவ்வேறுவகைகளில் சென்றுகொண்டிருக்கிறது. சரியானவற்றுக்கு சரியானபடி குரலெழுப்பினாலே, நடப்பதில்லையென்பது வருத்தத்திற்குரியது.

ம்ஹூம் என பெருமூச்செறிந்து… எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புவோம்.

இன்று: இரு நாடுகளும் ஒவ்வொன்றையும் குற்றஞ்சாட்டி இருபக்கமும் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளன. இப்படித்தான், போரென்றால் எல்லாப்பக்கமும் களேபரங்கள் நிகழவே செய்யும், இதை பேச்சுவார்த்தைகளால் சரிசெய்யமுடியாது என நினைப்பவர்களுக்கு, போரினாலும் சரிசெய்யமுடியாது என்று ஒத்துக்கொள்ளமுடிவதில்லை,  எல்லோரும் காலில் சுடு எண்ணெயை ஊற்றிக்கொண்டு பரபரவென இருக்கவேண்டும் என நினைப்பவர்களாகவேத் தோன்றுகிறது.

சமூகம் வளர, வித்தியாசங்களும் வேறுபாடுகளும் ஏதோவொருவகையில் இருக்கவேண்டும் என்பது, திரும்பத் திரும்ப நிரூபணம் ஆவதுபோல் தோன்றுகிறது.