புல்வாமா தொடர்ந்த நிகழ்வுகள் – ஒரு சாதாரணனின் பார்வை

(நேற்று எழுதியது) இந்திய விமானங்கள் பாகிசுதான் எல்லைக்குள் சென்று அடித்த இச்சூழ்நிலையில்,  கருத்தைக் கூறி ஏதும் செய்யவியலாது. இந்நேரத்தில், முரட்டடி அடித்ததால், அவர்களுக்கும் இதேமாதிரியான சூழ்நிலையை நாம் உருவாக்கிக்கொகொடுத்துவிட்டோம் என்பதை உணரவேண்டும், அதன் விளைவால், எல்லாவற்றுக்கும் அணியமாய் இருக்கவேண்டும்.  அவர்கள் நாட்டிலும் மக்கள்-அவர்தம் விருப்பம், அவர்களைத் திருப்திப்படுத்துதலுக்கான அரசியல் என கொடுக்கல்வாங்கல் கணக்குகள் உண்டென்பதையும் நாம் உணர்ந்தாலே போரைப் பற்றி நினைக்கவேமாட்டோம்.

விஞ்ஞானிகள் பெரும்பாலானோர் போருக்கு ஆதரவளிப்பதில்லை, விஞ்ஞான வளர்ச்சி உலகப்போர்களின் போதே அசுரத்தனமாக இருந்தது, ஆனால் அது மானுடத்துக்கு ஏற்படுத்தியப் பாதிப்பு அதைவிட அசுரத்தனமானது.  எனக்கும் எல்லைகள், போர்களில் விருப்பமில்லையெனினும், அடித்த தீவிரவாத அமைப்பு,  இவ்வளவு தீர்க்கத்தை உணர்ந்தே இந்தியவீரர்களின் மேல் தாக்குதல் நடத்தியதாவெனத் தெரியவில்லை– அவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் பெரியக் கருத்திருந்திருக்கும் எனத்தோன்றவுமில்லை.   மேலும், பதிலுக்கு நாமும் சண்டைக்கிழுத்தப் பின்னர், இதில் பேசி ஏதும் ஆகப்போவதுமில்லை.

இருப்பினும், இந்த காசுமீரத்தின் மீதானக் கருத்தும், ஐக்கியதேசங்களின் நாடான இந்தியத்தின் மீதானக் கருத்தும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையில் மாறுபடும் என்பதை எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன். இவ்வளவு ஏன், இந்தியப்பழங்குடியினர் காட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான, உச்சநீதிமன்றத்தின் நேற்றுவந்தத் தீர்ப்பைக் கவனியுங்கள்.  இந்தியர்களான நாமே தான், இந்தியப் பழங்குடிகளான அவர்களை அவர்களின் இடத்திலிருப்பதற்குரிய உரிமையை மறுக்கிறோம்,  அதே நேரம் இன்று ஆக்கிரக்கப்பட்ட-காசுமீரத்தில் அடித்ததை,  இறந்த இந்திய வீரர்களுக்காகப் பழிவாங்கும் தாக்குதல் என்கிறோம். ஆக, நாம் யாருக்காகத் தான் போராடுகிறோம்? தொடர்ந்து, இலங்கைக் கடற்படையினால் துயரம் என்பது, பலவருடப்பிரச்சினை, இதற்கும் சரியானத் தீர்வுக்கு வழியில்லை.

ஐஐடி, ஐஐஎஸ்சி காலங்களில் வெவ்வேறுவகையான தேசிய, கம்யூனிச குழுமங்களுடன் வெவ்வேறுவகைகளில் தொடர்புடைய நண்பர்களுடன் எப்போதும் கருத்துகளைப் பகிர்ந்துவந்திருக்கிறேன். பெரும்பாலும் வடகிழக்கு மாநிலத்தவர்கள், அவர்தம் கருத்துகளையும் அனுபவங்களையும் முன்வைக்கும்போது, அவர்கள் வருந்திக்கூறும் இராசரீக வழிமுறைகள் கேட்பதற்குக் கூட மிகவும் உவப்பானதாக இருந்ததில்லை.

அதே நேரத்தில்-இடத்தில், எனக்கு குவாண்ட இயற்பியல் கற்றுக்கொடுத்த பேராசிரியர் தேசுமுக் போன்றோர்களின் காசுமீர முயற்சிகளையும் கண்டிருக்கிறேன். காசுமீரம் ஏன் இந்தியாவுடன் இருக்கவேண்டும் என அமெரிக்க பாராளுமன்றம் மூலம், அவர் எடுத்த முயற்சிகள். மேலும், பேராசிரியர் அனிதா போசு (நேதாஜி அவர்களின் மகள் – அவர் ஒரு செர்மானியர்) போன்றோரைக் கொண்டு மாநாடு அமைத்து, தேசியம்சார்–பெரும்பாலும் காசுமீரம் சார்ந்த– விவாதங்களை அரங்கேற்றியது என எனக்குத் தெரிந்தவைசில. இதனால், அவருக்குத் தொடர்ந்து கொலைமிரட்டல்கள் இருந்ததாகவும் கூறுவர்.

இம்மாதிரி ஒரே இடத்திலுள்ள மக்கள், வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதும், அதனால் விளையும் போராட்டங்களும், அவரவர் தரப்பு நியாயங்களும் கோரிக்கைகளும் என இவையெல்லாம் ஒருபக்கமென்றால், இவற்றையெல்லாம், எப்பொழுதும் தீர்க்கவியலாப் பிரச்சினை போலவே வைத்திருப்பதைக் காணும் போது, இவையெல்லாம் நம் வீடுகளில் ஏற்படும் உறவினர்களுக்கிடையேயானப் பிரச்சினைகள் போல் தீர்க்கவே முடியாத் தன்மையவையோ எனத் தோன்றும்.

வடகிழக்குமாநில நண்பர்களின் கருத்தையொத்த காசுமீர நண்பர்களின் ஒருங்கிணைந்த இந்தியதேசம் சார்ந்த பார்வையைக் கேட்கும்போது இந்தியம், தேசியவுணர்வு என்பதெல்லாம், துயர் அனுபவிப்பவர்களுக்கு வேறுமாதிரியானது என்பதெல்லாம் எனக்கு விளங்கியது, ஏன் நமக்கே, ஈழமக்களின் நிலை, மீனவர்களின் நிலையைக் கண்டால் குறைந்தபட்சம் பதறவாவது செய்கிறது.  இங்கு இவையெல்லாம் அரசியல் சார்ந்த விசயம் என்பதால், இதற்குத் தீர்வு என்பது சற்றுக்கடினமானது. அதேநேரத்தில், நமக்கே ஏதாவது ஒருதலைப்பட்டத் தீர்வை நோக்கித்தான் நகரமுடியும் என்பதைப்போல் தான் நிலைமையுள்ளது.

உதாரணத்துக்கு, நமக்குக் கற்றுத்தரப்பட்ட தேசியமானது நமக்கு காசுமீரம் வேண்டும் என்று சொல்லும்; நம்முடையத் தமிழுணர்வு நமக்கு ஈழம் வேண்டும் என்றும் சொல்லும்.  ஈழவிடுதலையும், காசுமீரத்துமக்கள் விரும்பும் இந்திய-பாகிசுதான் தலையீடற்ற சுதந்திரமும் ஒரேமாதிரியானவை, அது மிகுதியான காசுமீரத்து மக்களின் நிலைப்பாடும் கூட.  அப்படிக் காண்கையில் நம்முடைய பெரும்பாலான (தமிழர்களின்) உள்ளக்கிடக்கையான இவ்விருவிசயங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது என்பதெல்லாம், கொஞ்சம் யோசித்தாலே விளங்கிவிடும்.

போரும் அதன் தாக்கமும், தமிழ்நாட்டுக்கு கடந்த 100 ஆண்டுகளில் பெரிதாக இருந்ததில்லை, இரண்டாம் உலகப்போரின்போது, எம்டன் (Emden) கப்பல் வீசிய குண்டு/கள் கூட எவ்விதப்பாதிப்பையும் உருவாக்கவில்லை. ஆக, நமக்கு போரின் தாக்கம் நேரிடைப் பாதிப்பை உருவாக்கவில்லை, ஈழப்போரிலும் நம்மால் உணர்ச்சிவசப்படமுடிந்ததேத் தவிர, எவ்விதத்திலும் தமிழ்மக்கள் ஒருசேர ஈழவர்களுக்கு உதவவோ, ஆதரவு தரவோக் கூட முடியவில்லை.

தீவிரவாதத்துக்கு எதிரானத் தாக்குதல் என்று இன்றையப் பதிலடிக்குக் கூறுவதும், நாட்டின் நன்மைக்காக ஒரு ஊரை அழிக்கலாம் என்பது மாதிரி மற்ற உள்நாட்டுப்பிரச்சினைகளில் கூறுவதும், வெவ்வேறுதரப்பட்ட மக்களின் பார்வையைப் பொறுத்தது.  இருப்பினும், போரைப்பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் பார்வையில்லாதவர்கள் (குறிப்பாக, எவ்விதத்திலும் போரைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாதவர்கள்), விட்டேற்றியாக போரைப்பற்றிப்பேசுதலும், சுற்றியிருப்பவர்களைத் தியாகம் செய்யத் தூண்டிவிடுதலுமாக நடப்பதுபோல் தெரிகிறது. தன்னால் முடிந்தததை தியாகம் செய்கிறேன் என்றுவேண்டுமானால் கூறினால் பரவாயில்லை, போரையும் உயிரிழப்பையும் கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பது போல் பேசுவது நம் போன்ற பண்பட்ட சமூகத்துக்கு நல்லதில்லை. சமூகம் என்றொரு அமைப்பே, நாம் எல்லோரும் சமவுரிமையோடு, நன்றாக வாழவேண்டும் என்பதற்கு தான் உருவாக்கிவைத்திருக்கிறோம். ஆனால், எல்லாம் வெவ்வேறுவகைகளில் சென்றுகொண்டிருக்கிறது. சரியானவற்றுக்கு சரியானபடி குரலெழுப்பினாலே, நடப்பதில்லையென்பது வருத்தத்திற்குரியது.

ம்ஹூம் என பெருமூச்செறிந்து… எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புவோம்.

இன்று: இரு நாடுகளும் ஒவ்வொன்றையும் குற்றஞ்சாட்டி இருபக்கமும் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளன. இப்படித்தான், போரென்றால் எல்லாப்பக்கமும் களேபரங்கள் நிகழவே செய்யும், இதை பேச்சுவார்த்தைகளால் சரிசெய்யமுடியாது என நினைப்பவர்களுக்கு, போரினாலும் சரிசெய்யமுடியாது என்று ஒத்துக்கொள்ளமுடிவதில்லை,  எல்லோரும் காலில் சுடு எண்ணெயை ஊற்றிக்கொண்டு பரபரவென இருக்கவேண்டும் என நினைப்பவர்களாகவேத் தோன்றுகிறது.

சமூகம் வளர, வித்தியாசங்களும் வேறுபாடுகளும் ஏதோவொருவகையில் இருக்கவேண்டும் என்பது, திரும்பத் திரும்ப நிரூபணம் ஆவதுபோல் தோன்றுகிறது.