கற்றலும் சமூகமும் – மூத்தோர்மொழி முதுநெல்லி! :-P

ஏன் புதிதாகக் கண்டுபிடிப்பனவற்றைப் பார்த்தவுடன், அன்றைக்கே முன்னோர் இவற்றையெல்லாம் அறிந்திருந்தனர் என்றுக்கூறும் போக்கு அதிகமாகவுள்ளது, மேலும் ஏன் பழமைவாதம் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றக் கேள்விக்கும்…

இதில் ஒரு சின்ன பிரச்சினை ஒளிந்துள்ளது. உண்மையென்பது எப்பொழுதும் உள்ளது. ஒவ்வொரு பரிணாமப்படிநிலையும், பின்னர் தலைமுறையும் அவரவர்க்கு எட்டிய விதத்தில், அவர்கள் அனுபவம் அறிவைக்கொண்டு உண்மையையறியவும் மற்றோருக்கு உரைக்கவும் செய்கிறார்கள். அது வேதம், உபநிடதம், பௌத்த சுத்தாக்கள் போன்ற நமக்குத் தெரிந்த அல்லது மறைந்த நூல்களின் மூலம் அவ்வப்பொழுது சொல்லிவைக்கப்பட்டது.

இவையனைத்தும் தனிமனிதரின் சிந்தித்தலின் மூலம் உணர்ந்தது, ஆனால், ஒருவர் உணர்வதை மற்றொருவருக்குக் கடத்துவதில் ஏகப்பட்டப்பிரச்சினைகள். அதே நேரம், அதற்குப் பொதுவான ஒரு வடிவம் இருப்பின் சரியாக வரலாம் என்பதன் விளைவே, எழுதப்பட்ட வேதங்களும் சுவடிகளும், அதிலும் உணர்தலில் அறிந்துகொள்ளும் பார்வையில் பல இடர்கள், உருவாகின்றன. இதற்கிடையில் நாம் அறிவின் வளர்ச்சியால் நவீன அறிவியல் உண்டுபண்ணுகிறோம். ஆனால், நாம் அதை வேறொருபார்வையில், பார்ப்பவரின் அறிவு, காணும் உண்மையைப் பாதிக்காவண்ணம், மூன்றாம்நிலை கண்காணிகளைப் பயன்படுத்தும் நிலைக்கு செல்கிறோம், அவை உணர்விகள்/sensors-ஆக அமைகின்றன. இதில் பார்க்கும் முறைமைதான் வேறு, மனிதகுலம் அதன் ஆர்வத்தின் விளைவாலேயே பரிணமித்திருக்கவேண்டும்.

ஏன், நேற்றுநாம் கண்ட சீனோ விளைவு கூட சீனோவின் தோற்றமுரணிலிருந்து வந்தவை தாம். அதற்காக அங்கேயே நின்றிருந்தால், புதிதாக வந்திருக்காது, அதே நேரம் ஏற்கனவே இருந்ததை முன்னோர்களின் யோசிக்குந்திறனையும் கற்றறிந்தனவற்றையும் அறிந்திருப்பதும் நல்லவிசயந்தானே!

அறிவியல் வளர, குவாண்டம், சார்பு இயற்பியல் போன்ற நவீன அறிவியல், ஏற்கனவே நாம் பயன்படுத்தும் கண்காணிகளின் கண்களின் வழியாகக் காண்பதில் உள்ள தவறுகளை எடுத்துக்காண்பிக்க, அதை சரிசெய்ய நாமெல்லாம் உழைக்கிறோம் .. நமக்கும் வாழ்க்கை ஓடுகிறது, உண்மை அதன்போக்கில் அதுவாகவே உள்ளது!

ஆக, எதையும் வியத்தலும் இகழ்தலும் வேண்டாவென்று “எங்கள் முன்னோர்” அன்றைக்கேக் கண்டுபிடித்துவிட்டனர்!!

குவாண்டம் சீனோ (Zeno) விளைவு

கதிரியக்கத் தனிமங்களின் அரைவாழ்வுக்காலம் பற்றிய விவாதத்தில் குவாண்ட சீனோ விளைவு எப்படிவந்தது என்பது பற்றிய ஒரு சிறுகுறிப்பையிட்டிருந்தேன். அது ….

அரைவாழ்வுக்காலம் என்பது நிகழ்தகவின் அடிப்படையிலானதே. அணுக்களின் எண்ணிக்கை மாறுபாட்டின் விகிதம் அணுவின் எண்ணிக்கைக்கு நேர்விகிதத்தில் இருக்கும் (d N/dt = -k N). இதிலிருந்து தான் குந்தாங்கூறான மடக்கை/பன்மடங்கானச் சிதைவிற்கு (exponential decay)க்கு வழிவகுப்பது. ஒரு அணு எப்பொழுது சிதைவுறும் என்பதைக் காணமுடியாததன் அடிப்படையிலேயே, குவாண்டவியலின் ஸ்ரோடிங்கரின் பூனை எடுத்துக்காட்டு வருகிறது. ஒரு வேளை ஒரு அணு எப்பொழுதுச்சிதைவுறும் என்பதைக் காணவிழைந்து தொடர்ந்து அதைப்பார்த்துக்கொண்டேயிருந்தால் அவ்வணு சிதைவுறவேச் செய்யாது என்பதை புகழ்பெற்ற இயற்பியலர் ஈசிஜி சுதர்சன் கோட்பாட்டளவில் கண்டறிந்தனர். அவ்விளைவு குவாண்டம் ஜீனோ விளைவு (2-ஆம் ஜீனோ தோற்றமுரணின் குவாண்ட வடிவம்) என இந்நாளில் அறியப்படுகிறது.

இது சார்ந்த அணுக்கரு ஒத்திசைவு சோதனைகளையும், சில கோட்பாட்டுக்கணக்கீடுகளையும் என்னுடைய பிஹெச்டி ஆய்வில் செய்திருந்தேன். தற்போதும் சூப்பர்சிம்மட்ரி/ மீச்சமச்சீர்மையில் சீனோவிளைவு சார்ந்த தொடர்புகளையும் காண்கிறேன். வழக்கம்போல “பொறுமையா…க” இது பற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.

இதைத்தொடர்ந்து நண்பரொருவர்,

சுஜாதா ஒரு புத்தகத்தில் Photon Decay
பற்றி கூறியிருந்தார் அதுவும் நீங்கள் சொல்வதும் ஒன்றா ?

எனக்கேட்டிருந்தார்.

 

அவர் எப்பொருளில் ஒளியன் சிதைவு/Photon decay பற்றிக்குறிப்பிட்டிருந்தார் எனத் தெரியவில்லை. ஆயினும் பொதுவாக ஒளியனின் சிதைவு நிகழ 10^{15} அல்லது 10^{18} வருடங்கள் (நாம் இருக்கும் இடத்தைப் பொருத்து) ஆகக் கூறியுள்ளனர். அதாவது 100 கோடி கோடி வருடங்கள் பொறுத்திருக்கவேண்டும். ஆக சீனோ விளைவினால் மாறாதிருக்க வேண்டிய அவசியமில்லை.

ஒரு வேளை சுஜாதா, ஒரு பொருண்மையும் அதன் எதிர்பொருண்மையும் கூடும்/சிதறும் போது அது ஒளியாக மாறும் என்பது ஒரு கணக்கு, என்பதைக்குறிப்பிட்டிருக்கலாம். அவ்வொளியன் மீண்டும், பொருண்மையையும் எதிர்பொருண்மையும் உண்டுபண்ணவும் வாய்ப்புள்ளது, ஆனால் இச்சிதறலை/மோதலை சிதைவாகக் கொள்ளமுடியாது. ஒரு பொருண்மையானது ஆற்றல்வடிவில் (அதாவது ஒளி வடிவில் ) மாறி திரும்பவும்பொருண்மையாக மாறுந்நிலையிது (ஆற்றல் அழிவின்மைவிதி).

ஆயினும் சிதைவுறுமொன்றை பார்த்துக்கொண்டேயிருந்தால் சிதைவுறாது என்ற நினைப்பே தலைவலியை உண்டுபண்ணினாலும், அவை பல தலைவலிகளைத்தவிர்க்கக்கூடிய ஒன்று! இதைப்பற்றி பின்னர் எழுதுகிறேன்.

இது சார்ந்த அணுக்கரு ஒத்திசைவு சோதனைகளையும், சில கோட்பாட்டுக்கணக்கீடுகளையும் என்னுடைய பிஹெச்டி ஆய்வில் செய்திருந்தேன். தற்போதும் சூப்பர்சிம்மட்ரி/ மீச்சமச்சீர்மையில் சீனோவிளைவு சார்ந்த தொடர்புகளையும் காண்கிறேன். வழக்கம்போல “பொறுமையா…க” இது பற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.