கற்றலும் சமூகமும்

அப்பொழுது நான் இளநிலை மாணவன், என்னுடைய இயற்பியலர் நண்பர்கள் கார்த்திக் மற்றும் சாயல்குடி கண்ணன் — எங்கள் கல்லூரி வகுப்பைத் துறந்து– பல்கலைக்கழக நூலகத்திலும் இயற்பியற்பள்ளியிலும் கணிசமான நேரம் அமர்ந்திருப்போம். அது பெரிய விசயங்களுக்கான காலமாகத்தான் இருந்திருக்கவேண்டும். அந்நேரம் வீட்டில் காசு வாங்கி பேருந்து பயணம் செய்து எல்லாம் போகும் நிலையில் நான் இல்லை. ஆதலால், கண்ணன் அவர்களின் மைத்துனர் நடத்திய மாலைநேரப்பள்ளியில் நானும் கண்ணனும் பயிற்றுவிப்பாளர்களாக இருந்தோம்.

நண்பர்களோடும் அவர்கள் இல்லாமலும் இயல்பானவகுப்பைத் தவிர்த்து மதுரைப் பல்கலைக்குப் போகவர இருக்க, அங்குபணியாற்றிய அக்காலத்தைய பேராசிரியர்கள், பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் ( பேரா. சீனிவாசனின் ஒரு ஆய்வுக்காகிதத்தை இதில் குறிப்பிட்டிருக்கிறேன். https://paramaaanu.wordpress.com/2015/09/04/infiniteckts-cmphys-numberth/) சிலர் பழக்கமானார்கள். அவர்கள் இன்னும் பெரிதாகப் பார்க்கப் பழகித் தந்தார்கள். எவ்வளவு அதிகமாக உண்ணுதற்கு இருந்தாலும் வாய்திறக்குமளவுக்குத்தானே சாப்பிட முடியும் அதுமாதிரி, என்னால் எவ்வளவுப் பார்க்கமுடியுமோ அவ்வளவேக் கற்றுக்கொண்டேன். இருக்கட்டும்! பேசப்போவது சில கசந்தஅனுபவந்தான் எனினும், அப்பேராசிரியர்களின் சிறுபிள்ளையென நினைக்காமல் கற்றுத்தந்ததும் கேள்விகேட்க வைத்ததும் என அவர்களின் நினைப்பே இனிக்கிறது.

சரி.. கதை, இது தான். பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் எங்களைத் தத்தெடுத்தப் பிள்ளைகள் போல், நாங்கள் என்னத்தைக் கேட்டாலும் சொல்லிக் கொடுத்துக் கொண்டும், ஊக்குவித்துக் கொண்டும் இருக்க, நான் போகும்போதும் வரும்போதும் ஒரு பல்கலைப் பேராசிரியர் தொடர்ந்துப் பார்த்துக்கொண்டிருப்பார். இவரிடமும் ஏதோவொருநாள் பேசிவிடவேண்டும் என நினைத்திருந்தேன், அவரே ஒரு நாள் என்னைப் பிடித்துக் கொண்டார். ஆனால்.. ஆங்கிலத்தில் சகட்டுமேனிக்கு நீ யார், ஏன் இங்கு வருகிறாய், அதுவா இதுவா எனக் கோபத்தில் கத்திக்கொண்டிருந்தார். நானும் தொண்டைவறள இன்னார்மகன் தொள்ளக்காதன் இதற்குத்தான் வந்தேன் எனக் குழப்பத்தில் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தேன்.

என் குழப்பம் என்னவெனில் இவர் பேராசிரியர்களோடு அவர்கள் அலுவலகத்திலும் துறைக்குவெளியில் உணவகங்களிலும் உட்கார்ந்துப் பேசும்போது பார்த்திருக்கிறாரே, ஏதோ இப்போது தான் பார்ப்பது மாதிரி கேட்கிறாரேயென. சட்டாம்பிள்ளைத்தனம் அப்படித்தான் பேசும்போல.

எல்லாவற்றையும் கேட்டபிறகு அவர், நவநீதகிருட்டிணனுக்கும் சீனிவாசனிடமும் பேசவேண்டுமானால், இப்பள்ளிக்கு/துறைக்கு வெளியே வைத்துக்கொள். உள்ளே எல்லாம் வரக்கூடாது என விரட்டினார். இதில் கூற்று என்னவென்றால், நவநீதகிருட்டிணர் துறைத்தலைவர். துறைத்தலைவராக இருந்தால் பெரிய ஆளா என்றத் தொனியில் பேசியதோடு, ஒரு கல்லூரிப் பையனைப் பலங்கொண்டமட்டும் தட்டுதற்கு ஏனோ அவர் முயன்றார். நான் சரி சரியென்றுக் கேட்டுக்கொண்டாலும் கொஞ்சம் பயந்துபோனேன். சரி என்னசெய்வது, என்னை வைத அதேப் பேராசிரியரின் அறைக்கு எதிர்ப்புறம் இருந்த நவநீதகிருட்டிணரின் அறைக்குச் சென்று அவர் சொன்னதையே சொல்லி, நான் இப்பொழுது என்ன செய்யவென்றுக் கேட்டேன்.

அந்த பேராசிரியர் நவநீதகிருட்டிணர் சொன்னது என்னை ஒருவாறு பண்படுத்தியது, ஆனால் அவர்கூறிய அளவுக்கு பண்பட்டேனா எனத்தெரியவில்லை. அவர் சொன்னது இங்கு இப்படித்தான் ஏதாவது இருந்துகொண்டேயிருக்கும், ஆனால் அதைக் கண்டு சோராதே, உனக்கு எப்பொழுது என்னவேண்டுமானாலும் நீ இங்குவா, யார் என்ன சொன்னாலும் என்னைப் பார்ப்பதற்காகவே வந்தாய் எனக் கூறு, கவலைகொள்ளாதேப்போவென வழியனுப்பினார்.

எனக்குப் புரியாத விசயம் யாதெனில், பல்கலையின் நோக்கம் என்னவென்பதும் இப்பேராசிரியர்களுக்கு அவர்களின் கடமையாதென்பதும் உண்மையிலேயேப் புரிகிறதா. வயதிலும் கல்வியிலும் மூத்தோர்கள் வளருந்தலைமுறையோடு நேரடியாகத் தொடர்பில் இருக்கும் இடம் தானே பல்கலைக்கழகம். சிறியவர்களை வளர்த்தெடுப்பது தானே அவ்வமைப்பின் நோக்கம்.

இதில் சமீபகால விரக்தி என்னவெனில், எந்நண்பர் பழைமைவாய்ந்த ஒரு பல்கலையில் துணைப் பேராசிரியர் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்க்கிறார். ஆனால் அவரைப் போட்டுப் பாடாய்ப்படுத்துகின்றார்கள். அவர் ஆய்வுக்கட்டுரை எழுதும்போது துறை முகவரியைக் கட்டுரையில் வேலைபார்க்குமிடமாகக் குறிப்பிட்டால், கூப்பிட்டு இப்படியெல்லாம் துறைப் பெயரைப் போடக்கூடாது எனவும் இன்னும் நிறைய ஒப்பந்தத்தில் இல்லாத, ஆனால் வாய்மொழியாக ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள் போல் தெரிகிறது.

மாணவனாக இருந்தாலும் பேராசிரியராக இருந்தாலும் ஒரு அமைப்பு மிரட்டிக்கொண்டேயிருக்கிறதே எனக் கோபம் வரத்தான் செய்கிறது. இது கோபப்பட்டாலும் சரியாகக்கூடிய விசயமாகத் தெரியவில்லை. ஒரு அமைப்போ அல்லது அமைப்பின் கூறோ ஒரு சிறுவனை அச்சமுறவைப்பதிலும் சகஊழியரை அச்சுறுத்துவதிலும் இவ்வளவு முனைப்பாக இருப்பதை அவ்வமைப்பின் ஆய்விலோ பயிற்றுவிப்பதிலோ காண்பித்ததுபோல் தெரியவில்லை.

இதை சரிசெய்ய மாணவர்களையும் பொதுமக்களையும் கேள்விகேட்கவும், கேள்விகேட்பவரை பெரியவர்கள்/அதிகாரிகள் ஊமைக்குத்தாகக் குத்தி முடக்கினாலும் இன்னும் ஆழ்ந்து கேள்விகேட்டுக் கொண்டேயிருக்கவும் பயிற்றுவிக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.

பெரும்பாலாக, சிறியவரின் கேள்வி பெரியோரின் செவிக்கு ஏறாததும், ஏறினாலும் கேள்வியின் தன்மைசாராமல் விட்டேற்றியாக, சிறியவர்களின் இயலாமையை அவர்களுக்கேத் திருப்பிவிட்டு, சிறியோரை மட்டம் தட்டுவதும் — எடுத்துக்காட்டாக, படிக்கும் பிள்ளை ஏதாவது கேள்விகேட்டால், நீ ஒழுங்காகப் படிப்பதில்லை, இதையெல்லாம் பேசு என மட்டம் தட்டுவது,– கேள்விகேட்க ஊக்கப்படுத்தாததும் கேள்விகேட்போரையே அசிங்கமாக நினைக்கவைப்பதுமாக அடக்கவேப்பார்க்கிறது. இது இன்றைக்கு மாணவர்களின் பிரச்சினையெனில், பின்னாளில் அது மாணவன் சமூகவூடாடலின் போது பொதுமக்களின் பிரச்சினையாகும். இவ்வாறு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்பேயில்லாதமாதிரி கல்விக்கூடங்களும் அரசுஅலுவலகங்களும் இன்னும் இருப்பது வருத்தத்திற்குரியது.

இப்படியாக உருவாக்கப்பட்ட அச்சங்கள், வெவ்வேறுநிலைகளில் வெவ்வேறு வடிவில் என்வாழ்வில் முக்கியமானத் தருணங்களில் தடையாக வந்திருக்கிறது, சிலநேரங்களில் என்னால் எதிர்கொள்ளமுடியாமலும் போக இம்மாதிரியான அச்சங்கள் தடையாக இருந்திருக்கிறது. எவ்வளவு விழிப்போடு தவிர்க்கும்போதும் அது ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதற்போல் குந்தாங்கூறாக குதித்து முன்வந்து நிற்கும்.

பல்கலைக்கழகம், காவல்நிலையம், அரசு அலுவலகம், உணவுப்பகிர்வுத் துறையின் கடைகள்/ரேசன் கடைகள், இ-சேவை மையம் என எதில் வேலைபார்ப்பவர்களாக இருந்தாலும் அவர்தம் பயனாளரை ஒருவித பயமுறுத்தலோடே அணுகுவது என்பது அக்காலத்தைய சமீந்தாரிய முறைகள் ஏதோவொரு மாற்றுவடிவில் இன்னும் உலாவருவதையேக் குறிக்கிறது… இவ்வளவு அறிவியற்றொழினுட்ப வளர்ச்சிக்கு அப்புறமும், மற்ற வளர்ந்தசமூகங்களில் உள்ள மாற்றங்கள் வளர்ச்சிகளும் அதன் செய்திகளும் நம்மால் பார்த்து உய்த்துணர வாய்ப்புகள் இருக்கும்போதும், இதுமாதிரி அச்சுறுத்தல்களோடேயே வாழ்வது, நாம் ஒரு தற்செயலாக சுமாராக இயங்கிவரும் ஒரு கட்டமைப்பில்தான் இருக்கிறோமோ என்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

மறுகல்வியமைப்பு – 0 இன்றையக் கல்விச்சூழல், “நீட்” …

மாற்று கல்வியமைப்புகளுக்கான சூழல்கள் அமைகிற நேரமாக எனக்குத்தோன்றுகிறது.  இருக்கும் பள்ளிக் கல்லூரிக் கல்விநடைமுறைகளும் அதன்பின்னான அரசியல்களூம், மிகவும் உறுத்துகிறது. போதாதற்கு நீட் தேர்வின் விளைவுகள்.

போனவருடமும், இவ்வருடமும் நீட் தேர்வின் அடாவடிகள், மாணவர்களுக்கு தேர்வுபயத்தை அதிகப்படுத்தும் விதமாகவே இருப்பதைக் காணமுடிகிறது. விட்டால் மாணவர்களின் மூளையையும் வெளியேவைத்துவிட்டு எழுதச்சொல்வார்கள் போல, தேர்வில் தவறு நடவாமல் பார்த்துக்கொள்வது முக்கியமே, அதற்காக அரக்கத்தனமாக, எல்லாவற்றையும் கழற்றி, யாருடைய மாண்பை நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள் இம்முட்டாள்கள் எனத் தெரியவில்லை. ஆகமொத்தம், மாணாக்கர்களை அலைக்கழித்ததிலிருந்து மதுரையில் இந்தியில் தேர்வுத்தாள் கொடுத்தது வரை, நீட் மடமைத்தனமும் பேய்த்தனமான நிராகரிப்பும் அதற்கான அரசியல் சமாளிப்புமாக வளர்கிறது.

*****

இன்று ஒருப்பெண்ணின் நுழைவுச்சீட்டில், தேர்வு நடக்குமிடமாக இரு கல்லூரிகள் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. அதில் ஒன்றுக்கு அந்தப் பெண்ணாகவே செல்ல, தேர்வெழுதுவோர்ப்பட்டியலில் பெயரில்லையென மறுத்திருக்கிறார்கள், அங்கிருந்த மற்றப் பெற்றோர்கள் விசயமறிந்து போராட்டம் செய்திருக்கிறார்கள். இதில் மிகவும் கோபமூட்டும்படியாக, தேர்வு உயரலுவலர், இது மாதிரி பிரச்சினை வேறெங்கும் இது வரை, எங்கள் பார்வைக்குவரவில்லை, ஆதலால் இம்மாணவி போலிநுழைவுச்சீட்டு கொண்டுவந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர்கள் எந்த நம்பிக்கையில் தவறே நடக்க வாய்ப்பில்லையெனக் கூறுகிறார்கள். தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வையெழுதுமாறு வந்ததற்கு, கணினிக்குளறுபடி எனக்கூறும் இவர்கள், இம்மாதிரி ஊடகத்தில் விட்டேற்றியாக அந்த பெண் மேல் போலிநுழைவுச்சீட்டுக் குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஆனால், இவர்களால், காவல்நிலையத்தில் இதன்பேரில் புகார் சார்த்தமுடியுமா?

ஒருவேளை, அந்தப் பெண், இவர் பேரில், தன்பெயரைக் கெடுத்துவிட்டாரென ஒரு வழக்கைப்போட்டால் நன்றாக இருக்கும். வாய்க்குவந்ததைப் பேசக்கொஞ்சமேனும் தயங்குவார்கள்.

*****

சேது தன் தமிழ்க்கல்விக் கட்டுரைகளின் மூலம் (https://sethusubbar.wordpress.com/2018/05/04/tamileducation2/) அடுத்தடுத்த கல்விமுறை மாற்றம் சார்ந்த உவப்பானப் பார்வையை வைத்திருக்கிறார்.  அதைத் தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்தினார், அது சார்ந்து யோசித்துவரும் இவ்வேளையில், இன்றையக் கல்விச்சூழலின் சமூகவோட்டத்தின் எண்ணங்களை வெளியிலிருந்து எட்டிப்பார்க்க எத்தனிக்கிறேன்.

பெரும்பாலும் அவரவர் வாழ்க்கையனுபவங்களில் இருந்தே விசயங்களைக் கற்று, அதன்வழி தீர்வுகளையமைப்போம். ஆயினும் பிறருடையப் பார்வையைப் பெறுவதன்மூலம் இன்னும் நலமான சமூகத்தை உருவாக்கமுடியும். ஆனால், நிகழ்காலக் கல்லூரி பள்ளி நடைமுறைகளும், கல்விக்கற்பிக்கும் ஆசிரியர்களின் சிரத்தையின்மையும், கல்விநிலையங்களின் அரசியலும் கொள்ளை இலாபம் வைத்து கல்வியைவிற்கும் முறைமைகளும் மிகுந்த அழுத்தம் உண்டாக்குகின்றன.

எனக்கிருந்த பள்ளி-கல்லூரி அனுபவத்தில், சிறுவயதிலேயே நான் வளர்ந்தப்பின்னர் என்னுடையப் பிள்ளைகள் பள்ளிக்குப் போகவில்லையென்று சொன்னால் பரவாயில்லையென்றே அடிக்கடி யோசிப்பேன், இத்தனைக்கும், அப்படியொன்றும் மோசமான அனுபவங்களை நான் பெற்றிருக்கவில்லை.

பின்னர், சமூக அறிவியலின் தத்துவங்களையும் ஆட்டக்கோட்பாட்டையும் படித்தப்பின்னர், அந்த எண்ணம் கொஞ்சம் சீர்பட்டது என்றாலும் இருக்கும் கல்வியமைப்புகள் மேல் பெரியப்பிடிப்பு இல்லை,  அதனாலேயே, நான் ஒரு வெள்ளோட்ட ஆய்வுநிறுவனத்தை (Institute for Natural Philosophy/அறிவியற்குடில்) ஆரம்பித்தேன், அதில் நண்பர்களையிணைத்து, சில திட்டங்களை செயல்படுத்தினேன், பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லையெனினும், ஆய்வாளர்களின் செயல்பாடுகள் குறித்த திட்டவரையறையைக் கொண்டுசெல்லும்விதம் என ஓரளவுக் கற்றுக்கொண்டேன், அந்நேரத்தில் நாங்கள் அனைவரும் ஆய்வின் தொடக்கத்தில் இருந்தோம், ஒரு 4, 5 ஆண்டுகள் சிறப்பாகப் போனது, பிறகு பெரிதாக ஆரம்பிப்பதற்கு நேரம் வரும்போது ஆரம்பிக்கலாம் என நிறுத்தப்பட்டது.   அதுபற்றி பிறகுப் பேசுகிறேன்.

ஆனால், தற்காலத்திய கல்வித்துறையின் நடவடிக்கைகளைக் கண்டால், இனிவரும் சமூகத்தில் எல்லோரையும் என்னைப்போல் யோசிக்க வைக்கிறார்களோ எனத் தோன்றுகிறது.

நிர்மலா தேவி போன்ற பேராசிரியர்கள் இம்மாதிரியான சமூகப்போட்டிமனப்பான்மைகளில் இருந்தே தங்கள் இலாபங்களை அறுவடைசெய்கின்றனர், ஒருவேளை சிக்கவைக்கப்பட்டிருந்தாலும், அதன் மூலம் அங்கிருந்துதான். ஆக அவர்கள் அப்படி இயங்குவதற்குக் காரணம், ஏதோவொருவழியைப் பிடித்துக்கொண்டு அதன்வழி சென்றால்தான் சமூகம் முன்னேறும் என்றொன்றை நாம் நினைத்துவைத்திருப்பதே. மற்றவர்களை எல்லாம் ஏறிமிதித்து அவரவர் சாம்ராச்சியத்தை நிறுவிக்கொடிநாட்டுவதற்கு எதற்கு சமூகம்? தனித்த மிருகமாய் வாழ்ந்தே சாகலாம். சமூகமாய் வாழ்வதாய் காட்டிக்கொண்டு, அதன் தத்துவத்துக்கு மாறாகப் படிநிலைகளை/strata உருவாக்குவதைத்தான் எல்லோரும் செய்கிறோம், வேண்டுவோர்க்கு வேண்டுங்கல்வியென, கல்வியின் அழகையும் சிறப்பையும், பெருந்தேடலையும் உருவாக்காமல், சம்பாத்தியத்திற்கான வேலையில்கூட கற்றக்கல்விப் பயன்படாத சமூகத்தை வைத்து என்ன செய்யப்போகிறோம்.

இதில் ஆச்சரியத்தக்கவகையில், நம் சமூகச்சான்றோரின் திறன் வியக்கவைப்பது. நம் சமூகத்திலும் தொழில்முறையில்லா சான்றோரின்/amateurs திறன், திறன்மிகுசான்றோரின்/professionals திறனுக்கு ஒப்பான தீரத்தைக்கொண்டிருப்பதை வியந்து நோக்கியிருக்கிறேன். ஆனால், சமூகத்தின் அரசை, அரசியலை உருவாக்குந்திறன் இவர்களுக்கு இல்லாதது அல்லது, பெரும்பாலும் தரப்படாதது வியப்பு. ஒருவேளை அப்படி உருவாயினும் அங்கீகரிக்கப்பட்ட வலதுசாரி குண்டர்களான “ஹூண்டா/Junta”வின் கைப்பிடிதனில் மாறுவதை வரலாற்றில் பல இடங்களில் காண்கிறோம். ஒரு பரந்துபட்டக் கருத்துக்கேட்போ அல்லது அதற்கான வழிகாட்டலோ இல்லாமல், இறுக்கிப்பிடிக்கப்பட்ட வலியுறுத்தல் மூலம் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது. அணுமின்னிலையத்துக்கே அஞ்சாது, கருத்துக்கேட்பு நடத்தாது, அதுவமைந்த ஊருக்கு அவசரநிலைப்பாடங்களையும் சொல்லித்தராச் சமூகத்தில், சட்டத்தின்வழியாக அல்லது குறைந்தபட்சம் எண்ணவோட்டங்களின் வழியாகவாவது சிச்சிறு கிளர்ச்சிகளைச் செய்தாலாவது  நம் சமூகத்துக்கு ஆகும் என நம்புவோமாக.