பழைய அறிவியற்கூறுகளை நவீன அறிவியலர் காண்கையில்…

பதினொன்றாம் வகுப்பு NCERT பாடங்களை பல்வேறு அறிஞர்களைக்கொண்டு மொழிமாற்றம் செய்துவருகிறோம், இதை வெறும் மொழிமாற்றமாக இல்லாமல், அனுபவங்களில் பெற்றதையும் உள்ளிட்டு எழுதுகிறோம். அதில், தற்சமயம், நானும் வரிசைத்தொடர்களைப்/sequences and series பற்றி ஒரு பாடம் எழுதிவருகிறேன். அதில் அவ்வப்போது இந்திய அறிஞர்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். அனேகமாக, கீழ்க்காணும் இச்சேதியும் அவ்வரிசையில் உவப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

எதேச்சையாக, நேற்று ஒரு இயற்பியலர் நண்பர் இரகு மகாசன், மாதவன் தொடரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்திய கணிதவியலர் மாதவர் கேரளத்தில் 14/15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், கேரளக்கணித மற்றும் வானியற்பள்ளியை நிறுவியவர். அப்பள்ளியில் அல்லது சிந்தனைக்கோட்டத்தில் நுண்கணிதம் உருவானதாக— அதாவது, இலெய்பினிச்சு, நியூட்டனுக்கும் 300/200 வருடங்களுக்கும் முந்தியே — தரவுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவை அவ்வப்போது கணிதப்பனுவல்களில் அங்கீகரிக்கப்படுவதையும் காணவியலுகிறது.

இரகு குறிப்பிட்டிருந்தது, \pi/4 = 1 - 1/3 + 1/5 -1/7 + \ldots என்பதை மாதவரும் அறிந்திருந்ததாகத் தெரிகிறது. ஆதலால் இத்தொடர் மாதவர்-இலெய்பினிச்சு தொடர் என்று அறியப்படுகிறதாம்.

கணிதத்தில், யாதொரு முடிவுறாவட்டம் வகையிடக்கூடிய (இடைவெளியிலா, வழவழப்பான/smooth, continuous) வளைக்கோட்டுச் சார்பையும், அச்சார்பின் மாறியின் வகையீட்டு வரிசைகளை 0,1,2,3, … முடிவிலி தடவைகள், a எனும் புள்ளியில் வகையிட்டுப் பெறும் வகைக்கெழுக்களின் முடிவிலாக்கூட்டுத்தொகையாக விரித்து எழுதிவிடமுடியும். இது ஒரு பொதுவான சார்புக்கு எழுதப்பட்ட இடெய்லர் தொடர் எனலாம்.

f(x-a) = \sum_{n = 0 }^{\infty}\frac{f^{n}(a) (x-a)^n }{ n!} இதில் (n) என்பது வகையீட்டுவரிசையின் எண். முன்பேக் குறிப்பிட்டதுபோல், இது பொதுவான சார்பிற்கு எழுதப்பட்டது.

மாதவர் இதே மாதிரியான அடுக்குத்தொடரை முக்கோணச்சார்புகளுக்கு சைன், கோசைன், நேர்மாறு-டான் சார்புகளுக்கு சூத்திரம் பாடியிருக்கிறார், அப்பாடலின் விளக்கம் இந்த அடுக்குத்தொடர்களாக விரிகிறது.

இச்சார்புகளுக்கானத் தொடர்கள் மாதவரின் பிற்காலத்தில் மேலைத்தேய அறிவியலர்களான நியூட்டன், இலெய்பினிச்சு, கிரிகோரி ஆகியோரால் தனித்தனியேக் கண்டறியப்பட்டது. இத்தொடர்கள், அண்மைக்காலங்களில், மாதவா-நியூட்டன், மாதவா-இலெய்பினிச்சு, மாதவா-கிரிகோரி என மாதவருக்கான அங்கீகாரத்தோடு பெயர்பெற்று விளங்குகின்றன.

ஆயினும், மிகவும் புகழ்பெற்ற இளம் கோட்பாட்டியற்பியலரான சுவரத் இராஜூ, இவ்வங்கீகாரங்கள் வேறுவழியில்லாமல் தரப்படுகின்றன, மேலும் இன்னும் பல இந்திய, ஆப்பிரிக்க, பெர்சிய பழங்கால கணித அறிவியலாய்வுகள் கிரேக்கத்துள் திணிக்கப்பட்டு அதன் ஆரம்பத்தை மறைத்து கிரேக்கவழிவந்ததாகக் குறிப்பிட முயல்வதாகக் கூறுகிறார்.

பிதாகோரசின் தேற்றத்தின் மாற்று/பொதுவடிவான பெர்மா (Fermat)வின் தேற்றம் அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.

a^n + b^n = c^n , இச்சமன்பாட்டில் n>2 க்கு சரியான a, b, c எனும் எண்கள் அமையாது. என்பது பெர்மாவின் ஊகமாக (conjecture) 350 வருடங்களுக்கும் மேல் அறியப்ப்பட்டிருந்தது , பின்னர் ஆன்ரூ வைல்சு இக்கணிப்பை சரியென நிரூபித்தார்.

சைமன் சிங் அவருடைய நூலில் பெர்மாவைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் சீண்டலுக்குப் பெயர்போன அரசு ஊழியர் என குறிப்பிடுகிறார். அதுவும் ஆங்கிலேயக் கணிதவியலர்களை வம்புக்கிழுப்பதில் மிக அலாதியான இன்பம் கண்டதாகவும் குறிப்பிட்டிருப்பார், அவர்தம் பெர்மாவின் கடைசித்தேற்றம் நூலில்! பெர்மா தனது கண்டுபிடிப்புகளை பிரசுரிப்பதை ஒருபொருட்டாக எண்ணியதே இல்லை, அவருடைய கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் அவருடைய கடிதத்தொடர்பாடலிலேயே இருந்து அறியப்பட்டது. பெர்மாவின் கடைசித்தேற்றம் கூட அவர் இறந்து 30 வருடங்களுக்கு அப்புறமேத் தெரிந்ததாம்.

இதேமாதிரியான மற்றொரு கணக்கு பெல்லின் சமன்பாடு என்று அறியப்படும் a^2 - n b^2 =1 சமன்பாட்டின் தீர்வானது பெர்மாவால் யாரிடமோக் கேட்கப்பட்டிருந்தது போல் தெரிகிறது. இக்கணக்கின் விடை மிகவும் அரிதான மீப்பெரும் எண்களைக் கொண்டது a = 1766319049, b = 226153980, n = 61 .

இதே கணக்கை இந்திய வானியலர் கணிதவியலர் பாசுகரர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவிழ்த்ததாக/தீர்த்ததாகத் தெரிகிறது. ஆக இவ்வளவு குறிப்பிட்டத்தீர்வைக் கொண்டிருக்கும் ஒரு சமன்பாட்டை பெர்மா எப்படியோ அறிந்திருக்கலாம், ஆனால், அவர் பாசுகரரை மேற்கோளிடாமல் தவிர்த்திருக்கிறார் என ஐரோப்பிய வரலாற்றாளர்கள் குறிப்பிடுவதாக சுவரத் இராஜூ குறிக்கிறார். தற்பொழுது இச்சமன்பாடு பெல்லின் சமன்பாடு (Pell’s equation) என சம்பந்தமில்லாமல் யாரோவொருவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. நுண்ணரசியல்கள், உயர்த்திப்பிடித்தல் எனப் பல்வேறு வீணானக் காரணிகள் பல அறிவியல்விசயங்களையும் உழப்பிவிட்டுவிடுகிறது.

மனித இனம் அல்லது நம் முன்னோர்கள், தான் வாழ்ந்த எல்லா இடங்களிலும் தத்தம் சூழ்நிலையை உணர்ந்தும், அதை சமாளித்தும் இருந்ததாலேயே நாம் இன்று உயிரோடிருக்கின்றோம். ஆக அறிவியல் என்பது நம்மைப் பொருத்தவரை மிக இயற்கையானது. எது அறிவியல் என்பது கலாச்சாரத்தையும் நவீன அறிவியற்போக்கின்படியும் வரையறுக்கப்படுகிறது. ஆனால் வளர்ச்சியெண்ணமும் நுணுங்கி ஆய்ந்துத்தேர்வதும் அறிவியலை வளர்த்தெடுக்கும். இதை கூறுதற்கான அவசியம், பழம்பெருமை வேண்டாம், ஆனால் பழையக் கண்டுபிடிப்புகளை பிறர் அறிய விளக்குதல் அவசியம் என்பதை வலியுறுத்துவதற்கே. இன மொழி பண்பாட்டு உயர்வுதாழ்ச்சி சொல்லாது, அறிவை அறிவாகக் காண்போம்.

பீல்ட்சு மெடல் வாங்கிய பேரா. மஞ்சுள் பார்கவ் இந்திய கணிதவியலர்களைப் பற்றிப் பேசிய ஒரு விரிவுரையைக் காணலாம். https://www.youtube.com/watch?v=EcjHccvahHk

கற்றலும் சமூகமும்

அப்பொழுது நான் இளநிலை மாணவன், என்னுடைய இயற்பியலர் நண்பர்கள் கார்த்திக் மற்றும் சாயல்குடி கண்ணன் — எங்கள் கல்லூரி வகுப்பைத் துறந்து– பல்கலைக்கழக நூலகத்திலும் இயற்பியற்பள்ளியிலும் கணிசமான நேரம் அமர்ந்திருப்போம். அது பெரிய விசயங்களுக்கான காலமாகத்தான் இருந்திருக்கவேண்டும். அந்நேரம் வீட்டில் காசு வாங்கி பேருந்து பயணம் செய்து எல்லாம் போகும் நிலையில் நான் இல்லை. ஆதலால், கண்ணன் அவர்களின் மைத்துனர் நடத்திய மாலைநேரப்பள்ளியில் நானும் கண்ணனும் பயிற்றுவிப்பாளர்களாக இருந்தோம்.

நண்பர்களோடும் அவர்கள் இல்லாமலும் இயல்பானவகுப்பைத் தவிர்த்து மதுரைப் பல்கலைக்குப் போகவர இருக்க, அங்குபணியாற்றிய அக்காலத்தைய பேராசிரியர்கள், பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் ( பேரா. சீனிவாசனின் ஒரு ஆய்வுக்காகிதத்தை இதில் குறிப்பிட்டிருக்கிறேன். https://paramaaanu.wordpress.com/2015/09/04/infiniteckts-cmphys-numberth/) சிலர் பழக்கமானார்கள். அவர்கள் இன்னும் பெரிதாகப் பார்க்கப் பழகித் தந்தார்கள். எவ்வளவு அதிகமாக உண்ணுதற்கு இருந்தாலும் வாய்திறக்குமளவுக்குத்தானே சாப்பிட முடியும் அதுமாதிரி, என்னால் எவ்வளவுப் பார்க்கமுடியுமோ அவ்வளவேக் கற்றுக்கொண்டேன். இருக்கட்டும்! பேசப்போவது சில கசந்தஅனுபவந்தான் எனினும், அப்பேராசிரியர்களின் சிறுபிள்ளையென நினைக்காமல் கற்றுத்தந்ததும் கேள்விகேட்க வைத்ததும் என அவர்களின் நினைப்பே இனிக்கிறது.

சரி.. கதை, இது தான். பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் எங்களைத் தத்தெடுத்தப் பிள்ளைகள் போல், நாங்கள் என்னத்தைக் கேட்டாலும் சொல்லிக் கொடுத்துக் கொண்டும், ஊக்குவித்துக் கொண்டும் இருக்க, நான் போகும்போதும் வரும்போதும் ஒரு பல்கலைப் பேராசிரியர் தொடர்ந்துப் பார்த்துக்கொண்டிருப்பார். இவரிடமும் ஏதோவொருநாள் பேசிவிடவேண்டும் என நினைத்திருந்தேன், அவரே ஒரு நாள் என்னைப் பிடித்துக் கொண்டார். ஆனால்.. ஆங்கிலத்தில் சகட்டுமேனிக்கு நீ யார், ஏன் இங்கு வருகிறாய், அதுவா இதுவா எனக் கோபத்தில் கத்திக்கொண்டிருந்தார். நானும் தொண்டைவறள இன்னார்மகன் தொள்ளக்காதன் இதற்குத்தான் வந்தேன் எனக் குழப்பத்தில் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தேன்.

என் குழப்பம் என்னவெனில் இவர் பேராசிரியர்களோடு அவர்கள் அலுவலகத்திலும் துறைக்குவெளியில் உணவகங்களிலும் உட்கார்ந்துப் பேசும்போது பார்த்திருக்கிறாரே, ஏதோ இப்போது தான் பார்ப்பது மாதிரி கேட்கிறாரேயென. சட்டாம்பிள்ளைத்தனம் அப்படித்தான் பேசும்போல.

எல்லாவற்றையும் கேட்டபிறகு அவர், நவநீதகிருட்டிணனுக்கும் சீனிவாசனிடமும் பேசவேண்டுமானால், இப்பள்ளிக்கு/துறைக்கு வெளியே வைத்துக்கொள். உள்ளே எல்லாம் வரக்கூடாது என விரட்டினார். இதில் கூற்று என்னவென்றால், நவநீதகிருட்டிணர் துறைத்தலைவர். துறைத்தலைவராக இருந்தால் பெரிய ஆளா என்றத் தொனியில் பேசியதோடு, ஒரு கல்லூரிப் பையனைப் பலங்கொண்டமட்டும் தட்டுதற்கு ஏனோ அவர் முயன்றார். நான் சரி சரியென்றுக் கேட்டுக்கொண்டாலும் கொஞ்சம் பயந்துபோனேன். சரி என்னசெய்வது, என்னை வைத அதேப் பேராசிரியரின் அறைக்கு எதிர்ப்புறம் இருந்த நவநீதகிருட்டிணரின் அறைக்குச் சென்று அவர் சொன்னதையே சொல்லி, நான் இப்பொழுது என்ன செய்யவென்றுக் கேட்டேன்.

அந்த பேராசிரியர் நவநீதகிருட்டிணர் சொன்னது என்னை ஒருவாறு பண்படுத்தியது, ஆனால் அவர்கூறிய அளவுக்கு பண்பட்டேனா எனத்தெரியவில்லை. அவர் சொன்னது இங்கு இப்படித்தான் ஏதாவது இருந்துகொண்டேயிருக்கும், ஆனால் அதைக் கண்டு சோராதே, உனக்கு எப்பொழுது என்னவேண்டுமானாலும் நீ இங்குவா, யார் என்ன சொன்னாலும் என்னைப் பார்ப்பதற்காகவே வந்தாய் எனக் கூறு, கவலைகொள்ளாதேப்போவென வழியனுப்பினார்.

எனக்குப் புரியாத விசயம் யாதெனில், பல்கலையின் நோக்கம் என்னவென்பதும் இப்பேராசிரியர்களுக்கு அவர்களின் கடமையாதென்பதும் உண்மையிலேயேப் புரிகிறதா. வயதிலும் கல்வியிலும் மூத்தோர்கள் வளருந்தலைமுறையோடு நேரடியாகத் தொடர்பில் இருக்கும் இடம் தானே பல்கலைக்கழகம். சிறியவர்களை வளர்த்தெடுப்பது தானே அவ்வமைப்பின் நோக்கம்.

இதில் சமீபகால விரக்தி என்னவெனில், எந்நண்பர் பழைமைவாய்ந்த ஒரு பல்கலையில் துணைப் பேராசிரியர் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்க்கிறார். ஆனால் அவரைப் போட்டுப் பாடாய்ப்படுத்துகின்றார்கள். அவர் ஆய்வுக்கட்டுரை எழுதும்போது துறை முகவரியைக் கட்டுரையில் வேலைபார்க்குமிடமாகக் குறிப்பிட்டால், கூப்பிட்டு இப்படியெல்லாம் துறைப் பெயரைப் போடக்கூடாது எனவும் இன்னும் நிறைய ஒப்பந்தத்தில் இல்லாத, ஆனால் வாய்மொழியாக ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள் போல் தெரிகிறது.

மாணவனாக இருந்தாலும் பேராசிரியராக இருந்தாலும் ஒரு அமைப்பு மிரட்டிக்கொண்டேயிருக்கிறதே எனக் கோபம் வரத்தான் செய்கிறது. இது கோபப்பட்டாலும் சரியாகக்கூடிய விசயமாகத் தெரியவில்லை. ஒரு அமைப்போ அல்லது அமைப்பின் கூறோ ஒரு சிறுவனை அச்சமுறவைப்பதிலும் சகஊழியரை அச்சுறுத்துவதிலும் இவ்வளவு முனைப்பாக இருப்பதை அவ்வமைப்பின் ஆய்விலோ பயிற்றுவிப்பதிலோ காண்பித்ததுபோல் தெரியவில்லை.

இதை சரிசெய்ய மாணவர்களையும் பொதுமக்களையும் கேள்விகேட்கவும், கேள்விகேட்பவரை பெரியவர்கள்/அதிகாரிகள் ஊமைக்குத்தாகக் குத்தி முடக்கினாலும் இன்னும் ஆழ்ந்து கேள்விகேட்டுக் கொண்டேயிருக்கவும் பயிற்றுவிக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.

பெரும்பாலாக, சிறியவரின் கேள்வி பெரியோரின் செவிக்கு ஏறாததும், ஏறினாலும் கேள்வியின் தன்மைசாராமல் விட்டேற்றியாக, சிறியவர்களின் இயலாமையை அவர்களுக்கேத் திருப்பிவிட்டு, சிறியோரை மட்டம் தட்டுவதும் — எடுத்துக்காட்டாக, படிக்கும் பிள்ளை ஏதாவது கேள்விகேட்டால், நீ ஒழுங்காகப் படிப்பதில்லை, இதையெல்லாம் பேசு என மட்டம் தட்டுவது,– கேள்விகேட்க ஊக்கப்படுத்தாததும் கேள்விகேட்போரையே அசிங்கமாக நினைக்கவைப்பதுமாக அடக்கவேப்பார்க்கிறது. இது இன்றைக்கு மாணவர்களின் பிரச்சினையெனில், பின்னாளில் அது மாணவன் சமூகவூடாடலின் போது பொதுமக்களின் பிரச்சினையாகும். இவ்வாறு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்பேயில்லாதமாதிரி கல்விக்கூடங்களும் அரசுஅலுவலகங்களும் இன்னும் இருப்பது வருத்தத்திற்குரியது.

இப்படியாக உருவாக்கப்பட்ட அச்சங்கள், வெவ்வேறுநிலைகளில் வெவ்வேறு வடிவில் என்வாழ்வில் முக்கியமானத் தருணங்களில் தடையாக வந்திருக்கிறது, சிலநேரங்களில் என்னால் எதிர்கொள்ளமுடியாமலும் போக இம்மாதிரியான அச்சங்கள் தடையாக இருந்திருக்கிறது. எவ்வளவு விழிப்போடு தவிர்க்கும்போதும் அது ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதற்போல் குந்தாங்கூறாக குதித்து முன்வந்து நிற்கும்.

பல்கலைக்கழகம், காவல்நிலையம், அரசு அலுவலகம், உணவுப்பகிர்வுத் துறையின் கடைகள்/ரேசன் கடைகள், இ-சேவை மையம் என எதில் வேலைபார்ப்பவர்களாக இருந்தாலும் அவர்தம் பயனாளரை ஒருவித பயமுறுத்தலோடே அணுகுவது என்பது அக்காலத்தைய சமீந்தாரிய முறைகள் ஏதோவொரு மாற்றுவடிவில் இன்னும் உலாவருவதையேக் குறிக்கிறது… இவ்வளவு அறிவியற்றொழினுட்ப வளர்ச்சிக்கு அப்புறமும், மற்ற வளர்ந்தசமூகங்களில் உள்ள மாற்றங்கள் வளர்ச்சிகளும் அதன் செய்திகளும் நம்மால் பார்த்து உய்த்துணர வாய்ப்புகள் இருக்கும்போதும், இதுமாதிரி அச்சுறுத்தல்களோடேயே வாழ்வது, நாம் ஒரு தற்செயலாக சுமாராக இயங்கிவரும் ஒரு கட்டமைப்பில்தான் இருக்கிறோமோ என்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

கற்றலும் சமூகமும் -3: கேள்விகளும் சான்றோர்குழாமும்- யார் ஆய்வாளர்?

என் வாழ்க்கைத்துணை அம்மு கூறினார், பேராசிரியர். க்ளௌஸ் சூல்டன் (Klaus Schulten) இறந்துவிட்டார் என.  எனக்கு யாரென்று உடனேத் தெரியவில்லை, அம்மு அவருடைய மூலக்கூறியக்கவியல் கோட்பாட்டை அவர்கள் ஆராய்ச்சியில் பயன்படுத்தியதாகக் கூறினார், பின்னர் தான் உணர்ந்தேன், குவாண்டவியற்பியலை உயிரிகளிடம்-உயிர்வேதியியற்பியல் (Biophysical chemistry), ஒளிச்சேர்க்கை (photosynthesis), மூலக்கூறியற்பியல் (molecular dyanmics and physics), மீத்திறன் கணியம் (High Performance Supercomputing)-காணும் முறைமையில், அவரும் ஒரு முன்னிலை ஆய்வாளர்.

சரி, ஒரு ஆய்வாளர் என்பார் எப்படியிருப்பார்?  ஆய்வாளருக்கு சிறுவயதில் கல்லூரியில் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் போல் இருப்பாரா?  1970கள் முடியப் பிறந்த, கிராமத்தின் சூழ்நிலையில் இருந்து வந்த என் போன்றவர்களுக்கு அடுத்து மிகப்படித்தவராகத் தெரிபவர் அவ்வூரில் உள்ள மருத்துவர்!  நன்றாகப் படித்தவர்கள் உண்மையில் எவ்வளவு தெளிவாக உள்ளார்கள்.  ஆயினும், எனக்கு இவ்விரு தொழில் பார்ப்பவர்களின் மீதும் எப்பொழுதும் கடுமையான வருத்தங்கள் இருந்ததுண்டு.

ஆசிரியப் பணியாற்றுபவர்கள் மாணவர்களைக் கேள்விகேட்கத் தூண்டுகிறார்களா?! நிசமாகவே, மாணவர்களுககு கல்வியென்றால் விவாதம் சார்ந்தது என்பதேக் காண்பிக்கப்படுவது இல்லை.

நோயாளியொருவர் ஒரு கேள்வியை மருத்துவரிடம் கேட்கும் போது அதற்கான பதில் எவ்வளவுத் தரப்படுகிறது அல்லது பதிலளிப்பதற்கு ஏற்ப கொஞ்சமாவது, மருத்துவர்கள் தயாராயிருக்கிறார்களா?

ஒரு கதை:
என் அப்பா ஒருமுறை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது,  அங்கிருந்த என் தங்கையிடம் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன்.  “என்ன? அவன் எந்திரித்துவிட்டானா” என ஒரு சத்தம் கேட்டது! அது அங்கு வந்த மருத்துவர்! கேட்டது என் அப்பாவை!!  அப்போது என் அப்பாவின் வயது 57, தமிழக அரசின் ஒரு பொறுப்பானப் பதவியில் அப்போது இருந்தார்கள். –பதவிக்குரிய மரியாதையென்பது நோக்கமல்ல– ஆயினும் மருத்துவர்களின் அதிகாரத்தோரணை. அங்கிருந்த மொத்தநாட்களும் இப்படித்தான் என் அப்பாவின் நான் எனும் அகங்காரத்தை உடைப்பதாகவேயிருந்திருக்கும். என்ன ஏது என்பதற்கு வழக்கம் போல் பதில் இல்லை.  எதேச்சதிகாரத்தில் வாழும் குடிமகனுக்குக் கூட ஏதோக் கொஞ்சம் மரியாதைக் கிடைக்கும் போல..

மற்றொரு கதை:
அம்முவின் அம்மா, கடந்த வருடம் தனியார் மருத்துவமனை இராமச்சந்திராவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள், பலக் குளறுபடிகளுக்கு மத்தியில், மருத்துவர்களை, என்ன பிரச்சினை என்று கேட்டதற்குக்கூட யாரும் பதிலளிக்கத் தயாராயில்லை.  மருத்துவர்களும் என்னப் பிரச்சினை என்பதை அறிந்திருக்கவில்லை என்பதும் ஒரு பிரச்சினை.

ஒரே சோதனையைத் திரும்ப திரும்ப செய்துக் கட்டணத்தை வேறு ஏற்றிக் கொண்டே இருந்தார்கள்.   ஆனால் அங்கும் கேள்விக்கேட்டதற்கு சரியான பதிலில்லை. லட்சக்கணக்கில் செலவும் ஆகிவிட்டது, அப்பொழுது கூட கேட்பதற்கு உரிமையில்லையென்பதை சொல்லாமல் சொன்னார்கள்.  சரி மருத்துவர்கள் அவ்வாறெனில், வரவேற்பறையில் உட்கார்ந்திருப்பவர் முதற்கொண்டு கணக்கர் வரை, அவர்கள் கொடுக்கும் செலவினச்சிட்டையை வைத்துக் க்கொண்டு கேள்வியே கேட்காமல் கேட்கும் பணத்தைத் தரவேண்டும் என்கிறார்கள்!  கேட்டால், கடுமையாக இருக்கிறது அவர்களின் பதிலும் மற்ற செயல்பாடுகளும்.  யாரும் பதில்தரமாட்டார்கள் கேட்பதைத் தரவேண்டும்.  அப்படியானால் பதில்தரா மருத்துவர்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் என்ன வேறுபாடு?
சரி, பதிலளிக்காத ஆசிரியர்களுக்கும் பதிலளிக்கவிரும்பா மருத்துவர்களுக்கும் என்ன பிரச்சினையாயிருக்கும்?  உனக்கு நான் சொன்னாலும் புரியாது என்பதா? அல்லது அடுத்த கேள்வி உன் வாயின்னுள்ளேயே அடக்கமாகிவிட வேண்டும் என்பதா?  இம்மனநிலை எங்கிருந்து வருகிறது?

இதில், நம்முடைய மக்களையும் குறைசொல்லாமல் இருக்கமுடியாது, எனக்கு இக்கேள்விக்கு பதில்தெரியாது என ஆசானோ, மருத்துவஞ்செய்யும் மருத்துவனோக்கூறினால், அவர்களை அடுத்து சுத்தமாக மதிப்பதில்லை.

ஆயினும், படித்தவர்கள் முற்றுமுதலாக அறிவதென்னவெனில், சாகும் தருவாயிலும் நான் ஏதும் அறிந்தேனில்லையென்பதாகத்தான் இருக்கும்.  சொல்லிக்கொடுக்கப்படும் அறிவியலும் தெரிந்த அறிவியிலும், அறிவியலின் ஒரு சிறுப்பகுதியே.

இன்னுமொரு கதை:
பகுத்தறிவை அறிவியல்தரும் எனும் போது அறிவியல் எப்படிப் போகுமோ அப்படிப் போய்த்தான் காணவேண்டும், எனக்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக, ஓரிடத்தில் நின்று கொண்டு, நான் பிடித்ததே சரியென்பது அறிவியலாளனின் போக்கு அல்ல, அது, ஒரு பக்கம் சார்ந்தக் கருத்தேயன்றி, உண்மையானத் தெளிவினையோ இயற்கையின் இயக்கத்தைப் பற்றிய அறிவையோத் தராது.  இன்று ஒரு விவாதத்தில், ஒரு மருத்துவரிடம் பேசும் போது இதுவே நிகழ்ந்தது,  குறிப்பிட்ட உணவுமுறை, பாடப்புத்தகம், குறிப்பிட்ட புள்ளியியல்முறை என்பதையும் தாண்டி, ஒரு போக்கு போய்க்கொண்டிருக்கிறதென்றால், அது என்னவெனக் காணவேண்டுமேயன்றி, நீ கூறுவதேத் தவறு என்பதும், எதிரில் பேசுபவரின் ஆய்வு அனுபவத்தின் அளவு எவ்வளவு என்பதையும் காணாமல் பிடித்தப்பிடியில் நிற்பதுவுமாக, “நீ பேசுவது தவறு, நான் பேசுவது மட்டுமே சரி” என்பதாக இருந்தது. அதே விவாதத்தில் வந்து கேள்விகள் கேட்ட உயிரியலாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் கூட எனக்குக் கூறியப் பதிலே வந்தது.  ஒருவர் அவரை– மிகக்கடுமையாக, அனாவசியமாக — விமர்சித்திருந்தவிடத்தில் “நான் அறிவியல் பேசுகிறேன், நீ எதைப் பேசுகிறாய்” எனக்கேட்டிருந்தது மிகக்கடூரமான நகைமுரண்!!

இதில் பிரச்சினையென்னவெனில், பொதுவாகப் பேசுவோர்க்கும் விஞ்ஞானிகளுக்கும் தாங்கள் பேசும் போது தெரியும் வேறுபாட்டைக் கூட உணரவியலா அளவுக்கு இன்னொரு விஞ்ஞானம்பேசும் ஆளிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது, அல்லது மற்ற எல்லோரும் மொண்ணையானவர்கள் என்ற பொதுக்கருத்தா எனவும் விளங்கவில்லை.

பகுத்தறிவு என்பதும் யாதெனவும் விளங்கவில்லை, எதையோவொன்றைப் பகுத்தறிவு எனப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.  பேசிக்கொண்டேயிருப்பதால் மட்டுமே, எப்படி அது பகுத்தறிவாகப் பரிமளிக்கும் என நினைக்கிறார்கள் எனவும் விளங்கவில்லை.  அறிவியலின் சில விசயங்களைப் பேசினாலே பகுத்தறிவா?? அறிவியில் என்பது யாதொரு விசயத்தையும் அக்கக்காகக் கழற்றி, என் விருப்பம் நான் கண்டறிந்தது, பழங்கருத்து, புதுக்கருத்து, நோபல்பரிசு வாங்கியவர் கூறியது, என்பதையும் தாண்டியதாக இருந்தால் மட்டுமே அறிவியல்.

அதே போல், பொதுவெளியில் ஜிஎம் விதைகள் போன்ற விசயங்களை எதிர்ப்பதோ, ஆதரிப்பதோ இல்லை, உண்மையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிவதே அதன் வேலை.  தயவுசெய்து பெரிய பொறுப்பில் உள்ளவர்கள், சமூக மாற்றம் என்ற ஒன்று வேண்டுமெனில் அதற்காக உழையுங்கள்.  முடியவில்லையெனில், அரைகுறை அறிவியல் பேசுவதையும் பாரம்பரியம் பேசுவதையும் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.

சரி, வழக்கம் போல, ‘தென்னைமரத்தைக் கொண்டுவந்து பசுவோடு ஏன் கட்டினேன்’ எனில், சூல்டனைப் பற்றி ஆரம்பித்ததற்கு காரணம், கோட்பாட்டு இயற்பியலரான அவர், அதையும் தாண்டி உயிரியல், நேனோ உயிர்நுட்பம் சார்ந்து யோசித்ததற்கு கேள்விகளும் பாரம்பரிய அறிவியல் மற்றும் அறிவைத்தாண்டியத் தேடலுந்தான் காரணமாக இருக்கிறது. இங்கு பழங்கால அறிவியல் மாதிரி ஒன்றைப் பேசிக்கொண்டே, ஆனால், அறிவியலின் உயிர்நாடியை அடக்கிவிடும் வேலைகளைத் தான் பெரும்பாலும் செய்கிறார்கள்.  தொழில்முறையில்லா அறிவியலாளர்கள் எனில் தங்களின் உண்மைநிலையைப்  புரிந்துகொண்டும் அறிவித்தும் அறிவியலை அணுகுவதே நலம்!

இதன் வரிசையில் முன்னால் எழுதப்பட்டவை:

  1. கற்றலும் சமூகமும் – 1: பள்ளிக் கல்வியமைப்பும் சூழலும்
  2. கற்றலும் சமூகமும் -2: ஆய்வும் கல்வியமைப்பும் சூழலும்
  3. ஏதும் தெரியாத ஆசிரியர்களும், எல்லாம் தெரிந்த மாணாக்கனும்!
  4. மூத்தோர் பெருமை, தடுமாறும் அறிவியல் மற்றும் கணித வரலாறு

கற்றலும் சமூகமும் -2: ஆய்வும் கல்வியமைப்பும் சூழலும்

ஒரு துறையில் இருந்து மற்றொன்றுக்கு மாறுதல் என்பது எப்பொழுதும் சுற்றியிருப்பவர்களால் சரியாகப் பார்க்கப்படுவதில்லை.  இளங்கோ கல்லாணை ஒரு பதிவினை இட்டிருந்தார்.  அதில் சில வரிகளுக்கான மறுமொழியும் சில உதாரணங்களும்.

astroparticle physics, high energy physics என மிகவும் ஆழமானத் துறைகளில் ஆய்வு செய்தவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், உயிரியற்துறைகளில் புரோட்டீன், டிஎன்ஏ, கேன்சர் ஆய்வு எனவும், ஸ்டாக் மார்க்கெட், நிதித்துறைகளிலும், சமூகவியல் ஆய்வுகளுக்கும் மாறுவது இயற்கை. தற்பொழுது எல்லாத்துறைகளும் சங்கமித்து அக்காலத்தில் இருந்த மாதிரி நேச்சுரல் பிலாஸபி-ஆகும் காலம் இது. ஐஐடி மாதிரியான நிறுவனங்களில் இது போல் துறை மாறுதல் இயற்கை, உதாரணத்துக்கு, எனக்கு குவாண்டம் ஃபீல்ட் தியரி சொல்லிக் கொடுத்த பேராசிரியர், ஐஐடியில் BTech Electrical engg. படித்துவிட்டு, PhD ஸ்ட்ரிங் இயற்பியல்/ஹை எனர்ஜி பிஸிக்ஸ்ல் ஆய்வுக்கு மாறியவர், நான் வேலை பார்த்த இன்னொரு பேராசிரியர் ஐஐடி மெக்கானிகல் படித்தவர், phd இயற்பியலிலும் கருந்துளை, குவாண்டம் காஸ்மாலஜியில் ஆய்வு செய்பவர். இது போல் நிறைய நண்பர்களும் பொறியியல் படித்துவிட்டு இயற்பியல், கணித ஆய்வுகளுக்கு வந்தவர்கள் உள்ளனர். மேலும் நம் ஊரில், பொறியியல் இளநிலை இருந்தால் அறிவியலில் முனைவர் ஆய்வுக்கு நேராக செல்லலாம். இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால், எந்நேரமும் புதியதொருத் துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு நம்பிக்கையும் வாய்ப்புகளையும் அவர்கள் மனதில் சிந்திப்பதற்கு வாய்ப்புகளுண்டு.

ஒருவர் ஐஐடியில் படித்தவர்கள், பைனான்ஸ் துறைகளுக்குப் போவதைத் தடுப்பது போல், நேர்முகத்துக்கு நிதித்துறை நிறுவனங்களை அழைக்கக்கூடாது என இன்னொருவர் பரிந்துரைத்தது சரிதான் எனக் கூறியிருந்தார்.  எப்பொழுதும் ஐஐடியில் இருந்து ஐடி போனவர்கள், (எனக்குத் தெரிந்தே நிறையப் பேர்)  திரும்பவும், அவர்களின் துறைக்கு வருவதற்கும் உதாரணங்கள் நிறைய உண்டு.  ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கோ, அல்லது வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கோ உரிமைகள் உண்டு. அதைத் திணிப்பது என்பது முட்டாள்தனமானது. குவாண்டம் இயற்பியலில் ஆய்வு செய்பவன் நான், எனக்கு தத்துவம், மூளைநரம்பியல், மொழியியல், பொருளாதாரம் எனப் பலதரப்பட்ட ஆய்வுகளில் ஈடுபாடு உண்டு. என்னுடைய நேரம் மட்டும் தான் எனக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமேத் தவிர, யாரோ ஒருவர் அல்ல.  ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்கனவே சமூகஞ்சார்ந்த பொறுப்புகள் நிறைய உண்டு, வாங்கிய ஒவ்வொரு காசுக்கும் பொறுப்பெடுப்பது – பொதுமக்களுக்கு தங்கள் ஆய்வினைப் பற்றி தெரியப்படுத்துதல், கற்றுக் கொடுப்பது என்பன சில மேலோட்டமானவை.

இது சம்பந்தமான உரையாடலில், ஐஐடியைப் பற்றிப் பேசும்பொழுது, இஸ்ரோ போன்ற நிறுவனங்கள் இன்னும் வெளிநாடுகளில் இருந்துப் பொருட்களை வாங்குகிறார்கள் என ஒருவர் கூறியிருந்தார்.
இஸ்ரோ டிஆர்டிஓ போன்ற நிறுவனங்களில் அரசியல் நிறைய இருப்பது பிரச்சினை தான். ஆனால், நமக்கு எப்பொழுது ஒரு பொருளின் அவசியம் அதிகமாகிறதோ அப்பொழுது அதற்கான தயாரிப்புகளை யோசிக்கலாம், அல்லது அப்பொருளை வாங்குவதே சிறந்தது, ஏற்கனவே நிறையக் காசு செலவாகிறது என்பதும் எல்லோருடைய ஆதங்கமாயுள்ளது.

ஆனால்,  பொறியியல் படித்துவிட்டு நிதித்துறையில் ஏன் வாழ்வை வீண்செய்ய வேண்டும் என்பது மாதிரி இளங்கோ அண்ணன் கூறியிருந்தார், எவ்வளவு அவர்கள் படித்தப் படிப்பு பயன்படுத்தப்படுகிறது என்பது கேள்விக்குறி தான். நான் குவாண்டம் பைனான்ஸ்-ல் பழம் தின்று கொட்டை போட்டாலோ அல்லது புதிய முறைகளைக் கண்டுபிடித்தாலோ, நம் ஊர் ஸ்டாக் எக்சேஞ்சிலோ, ரிசர்வ் வங்கியிலோ அவரை வேலைக்கு வைக்கவோ, பாலிஸிக்களை உருவாக்கவோ விடுவார்களா எனத் தெரியவில்லை. உதாரணம், சிவா அய்யாதுரை (விமர்சனங்கள் இருந்தாலும்), இரகுராம்.

மூத்தோர் பெருமை, தடுமாறும் அறிவியல் மற்றும் கணித வரலாறு

வர வர நம்மாட்களிடம் முன்னோர்களின் பெருமைகளையெடுத்துச் சொல்லவே பயமாகத் தான் உள்ளது. பார்த்தியா… என ஆரம்பித்துவிடுகிறார்கள்.. விவசாய விஞ்ஞானியான நண்பர் பிரபு  கணக்கதிகாரம்[1] பற்றியத் தகவலைப் பகிர்ந்திருந்தார்.   அவர்தம் பகிர்வுகள் எப்பொழுதும் அலறும் அறிவியல் உண்மைகளோடும் உசாத்துணைகளோடும்  எக்காளத்துடனும் நையாண்டியுடனும் எள்ளலும் துள்ளலும் தூக்கலாய் இருக்கும்.   அடிப்படையில் நான் புத்தர் காலத்து தத்துவங்களிலேயே உழன்று கொண்டிருப்பவனாயினும், என்னுடையப் பார்வை, ஒரு நவீன கட்டமைப்பு குவாண்ட இயற்பியலாளனுடையது (Foundational quantum physicist).  மூத்தோர் பெருமை, மூத்தோர் ஆய்வின் தற்காலத் தேவை என சரியான அளவீட்டைத் தேட வேண்டிய அவசியம் எல்லா அறிவியலாளர்களுக்கும் உள்ளது.   இருந்தாலும், தற்பொழுது அறிவியலுக்கு ஸ்வய சேவகம் செய்பவர்களால் பெரும் தலைவலியாய் உள்ளது.  இவர்களின் ஸ்வயம் பாகத்தால் முன்னோர் விசயங்களின் மேல் வெறுப்பு மட்டுமே உண்டாகும்.  இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் விவாதத்தில் இதை பேராசிரியர்கள் செயபாண்டியனும் செல்வகுமாரும் குறிப்பிட்டிருந்தனர்.  இருக்கட்டும்.

ஃபிபனாக்சி விகிதம்

சற்று கூர்ந்து கவனித்தால், இயற்கையில் பெரும்பாலும் எதிரொளி/லிக்கப் படும் தெய்வீக விகிதம் என அழைக்கப்படும் பிபனாக்சி விகிதத்தை (Fibonacci or divine ratio \varphi=\frac{1\pm\sqrt{5}}{2}) எளிதாகப் பிடிக்கலாம், அவ்வழி செல்கையில், தொடர் பின்னங்கள் (Continued fraction) தானாய் வந்து அமர்ந்து கொள்ளும், தொடர் பின்னங்களை பலா முட்களின் அமைவை வைத்தும் காணவியலலாம் (இது ஓர் அனுமானமே, அனுமானமே, அனுமானமே…).

\varphi =1+ \cfrac{1}{1+\cfrac{1}{1+\cfrac{1}{1+\cfrac{1}{\ddots}}}}

ஆனால், சுளையின் கணக்கு, விதைகளின் கணக்குக்கு விவசாய ஆன்றோர்களால் தான் பதில் சொல்ல முடியும்.  அதே நேரம், விதைகள்/சுளைகளும் முட்களைப் போல், அழகுவழி அமையும் பட்சத்தில், சூத்திரம் அமைப்பது மிக எளிது, அதுவும் இம்மாதிரி பயன்பாட்டுக் கணக்குகள், நம்மாட்களுக்கு பலாச்சுளை! அழகியலோடு இயற்கையின் நுட்பமும் சேர்ந்தது ஆதலால், அதுவொரு குத்துமதிப்பான அளவைத் தர வாய்ப்புகள் அதிகம். (முடிவிலா மின் சுற்றும், கொஞ்சம் ஜனரஞ்சக திண்ம அறிவியலும்! இக்கட்டுரையில் மின்சுற்றுகளிலும் மற்ற இயற்பியல் அமைவுகளிலும் பிபனாக்சி விகிதத்தைக் காண முடிவதைக் காண்பித்திருந்தேன்.)

சரி கண்டுபிடித்துவிட்டோம்… அதற்கு அடுத்த படி என்ன?  சுளை எண்ணிக்கை அதிகப்படுத்தலாமா அல்லது இயற்கையை அறிவதில் அடுத்தபடிக்கு முன்னேறலாமா??  என்பதே அறிவியலைத் தூக்கிப் பிடிப்போரின் கேள்விகள்.  முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அறிவியல் என்பது, கிபி 17 ஆம் நூற்றாண்டில் ஆகாயத்திலிருந்து, நியூட்டனின் தலையில் விழவில்லை.  அது எப்போதும் நம்முள் இயங்கிக் கொண்டேயிருக்கிறது,  நாம் மனிதராக இல்லாமல்,  அமீபாவாக இருந்தாலும்,  ஒரு ஒவ்வாத வேதிச் சூழ்நிலையை உணர்ந்துவிட்டால் உடனே அமீபாவான நாம் நகரத் துவங்குவதிலேயே, உடல் உந்துதலிருந்தே தேடல் ஆரம்பித்திருக்க வேண்டும்.  சரி இவ்வளவு கூட யோசிக்கத் தேவையில்லை.   முன்னோர்களே அவ்வளவு அறிவாக இருந்திருக்கிறார்களே, நமக்கு எங்கே போச்சு புத்தி எனக் கேட்டால், தேசத்துரோகி ஆக்கிவிடுகிறார்கள்.

ஒரு எடுத்துக்காட்டு

அதுவும் தேசபக்தர்களுக்கான மதஞ்சார்ந்த எடுத்துக்காட்டு, இந்தியாவில், சில பகுதிகளில் சப்த கன்னியர்/அட்ட மாதர் வழிபாட்டில், விநாயகி எனும் தேவதையைச் சேர்ப்பதுண்டு, அதை யாரோவொருவர் இன்ச்டாகிராமில் போட்டிருந்தார், அதற்கு ஒருவர், அதெப்படி விநாயகரைப் பெண்ணாக வரைந்து அவமானப்படுத்தலாம் என சண்டைக்கு வந்துவிட்டார்.   வேறு சிலர் அவ்வழிபாட்டு முறையை எடுத்துக்கூற.. பின் பிரச்சினை ஒருவாறுத் தணிந்தது..  இப்படியிருக்கிறது எல்லாம்..!  சரி அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்..

இரண்டு விசயங்கள்:

  • முதலில் நாம்/இந்தியப் பண்பாட்டினர் தான், வந்தது போனது என வரையறையின்றி கடவுளராக்கக்கூடிய வல்லமையுள்ளோர் எனக் கூறுகிறோமே, புதிதாக ஒரு கடவுளை ஏற்கமுடியாதா என்ன?!
  • இரண்டாவது, தெரியாத விசயம் என ஒன்று இருக்க வாய்ப்பு உண்டு என யோசிக்கக் கூட முடியாதா, முன்னோர்கள் இதற்கு ஏதாவது சொல்லியிருப்பார்கள் என்று விடவும் முடியவில்லை..  அது தான் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லையென நீங்களே சொல்கிறீர்களே.  நீங்கள் சொன்னதையே நீங்கள் வழமை போல் முரண்படுகிறீர்கள் தானே!

பௌத்தயானர் சூத்திரம் –  விவாதத் தெறிப்பு!

திரும்பவொரு மூத்தோர் சொல் முதுநெல்லிக்கனி விளையாட்டு.   பௌத்தயானர் சூத்திரத்தைப் பற்றி எனக்கும் பேராசிரியர்கள் செல்வக்குமாருக்கும், செயபாண்டியனுக்கும் நடந்த விவாதங்களை[2] இங்கேக் காணலாம்.

பல தமிழ் முகநூலர்கள், பௌத்தயானரின் சூத்திரத்தையும் (ஹோமக் குண்டங்களின் அளவைக் கணக்கிடப் பயன்பட்டவை), பிதாகரஸ் சூத்திரத்தையும் ஒப்பீடு செய்துப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.  அதாவது பிதாகரஸ் சூத்திரத்தின் பெயரை எப்படி பௌத்தயானர் சூத்திரம் என மாற்றலாம் என கொஞ்ச நாள் முன்னர் இந்தியர்களின் அல்லது தமிழர்களின்-பெருமை விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள்!

நானும் சில விளையாட்டுக் கணக்குகளை, இது சம்பந்தமாகப் போட்டு வைத்து மறந்துவிட்டேன், எதையோ தேடும் போது சிக்கியது! இன்னும் அழகுறவும், கணித அழகு செழிக்கவும் செய்யலாம்! ஆனால், அதை எதையுஞ் செய்யாமல், ஒரு பாமரன் போல ஒரு படத்தை இங்கே இடுகிறேன்!

ஒரு செங்கோண முக்கோணத்தின் அடிப்பக்கம், எதிர்ப்பக்கம், கர்ணம் என்பவற்றை முறையே a, b, c எனக் குறிப்பிடுவோம்.   பிதாகரஸ் தேற்றத்தின் படி, அடிப்பக்கத்தின் (a) இருபடியின் அளவீட்டையும் எதிர்ப்பக்கத்தின் அளவின் (b) இருபடி அளவையையும் கூட்டினால் அம்முக்கோணத்தின் கர்ணத்தின் (H_P) இருபடி அளவைத் தரும்.

பிதாகரஸ் சூத்திரம் : a^2 + b^2 = H_{P}^2 அல்லது \sqrt{a^2 + b^2} = H_{P}

பௌத்தயானர் சூத்திரம்: \frac{a}{2}+\frac{7}{8}b = H_{B} \,\, ;  a < b

இதில் பௌத்தயானரின் சிறப்பு,  அதுவொரு நேரியல் சமன்பாடு ஆகும்.  படிகள் அல்லது மடிகள் இல்லை.  ஆனால் மிக முக்கியமான விசயம்.   எந்தப் பக்கம் சிறியதாக இருக்கின்றதோ அதை a எனக் குறிப்போம், மற்றப் பக்கத்தை b எனக் குறித்தால்,  கர்ணத்தின் அளவை (H_B) இவ்வாறுப் பெறலாம் என்கிறார், பௌத்தயானர்.

இரண்டு சூத்திரத்துக்கும் உள்ள கர்ண அளவின் சிறுபிள்ளைத்தனமான  வேறுபாட்டின் அளவை H_{P}-H_{B} வைத்து வரைந்ததே, இந்த வண்ணப்படம்.   அதாவது சிவப்பு நிறம் பித்தாகரஸ் மற்றும் பௌத்தயானர் கர்ண அளவுகள் ஒன்றாக உள்ளதற்கான குறியீடு அவ்வளவே!  பிழைகளைப் பொறுத்து சிவப்பில் இருந்து நீலத்தை நோக்கிச் செல்லும்!

Bodhiyanar_Pythogoras.png

H_{P} - H_{B} கிடைஅச்சு – முக்கோணத்தின் அடிப்பக்கம், நேரச்சு – முக்கோணத்தின் எதிர்ப்பக்கம்

கிடை-நேரச்சுகள் இரண்டும், 1 லிருந்து 100 வரை செல்கின்றன! அவை செங்கோண முக்கோணத்தின் அடி அல்லது எதிர்ப்பக்கம்/ குத்துக் கோடுகளின் அளவுகளைக் குறிக்கிறது!

அதுவொருப் பயன்பாட்டு அளவிலாத் தொடர்பாகத் தான் காண வேண்டும்! அப்படத்தினை அணி-போன்ற வரைபடமாகப் போட்டிருந்தால் இரண்டு சூத்திரங்களின் படி பெறப்பட்ட கர்ண அளவீடுகளும்  ஒரே அளவினதாக இருக்கலாம். ( அதாவது,  H_{P} =H_{B});  ஆனால், இரண்டு அளவைகளும் ஒரே அளவினதாக இருப்பது தற்செயல் என  கணித நக்கீரனாக நாம் இருந்தால்..

இதே இருபடி-ஒருபடி வாய்ப்பாடுகளை ஒப்பிடுவதன் விளைவாய், தோராயக்கணக்கே நன்றாக இருக்கும் என இப்படியே நிறுத்தியும் விட்டேன்!

ஹோமக் குண்டத்தினை வடிவமைக்க பௌத்தயானர் பாடிவைத்தது அப்பாடல், ஆதலால், எல்லா அளவுகளையும் கணக்கில் எடுக்காமல், சில அளவுகளை மட்டுமே அவர் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்; அது  வசதிக்கான சூத்திரமாக மட்டுமேப் பரிந்துரைத்திருக்கப்பட்டிருக்க வேண்டும்!

எப்பொழுது எல்லாம்,  பிதாகரஸின் முவ்வெண் கோவைகளாக  (Pythagorean triples) இருக்கிறதோ சிவப்புநிறத்திற்குள் (படத்தில்) அவை வந்துவிடும், ஆனால் சில பிழைகளும் H_{P} \approx H_{B} அச்சிவப்பில் அடக்கம்! சிவனையே சினந்த மக்களின் மயக்கத்திற்கு இதுவுமொருக் காரணம்!

ஆதிசங்கரரின் ஶ்ரீசக்கரம் வரைவதற்கான சூத்திரம் மாதிரிதான் இதுவும்!  ஏன் இப்படியெனக் கேட்டால் அழகியல் கெட்டுவிடும், வேறு ஏதோ தெரியாதப் பண்புகளும் கெடலாம்!   ஆயினும் எல்லோரும் சொல்கிறார்களே, அதில் எவ்வளவு ஒத்து வருகிறது எனப் பார்த்தேன்!

தவிர, சில ஒத்துவரவில்லையெனினும் மற்றவை ஒத்து வராது என நினைப்பது, கோடலின் முழுமையற்றத்தன்மையில் அடங்கிவிடும்/விடலாம்! 😀 எண்ணியல் என்பது மிகுந்த சலிப்பையும் ஆச்சரியத்தினையும் ஒரு சேர ஊட்டும் தன்மையுடையது! அது மாதிரி ஏதாவதுத் தெரிகிறதா எனத் தேடியதன் விளைவே இக்கணக்கீடு.

எனக்கு இவை எல்லாம் — ஆகம விதிகள், சட்டுவ அளவுகள், சக்கர அளவுகள், போன்றவை –பயன்பாட்டுக்கானவற்றை மட்டும் நாம் மிகப் பிடிவாதமாக/வசதிகளுக்காக, வைத்திருந்ததன் விளைவோ என்னவோ!

இவ்விவாதத்தின் விளைவாக, ஜெயபாண்டியன் அவர்கள், பௌத்தயானர் சூத்திரத்தைப் பற்றிய சிறுகுறிப்பொன்றை வரைந்திருந்தார்.  அதை இங்கேக் காணலாம் [3].

அது மட்டும் இல்லாது,  அறிவியல் எப்பொழுதும், எவ்வளவு குழப்பமான சமன்பாடுகளைக் கொண்டிருந்தாலும், symmetry -போன்ற பண்புகள் சீராய் அமைந்து, சமன்பாட்டை எளிதாக்கிவிடும், ஆச்சரியம் என்னவெனில் சில விசயங்களில், இயற்கையும் நாம் எழுதியது போலவே, சீராய் இயங்குவதும்!    அது போல் இருபடியாய் இருப்பதை ஒருபடியாய் மாற்றுவதும் பல வகைகளில் நல்லதாக சில உதாரணங்களின் வழிக் காணலாம்!

சார்பியற் குவாண்டவியலில் நேரியலாக்கம்

நேரியல் பண்புகளோடு இருப்பது, எப்பொழுதும் நல்லது தான்!  சட்டச்சார்பிலா குவாண்டவியலின்  (non-relativistic  quantum mechanics) சுரோடிங்கரின் (Schrödinger) இருபடி சமன்பாட்டின் ஒழுங்கற்றத் தன்மையை,

[-\frac{\hbar^2}{2m} \nabla^2 + (E-V)] \psi(x,t) = -i\hbar \frac{\partial\psi(x,t)}{\partial t}

டிராக் அவர்கள், சட்டச்சார்பு கொண்ட குவாண்டவியலுக்கான நேரியற்சமன்பாடாக அல்லது ஒருபடிச் சமன்பாடு ஆக்குவதன் மூலம் தீர்வை எளிதாக மாற்ற விழைந்தார்!  முதலில் சுரோடிங்கரின் சமன்பாட்டை சார்பியலோடுக் கலந்தால் அது,

(-c^2 \hbar^2 \nabla^2 +m^2 c^4) \psi(x,t) =(-i\hbar \frac{\partial \psi(x,t)}{\partial t})^2  (இருபடி)கிளெயின்-கோர்டான் சமன்பாடு (Klein-Gordon Eqn) என அமையும்.

பின்பு நேரியற் அணிக் கோட்பாட்டின் மூலம்,  (-i \hbar \partial^\mu \gamma_\mu -mc )\psi = 0 என டிராக் சமன்பாட்டை எழுதலாம்.

(Dirac Equation \partial^\mu, \gamma_\mu என்பன முறையே 4(பரிமாண)-செயலிகள்,  டிராக் \gamma அணிகள் )

சமன்பாடுகளின் நுட்பங்கள் தற்பொழுது தேவையில்லாதது.  ஆனால் அதன் படிகளைக் காண்க.  டிராக் சமன்பாடு வெறும் ஒருபடிச் சமன்பாடு..  (^\mu என்பது படியல்ல.. அது வெற்றுக் குறி (Einstein Summation index or dummy index)).  இச்சமன்பாட்டின் மூலம், குவாண்ட இயற்கணிதத்தின் அடிப்படைக்கல் நாட்டப்பட்டது.

இந்த சமன்பாட்டின் விளைவால், பாசிட்டிரான் எனும் எதிர்துகள் உதித்தது!  இது எதிர்மத்துகளின் அடிப்படையை விதைத்தது! பாசிட்டிரான்,  எலக்றானின் எதிர்மத்துகள்!  அதாவது பாசிட்டிரானின் சக்தி–எதிர்ம அளவில் இருந்தது Negative energy — இது அவருடையக் காலத்தில், இயற்கைக்குப் புறம்பானவொன்று!  ஆயினும் எண்ணியல் தொடர்புகள் பல,  இயற்கையில், பற்பல விளைவுகளில் இருப்பதைக் காண முடிந்ததைப் போல், போஸ்-ஐன்ஸ்டைன் குளிர்வித்தலில் எதிர்ம சக்தியின் நிரூபணத்தை ஆய்வின் வழிக் கண்டறிந்துள்ளனர்.   இங்கு பயன்பாடு — கோட்பாடாக்கப் பட்டுள்ளது!

பேராசிரியர் செல்வக்குமார் உட்பதி தொகை மின்சுற்றுக் கணக்கீடுகளில் இருபடிகள் இல்லாமலும், வர்க்கமூலம் இல்லாமலும் பயன்படுத்த வேண்டியதைக் குறிப்பிட்டிருந்தார் [4].   அந்தத் தளத்தில் பௌத்தயானரின் சூத்திரத்தையும் விவாதித்துள்ளனர்!

பழங்கால விற்பன்னர்கள்

பாரதத்தின் பண்பாடு மற்றும் தேடலின் சேகரங்களைக் கற்றலின் பொருட்டு பிறநாட்டினர் பயணக்குறிப்புகளில் பகிர்ந்துள்ளதாய் வரலாறு உள்ளன.  அக்குறிப்புகளில் பல, மந்திர தந்திர அல்லது அப்பொழுது இருந்த மாயவித்தைகள் என நிறைய விசயங்களை சந்தேகக்கண் கொண்டு நோக்கினாலும், தத்துவம் சார்ந்த அறிவுப் பரிமாற்றங்கள் வெவ்வேறு அளவுகளில் நடந்துள்ளது உண்மை.   நாம் எப்படி கணிதத்தையும் அறிவியலையும் மதம் சார்ந்த அல்லது சடங்குகள் சார்ந்த ஒரு விசயமாக உருவாக்கினோமோ, உலகின் பிற பகுதிகளிலும் அக்கால அறிவியல் அதே அளவில் நடந்தேறியதையும் அவ்வப்போதுக் காண முடிகிறது.

நான் இவற்றைப் பார்த்துப் பூரிப்பதோ தவிர்ப்பதோ இல்லை, முடிந்தால் உடனே என்னவென்று ஆய்வேன், அல்லது கிடப்பில் கிடக்கும்!  ஆயினும், ஒரு வேலையை, நாம் தற்போது செய்வது போல், பழங்காலத்து ஆட்களால் செய்ய முடியாது அல்லது வேறு மாதிரி செய்வார்கள், அதே போல் தான் நவீன அறிவியலைக் கொண்டு காணும் நமக்கும் பழங்காலத்து ஆட்களைப் போல் சிந்திக்க முடியாது, ஆயினும் அதே மாதிரியான சிந்தனையின் முக்கியத்துவம் பார்க்கப்பட வேண்டுமா என்பது சூழலையும் தேவையையும் பொறுத்தது.

வரலாற்று ஆய்வுகளின் முக்கியத்துவம்

ஆனால், பெரும்பாலானத் தருணங்களில்,  பிரச்சினை என்னவென்றால், அவல் தின்பது போல் வரலாற்றை மெல்லுவது தான்.  அறிவியல் மற்றும் கணித வரலாற்றைப் பற்றி தற்போது உள்ள விஞ்ஞானிகள் கண்டுகொள்வதில்லை எனப் பலர் கவலை கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, அறிவியல் ஆய்வுகளை, பண்டைய, புதிய என வரையறைகளில் பெரும்பாலும், மேற்கத்திய தத்துவங்களிலேயே வைத்துள்ளனர்.  ஆசிய தத்துவங்கள் அடர்வான சாரங்களைப் பெற்றிருந்தாலும், அவற்றை ஏற்றுக் கொள்வதில் மிகப் பெரிய சுணக்கம் உள்ளது.   நேர்மையாக முன்னெடுத்துச் செல்வோரின் அளவுக் குறைவாய் இருப்பதே இதற்கு காரணம்.  சனரஞ்சகமாகவே, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் தத்துவப்பள்ளிகளைப் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரியும், ஏன் அரிஸ்டாட்டிலுக்கும் முந்தைய பள்ளிகள் கூட சனரஞ்சகமாக அறியப்பட்டுள்ளன!  ஆனால், மாவீரர், பௌத்தர், பாணினி, தக்கசீலப் பல்கலையின் அருமையைப் பற்றி நம்மவர்களுக்கேப் பெரிதும் தெரிவதில்லை.    அப்படி அறியக் கொணர்ந்தாலும்,  இன்ன அளவு என்றில்லாமல் பெரும்புகழ்ச்சிக்கு ஆட்படுத்துவது.. இல்லை, அவை எல்லாம் மதம் சார்ந்தவை என மேம்போக்காகப் பேசுவது என அறவே சம்பந்தமில்லாத எதிரெதிர் இரட்டை நிலைகளுக்குள் சிக்கிக் கொள்வதாக இருப்பது.

பெருமைக்குட்படுத்துதலோடு ஆய்வுக்குட்படுத்துதலும்!

உதாரணத்திற்கு, பிரையான் ஜோசப்சன் எனப்படும் இயற்பியலர், தனது முனைவர் பட்ட ஆய்வின் போது, கண்டறிந்த மீக்கடத்தி சந்தி (Josephson Junction) என்பதைக் கண்டறிந்தார், அது மிகப் பெரியக் கண்டுபிடிப்பு, அவருடைய 25 வயதிலேயே அதற்காக நோபல் பரிசைப் பெற்றார்!  ஆயினும், தற்போது அவருடையக் கட்டுரைகள் பெரும்பாலும், மனதையும் பருப்பொருளையும் (mind-matter) சார்ந்து எழுதும் ஆய்வுக் கட்டுரைகளை, பெரும்பாலானோர் ஒத்துக் கொள்வதில்லை.  ஆர்கைவ் (arXiv) எனப்படும், ஆய்வுக்கட்டுரைகள் எளிதாக எல்லோரையும் சென்றடையச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டத் தளம் கூட, அவருடைய சிலக் குறிப்பிட்ட ஆய்வுகளை ஒதுக்கி வைக்கின்றன!  இதில் மூன்று விசயங்களை உணர வேண்டும்!

  1.  அவர் நோபல் பரிசு பெற்றவர் என்பதாலேயே அவருடையவை எல்லா ஆய்வுகளும் ஏற்கப்படவில்லை யென்பது. (நாம் உயர்வு நவில்பவர்கள், ஆயிற்றா?!! )
  2. அப்படி ஒதுக்கி வைப்பது சரிதானா என்பதைப் பற்றியும் விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன.  அதாவது
    •  ஆய்வின் போக்கை, தாம் கொண்ட அறிவை மட்டும் வைத்து, இது சரி அல்லது தவறு என்று சொல்வது சரிதானா என்பது.  அதாவது ஆய்வின் சுதந்திரத்தை அது பறித்துவிடும்.
    • அதற்கான வடிகாலைக் கட்டமைப்பது. (உதாரணம் viXra, அதாவது arXiv-இன் தலைகீழ்! ஆனால் பல முரணானக் கட்டுரைகள் உள்ளன இதில்!)
  3.  இன்னும் ஜோசப்சன்னின் மற்ற ஆய்வுகள் சரியாக அலசப்பட்டு பிரசுரிக்கப்படவும் செய்கிறது.

 

சங்கப்பலகை அனல் புனல்வாதங்கள்!

ஒவ்வொரு கலாச்சாரமும் ஒவ்வொரு மனிதருக்கான வரையறையை வைக்கிறது.  ஆனால், நம்மவர்கள் பெரும்பாலும், அடுத்த நாட்டினரின் பண்பாட்டு உளவியலுக்குள் தத்தம் தலைகளைப் புகுத்த முயற்சிக்கிறார்கள், அதுவும் மிகவும் ஆகவே ஆகாத விசயங்களில்!   அனல்வாதம் புனல்வாதம் என்பது உவமைகளாக இருந்திருந்தால்,  சங்கப் பலகை-பொற்றாமரைக்குளம் என்பவை எல்லாம்  அக்காலத்தைய, editorial board-இன் ஒப்புமைவடிவம்!  வாதங்கள் எல்லாம் தத்துவங்களின் அலசல் –சமூகத்தால் ஏற்கப்பட்ட வடிவத்தைத் தரும் peer-reviewing system.    எல்லாத் தத்துவப் பின்னணி கொண்ட கலாச்சாரத்திலும், இது போன்ற தராசுகள் இருந்திருக்கின்றன.   சில நேரங்களில், வரலாற்றுப் படிமங்கள் கூறுவது போல், அவை கொஞ்சம் கொடுமையாக, யோசிப்போருக்கு நஞ்சையும் புகட்டியிருக்கின்றன, கழுவிலும் ஏற்றியிருக்கின்றன, கல்லைக்கட்டிக் கடலிலும் இறக்கியிருக்கின்றன.

அரைகுறை முன்னோர் புகழ்ச்சியால், உண்மையான வரலாற்றை நாம் தொலைத்துவிடக் கூடாது.  இது முதல் படி, ஆனால், இது மட்டும் போதாது, சரியான வரலாற்றைப் பதிவும் செய்ய வேண்டும். மகிழ்ச்சியான விசயம் என்னவென்றால், பல விஞ்ஞான நண்பர்கள் கிரேக்கத்துக்கும் முந்தைய அறிவியலில் ஆர்வங்கொள்வதும் நடுநிலையோடு இந்திய அறிவியல் வரலாற்றைப் பற்றி பகிர்வதும் ஆகும், ஆனால் மிகக் குறைவான பேர்களே இவ்வேலையை செய்து வருகின்றனர். என்பதும், அவர்களின் பகிர்வுகள் எவ்வளவு சனரஞ்சகமாக எடுக்கப்படுகிறது என்பதைக் காணும் போது அது வருத்தத்திற்குரிய அளவிலேயே உள்ளது.

ஆனால் அறிவியலுக்கும் கட்டுக்கதைப் புனைந்து புல்லுருவியைப் போல் செய்திகளைப் பரப்பி உளுக்கச் செய்தல், கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

உசாவுத்துணைகள்:

[1] https://archive.org/details/balagzone_gmail

[2] https://www.facebook.com/photo.php?fbid=10207381186028991&set=rpd.1266837112&type=3&theater

[3] https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5V0lxS0dZeTFhOGM

[4] http://forums.parallax.com/discussion/147522/dog-leg-hypotenuse-approximation

[5] முடிவிலா மின் சுற்றும், கொஞ்சம் ஜனரஞ்சக திண்ம அறிவியலும்!

 

கற்றலும் சமூகமும் – 1: பள்ளிக் கல்வியமைப்பும் சூழலும்

பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் உள்ள சிக்கல்களையும், உயர்கல்விக்குத் தேவையானக் கூறுகள் அனைத்தும் பள்ளிக்கல்வியில்- சாதாரணப் பாடத்திட்டத்தில்- அமையவில்லையா எனவும் நடந்தவொரு விவாதத்தில், தோன்றியக் கருத்து.   வெவ்வேறு வகையான நோக்கில் இதே விசயத்தை நான் பகிர வாய்ப்புகளுண்டு.

பெரும்பாலான ஐஐடி மாணாக்கர்கள், தங்களின் ஆர்வத்தாலோ, பெற்றோர்களின் உந்துதலாலோ தான் வருகிறார்கள், எப்படியிருப்பினும், அவ்வாறு வருபவர்கள், பள்ளிக் கல்வியளவிலான பாடத்திட்டங்களுடன் உள்ளே நுழைவதில்லை, பள்ளிக் கல்வியளவிலான அறிவு போதுமானதாக இருந்தாலும், சிறிய கால இடைவெளியில் நடைபெறும் பரீட்சையில், அதே நேரம் பிழிந்தெடுக்கும் அளவிலான நுழைவுத்தேர்வுகளில், அவை உதவாது. ஆக படிப்பது என்பது திணித்தலாகவோ, அல்லது விரும்பிப் படிப்பதாகவோ அமையும். ஆயினும், பாடங்களை இது மாதிரியான தேர்வுகளுக்கு சொல்லிக் கொடுக்கும் விதமும் பெரிதாக மாறுபடும். பள்ளியளவிலானத் தேர்வுக்கு, கல்லூரியளவிலான பாடத்திட்டங்களுடன் தயார் ஆக வேண்டியிருக்கவும் செய்யலாம். உதாரணத்துக்கு, ரெஸ்னிக் & ஹாலிடே இயற்பியல், விட்டர் உயர் நுண்கணிதம், கல்லூரி இயற்கணிதம் இது போல.

என்னுடையப் பள்ளிக் கல்வியின் போது, +2வுக்கு கணிதம் எடுப்பவர்கள் ஒரு டெம்ப்ளேட் போல் எடுத்துச் சென்றுவிடுவர், எங்கிருந்து வந்தது என்றெல்லாம் கேட்க முடியாது. இன்னும் அவ்வாறே இருக்கும் பட்சத்தில், மதிப்பெண்களால் கட்ட்மைக்கப்பட வேண்டியிருக்கும் சமூகத்தில் அல்லது அவ்வளவு பயிற்சிப் போதுமெனில் பிரச்சினையில்லை. ஆனால், வேட்கை கொண்ட மாணவனுக்கு அதற்கான வழிமுறைகளும் இருந்தால் நலம். இருப்பினும், பிரச்சினை, போதுமான தூண்டுதல் முயற்சிகள் நடக்கின்றனவா என்பது தான். எதற்காகப் படிக்கிறோம் என்பதற்கு முழுமையான பதில் தரமுடியவில்லையெனினும், தாகங்கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டியது அவசியம்.  உதாரணத்துக்கு, என்னுடைய அமெரிக்க ஆய்வு நண்பர், நம்முடையப் பள்ளியளவிலேயே, நாம் வகைக்கெழு சமன்பாடுகளைப் (differential equations ) படிப்பதை ஆச்சரியமாகக் குறிப்பிட்டார். அவர்கள் அப்படிப் படிப்பதில்லையெனினும், நல்ல ஆய்வாளர்களாகத் தான் இருக்கிறார்கள். அதே போல் படிக்கும் நம்மவர்கள் பெரும்பாலும், அதைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவதுமில்லை.

NCERT புத்தகங்களை வடிவமைப்பது பெரும்பாலும், ஐஐடி ஐஐஎஸ்சி ஆர்ஐஈ போன்ற நிறுவனப் பேராசிரியர்கள், அவை ஆரம்பப்பள்ளிப் பாடத்திட்டங்கள் என்றாலும்! ஆக நம்மிடம் இருப்பது நல்ல அமைப்புகள் தாம், ஆனால் அதை சரிவர பயன்படுத்தத் தெரியாமலும் இருக்கிறோம். இவற்றைத் தெரிந்தவர்களுக்கு எடுத்துக் கூறினாலும், இதை வைத்து நிறைய மதிப்பெண்கள் வருமா எனக் கேட்கிறார்கள், அதோடு நின்றாலும் பரவாயில்லை, அப்படியே “நம் கல்விமுறையே சரியில்லை” என்று வைது புலம்பவும் செய்கின்றனர்.

மதுரை, மதுரம்! மதுரம்!!

 அண்மையில், அவசர காரியமாக சில வாரங்களுக்கு பாரதத்திற்கு போய் வர நேர்ந்தது!

காய்கின்ற வெயில்தனில், ஆங்காங்கே தண்ணீர்பந்தலும் மோர் பந்தலும் அமைத்து சித்திரை தாகம் தணிக்கும் மதுரையில் மனிதம், அறிவியல், பூமி என எல்லாவற்றையும் யோசிக்கும் சிலரை சந்திக்க நேர்ந்த அனுவங்கள்!

சில வாரங்களில், பல புதியவர்களையும் உயரிய மனிதர்களையும் சந்திக்க முடிந்தது. என் தம்பியார் Muthukumar Natarajan குமரன், மிக சாதாரணமாகக் கூட்டிக் கொண்டு போய் சேர்த்தது பாரி V Perianan Elayapari அண்ணனிடம்… டோமினோ விளைவுகள் போல் வரிசையாக, உயிர் தொழிநுட்ப விஞ்ஞானத்தோடு சமூக வேலைகளையும் பார்க்கும் சங்கர் Sankar Aakam அண்ணனையும், அவரைத் தொடர்ந்து, தந்தை வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டே அறிவியல் ஆய்வுகள் செய்யும் கோட்பாட்டு உயிரியலாளரான (Theoretical Biologist) Karthikeyan Ramanujam மெய்ஞான வழிகாட்டிகளையும் அவர் வழிசெல்வோர்களையும் இன்னும் பிற சமூகப் பற்றாளர்களையும் ஊருக்கு உழைப்பவர்களையும் காண நேர்ந்தது.

மிகக் குறைவான நாட்களேயிருந்தாலும் திடீர்திடீரென ஆட்களை நினைத்த நேரத்தில் சந்திக்க வைத்தவர் நம் இளையபாரி அண்ணன்.. இன்றைக்கு, அவரைப் பற்றி சில மாதங்களுக்கு முன் வந்த காணொலியைக் காண நேர்ந்தது, அதன் விளைவாய் இச்சிறு குறிப்பு.. மேலும் இக்காணொலி சமூகப் பொறுப்பாளர்களாக அவர்கள் செய்யும் விசயங்கள் பலருக்கு விருப்பமானதாகவும், ஆர்வத்தைத் தூண்டுவனவாகவும் வழிகாட்டியாகவும் அமையலாம்..

சங்கர் அண்ணனின் “பைந்தமிழ் மதுரை” நிகழ்ச்சிக்கு செல்லமுடியவில்லை, இருப்பினும் சில மணிநேர சந்திப்பில் நிறைய விசயங்களைப் பேச முடிந்தது. தன்னார்வராக, மதுரை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடங்களை எடுப்பதையும் துளிர் வட்டாரத்தின் மூலமும் மற்ற அமைப்புகளின் வழியாகவும் சிறுவர்களுக்கான அறிவியல் விசயங்களைச் செய்து வருவதையும் அறிய முடிந்தது.

இவர்களுடன் மதுரை பல்கலையில் போய் கிராமப்புற மாணாக்கர்களுக்கு அறிவியல் ஆய்வு செய்வதற்கு வழிவகுக்க வேண்டும் என முனைந்து மதுரையிலேயே இருக்கும் பேராசிரியர்  Muruga Poopathi Raja, முருக பூபதி இராஜா அவர்களையும் காண நேர்ந்தது! சமீபத்தில் அவர்களின் அல்சைமர் நோயினைச் சார்ந்த ஆய்வுகள் தேசிய நாளிதழ்களிலும் மற்றும் உலகளாவிய அறிவியல் பத்திரிகைகளிலும் பாடப்பட்டன! (dx.doi.org/10.1016/j.celrep.2016.01.076) அறிவியல் ஆய்வில் சிறந்த ஆய்வாளர்களைக் கொண்டிருந்தாலும் அதற்குரிய சூழ்நிலை பெரிதாக இல்லாத போதும், அதில் இருந்து ஒரு ஆய்வுக்குழுவை உருவாக்கி பரிமளித்து வருபவர்கள் இராஜா அண்ணன்! நேற்று அவரின் மற்றொரு, பொதுமக்களுக்காக எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரையினையும் பகிர்ந்திருந்தார்கள்! http://www.spincotech.com/ebook/may2016/

ஆயினும் சென்னையில் இருக்கும் என்னுடைய உற்றத் தோழர்களும் ஆழ்ந்தத் தேடுதல் வேட்கை கொண்வர்களுமான தேவா Devaraj Ns, இராகுல் Rahul Ravindran,   ஜீவா Jeeva Malini ஆகிய நண்பர்களைக் காண முடியாமல் வரநேர்ந்தது. மன்னிப்பார்களாகுக..

வானியற்பியலர் சந்திராவின் தமிழ் கையெழுத்து!

 
பேராசிரியர். செ. இரா. செல்வக்குமார் அவர்கள் இவ்வார வல்லமையாளராக, கணித நோபலான ஏபல் பரிசை வென்ற பேராசிரியர் சீனிவாச வரதனாரைவல்லமை” பக்கத்துக்காகத் தேர்வு செய்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது வந்த விவாதத்தில் வரதன் அவர்கள் தமிழைப் போற்றுவதையும் அவர்தம் தமிழிலக்கிய ஆர்வத்தையும் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். விவாதத்தில் கணிதவியலர் இராமானுஜனையும் மற்ற தமிழ் அறிவியலறிஞர்களைப் பற்றியும் பேசியிருந்தனர். அப்பொழுது தான், எனக்கு சந்திரசேகர் அவர்களின் கையெழுத்தைப் பற்றியும் அவர் ஏட்டில் தமிழில் எழுதியிருந்ததாய் குறிப்பிடப்பட்டதும் நினைவு வந்தது, அதை அவர்கள் பக்கத்தில் குறிப்பிட்டதையடுத்து, அதை தனியிடுகையாக இடும்படிக் குறிப்பிட்டிருந்தார்கள்.

புகழ்பெற்ற நோபலியர் சந்திரசேகரின் விண்மீன் காலவரையறையைக் குறிக்கும் படம்! எரிந்து முடிந்த விண்மீன்களின் ஆரத்திற்கும், சூரியனின் ஆரத்திற்குமான விகிதத்திற்கும், விண்மீன்-சூரிய நிறை விகிதத்திற்கும் ஆனத் தொடர்பு. விண்மீன் இறப்பு “பிண்டம்” எனக் குறிக்கப்பட்டுள்ளது!
அந்த ஏட்டின் “கையெழுத்துப் பிரதியின்” ஒரு பக்கத்தை, இயற்பியலர் பேரா. ஜி, வெங்கடராமன், அவர்களின் “Vignettes in Physics” நூல்கள் வரிசையில் வெளிவந்த ஒரு நூலான “Chandrasekhar and His Limits” (Univ. Press)-ல் அட்டைப்படத்தில் உபயோகித்திருந்தார்!
உண்மையில், அந்தப் படம் புகழ்பெற்ற இயற்பியலரான கியார்கி கேமௌ (George Gamow) அவர்கள், சந்திரசேகரின் கையெழுத்துப் பிரதியைப் பார்த்ததை வைத்து, கேமௌ அவர்களாலேயேத் திரும்பவும் “வரையப்பட்டது”! (ருஷ்யர் தமிழ் வார்த்தைகளை வரைந்திருப்பதால் தான் விட்டார்த்தம் பார்க்க வித்தியாசமாக உள்ளது!) அவரின் நூலிலிருந்து எடுத்ததைத் தான் வெங்கடராமன் தனது நூலில் பயன்படுத்தியிருந்தார்.
ஆயினும், இலக்கியமாக, வரலாறாக இல்லாமல், தமிழை கணித, இயற்பியல்– சேதியியல், வெப்பவியக்கவியல் , நரம்பியல் வழியாக அணுகியவர்கள் மிகக் குறைவாக இருந்தது/இருப்பது வருத்தமானது. எனக்குத் தெரிந்தவரை, கிஃப்ட் சிரோமணி மற்றும் அவருடன் உழைத்தவர்களின் ஆய்வுகளும் எனக்குப் பிடித்தமானவை! பேராசிரியர் தெய்வ சுந்தரம் நயினார் போன்றோரின் அணுகுமுறையும் கணினிமொழியியலில் வேலை செய்வோரின் ஆய்வுகளும் மொழி-அறிவியலின் கட்டமைப்புப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிப்பதைக் காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!

முகநூல் அளவே ஆகுமாம் அறிவு?!- The philosofby :p

பொதுவெளியில்,  சகோதரர்களுக்கிடையே நடந்த உரையாடலின் தொகுப்பு  (drumming up an apologetic philosophical discussion supposed to be like “Man from Earth”,  ended up something charlatan!).

பின்னணி:  (பின்னணியும் பேசப்படுபொருளும் வேறு!) சில வருடங்களுக்கு முன்னர் எல்லோருடைய வாயிலும் அவலாய் ஆன நித்யானந்த சாமியார் ஒரு வெளிநாட்டுப் பெண்ணுடன் அமர்ந்திருப்பது போல் உள்ளப் படம்!  இருந்தாலும் அதைப் பற்றிய விமர்சனம் அல்ல!

கருத்தாள்வோர்:
நான்                         : ஒரு அஞ்ஞானி
ஒரு தம்பி                  : சமூக ஒழுக்கநிலை சார்ந்து
மற்றொரு தம்பி        : நல்லதையெடு -மற்றன விடு- சார்ந்து
என்வயதொத்தவன்  : மூத்தோர்சொல்-முதுநெல்லிக்கனி-சார்ந்து

பண்டையக் காலத்தின் அறிவு நவீன காலத்தின் சிந்தனை, எந்தவொன்றும் எது எப்படியிருக்கவேண்டும் என்றப் பார்வையை ஒரு பொதுப்படையானப் பார்வையிலும்,  கொஞ்சமே கொஞ்சம் அறிவியல், சமூக அறிவியலின் பார்வையிலும், மிக முக்கியமாக முகநூல் பிரசங்கங்களின் அறிவேப் பிரதானமாகவும் அமையும் பார்வையிலும் அமைந்தது.  வழக்கம் போல பல விசயங்களைக் கலந்துகட்டி அடித்த ஒரு வெகுசன அறியாமைப் பற்றியதொரு பதிவு!

நன்மைவிரும்பி: நல்லதையெடு -மற்றன விடு! ( கூறிவிட்டு சென்றுவிட்டார்!)

ஒழுக்கவாதி:  இது குழப்பத்தின் விளைவு 

அஞ்ஞானி  : ஏனெனில் எல்லோரும் தான் குழப்பத்தில் இருக்கிறோம். யாருக்கும் தெளிவான பதில் தெரியாது. அப்படித் தெரிவது போல் தோன்றும் அவ்வளவு தான்.

அடுத்தவனை என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என யாரும் கூற முடியாது. உன் கேள்வியை, சாமியார் எனில் இப்படித் தான் இருக்கவேண்டுமெனவும் பெண்ணைத் தொடவோ கூடவோக் கூடாது என்று யார் தீர்மானித்தது என மாற்றிக் கேட்டுக் கொள்.

பொதுவாகவும் நல்லது கெட்டது என எதைச் சொல்கிறார்கள் எனக் கேள். விடைக் கிடைக்கும் வழி கிடைக்கலாம், அதை விட்டுவிட்டு இது இப்படித்தான் இருக்க வேண்டும் எனக் கேட்டால், வர்ணாசிரமக் கோட்பாட்டை, இது தான் பாரம்பரியம் என்று பின்பற்றுபவர்களுக்கும், அதை விமர்சித்து உலகம் வளர்ந்துவிட்டது, அதெல்லாம் இப்போது செல்லாது எனக் கேள்வி கேட்பவர்களுக்கும் வித்தியாசம் இருக்காது.

யாரொடு சேர்கிறோம் என்பது முக்கியமில்லை. எதை புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதே முக்கியம்.

ஒழுக்கவாதி:  மனிதர் உருவாக்கிய விதிமுறைகள் ஆனாலும், சராசரி மனிதர் என்பவர் வேறு, சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவரின் நிலை வேறு.  வேதங்களை இம்மாதிரியானவர்கள் மதிப்பதில்லையா! வேதங்கள் தவறா அல்லது இவர்கள் தவறா?  பொதுவாழ்வில் ஒழுக்கம் தவறுவோரை விமர்சிக்கும் உரிமையுண்டு!  (வேதங்கள் ஒழுக்கங்களைப் போதிக்கும் என்பது இவரின் நம்பிக்கை!)

அஞ்ஞானி:  சில விசயங்களை (எல்லாவற்றிலும் அல்ல!) நீ தெளிவாகத் தான் கேட்டிருக்கிறாய், ஆனால், இன்னும் உன் சித்தாந்தத்தில் இருந்து தான் யோசிக்கிறாய். அதில் ஒன்றும் தப்பில்லை, எனினும் அறிவுக்கு அது போதாது. பொது வெளியில் ஒருவரைக் குறை கூறுவது என்பது நாகரீகத்தையும் வசதியையும், அதனால் வரும் பின்விளைவுகளை எதிர்கொள்வதையும் சார்ந்தது. அதை நீ தான் முடிவு செய்யவேண்டும்! வேலைசெய்யாத அரசையும், கல்வித்துறையையும் ஆய்வுத்துறையையும் பொருளாதார கலாச்சார தத்துவார்த்த விசயங்களையும் என்னால் குறைகூறவும் விமர்சிக்கவும் முடியும். ஆனால், இது போல் பொதுவெளியில் உள்ள நடிகர்களையோ, சாமியார்களையோ, அல்லது எந்தவொரு தனிமனிதரைப் பற்றி கருத்து இருந்தாலும் அது என் வேலையில்லை என விட்டுவிடுவேன். அவனவனுக்கு ஒரு விசயத்தைச் செய்ய ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

பொதுவெளியில் உள்ள ஒருவர், சில விசயங்களைச் செய்யலாம் செய்யக்கூடாது என்பது அப்பொழுது உள்ள சமூகத்தைப் பொறுத்தது!  ஒரு இடத்தில் சாராயம் விற்பதும், பலியிடுதலும் சரியாக இருக்கும், இன்னொரு இடத்தில் அதே விசயம் தவறாகவும் இருக்கும். அதே இடத்திலேயே கூட ஒரு நேரம் சரியாக இருக்கும் மற்றொரு நேரம் தவறாகிவிடும்.

இப்படி ஒரே சமூகத்தில் பற்பல விசயங்கள் இருந்ததால் தான் யோகா, காமசூத்திரம், கொக்கோகம், நீதியொழுக்க நூற்கள் போன்ற (தோற்றத்தில் முரண்படும் தத்துவங்கள் ) எல்லாம் நம்மிடம் இருந்து வந்தது, காதல் களவு பற்றி எழுதியவர்கள் பிரம்மச்சரியம் கடைப்பிடித்தவர்கள், ஒரு சாமியார் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லாததும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதும் நம் கலாச்சாரத்தில் உள்ள சுதந்திரம். அதைத் தடுப்பதை விமர்சிக்கிறேன். நீ என்ன சொல்கிறாயோ, பிஜேபி ஆட்களும் இதையே தான் செய்கிறார்கள். அதில் தான் பிரச்சினை.

எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது மிகப் பெரிய சுதந்திரம் மட்டுமல்ல அது மிகப் பெரிய பொறுப்பும் ஆகும்.  உதாரணத்திற்கு, இதையே ஹிட்லர் செய்தார், அவர் கூட்டத்தை விரிவுபடுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஆரியர்கள்’ யாரோடு வேண்டுமானாலும் கூடலாம் என்று ஒரு ஏற்பாடு இருந்தது, அப்படி உருவான பல அனாதைகள் இருந்தனர்.  இதே மாதிரி ஒருக் கூற்றையே கணவன் மனைவி பெற்று குழந்தைகளை தனித்து விடுவதை பெரியார் அவர்தம் உடோபியன் சமூகத்தில் பரிந்துரைத்தார். சொன்னதன் நோக்கம், கிட்டத்தட்ட இரண்டுக்கும் ஒன்று தான். ஆனால் எதை முன்னிறுத்தி அதைச் சொல்கிறார்கள் என்பது மிக முக்கியம். ஆயினும் மிகப் பெரிய சுதந்திரம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம், என்பதே இவ்வெடுத்துக்காட்டின் கருத்து.

வேறு மதங்கள் பிறந்த கலாச்சாரங்கள் போலல்லாமல், நம் கலாச்சாரம் இல்லறம், காடேகுதல், இல்லறத்தில் பிரம்மச்சரியம்/ இல்லறத்துறவு என ஒருங்கே பல முரண்பாடான விசயங்களை அமைக்கிறது, வாழ்க்கையின் வேறுபட்ட விசயங்கள் சில முக்கியமானவற்றை விளங்க வைக்கும் என்பதே அதன் சாராம்சம். இவ்விடத்தில், தந்திர யோக முறைகளில் சில உண்டு, அதை அவர் பயன்படுத்தியிருக்கலாம், அம்மாதிரியானவை சாதாரண ஆட்களுக்கு தவறாகத் தான் தெரியும். வேறுமாதிரி கூறினால், கோவிலில் அபிசேகம் எதற்கு, அதை பசித்தவருக்குத் தரலாமே என்ற நோக்கில் பார்ப்பது போல் பார்த்தால், கோவில்சிலைகளுக்கு செய்யவேண்டியவையென சில முறைகள் தடைபடும். ஒன்றை விட்டு ஒன்றை எப்பொழுதும் பிடிப்போம் ஆனால், அது எதன் பொருட்டு நியாயம் என்பதையும் எது தர்மம் என்றும் யாராலும் அறுதியிட்டு எல்லாம் சொல்ல முடியாது. சொன்னால், ஹிட்லர் செய்தது போலவும், இப்பொழுது இந்துத்துவ குழுக்கள் செய்வது போலவும் ஆகிவிடும்.

ஒழுக்கவாதி: ஆனால், முன்னால் இருந்த சாமியார்கள், ஞானியர் எல்லாம் தமக்கென்று ஒரு ஒழுக்கத்தை வைத்துள்ளனர்.  அதனால் அஞ்ஞானியே, உன் பதிலில் திருப்தியில்லை.  [அக்காலத்தில் ஹிட்லரை ஒப்புக் கொண்டார்கள் அவர் மாவீரனாய் பார்க்கப்பட்டார், ஆனால் தற்பொழுது அப்படியில்லை.]

அஞ்ஞானி:  உனக்கு நான் எழுதியது புரியவில்லையென்பது தெரிகிறது!

முதலில், நான் உனக்கு பதில் சொல்லவில்லை!  நான் கூறியதெல்லாம்  உலகத்தில் நடந்த நடக்கும் விசயங்களையேக் கூறியுள்ளேன். அதனால் நீ திருப்தி அடைவதற்கும் அடையாததற்கும் அதில் ஒன்றுமிலலை.  கொஞ்சம் நேராக, முகத்திலடித்தாற் போல், பதில் சொன்னால் உனக்குப் புரியலாம்.

நீ புத்தர் பற்றியெல்லாம் பேசுகிறாய், ஆனால் அவர் தத்துவத்தைப் பற்றி என்னப் படித்தாய் எனத் தெரியவில்லை. பெரிய ஆட்களின் பெயரில் வரும் பொன்மொழிகளூம் அவர்களைப் பற்றிய எல்லாக் கதைகளும் உண்மையாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு அப்படி நிறைய பொய்யானவை உலவுகின்றன. நிசமாகவே புத்தரைப் படிக்க வேண்டுமென்றால், நீ அவரின் சுக்தங்களைப் படித்தால் தான் அவரைப் பற்றிப் பேச முடியும்.

விவேகானந்தர் புத்தர் போன்ற ஞானியர் எல்லாரும் வாழ்க்கையை நாம் இப்படி அணுகுவது போல் அணுகவில்லை.  ஒரு எடுத்துக்காட்டாக, புத்தர் அவருடைய சோதனையொன்றில், பல உயிரினங்களின் சாணத்தை எடுத்துத் தின்றதாக சாதகக் கதைகள் உண்டு.  பயங்கொள்ளாதிரு எனக் கூறிய விவேகானந்தர், மிகவும் பயந்த சம்பவங்களில் இருந்தே அதைக் கற்றுக் கொண்டார். இதன் அர்த்தம்,  நீ கற்க வேண்டுமென்றால், நிஜமாகவே கற்க வேண்டும், இது தான் சரி, இது தான் தவறு என்பதெல்லாம் கற்பவனின் வேலை கிடையாது,  அல்லது குறைந்தபட்சம் நமக்குத் தெரிந்தது எல்லாம், நாம் அடுத்தவனின் சோதனைகளைப் படித்தது கேட்டதால் தான் என்றும் அடுத்தவன் சொன்னதால் தான் என்பதையும் உணர்ந்திருக்க வேண்டும்.

உனக்கு வர்ணாசிரமம், வேதம், தந்திரம், பெரியார், ஹிட்லர் –(மாவீரன் என்பதெல்லாம் சும்மா கதை,  மேலும் ஹிட்லரை அந்தக் காலத்திலேயே வையாத ஆள் கிடையாது நம் காந்தி முதல் ஹிட்லரின் ஆரிய படைத்தலைவர்கள் வரை பலர் விமர்சித்தனர். பல முறை அவரின் படையாட்களே கொல்ல முயற்சி செய்தும்,  முடியவில்லை)..– இவை எல்லாம் சொன்னது நீ ஒத்துக் கொள்வதற்காக இல்லை, அவையெல்லாம் நடப்பவை நடந்தவை.  மேலும் உன் கருத்துகளில், சில கேள்விகள் நீ கேட்டிருந்தாய், அந்த கேள்விகளுக்கும் நாம் பேசுவதற்கும் பெரிதாக சம்பந்தமில்லை, ஆனாலும், அதற்கானப் பதிலைக் கூறுகிறேன்.

வேதம் என்ன சொன்னது என்று நீ படித்து அறியவில்லை என நினைக்கிறேன், அப்படியிருக்கும் பட்சத்தில், அதனால், வேதம் சொன்னது பொய்யா என்றோ, வேதம் படி நடக்கிறார்களா என்று வேதத்தைப் பற்றித் தெரியாமலேயே அல்லது ஒன்றைப் பற்றித் தெரியாமலேயே அதைப் பற்றி பேசுவது ஞானத்தைப் பெற வேண்டும் என்று நினைப்பவன் செய்யும் செயலா?!  இருக்கட்டும், இருப்பினும் அதற்காகவே  தான் தந்திர முறைகளைப் பற்றிக் கோடுகாட்டியிருந்தேன், (ஆனால் அது என்னவென வேண்டுமென்றே நான் கூறவில்லை, நீ அதைப் பற்றி கேட்பாய் என நினைத்தேன்)! 🙂

நீ யாரைப் பற்றிப் பேசுகிறாயோ அவரைப் பற்றிப் பெரிதாக நான் ஏதும் கூறவில்லையே அதையும் கவனித்திருப்பாய் என நினைக்கிறேன்.  அது ஏன் எனப் புரிந்திருந்தால் மட்டுமே, என் பதில் விளங்கும்.

நீ கற்க வேண்டுமென்றால், நிஜமாகவே கற்க வேண்டும், அப்படியில்லாமல், வெறும் பொழுதுபோக்குக்காகவும் புரணி பேசுவதிலும் இது தான் ஒழுக்கம், தேசபக்தி, தெய்வபக்தி, ஞானம், பகுத்தறிவு மண்ணு மட்டை என்றெல்லாம் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமலும் கற்க அணியமாய் இல்லாமலும் பேசுவதில் எனக்கு விருப்பமுமில்லை, நேரமும் இல்லை.  கற்பதாக இருந்தால் பேசலாம், இல்லையெனில், இப்படியே விடுவதே சிறந்தது! இல்லையெனில் இது துப்புரவாக வெட்டிவேலை.   :D

“மூத்தோர்-முதுநெல்லி”வாதி:   நீ இப்பொழுது தம்பிக்கு சொன்ன பாயிண்ட் ரொம்ப சரி அதாவது ஒரு விசயத்தை  அதை பற்றி நமக்கு முழுவதும் தெரியுமா என்று பார்த்து தான் சொல்ல வேண்டும் அதை விட்டு நம் கருத்த சொல்ல கூடாது ஒரு ஊர்ல ஒருத்தன் மோசம்னா அந்த ஊரா மோசம் இல்ல அது போல தான் இந்த சாமியார் விசயமும் இவன் மோசமெனில் மொத்த ஹிந்து மதமே மோசம் இல்லை அது போல நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை, ஒவ்வெரு விசயத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கும் எனவே அனைத்தையும் தவறாக சொல்ல வேண்டாம்.

அஞ்ஞானி:  நம் ஒழுக்கவாதி தம்பி எல்லாவற்றையும் கேள்விகேட்டுப் பழகுகிறான், அது நல்ல விசயம் தான். ஆயினும் சில முற்சார்பு கொண்ட முடிவுகளை நம் எல்லோரையும் போல் அவனும் எடுக்கிறான்.  அதைத் தான் குறிப்பிட்டுள்ளேன்.   நம் முன்னோர்கள் சொன்னதெல்லாம் எல்லாக் காலத்திலும் சரிப்பட்டுவருமா என நாம் தான் கண்டுணர வேண்டும்!

ஆதலால், முன்னாடியே அவர்கள் கூறியது சரியென்றோ தவறென்றோக் கூற முடியாது, வாழ்வதில் இருந்து அதன் அர்த்தங்களை எடுத்துக் கொள்ளலாம். வாழ்க்கையை வாழ்வதைத் தவிர வேறென்ன வேலை நமக்கு!   நம் கண் முன்னாலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த விசயங்களும், ஹைதராபாத் பல்கலைக் கழகத்திலும் நடந்தவையெல்லாம், பழைமைக்கும் புதுமைக்கும் நடக்கும் யுத்தங்கள்.  சாதிகள்/சமூக நிலைகளையும் கொண்டிருந்த வேற்கத்தியர்களும் காலத்திற்கேற்ப மாற்றமடைந்துள்ளனர்.  நாமும் எதையெடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, நம் இரத்தத்தினை எடுத்துப் பரிசோதித்தால் தெரியும் நாம் எல்லோரும் சொல்லும் ஜாதிக்கும் மரபணு சொல்லும் ஜாதிக்கும் உள்ள வித்தியாசம். 1500 வருடங்களுக்கு முன்னர், அதாவது குப்தர்கள் காலம்,  தான் சாதிக்குள் கல்யாணம் பண்ணும் வழக்கம் பெருவாரியாகப் புகுத்தப்பட்டுள்ளது, என புதிய மரபணு ஆய்வு கூறியுள்ளது (சில வாரங்களுக்கு முன் வந்த ஆய்வுக் கட்டுரை! (http://www.pnas.org/content/113/6/1594.abstract).  இதன் அர்த்தம், நம் இரத்தத்தில் அனைத்து ஜாதியின் கூறுகளும் பெரும்பாலும் இருக்க வேண்டும்.  ஆக, 1500 வருடம் முன்னர் ஒரு மாற்றம் வந்துள்ளது,  1500 வருடம் முன்னால் இருந்ததும் முன்னோர் தான், அடுத்து வந்தவர்களும் முன்னோர் தான்.  இதில்  இருவரும் முன்னோர் தான்,  எது முன்னோர் சொன்னது?   1500 வருடம் முன்னாடி என்றால், வேதகாலத்தையொட்டி, அப்படியானால், வேதகாலத்தாட்கள் ஒழுங்காக இருந்துள்ளனர். இப்படி நமக்குத் தெரியாத பல விசயங்கள் உள்ளன..   நாம் தான் தெளிவைத் தேடிக் கொள்ளவேண்டும்.  அதன் துவக்கம் தான் இந்த உரையாடல்!

எல்லாவற்றையும் கேள்வி கேட்கலாம் புரட்சி செய்யலாம், அமைதியாகவும் வாழலாம், இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்பதும் இரண்டுமே கர்மயோகத்தில் சேர்த்தி என்று கூறுவதும் தான் நம் கலாச்சாரத்தின் அழகு!!

ஒழுக்கவாதி: எல்லாம் சரி,  இவர் தனிமனிதர் கிடையாது.  இந்த ஆள் செய்வதெல்லாவற்றையும் செய்துவிட்டு தான் ஆண்மையற்றவன் என்று சொன்னாரே!  புத்தர் இல்லற வாழ்வைவிட்டு வந்தப் பின்னர் பிரம்மச்சாரியாய் தானே இருந்தார்.  [உள்ளர்த்தம்: சாமியாரானால் பிரம்மச்சரியம் அவசியம்.. இதே போல் அவரைத் தொடர்பவுரும் தவறுகள் செய்ய வாய்ப்புண்டு]

அஞ்ஞானி: பிரம்மச்சரியத்துக்கும் கல்யாணத்துக்கும் சம்பந்தம் கிடையாது. கல்யாணம் ஒருவர் கூட பிரம்மச்சாரியாய் இருக்கலாம், கல்யாணம் ஆகாத ஒருவர் பிரம்மச்சாரியாய் இல்லாமலும் இருக்கலாம்.  அவரின் யோகமுறையைப் பார்த்தால் தெரியும்.

 

எனக்கு இவரின் யோகமுறைத் தெரியாது, ஆனால், அவை தந்திர யோக சார்ந்தவையென்று என்னால் அவர்களின் சில முறைகளைக் கொண்டுக் கூற முடியும். அவை நாம் நினைப்பது போலானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. அவ்வளவு தான்! தனிமனிதன் என்பவன் எப்பொழுதும் தனிமனிதன் தான், சமூகம் கூட்டம் என்பதெல்லாம் எல்லோருடைய வசதிக்கானது.

ஒழுக்கவாதி:  நமக்குள் புரிதல் இல்லை எனத் தோன்றுகிறது! ஆனால் நீ வேறொருப் பாதையைக் காட்டுகிறாய்.  புரிதல் முக்கியம்தானே!

அஞ்ஞானி: இங்கு உன் புரிதலும் என் புரிதலும் ஒன்றும் செய்யப் போவது கிடையாது. அது அங்கு இருப்பதை அறிவதே முக்கியம். பிரம்மச்சரியம் பற்றியோ யோகம் பற்றியோ, தந்திரம் பற்றியோ குறைந்தபட்சம் அறிதல் நலம்!  அவற்றையெல்லாம் படித்தால் கூடப் புரியும், நீ கேள்விப்பட்டதற்கும் உண்மைக்கும் இடையேயான தூரம் எவ்வளவு என்பதை.


ஒரு மனிதனின் ஆண்மைத் தன்மையை மாற்றுவது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. யோகமுறையானாலும், அல்லது வேறு வேதி மருந்து வகையிலும் அதை மாற்றிவிடலாம். அது அவருக்கு சாத்தியமா இல்லையா என்பதெல்லாம் நம் விவாதத்திற்குரியது இல்லை. ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று இல்லை.  இப்பொழுது, புரிதல் முக்கியம் தான், ஆனால், அது எவ்வளவு சரியானது.. ஏனெனில் நம் புரிதலே முழுவுண்மையில்லை. உதாரணத்திற்கு, ஒரே நிறத்தைப் பார்க்கும் போது கூட நாம் இருவரும் மனிதர்களாகவும் அண்ணன் தம்பியாகவும் இருக்கும் போது கூட, உன் மூளையும் என் மூளையும் ஒரே அளவு நிறத்தைக் காண்பதில்லை. முழுவுண்மை மிகவும் வித்தியாசமானது. அதனால் புரிதல் என்பதே ஒரு எல்லைக்குட்பட்டது.

 திரும்பவும் சொல்கிறேன் நான் சொன்னதில் கருத்து என்ற ஒன்றிருந்தால் அது “கருத்தே இல்லாமல் இருப்பது, அதாவது, கற்றுக் கொண்டேயிரு!” என்ற ஒன்று தான்!   மற்றவையெல்லாம் வரலாறும் இருக்கும் தத்துவங்களும் மட்டுமே!  முடிவைத் தேடாதே… அவை நடந்தேத் தீரும்.  அறியாமையென்பதை உணர்வதே அறிவைத் தேடவைப்பது. ஆனால் அறிவுத் தெளிவு போல் தோன்றுவது/ இருப்பது உண்மையில் அறிவு கிடையாது, கிழக்கத்தியத் தத்துவங்களின் பிரகாரம்!
ஒரு தத்துவவியலாளர், ஒரு வசதியுமில்லாக்  காலத்திலேயே கிரேக்கர்களும் இந்தியர்களும் அவ்வளவு தத்துவம் வளர்த்தார்கள், ஆனால் தற்காலத்தில் உருப்படியாக ஒரு விவாதம் கூட நடைபெறுவதில்லை எனக் கூறியிருந்தார், ஆனால், அதுவே 30 வருடங்களுக்கு முந்தைய நூல்!   ஆனால் இப்படியெல்லாம் பேசுவதையும் எழுதுவதையும் பார்த்தால்,  நாம் இன்னும் பின்னோக்கி செல்கிறோம் என நினைக்கிறேன்.  “அறிவுக்கும்/கற்றலுக்கும் முகநூல் கேலிப்படங்களுக்கும் சந்தத்துடன் வரும் பொன்மொழிகளுக்கும் சம்பந்தமில்லை” எனக் கூறும் அளவுக்கே நம் அறிவு உள்ளதே.. 😦

கலாச்சாரக் கண்ணோட்டத்தில் தோற்றமுரண்!

நண்பர் சுதாகருக்கு அவர்களின் பிரித்தானிய ஆய்வுக்குழு தலைவர் தமிழில் பிறந்த நாள் வாழ்த்துக் கூற பிரயத்தனப்பட்டு தமிழில் எழுதி வாழ்த்தியதையொட்டியும் அதே நேரத்தில் இந்தியப் பாரம்பரியம் என்றால் என்னவெனத் தெரியாமல் இருந்தது பற்றியும், அதே சமயம், இந்தியத்தனமானது தான்சானியா நாட்டுப் பெண்ணை அவமானப்படுத்தியத் தருணத்தில் போகிற போக்கில் எழுதியது…

மற்ற நாட்டினர் நம்/கிழக்கத்திய கலாச்சாரங்களைப் பற்றிக் கற்கும் ஒரு ஆவல் உள்ளதை, பெரும்பாலான சமயங்களில் காண்கிறேன், இந்தியன் என்பதற்கான முன் முடிவுகள் இருந்தாலும், கவனித்து உள்வாங்குதல் அவர்களிடம் கற்க வேண்டிய ஒரு நல்ல குணம். என் குழுவில் இருந்த சில இந்தியர்கள், இந்தியாவையும் கலாச்சாரத்தையும் கேவலமாகக் குறிப்பிடுவதை பெரும் பாக்கியமாகக் கருதி செய்வார்கள். ஆயினும், என்வரையில் இந்தியத்தனம், “தமிழன் டா” எனக் காண்பிக்க நேரங்கள் வரும்பொழுது அதைக் காண்பிப்பதுண்டு. உதாரணத்துக்கு, எனது குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பொழுது, நானும் தமிழோடு ஆங்கிலம் அல்லது டாய்சில் எழுதுவதுண்டு!

இதில் மற்றநாட்டினர் நம் நாட்டவர்க்கு இந்தியராய் இருப்பதற்கு கூச்சமோ தாழ்வுமனப்பான்மையோ இருக்கிறதா எனவும் உங்களுக்கெல்லாம் identity crisis இருக்கிறதா என என்னிடம் கேட்கும் அளவுக்கு செய்திருக்கிறார்கள். எம் செர்மானிய நண்பர்கள், நிறைய நேரங்களில் நானும் என் தோழியையும் மட்டுமே இந்தியர்கள் போல் தெரிகிறீர்கள் என்பர். ஆனால், நம் நாட்டவர் நாங்கள் சேர்ந்து வாழ்வதைப் பார்க்கும் பொழுது, நாங்கள் இந்தியத் தன்மையோடு இருந்தாலும் எங்களின் வாழ்க்கையைக் கேட்டு ஒரு நிமிடம் நிலைதடுமாறுவதும் அப்பொழுது மட்டும் இந்தியக் கலாச்சாரத்தை அவர்களுக்குள் “பேசுவதும்” வேறுகதை!

இங்கு இந்திய விழாவொன்றில், “ஈஸ்வர், இந்தியனென்றாலே இவர்கள் கீழாகப் பேசுகிறார்கள், நீ தான் இவர்களுக்கு தக்கப் பதிலடி தரவேண்டும்” என என்னை இந்தியக் கலாச்சாரம் பற்றிப் பேச அழைத்தார்கள். போய் பேசும் பொழுது, தெரிந்தவற்றைப் பேசுவதில் என்ன இருக்கிறது என்பதால், பழைய விசயங்களில் நவீனக் கண்ணோட்டம் அமையுமாறு, வெவ்வேறு புதிய நிரூபணங்களையும் ஆய்வுகளையும், சிலவற்றில் சில வாரங்களுக்கு முன்னர் வந்த இனப் பண்பாட்டு மொழியியல் மற்றும் மரபியல் சார் ஆய்வுகளையும் என் உரையில் சேர்த்திருந்தேன். இதனிடையே அரங்கில் வேண்டிய வசதிகள் செய்யாமல் ஏகப்பட்டக் குழப்பங்கள் வேறு, இந்தக் குளறுபடிகளுக்கு நடுவிலும், பல வெளிநாட்டவர்கள் என்னுரை முடிந்த பின்னரும் ஆர்வமாக என்னிடம் பேசிக் கலந்து கொண்டார்கள். நம் நாட்டவர்கள் “நான் இதையெல்லாம் பள்ளியிலே படித்திருக்கிறேன்” என ஒருப் பொத்தாம் பொதுவான கருத்தைத் தெரிவித்தனர்! இதைக் கேட்டதும் என் தோழி “முடியல அத்தான், இவங்களோட! நம்ம வேலையை செஞ்சுட்டுக் கிளம்புவோமா..” என்றார்.

போதாதற்கு நம்மவர்களின் குளறுபடிகளை, முகத்திலறைந்தது போல் பேசுகிறோம் என்பதால், இன்னும் வசதியாக, “எங்களுக்கு இந்தியப் பாரம்பரியம், பணிவைப் போதித்திருக்கிறது ஆனால், நீங்கள் இந்தியப் பாரம்பரியம் என்னவென்றே அறியவில்லை” யெனப் போட்டார்களே, ஒரு போடு! அட, எப்படியாப்பட்டது அப்பா நீங்களறிந்த இந்தியப் பண்பாடு.. நல்லதாப் போச்சு நீங்க அங்கிட்டு இருங்க, நாங்க இங்கிட்டு இருக்கோம் என்று கூறிவிட்டோம்!! பெரும்பாலானோர்களுக்கு, நம் பாரம்பரியத்தை அறியவே நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை! இதில், அடுத்தவர்கள் நம் பாரம்பரியத்தைப் புகழ்ந்துரைத்தால், ஒன்று மறுதலிப்பது, அல்லது தேவையில்லாதவொன்றை ஏற்றிக் கூறுவது என வேறுநிலைக்கு செல்வதை நிறைய நேரம் கண்டிருக்கிறேன்!

இதில் வரிக்கு வரி மேற்கோளாகப் பல குறள்களைத் தரலாம்! ஆனாலும், பல விசயங்களிலும் சமயங்களிலும் எனக்கானது, இவ்விடத்தில் முரண்நகையாக அமைவதும், ஒரு சிறப்பு! “அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டிக் கொளல்!” (அவையறிதல்).

 பிற்சேர்க்கை:நேற்று சுதாகரின் பிரித்தானிய குழுவினர் தமிழில் வாழ்த்தளித்ததைப் பார்த்தோம் அல்லவா.. அந்நேரத்தில், எனக்குக் கிடைத்த ஒரு அனுபவத்தைக் கூற மறந்துவிட்டேன்.  ஏற்கனவே, இதைப் பற்றி சிலக் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

சரியாக, இன்று இராபர்ட் ஹோப்ஸ்டாட்டர் எனும் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளரின் பிறந்த நாளாம்! பார்த்ததும் நினைவு வந்தது! இவரின் மகன் பேராசிரியர் டக்ளஸ் ஹோப்ஸ்டாட்டர், கணிதவியலாளரும் அறிதிறன் சார்ந்தப் புலங்களில் ஆராய்ச்சி செய்பவரும் ஆவார். இவருடைய மிகவும் புகழ்பெற்ற சனரஞ்சக “கோடல் எஸ்சர் பாஹ்” (Gödel, Escher, Bach) புத்தகத்துக்காக புலிட்சர் விருதைப் பெற்றவர். நான், அவரிடம் ஒருமுறை விவாதத்தில் ஈடுபட நேர்ந்தது. என்னுடைய பலக் காட்டமானக் கேள்விகளுக்கு அமைதியாகவும் பொறுப்புடனும் பதிலளித்திருந்தார். தவிரவும், தமிழ் பற்றி மிகவும் புகழ்ந்திருந்தார்.

அப்பொழுது, அவர் தமிழின் எழுத்துவடிவையும் இலக்கணத்தையும் பார்த்து வியந்து, தமிழைக் கற்றுக்கொண்டதாகவும், இன்னும் அந்நாட்களில் அவர் வாங்கிய விகடன் போன்ற சஞ்சிகைகளும், அவர் சேர்த்த தமிழ் புத்தகங்களும் இன்னும் அவரிடம் உள்ளதாகவும் அவ்வப்பொழுது தமிழில் படிப்பதாகவும் கூறினார்.

ம்ம்ம்ம்… நம் தமிழ் பெற்றோர்களை நினைத்தால் என்ன சொல்வதென்றே விளங்கவில்லை!