நேரமும் இரண்டாம் வெப்பியக்கவிதியும்!

வெப்பவியக்கவியல் என்பது அடிப்படையான அறிவியலில் மிகமுக்கியமானப் பிரிவு. இவ்வண்டத்தில் சில வரையறைகளை மாறாததாக நாமறிந்த அளவிலான அறிவியலின் பிரகாரம் நாம் வைத்திருக்கிறோம், அம்மாதிரியான இயற்கைவிதிமுறைகளை அடிப்படையான விதிகளாகக்கொண்டது வெப்பவியக்கவியல்.

வெப்பியக்கவிதிகளின் மூலம், மேலேக்குறிப்பிட்டமாதிரியான, இயற்கையின் எல்லைகள் வரையறுக்கப்படும்போது, அவை இப்பிரிவுக்கு நேரடித்தொடர்பில்லாத மற்றப்புலங்களின் இயற்கையெல்லைகளாகக் கருதப்படுவனவற்றையும் இவை வரையறுக்கின்றது என்பது மிகவும் ஆச்சரியமானது.

அவ்வாறானவொன்று, நேரம் என்பது முன்னோக்கிமட்டுமே ஓடும் என்பது! நேரத்தின் திசையை திருப்பவியலாது. இதன் அர்த்தம் என்ன?! ஒரு இயக்கம் நடைபெறும்போது, அதுசார்ந்த காரணிகளின் மாற்றங்களினால் இயக்கம் நடைபெறுகிறது எனக் கொள்வோம். காட்டாக, நீரையூற்றி செடிவளர்க்கிறோம் எனக்கொள்வோம், செடிவளர்ந்து மரமாவது மரத்தின் வளர்ச்சிவழியான இயக்கம்.

இவ்வியக்கத்தை, நாம் தலைகீழாக ஆக்கினால், நேரத்தைத் திருப்பமுடியுமா? குறைந்தபட்சம் மரத்தின் வளர்ச்சியை தலைகீழாக்கி செடியாக்கமுடியுமா?
ஒருசமயம், நாம் அம்மரத்திலிருந்து நீரை உறிஞ்சுவதாகக் கொள்வோம், மரமானது மீண்டும் செடியாகுமா?! கட்டாயம் இவ்வாறு செய்யவியலாது என்பதை நமது காரண அறிவு நமக்கு உணர்த்தும். ஆனால் அது உண்மைதானா ஒரு மரம் நீரில்லாமல் இருக்கும் காலத்தில் இலைகளையுதிர்க்கிறதேயன்றி,  தன்னிலுள்ள நீரைவெளியேற்றி செடியாகவா ஆகிறது?

நேரம் என்பது பெரும்பாலும் ஒருபொருளின் தன்மை மாறும் அடிப்படையிலிருந்தே நாம் வரையறுக்கிறோம் என்பதை முதற்கட்டுரையில் கண்டோம். எவ்வகைக் கடிகாரமானாலும், கடிகாரத்தின் உள்ளிருக்கும் பொருள்(மணல், நீர், அணு, மின்காந்தமாற்றம்) மாறுவதால் நம்மால் நேரமாற்றத்தை உணரமுடிகிறது. “பாட்டும்நானே பாவமும்நானே” என்றப்பாடலில் நேரம் நிற்கும் எனும்பொருளில் அசைவனவெல்லாம் அசையாது காண்பித்தவர் உண்மையில் மிகப்பெரிய படைப்பாளிதான். அவ்வாறு அசையாது மொத்த அண்டமும் மோனநிலையில் ஆழ்நிலைதியானத்தில் இருப்பின், அப்பொழுது நேரமானது மாறாதிருக்கும்.

சும்மாப்பேசுங்கால்/handwaving argument, மரத்தின் வளர்ச்சியானது, அடிப்படையில் வெப்பவியக்கவியல் மாற்றங்களால் விளைவனவே எனலாம். அதாவது, ஒளிச்சேர்க்கையென்பது மேலோட்டமாகக் காணும்போதே — கரியமிலவாயு, ஒளி, பச்சையம், அதனால் விளையும் வேதிசுழற்சிகள், எல்லாம் வெப்பவியக்கவியல் சார்ந்தவையென நமது பள்ளிக்கூட அறிவைக்கொண்டே அறியலாம். நீரழுத்தவேறுபாடும் அடிப்படையில் வெப்பவியக்கவிசயமே. சரி! அப்படியே விசயங்களை லீகோ செங்கற்கள் போல் சேர்த்தமைப்போம்!

வளர்ச்சியென்பது நேரத்தைக் குறிக்கிறது. உலகில் ஏதுமில்லையெனக்கொள்வோம், சூரியசந்திரர்கூட இல்லை. நீங்கள் மட்டுமிருக்கிறீர்கள்,உங்களிடம் ஒரேயொருமரம் இருக்கிறதெனில், உங்களின் நேரத்தைக் கணக்கிட அம்மரமே கடிகாரமாகிப்போகும் என்பதுதானே உண்மை! ஒருவேளை இதைப்புரிந்துகொள்ள கடினமாக இருக்கலாம்! Who am I எனும் சாக்கிச்சான் படத்தில், சாக்கிச்சான் விபத்தில் சிக்கிவிட, ஒரு ஆப்பிரிக்கப் பழங்குடியினர் அவரைக்காற்றியிருப்பர். கதைப்பிரகாரம், முற்றிலும் தான்யாரென்பதையே  மறந்திருப்பார், அதனால் மயக்கத்திலிருந்து விழிக்கும்போது, ஒன்றும் புரியாமல் who am i? எனக்கேட்க, அவரை அப்பழங்குடியினர் அவர்பெயர் “who am I” எனக்கூறுகிறாரெனப் புரிந்துகொண்டு அவ்வாறே அழைப்பார்கள்! இதேமாதிரி தான் நாம் அறிவியல் செய்கிறோம் என்பது ஒருபுறமானாலும், விசயம் அதுவல்ல!

சான் சீனம்பேச, அவர்கள் சுவாஹிலிபோல் ஏதோவொன்றுப்பேச என சைகையிலேயே வாழ்க்கைப் போகும்போது ஒருநாள். அங்கிருக்கும் அவருடைய நண்பனான சிறுவனிடம் சென்று, சூரியனைக்குறிப்பிட்டு கிழக்குதிசையைக்காட்டி, பின்னர் மேற்கைக்காண்பித்து, ஒரு கல்லையெடுத்துவைப்பார், அதாவது ஒருநாள் கணக்கு. பின்னர் திரும்பவும் அதையேசெய்து மற்றொரு கல்லைவைப்பார். இவ்வாறுக் குறிப்பிட்டுவிட்டு தூரத்தில் இருக்கும் மலையைக்காண்பித்து, அங்குபோவதற்கு இதுபோல் எத்தனைக்கற்கள் எனக்கேட்பார்! சிறுவன் கற்களையெல்லாம் தள்ளிவிட்டுவிட்டு, சிரித்துக்கொண்டே கைநிறைய மண்ணையெடுத்து வைப்பான், அதாவது எண்ணிலடங்காநாட்களாகும் எனும் அர்த்தத்தில்!! இது அளவையியலின் அடிப்படை விசயம்!

திரும்பவும், நம் மரத்துக்கேத் தாவுவோம்! ஆக நேரம் மாறுவதை, மரத்திலேற்படும் இலை வளர்ச்சி, உயரம் கொண்டு அளக்கலாம் என்றால்;  அதேபோல, நாம் முன்னர் கண்டதுபோல, மரத்தின் வளர்ச்சி வெப்பவியக்கவியல் வளர்ச்சி என்றால்; நேரம் வெப்பவியக்கவியல் இரண்டையும் கலக்கலாமா! வெப்பவியக்கவியலின் அடாவடி அடிப்படைவிதியானது இரண்டாம் வெப்பவியக்கவியல் விதியாகும்! இதில் பலவடிவங்கள் பலகாலகட்டங்களில் உருவாக்கப்பட்டது. இதைவைத்து நடக்காத சண்டையே கிடையாது எனலாம்!

போகிறபோக்கில் இன்னொருகதை! பேராசிரியர் வி. பாலகிருஷ்ணன் (வி.பால்கி-IITM) இந்தியாவில் அவரின் இயற்பியல் உரைகளுக்காய் பெரும்பாலானோரால் அறியப்பட்டவர், ஒருமுறை அவரிடம் பேசும்போது அவர் இக்கதையைக்குறிப்பிட்டார், அவருடைய அமெரிக்க ஆய்வுக்காலத்தில் நடந்ததாகக்கூறியது.

ஒருமுறை பிரபல நோபல் இயற்பியலாளர் ஜூலியான் ஷவிங்கர் (Julian Schwinger) தன்னுடைய வகுப்பில், இரண்டாம் வெப்பவியக்கவியல் விதி என்ன எனக்கேட்க, ஒருவர் அவ்விதியினை உரைக்க, இன்னொருவர், இல்லை அது தவறென்று மறுதலித்து அவரொன்றை உரைக்க. வகுப்பே படுபயங்கரமான விவாதத்தில் ஈடுபட்டதாம்! பார்த்துக்கொண்டே இருந்த சுவிங்கர், எழுதுபலகைக்குச் சென்று, முதலாமவர் கூறியதை எழுதினாராம், சற்றுத்தள்ளி இரண்டாமவர் கூறியதை எழுதினாராம், வகுப்பில் யார்யார் எதை ஆதரிக்கிறார்கள் எனக்கேட்டாராம். வகுப்பை அப்படியே இரண்டாகப்பிரித்து, கயிறிழுக்கும் போட்டியொன்றை வைப்போம், யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்கள் கூறுவதையே ஏற்போம் என நகைச்சுவையாக உரைத்திருக்கிறார், அதாவது அவ்விருவர் கூறியதும் ஒரே விசயத்தைத்தான் என்பதே!  இப்படி பலவிதமான விதிகளுண்டு என்றாலும் இன்றும் இரண்டாம் விதியை வெவ்வேறுமுறைகளில் புரிந்துக்கொள்கிறார்கள், வரையறுக்கிறார்கள்.

இப்படியான இரண்டாம் வெப்பியக்கவியல்விதியானது என்னவென்பதை அவ்வாறேக் காண்பதைக்காட்டிலும் அதன் தன்மையை, என்றோபி மாறுபாட்டைக் குறிப்பதென்று நம் பள்ளியறிவு உரைக்கும். என்றோபி என்பதன் சொல்மூலம் en-உள், trope – மாறுபாடு => உள்மாறுபாடு. அதாவது ஒரு வெப்பியக்க அமைவின்/எந்திரத்தினமேல் நாம் கொடுக்கும் ஆற்றலும் அதனால் அவ்வியந்திரம் நமக்கு செய்யும் வேலையின் ஆற்றலாக மாறும்வகை!

அப்படி மாறும்போது எவ்வகையில் மாறுகிறது என்பதைக் குறிப்பதற்கான சொல்லே என்றோபி, இதை சிதறம் என்று மொழியாக்கியுள்ளார்கள். சிதறம் என்பது நாம் கொடுத்த ஆற்றல், மற்றொருவகையில் மாறும் போது ஏற்படும் சிதறலைக் குறிப்பதாக எடுக்கலாம், காட்டாக, கல்லெண்ணெய்/petrol ஊற்றி வண்டியைச் செலுத்துகிறோம், எண்ணெய் எரிந்து உருவாகும் ஆற்றலால், வண்டியதன் எடையையும், நம்மையும் தூக்கிச் செல்கிறது.

நாம் ஊற்றிய கல்லெண்ணெய்க்கான வேலையை அப்படியே செய்கிறதா?? இல்லை, வண்டிக்கும்/அதாவது சக்கரத்துக்கும் சாலைக்குமான உராய்வையும் தாண்டிச்செல்லும் ஆற்றலுக்காய் கொஞ்சம்,  வண்டியில் இருக்கும் அசையும் கருவிகளின் உராய்வுக்கும் அவ்வாற்றல் கொஞ்சம் செல்கிறது. இது தவிர்த்து, இயந்திரம் சூடாவதில் கொஞ்சம் செல்கிறது, இப்படி நாம் ஊற்றும் எண்ணெய்க்குத் தக்கன வேலைநடவாமல், இஷ்டத்துக்கும் இயற்கை நம் எண்ணெயை/எண்ணெய் எரிந்து உருவாகும் ஆற்றலை உறிஞ்சியது போக மிச்ச எண்ணெயில் வேலைநடக்கிறது.

எனினும், சிதறம் என்பதை சரியான மொழிமாற்றமாக/ கொள்ளமுடியாது. — அறிவியற்றமிழ் ஆர்வலரும் விஞ்ஞானியுமான கதிர் கிருஷ்ணமூர்த்தி அண்ணன் அவ்வப்போது குறிப்பதுபோல், என்றோபியென்றே கூட குறிக்கலாமெனத் தோன்றுகிறது! சரி நிரம்ப தள்ளிவந்துவிட்டோம்.

திரும்பவும் மரத்துக்கேத் தாவிவிடுவோம். ஆக வெப்பியக்கவிதிகளின் படியாக வளரும் மரம், நேரத்தைக்குறிப்பிடுவதற்கும் பயன்படுகிறது எனக்கண்டோம்.   ஒரு மூடிய அமைவில் (அனைத்து உறுப்புகளிலும் எப்படி ஆற்றல் பரவியுள்ளது என்றுத் தெரிந்திருப்பது) என்றோபிமாற்றமானது மாறாது (dS = 0), அதேநேரம் திறந்த அமைவில் (மொத்த உறுப்புகளிலும் ஆற்றட்பங்கீடு எவ்வாறு என்றறியா அமைவில்) என்றோபிமாற்றமானது பெரிதாகிக்கொண்டேசெல்லும்(dS > 0), ஏனெனில் ஆற்றல்வெவ்வேறுவடிவங்களில் வெளிச்சென்றுக்கொண்டேயிருக்கும்.

dS \geq \frac{dQ}{T}

இதில் dS என்பது என்றோபிமாறுபாடு, dQ என்பது மொத்தஆற்றலில் வேறுபாடு, T என்பது நாமெடுத்துக்கொள்ளும் அமைவின் வெப்பநிலை.

S \geq \int_\mathcal{P} \frac{dQ}{T}

இது இரண்டாம் வெப்பியக்கவிதியின் ஒரு பரிமாணம்.  மேலும் இவ்விதி நமது அண்டமுழுமைக்கும் மாறாது அமையுமுண்மை. அப்படியிருக்குங்கால், என்றோபி வளரும்பொழுது, நேரமும் அதிகரித்துச்செல்லும், அதேபோல் நேரம் ஆக ஆக, என்றோபிமாற்றமும் அதிகரிக்கும். ஆக, என்றோபிமாற்றம் என்பது குறையவாய்ப்பேயில்லை, ஆயின் அதிகரிக்கும் என்பதே இயற்கையில் நாம் காணும் உண்மை.  உலகில் மரத்தையும் உங்களையும் தவிர்த்து யாருமில்லையெனினும், நேரம் திரும்பமுடியாது போலத் தான் தெரிகிறது!  ஆக மரமானது கரியாகவாய்ப்புள்ளதே தவிர்த்து செடியாகவாய்ப்பில்லை!

அதன் மற்றோரர்த்தம், நேரத்தில் பின்னோக்கிசெல்லமுடியாது, அப்படியானால், அதற்கான வாய்ப்பேயில்லையா?!

இப்படி ஒரேநிலையில் பலவிதமானத்தொடர்புகளையெல்லாம் குறிப்பிடமுடியாமல் ஒரேபொருளில்பேசுவதென்ற என்னுடைய தற்போதையநிலை, என் கையைக் கட்டிக்கொண்டு எழுதுவதுபோலவே உள்ளது, என் தலையில் உதிக்கும் அனைத்தையும் எழுதினால், புரிவதில் சிக்கலாகவேறு உள்ளதென்று நண்பர்கள் கூறுகிறார்கள்!!  சரி என்னுடைய இந்நிலையிலும்  இரண்டாம் வெப்பியக்கவிதியின் தாக்கத்தைக் காணலாம்.  அப்படியென்றால், நான் எழுதுவதற்கு எத்தனித்து எழுதாத அந்த மனவுளைச்சல் என்னவாகும்?  என் மூளையும் அதுசார்ந்த செயல்பாடுகளும் கொஞ்சம் அண்டத்திற்குள் என்றோபியை அதிகப்படுத்தும்!

மனித/விலங்கு மூளைமட்டுந்தானா, கணினிக்கு மூளைபோல் செயல்படும் கணினிவட்டுகள், நினைவகங்கள்?!    கணினி, கைபேசிகளில் சேர்த்துவைத்திருக்கும் படங்கள் அல்லது எவ்வெவ்வகையானக் கோப்புகளையும் அழித்தால் என்னவாகும்?!  அதுவும் அண்டத்தின் என்றோபியோடு சேருமா?! ஆம்!  எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாயக் காண்போம்.  எப்படிக் கணக்கிடுவது என்பதையும் சேர்க்கலாமென்றிருக்கிறேன், அது கொஞ்சம் சிக்கல்மிகுந்த கணிதத்தொடு வளராலாம், ஆயினும் இறங்கி விளங்கிக்கொள்வோம்.