பழைய அறிவியற்கூறுகளை நவீன அறிவியலர் காண்கையில்…

பதினொன்றாம் வகுப்பு NCERT பாடங்களை பல்வேறு அறிஞர்களைக்கொண்டு மொழிமாற்றம் செய்துவருகிறோம், இதை வெறும் மொழிமாற்றமாக இல்லாமல், அனுபவங்களில் பெற்றதையும் உள்ளிட்டு எழுதுகிறோம். அதில், தற்சமயம், நானும் வரிசைத்தொடர்களைப்/sequences and series பற்றி ஒரு பாடம் எழுதிவருகிறேன். அதில் அவ்வப்போது இந்திய அறிஞர்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். அனேகமாக, கீழ்க்காணும் இச்சேதியும் அவ்வரிசையில் உவப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

எதேச்சையாக, நேற்று ஒரு இயற்பியலர் நண்பர் இரகு மகாசன், மாதவன் தொடரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்திய கணிதவியலர் மாதவர் கேரளத்தில் 14/15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், கேரளக்கணித மற்றும் வானியற்பள்ளியை நிறுவியவர். அப்பள்ளியில் அல்லது சிந்தனைக்கோட்டத்தில் நுண்கணிதம் உருவானதாக— அதாவது, இலெய்பினிச்சு, நியூட்டனுக்கும் 300/200 வருடங்களுக்கும் முந்தியே — தரவுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவை அவ்வப்போது கணிதப்பனுவல்களில் அங்கீகரிக்கப்படுவதையும் காணவியலுகிறது.

இரகு குறிப்பிட்டிருந்தது, \pi/4 = 1 - 1/3 + 1/5 -1/7 + \ldots என்பதை மாதவரும் அறிந்திருந்ததாகத் தெரிகிறது. ஆதலால் இத்தொடர் மாதவர்-இலெய்பினிச்சு தொடர் என்று அறியப்படுகிறதாம்.

கணிதத்தில், யாதொரு முடிவுறாவட்டம் வகையிடக்கூடிய (இடைவெளியிலா, வழவழப்பான/smooth, continuous) வளைக்கோட்டுச் சார்பையும், அச்சார்பின் மாறியின் வகையீட்டு வரிசைகளை 0,1,2,3, … முடிவிலி தடவைகள், a எனும் புள்ளியில் வகையிட்டுப் பெறும் வகைக்கெழுக்களின் முடிவிலாக்கூட்டுத்தொகையாக விரித்து எழுதிவிடமுடியும். இது ஒரு பொதுவான சார்புக்கு எழுதப்பட்ட இடெய்லர் தொடர் எனலாம்.

f(x-a) = \sum_{n = 0 }^{\infty}\frac{f^{n}(a) (x-a)^n }{ n!} இதில் (n) என்பது வகையீட்டுவரிசையின் எண். முன்பேக் குறிப்பிட்டதுபோல், இது பொதுவான சார்பிற்கு எழுதப்பட்டது.

மாதவர் இதே மாதிரியான அடுக்குத்தொடரை முக்கோணச்சார்புகளுக்கு சைன், கோசைன், நேர்மாறு-டான் சார்புகளுக்கு சூத்திரம் பாடியிருக்கிறார், அப்பாடலின் விளக்கம் இந்த அடுக்குத்தொடர்களாக விரிகிறது.

இச்சார்புகளுக்கானத் தொடர்கள் மாதவரின் பிற்காலத்தில் மேலைத்தேய அறிவியலர்களான நியூட்டன், இலெய்பினிச்சு, கிரிகோரி ஆகியோரால் தனித்தனியேக் கண்டறியப்பட்டது. இத்தொடர்கள், அண்மைக்காலங்களில், மாதவா-நியூட்டன், மாதவா-இலெய்பினிச்சு, மாதவா-கிரிகோரி என மாதவருக்கான அங்கீகாரத்தோடு பெயர்பெற்று விளங்குகின்றன.

ஆயினும், மிகவும் புகழ்பெற்ற இளம் கோட்பாட்டியற்பியலரான சுவரத் இராஜூ, இவ்வங்கீகாரங்கள் வேறுவழியில்லாமல் தரப்படுகின்றன, மேலும் இன்னும் பல இந்திய, ஆப்பிரிக்க, பெர்சிய பழங்கால கணித அறிவியலாய்வுகள் கிரேக்கத்துள் திணிக்கப்பட்டு அதன் ஆரம்பத்தை மறைத்து கிரேக்கவழிவந்ததாகக் குறிப்பிட முயல்வதாகக் கூறுகிறார்.

பிதாகோரசின் தேற்றத்தின் மாற்று/பொதுவடிவான பெர்மா (Fermat)வின் தேற்றம் அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.

a^n + b^n = c^n , இச்சமன்பாட்டில் n>2 க்கு சரியான a, b, c எனும் எண்கள் அமையாது. என்பது பெர்மாவின் ஊகமாக (conjecture) 350 வருடங்களுக்கும் மேல் அறியப்ப்பட்டிருந்தது , பின்னர் ஆன்ரூ வைல்சு இக்கணிப்பை சரியென நிரூபித்தார்.

சைமன் சிங் அவருடைய நூலில் பெர்மாவைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் சீண்டலுக்குப் பெயர்போன அரசு ஊழியர் என குறிப்பிடுகிறார். அதுவும் ஆங்கிலேயக் கணிதவியலர்களை வம்புக்கிழுப்பதில் மிக அலாதியான இன்பம் கண்டதாகவும் குறிப்பிட்டிருப்பார், அவர்தம் பெர்மாவின் கடைசித்தேற்றம் நூலில்! பெர்மா தனது கண்டுபிடிப்புகளை பிரசுரிப்பதை ஒருபொருட்டாக எண்ணியதே இல்லை, அவருடைய கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் அவருடைய கடிதத்தொடர்பாடலிலேயே இருந்து அறியப்பட்டது. பெர்மாவின் கடைசித்தேற்றம் கூட அவர் இறந்து 30 வருடங்களுக்கு அப்புறமேத் தெரிந்ததாம்.

இதேமாதிரியான மற்றொரு கணக்கு பெல்லின் சமன்பாடு என்று அறியப்படும் a^2 - n b^2 =1 சமன்பாட்டின் தீர்வானது பெர்மாவால் யாரிடமோக் கேட்கப்பட்டிருந்தது போல் தெரிகிறது. இக்கணக்கின் விடை மிகவும் அரிதான மீப்பெரும் எண்களைக் கொண்டது a = 1766319049, b = 226153980, n = 61 .

இதே கணக்கை இந்திய வானியலர் கணிதவியலர் பாசுகரர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவிழ்த்ததாக/தீர்த்ததாகத் தெரிகிறது. ஆக இவ்வளவு குறிப்பிட்டத்தீர்வைக் கொண்டிருக்கும் ஒரு சமன்பாட்டை பெர்மா எப்படியோ அறிந்திருக்கலாம், ஆனால், அவர் பாசுகரரை மேற்கோளிடாமல் தவிர்த்திருக்கிறார் என ஐரோப்பிய வரலாற்றாளர்கள் குறிப்பிடுவதாக சுவரத் இராஜூ குறிக்கிறார். தற்பொழுது இச்சமன்பாடு பெல்லின் சமன்பாடு (Pell’s equation) என சம்பந்தமில்லாமல் யாரோவொருவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. நுண்ணரசியல்கள், உயர்த்திப்பிடித்தல் எனப் பல்வேறு வீணானக் காரணிகள் பல அறிவியல்விசயங்களையும் உழப்பிவிட்டுவிடுகிறது.

மனித இனம் அல்லது நம் முன்னோர்கள், தான் வாழ்ந்த எல்லா இடங்களிலும் தத்தம் சூழ்நிலையை உணர்ந்தும், அதை சமாளித்தும் இருந்ததாலேயே நாம் இன்று உயிரோடிருக்கின்றோம். ஆக அறிவியல் என்பது நம்மைப் பொருத்தவரை மிக இயற்கையானது. எது அறிவியல் என்பது கலாச்சாரத்தையும் நவீன அறிவியற்போக்கின்படியும் வரையறுக்கப்படுகிறது. ஆனால் வளர்ச்சியெண்ணமும் நுணுங்கி ஆய்ந்துத்தேர்வதும் அறிவியலை வளர்த்தெடுக்கும். இதை கூறுதற்கான அவசியம், பழம்பெருமை வேண்டாம், ஆனால் பழையக் கண்டுபிடிப்புகளை பிறர் அறிய விளக்குதல் அவசியம் என்பதை வலியுறுத்துவதற்கே. இன மொழி பண்பாட்டு உயர்வுதாழ்ச்சி சொல்லாது, அறிவை அறிவாகக் காண்போம்.

பீல்ட்சு மெடல் வாங்கிய பேரா. மஞ்சுள் பார்கவ் இந்திய கணிதவியலர்களைப் பற்றிப் பேசிய ஒரு விரிவுரையைக் காணலாம். https://www.youtube.com/watch?v=EcjHccvahHk

கற்றலும் சமூகமும்

அப்பொழுது நான் இளநிலை மாணவன், என்னுடைய இயற்பியலர் நண்பர்கள் கார்த்திக் மற்றும் சாயல்குடி கண்ணன் — எங்கள் கல்லூரி வகுப்பைத் துறந்து– பல்கலைக்கழக நூலகத்திலும் இயற்பியற்பள்ளியிலும் கணிசமான நேரம் அமர்ந்திருப்போம். அது பெரிய விசயங்களுக்கான காலமாகத்தான் இருந்திருக்கவேண்டும். அந்நேரம் வீட்டில் காசு வாங்கி பேருந்து பயணம் செய்து எல்லாம் போகும் நிலையில் நான் இல்லை. ஆதலால், கண்ணன் அவர்களின் மைத்துனர் நடத்திய மாலைநேரப்பள்ளியில் நானும் கண்ணனும் பயிற்றுவிப்பாளர்களாக இருந்தோம்.

நண்பர்களோடும் அவர்கள் இல்லாமலும் இயல்பானவகுப்பைத் தவிர்த்து மதுரைப் பல்கலைக்குப் போகவர இருக்க, அங்குபணியாற்றிய அக்காலத்தைய பேராசிரியர்கள், பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் ( பேரா. சீனிவாசனின் ஒரு ஆய்வுக்காகிதத்தை இதில் குறிப்பிட்டிருக்கிறேன். https://paramaaanu.wordpress.com/2015/09/04/infiniteckts-cmphys-numberth/) சிலர் பழக்கமானார்கள். அவர்கள் இன்னும் பெரிதாகப் பார்க்கப் பழகித் தந்தார்கள். எவ்வளவு அதிகமாக உண்ணுதற்கு இருந்தாலும் வாய்திறக்குமளவுக்குத்தானே சாப்பிட முடியும் அதுமாதிரி, என்னால் எவ்வளவுப் பார்க்கமுடியுமோ அவ்வளவேக் கற்றுக்கொண்டேன். இருக்கட்டும்! பேசப்போவது சில கசந்தஅனுபவந்தான் எனினும், அப்பேராசிரியர்களின் சிறுபிள்ளையென நினைக்காமல் கற்றுத்தந்ததும் கேள்விகேட்க வைத்ததும் என அவர்களின் நினைப்பே இனிக்கிறது.

சரி.. கதை, இது தான். பேரா. நவநீதகிருட்டிணரும், டி. பி. சீனிவாசனாரும் எங்களைத் தத்தெடுத்தப் பிள்ளைகள் போல், நாங்கள் என்னத்தைக் கேட்டாலும் சொல்லிக் கொடுத்துக் கொண்டும், ஊக்குவித்துக் கொண்டும் இருக்க, நான் போகும்போதும் வரும்போதும் ஒரு பல்கலைப் பேராசிரியர் தொடர்ந்துப் பார்த்துக்கொண்டிருப்பார். இவரிடமும் ஏதோவொருநாள் பேசிவிடவேண்டும் என நினைத்திருந்தேன், அவரே ஒரு நாள் என்னைப் பிடித்துக் கொண்டார். ஆனால்.. ஆங்கிலத்தில் சகட்டுமேனிக்கு நீ யார், ஏன் இங்கு வருகிறாய், அதுவா இதுவா எனக் கோபத்தில் கத்திக்கொண்டிருந்தார். நானும் தொண்டைவறள இன்னார்மகன் தொள்ளக்காதன் இதற்குத்தான் வந்தேன் எனக் குழப்பத்தில் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தேன்.

என் குழப்பம் என்னவெனில் இவர் பேராசிரியர்களோடு அவர்கள் அலுவலகத்திலும் துறைக்குவெளியில் உணவகங்களிலும் உட்கார்ந்துப் பேசும்போது பார்த்திருக்கிறாரே, ஏதோ இப்போது தான் பார்ப்பது மாதிரி கேட்கிறாரேயென. சட்டாம்பிள்ளைத்தனம் அப்படித்தான் பேசும்போல.

எல்லாவற்றையும் கேட்டபிறகு அவர், நவநீதகிருட்டிணனுக்கும் சீனிவாசனிடமும் பேசவேண்டுமானால், இப்பள்ளிக்கு/துறைக்கு வெளியே வைத்துக்கொள். உள்ளே எல்லாம் வரக்கூடாது என விரட்டினார். இதில் கூற்று என்னவென்றால், நவநீதகிருட்டிணர் துறைத்தலைவர். துறைத்தலைவராக இருந்தால் பெரிய ஆளா என்றத் தொனியில் பேசியதோடு, ஒரு கல்லூரிப் பையனைப் பலங்கொண்டமட்டும் தட்டுதற்கு ஏனோ அவர் முயன்றார். நான் சரி சரியென்றுக் கேட்டுக்கொண்டாலும் கொஞ்சம் பயந்துபோனேன். சரி என்னசெய்வது, என்னை வைத அதேப் பேராசிரியரின் அறைக்கு எதிர்ப்புறம் இருந்த நவநீதகிருட்டிணரின் அறைக்குச் சென்று அவர் சொன்னதையே சொல்லி, நான் இப்பொழுது என்ன செய்யவென்றுக் கேட்டேன்.

அந்த பேராசிரியர் நவநீதகிருட்டிணர் சொன்னது என்னை ஒருவாறு பண்படுத்தியது, ஆனால் அவர்கூறிய அளவுக்கு பண்பட்டேனா எனத்தெரியவில்லை. அவர் சொன்னது இங்கு இப்படித்தான் ஏதாவது இருந்துகொண்டேயிருக்கும், ஆனால் அதைக் கண்டு சோராதே, உனக்கு எப்பொழுது என்னவேண்டுமானாலும் நீ இங்குவா, யார் என்ன சொன்னாலும் என்னைப் பார்ப்பதற்காகவே வந்தாய் எனக் கூறு, கவலைகொள்ளாதேப்போவென வழியனுப்பினார்.

எனக்குப் புரியாத விசயம் யாதெனில், பல்கலையின் நோக்கம் என்னவென்பதும் இப்பேராசிரியர்களுக்கு அவர்களின் கடமையாதென்பதும் உண்மையிலேயேப் புரிகிறதா. வயதிலும் கல்வியிலும் மூத்தோர்கள் வளருந்தலைமுறையோடு நேரடியாகத் தொடர்பில் இருக்கும் இடம் தானே பல்கலைக்கழகம். சிறியவர்களை வளர்த்தெடுப்பது தானே அவ்வமைப்பின் நோக்கம்.

இதில் சமீபகால விரக்தி என்னவெனில், எந்நண்பர் பழைமைவாய்ந்த ஒரு பல்கலையில் துணைப் பேராசிரியர் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்க்கிறார். ஆனால் அவரைப் போட்டுப் பாடாய்ப்படுத்துகின்றார்கள். அவர் ஆய்வுக்கட்டுரை எழுதும்போது துறை முகவரியைக் கட்டுரையில் வேலைபார்க்குமிடமாகக் குறிப்பிட்டால், கூப்பிட்டு இப்படியெல்லாம் துறைப் பெயரைப் போடக்கூடாது எனவும் இன்னும் நிறைய ஒப்பந்தத்தில் இல்லாத, ஆனால் வாய்மொழியாக ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள் போல் தெரிகிறது.

மாணவனாக இருந்தாலும் பேராசிரியராக இருந்தாலும் ஒரு அமைப்பு மிரட்டிக்கொண்டேயிருக்கிறதே எனக் கோபம் வரத்தான் செய்கிறது. இது கோபப்பட்டாலும் சரியாகக்கூடிய விசயமாகத் தெரியவில்லை. ஒரு அமைப்போ அல்லது அமைப்பின் கூறோ ஒரு சிறுவனை அச்சமுறவைப்பதிலும் சகஊழியரை அச்சுறுத்துவதிலும் இவ்வளவு முனைப்பாக இருப்பதை அவ்வமைப்பின் ஆய்விலோ பயிற்றுவிப்பதிலோ காண்பித்ததுபோல் தெரியவில்லை.

இதை சரிசெய்ய மாணவர்களையும் பொதுமக்களையும் கேள்விகேட்கவும், கேள்விகேட்பவரை பெரியவர்கள்/அதிகாரிகள் ஊமைக்குத்தாகக் குத்தி முடக்கினாலும் இன்னும் ஆழ்ந்து கேள்விகேட்டுக் கொண்டேயிருக்கவும் பயிற்றுவிக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.

பெரும்பாலாக, சிறியவரின் கேள்வி பெரியோரின் செவிக்கு ஏறாததும், ஏறினாலும் கேள்வியின் தன்மைசாராமல் விட்டேற்றியாக, சிறியவர்களின் இயலாமையை அவர்களுக்கேத் திருப்பிவிட்டு, சிறியோரை மட்டம் தட்டுவதும் — எடுத்துக்காட்டாக, படிக்கும் பிள்ளை ஏதாவது கேள்விகேட்டால், நீ ஒழுங்காகப் படிப்பதில்லை, இதையெல்லாம் பேசு என மட்டம் தட்டுவது,– கேள்விகேட்க ஊக்கப்படுத்தாததும் கேள்விகேட்போரையே அசிங்கமாக நினைக்கவைப்பதுமாக அடக்கவேப்பார்க்கிறது. இது இன்றைக்கு மாணவர்களின் பிரச்சினையெனில், பின்னாளில் அது மாணவன் சமூகவூடாடலின் போது பொதுமக்களின் பிரச்சினையாகும். இவ்வாறு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்பேயில்லாதமாதிரி கல்விக்கூடங்களும் அரசுஅலுவலகங்களும் இன்னும் இருப்பது வருத்தத்திற்குரியது.

இப்படியாக உருவாக்கப்பட்ட அச்சங்கள், வெவ்வேறுநிலைகளில் வெவ்வேறு வடிவில் என்வாழ்வில் முக்கியமானத் தருணங்களில் தடையாக வந்திருக்கிறது, சிலநேரங்களில் என்னால் எதிர்கொள்ளமுடியாமலும் போக இம்மாதிரியான அச்சங்கள் தடையாக இருந்திருக்கிறது. எவ்வளவு விழிப்போடு தவிர்க்கும்போதும் அது ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதற்போல் குந்தாங்கூறாக குதித்து முன்வந்து நிற்கும்.

பல்கலைக்கழகம், காவல்நிலையம், அரசு அலுவலகம், உணவுப்பகிர்வுத் துறையின் கடைகள்/ரேசன் கடைகள், இ-சேவை மையம் என எதில் வேலைபார்ப்பவர்களாக இருந்தாலும் அவர்தம் பயனாளரை ஒருவித பயமுறுத்தலோடே அணுகுவது என்பது அக்காலத்தைய சமீந்தாரிய முறைகள் ஏதோவொரு மாற்றுவடிவில் இன்னும் உலாவருவதையேக் குறிக்கிறது… இவ்வளவு அறிவியற்றொழினுட்ப வளர்ச்சிக்கு அப்புறமும், மற்ற வளர்ந்தசமூகங்களில் உள்ள மாற்றங்கள் வளர்ச்சிகளும் அதன் செய்திகளும் நம்மால் பார்த்து உய்த்துணர வாய்ப்புகள் இருக்கும்போதும், இதுமாதிரி அச்சுறுத்தல்களோடேயே வாழ்வது, நாம் ஒரு தற்செயலாக சுமாராக இயங்கிவரும் ஒரு கட்டமைப்பில்தான் இருக்கிறோமோ என்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

புல்வாமா தொடர்ந்த நிகழ்வுகள் – ஒரு சாதாரணனின் பார்வை

(நேற்று எழுதியது) இந்திய விமானங்கள் பாகிசுதான் எல்லைக்குள் சென்று அடித்த இச்சூழ்நிலையில்,  கருத்தைக் கூறி ஏதும் செய்யவியலாது. இந்நேரத்தில், முரட்டடி அடித்ததால், அவர்களுக்கும் இதேமாதிரியான சூழ்நிலையை நாம் உருவாக்கிக்கொகொடுத்துவிட்டோம் என்பதை உணரவேண்டும், அதன் விளைவால், எல்லாவற்றுக்கும் அணியமாய் இருக்கவேண்டும்.  அவர்கள் நாட்டிலும் மக்கள்-அவர்தம் விருப்பம், அவர்களைத் திருப்திப்படுத்துதலுக்கான அரசியல் என கொடுக்கல்வாங்கல் கணக்குகள் உண்டென்பதையும் நாம் உணர்ந்தாலே போரைப் பற்றி நினைக்கவேமாட்டோம்.

விஞ்ஞானிகள் பெரும்பாலானோர் போருக்கு ஆதரவளிப்பதில்லை, விஞ்ஞான வளர்ச்சி உலகப்போர்களின் போதே அசுரத்தனமாக இருந்தது, ஆனால் அது மானுடத்துக்கு ஏற்படுத்தியப் பாதிப்பு அதைவிட அசுரத்தனமானது.  எனக்கும் எல்லைகள், போர்களில் விருப்பமில்லையெனினும், அடித்த தீவிரவாத அமைப்பு,  இவ்வளவு தீர்க்கத்தை உணர்ந்தே இந்தியவீரர்களின் மேல் தாக்குதல் நடத்தியதாவெனத் தெரியவில்லை– அவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் பெரியக் கருத்திருந்திருக்கும் எனத்தோன்றவுமில்லை.   மேலும், பதிலுக்கு நாமும் சண்டைக்கிழுத்தப் பின்னர், இதில் பேசி ஏதும் ஆகப்போவதுமில்லை.

இருப்பினும், இந்த காசுமீரத்தின் மீதானக் கருத்தும், ஐக்கியதேசங்களின் நாடான இந்தியத்தின் மீதானக் கருத்தும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையில் மாறுபடும் என்பதை எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன். இவ்வளவு ஏன், இந்தியப்பழங்குடியினர் காட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான, உச்சநீதிமன்றத்தின் நேற்றுவந்தத் தீர்ப்பைக் கவனியுங்கள்.  இந்தியர்களான நாமே தான், இந்தியப் பழங்குடிகளான அவர்களை அவர்களின் இடத்திலிருப்பதற்குரிய உரிமையை மறுக்கிறோம்,  அதே நேரம் இன்று ஆக்கிரக்கப்பட்ட-காசுமீரத்தில் அடித்ததை,  இறந்த இந்திய வீரர்களுக்காகப் பழிவாங்கும் தாக்குதல் என்கிறோம். ஆக, நாம் யாருக்காகத் தான் போராடுகிறோம்? தொடர்ந்து, இலங்கைக் கடற்படையினால் துயரம் என்பது, பலவருடப்பிரச்சினை, இதற்கும் சரியானத் தீர்வுக்கு வழியில்லை.

ஐஐடி, ஐஐஎஸ்சி காலங்களில் வெவ்வேறுவகையான தேசிய, கம்யூனிச குழுமங்களுடன் வெவ்வேறுவகைகளில் தொடர்புடைய நண்பர்களுடன் எப்போதும் கருத்துகளைப் பகிர்ந்துவந்திருக்கிறேன். பெரும்பாலும் வடகிழக்கு மாநிலத்தவர்கள், அவர்தம் கருத்துகளையும் அனுபவங்களையும் முன்வைக்கும்போது, அவர்கள் வருந்திக்கூறும் இராசரீக வழிமுறைகள் கேட்பதற்குக் கூட மிகவும் உவப்பானதாக இருந்ததில்லை.

அதே நேரத்தில்-இடத்தில், எனக்கு குவாண்ட இயற்பியல் கற்றுக்கொடுத்த பேராசிரியர் தேசுமுக் போன்றோர்களின் காசுமீர முயற்சிகளையும் கண்டிருக்கிறேன். காசுமீரம் ஏன் இந்தியாவுடன் இருக்கவேண்டும் என அமெரிக்க பாராளுமன்றம் மூலம், அவர் எடுத்த முயற்சிகள். மேலும், பேராசிரியர் அனிதா போசு (நேதாஜி அவர்களின் மகள் – அவர் ஒரு செர்மானியர்) போன்றோரைக் கொண்டு மாநாடு அமைத்து, தேசியம்சார்–பெரும்பாலும் காசுமீரம் சார்ந்த– விவாதங்களை அரங்கேற்றியது என எனக்குத் தெரிந்தவைசில. இதனால், அவருக்குத் தொடர்ந்து கொலைமிரட்டல்கள் இருந்ததாகவும் கூறுவர்.

இம்மாதிரி ஒரே இடத்திலுள்ள மக்கள், வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதும், அதனால் விளையும் போராட்டங்களும், அவரவர் தரப்பு நியாயங்களும் கோரிக்கைகளும் என இவையெல்லாம் ஒருபக்கமென்றால், இவற்றையெல்லாம், எப்பொழுதும் தீர்க்கவியலாப் பிரச்சினை போலவே வைத்திருப்பதைக் காணும் போது, இவையெல்லாம் நம் வீடுகளில் ஏற்படும் உறவினர்களுக்கிடையேயானப் பிரச்சினைகள் போல் தீர்க்கவே முடியாத் தன்மையவையோ எனத் தோன்றும்.

வடகிழக்குமாநில நண்பர்களின் கருத்தையொத்த காசுமீர நண்பர்களின் ஒருங்கிணைந்த இந்தியதேசம் சார்ந்த பார்வையைக் கேட்கும்போது இந்தியம், தேசியவுணர்வு என்பதெல்லாம், துயர் அனுபவிப்பவர்களுக்கு வேறுமாதிரியானது என்பதெல்லாம் எனக்கு விளங்கியது, ஏன் நமக்கே, ஈழமக்களின் நிலை, மீனவர்களின் நிலையைக் கண்டால் குறைந்தபட்சம் பதறவாவது செய்கிறது.  இங்கு இவையெல்லாம் அரசியல் சார்ந்த விசயம் என்பதால், இதற்குத் தீர்வு என்பது சற்றுக்கடினமானது. அதேநேரத்தில், நமக்கே ஏதாவது ஒருதலைப்பட்டத் தீர்வை நோக்கித்தான் நகரமுடியும் என்பதைப்போல் தான் நிலைமையுள்ளது.

உதாரணத்துக்கு, நமக்குக் கற்றுத்தரப்பட்ட தேசியமானது நமக்கு காசுமீரம் வேண்டும் என்று சொல்லும்; நம்முடையத் தமிழுணர்வு நமக்கு ஈழம் வேண்டும் என்றும் சொல்லும்.  ஈழவிடுதலையும், காசுமீரத்துமக்கள் விரும்பும் இந்திய-பாகிசுதான் தலையீடற்ற சுதந்திரமும் ஒரேமாதிரியானவை, அது மிகுதியான காசுமீரத்து மக்களின் நிலைப்பாடும் கூட.  அப்படிக் காண்கையில் நம்முடைய பெரும்பாலான (தமிழர்களின்) உள்ளக்கிடக்கையான இவ்விருவிசயங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது என்பதெல்லாம், கொஞ்சம் யோசித்தாலே விளங்கிவிடும்.

போரும் அதன் தாக்கமும், தமிழ்நாட்டுக்கு கடந்த 100 ஆண்டுகளில் பெரிதாக இருந்ததில்லை, இரண்டாம் உலகப்போரின்போது, எம்டன் (Emden) கப்பல் வீசிய குண்டு/கள் கூட எவ்விதப்பாதிப்பையும் உருவாக்கவில்லை. ஆக, நமக்கு போரின் தாக்கம் நேரிடைப் பாதிப்பை உருவாக்கவில்லை, ஈழப்போரிலும் நம்மால் உணர்ச்சிவசப்படமுடிந்ததேத் தவிர, எவ்விதத்திலும் தமிழ்மக்கள் ஒருசேர ஈழவர்களுக்கு உதவவோ, ஆதரவு தரவோக் கூட முடியவில்லை.

தீவிரவாதத்துக்கு எதிரானத் தாக்குதல் என்று இன்றையப் பதிலடிக்குக் கூறுவதும், நாட்டின் நன்மைக்காக ஒரு ஊரை அழிக்கலாம் என்பது மாதிரி மற்ற உள்நாட்டுப்பிரச்சினைகளில் கூறுவதும், வெவ்வேறுதரப்பட்ட மக்களின் பார்வையைப் பொறுத்தது.  இருப்பினும், போரைப்பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் பார்வையில்லாதவர்கள் (குறிப்பாக, எவ்விதத்திலும் போரைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாதவர்கள்), விட்டேற்றியாக போரைப்பற்றிப்பேசுதலும், சுற்றியிருப்பவர்களைத் தியாகம் செய்யத் தூண்டிவிடுதலுமாக நடப்பதுபோல் தெரிகிறது. தன்னால் முடிந்தததை தியாகம் செய்கிறேன் என்றுவேண்டுமானால் கூறினால் பரவாயில்லை, போரையும் உயிரிழப்பையும் கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பது போல் பேசுவது நம் போன்ற பண்பட்ட சமூகத்துக்கு நல்லதில்லை. சமூகம் என்றொரு அமைப்பே, நாம் எல்லோரும் சமவுரிமையோடு, நன்றாக வாழவேண்டும் என்பதற்கு தான் உருவாக்கிவைத்திருக்கிறோம். ஆனால், எல்லாம் வெவ்வேறுவகைகளில் சென்றுகொண்டிருக்கிறது. சரியானவற்றுக்கு சரியானபடி குரலெழுப்பினாலே, நடப்பதில்லையென்பது வருத்தத்திற்குரியது.

ம்ஹூம் என பெருமூச்செறிந்து… எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புவோம்.

இன்று: இரு நாடுகளும் ஒவ்வொன்றையும் குற்றஞ்சாட்டி இருபக்கமும் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளன. இப்படித்தான், போரென்றால் எல்லாப்பக்கமும் களேபரங்கள் நிகழவே செய்யும், இதை பேச்சுவார்த்தைகளால் சரிசெய்யமுடியாது என நினைப்பவர்களுக்கு, போரினாலும் சரிசெய்யமுடியாது என்று ஒத்துக்கொள்ளமுடிவதில்லை,  எல்லோரும் காலில் சுடு எண்ணெயை ஊற்றிக்கொண்டு பரபரவென இருக்கவேண்டும் என நினைப்பவர்களாகவேத் தோன்றுகிறது.

சமூகம் வளர, வித்தியாசங்களும் வேறுபாடுகளும் ஏதோவொருவகையில் இருக்கவேண்டும் என்பது, திரும்பத் திரும்ப நிரூபணம் ஆவதுபோல் தோன்றுகிறது.

#நூலகத்தொடர் – 1: கோடல் எஷர் பாஹ்

மணி மணிவண்ணன் அண்ணன் நூலகத்தொடருக்கு என்னையும் நம்பி இணைத்துள்ளார்.

சிறுவயதில், ஒரு சயிண்டிஸ்ட்டான எனக்கு வாசிப்பனுபவம் என்பது மிக/வெகு/– எனப் பெயரடைக்கேப் பெயரடைத்தந்து– தீவிரமாகமட்டுமே இருக்கவேண்டுமென்று, வெற்று ஆய்வறிக்கையையேப் புரிகிறதோ இல்லையோ மாங்குமாங்கென்றுப் படித்தேன் ஒரு காலத்தில்! அப்பொழுது எல்லாம் பாப்புலர் சைன்ஸ் நூல்களே ஒத்துக்கொள்ளாது!! ஃபெயின்மேன் மட்டுமே அக்காலத்தில் விதிவிலக்கு! இம்மாதிரியான தேவையற்றக் கருத்தால், ஸ்டீபன் ஹாகிங்கெல்லாம் கிடப்பில் கிடக்கிறார். 😛

அப்படியெல்லாம் இருந்த நான், இந்திரா சௌந்தரராஜன், என்.கணேசன் போன்றோரின் ஆன்மீகக்கதைகளையும், நளவெண்பாவையும் தவிர்த்து, பெரிதாக ஏதும் சமீபத்தில் படிக்கவில்லை.

ஆனால் எனக்கு மிகவும் பிடித்த, கதைக்குள் கதையென வித்தினுள்வித்தையே fractal காண்பது போல் அமைந்த நூல். பலமொழிகளில் பெயர்த்திருந்தாலும் தமிழில் உள்ளதாவெனத் தெரியவில்லை!

Gödel, Escher, Bach — An Eternal Golden Braid
எழுதியவர் கணிதவியலாளரான பேராசிரியர் Douglas Hofstadter.

குர்த் கோடல் (Kurt Gödel) – கணித-தத்துவவியலாளர் ;எஷர் (M C Escher) – ஓவியர்;யோஹான் பாஹ் (Joachann Bach) – இசையறிஞர்

இப்படி (மேலோட்டமாக) புல அளவில் சம்பந்தமேயில்லாத மூன்றுபேரின் மூளையும் எப்படிவேலைசெய்திருக்கும் என்று யோசிப்பதுபோல யோசித்தெழுதினால் இவ்வாறு தான் இருக்கும். மொழியியல், கணிதவியல், ஓவியம், இசை, சேதிமறைவியல்(Cryptography/Steganography),சமூகவியல், ஆட்டக்கோட்பாடு என அனைத்துவகையிலும் நமது மூளை இம்மனிதச்சமூகத்தை உருவாக்கிய விதம் எவ்வாறு அமைந்தது என அனைத்தையும் பின்னி மினுமினுக்க வைத்து புலிட்சர் வாங்கிய சனரஞ்சக நூல்.

ஹோப்ட்ஸ்டட்டர் அவர்களிடம் இந்நூலிலுள்ள சில விசயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். இந்நூலுக்காக உழைக்கும்போது, தமிழ்க்கற்றுக்கொண்டதாகவும் இன்னும் அந்தக்கால விகடன் இன்னும் அக்காலத்தில் வெளிவந்த இதழ்களை எல்லாம் பத்திரமாகவைத்திருப்பதாகவும், தமிழ் மிகவும் அழகான மொழியெனவும், தமிழெழுத்துகள் வடிவியற்கணக்கில் மிகவும் அவரை ஈர்த்தததாகவும் கூறியிருந்தார்!

நூலும் இதேபோல் தான், விளையாட்டாக ஒன்றுக்குள் ஒன்றாக ஊடாடிவிளையாடும். நம்மூர் விடுகதைகள் போல், அதேநேரம் நவீன கணித தத்துவ அறிதற்பின்புலத்தில் உள்ள செயல்பாடுகளைப் படம்பிடிப்பதாய் இருக்கும்.

இந்நூலின் அடிநாதத்திலிருந்தே அமைந்தது, ஹோப்ச்டட்டரின் விளையாட்டுத்தனமான விதி, இது சிக்கலமைவில்/complexity குறிக்கப்படுகிறது. விதிசொல்வது யாதெனில்,

“எப்பொழுதும் நாம் நினைப்பதைவிட காலமெடுக்கும், ஹோப்ஸ்டட்டரின் விதியினைக் கருத்தில் கொண்டாலும்!”

ஆயினும் இவ்விதியின் பகுவல்/fractal தன்மை ஒரு முகம்பார்ர்க்கும் கண்ணாடிக்குள் இன்னொருக் கண்ணாடியைக் காண்பிப்பது போன்றது! இரண்டே கண்ணாடியானாலும், ஒன்றில் எதிரொளிக்கப்பட்டவை, மற்றொன்றில் விழுந்து, அது திரும்பவும் விழுந்து என முடிவிலாத் தொடர்பினை/கண்ணாடிகளைக் காணலாம்.

இது கிட்டத்தட்ட ஐன்ஸ்டைனின் ஒளியின் திசைவேகத்தில் செல்லும் ஒருவருக்கு, இன்னொரு ஒளியன்/photon அவருடைய திசைவேகத்தில் செல்லாமல், அவருக்கும் அவ்வொளியன் ஒளியின் திசைவேகத்திலேயே செல்லும் என்பதையும் போன்றது!

எதிர்வினை: கற்றலும் சமூகமும் -7 சமூக தாக்கம்

என்னுடைய முந்தையக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றிய ஒருவர் இவ்வாறுக்குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம் என்ற கட்டமைப்பை நாசிச / பாசிச படைகளோடு ஒப்பிட்டால், நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த சாதியின் அடிப்படை படிநிலையே குடும்பத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது. வேண்டுமென்றால், யாரும் யாருடனும் வாழ்ந்து விட்டு போகலாமென்ற மேலை நாடுகள் போல வாழ பழகிக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு சாதி தேவையில்லை என்று சொல்லும் ஒரு சாரார், காலப்போக்கில் அதன் அடிப்படை வேரான குடும்பம் என்ற கட்டமைப்பும் தேவையில்லையென்றே வாதிவாடுவார்கள். அதுவும் இப்போதுள்ள சாதி வெறுப்பு போல எடுத்துக்கொள்ளப்பட்டு, குடும்பம் என்பதற்குள் அடக்குமுறை உள்ளனதென பலராலும் சொல்லக்கூடும். அடுத்து ஒரு பெண் என்பவளோ அல்லது ஓர் ஆண் என்பவனோ திருமணம் செய்து தான் வாழ வேண்டியது கட்டாயமில்லை. திருமணம் செய்யாமலே சாதி மறுப்பு போல திருமண மறுப்போடு வாழ்ந்து கொள்ளலாம். அது தான் முன்னேற்றம்; அதுதான் பகுத்குத்தறிவு என போற்றப்படவும் வாய்ப்புண்டு. இங்கே யார் நலல்வன் கெட்டவன் என்பதை கேம் தியரிக்கள் போன்ற எந்தவொரு கோட்பாடுகளும் முடிவு செய்யப்போவதில்லை. எல்லாவிதமான கோட்பாடுகளும் இங்குண்டு. இல்லையென்றால் அப்படியோரு கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு இமல் தியரி என்று எதோவொரு புதுப்பெயரை கூட இட்டுக்கொள்ளலாம். நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி. இன்று சாதி வேண்டுமென்பதும், நாளை குடும்பம் வேண்டாம் என்பதும், பெண்ணொ ஆணோ வாழ்நாளெல்லாம் துணையாக மற்ற ஒருவரோடு மட்டும் தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லையென்று சொல்வதும், எல்லாமே ஏதோவொரு தியரிக்கள் தான் முடிவு செய்யுமெனில் அப்படியான ஒரு தியரி தேவையேயில்லை.

// குடும்பம் என்ற கட்டமைப்பை நாசிச / பாசிச படைகளோடு ஒப்பிட்டால், நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்.//

எப்படி??

//ஆனால் இந்த சாதியின் அடிப்படை படிநிலையே குடும்பத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது.//

ஆம், அப்படித்தான்.

// வேண்டுமென்றால், யாரும் யாருடனும் வாழ்ந்து விட்டு போகலாமென்ற மேலை நாடுகள் போல வாழ பழகிக்கொள்ள வேண்டும். //

தவறு. சமூகபிரசித்தி பெற்ற வெளிநாட்டு சினிமாக்காரர்களின் விளையாட்டுவீர்ர்களின் குடும்பங்களூம் அவர்களின் வாழக்கைமுறைமை மட்டும் அந்தந்த சமூகத்தைப் பிரதிபலிக்கும் காரணியாகா , எல்லா நாடுகளிலும் தாத்தாப்பாட்டியுடன் வாழும் குடும்பங்கள், குடும்பப் பிணைப்பு, பண்பாடு என்று ஏராளம் உண்டு, வளர்ச்சி சார்ந்த நகர்ப்புற வாழ்க்கை, நம்மூர் போலவே, குடும்பங்களைப் பிரிக்கிறது, அவ்வளவு தான். எல்லாநாடுகளிலும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணவில்லை, பிள்ளைபெற்றுக்கொள்ளவில்லை என்றுகேட்கும் அதே கலாச்சாரம் இங்கேயும் உண்டு.

//இப்போதைக்கு சாதி தேவையில்லை என்று சொல்லும் ஒரு சாரார், காலப்போக்கில் அதன் அடிப்படை வேரான குடும்பம் என்ற கட்டமைப்பும் தேவையில்லையென்றே வாதிவாடுவார்கள். //

சாதிபோன்ற அமைப்பைத் தாண்டிவந்து பொருளாதார வளர்ச்சிக்காக வேலைசெய்து, அதுவே பின்பு சமூகவளர்ச்சியாக மேலைநாடுகள் மாற்றத்தான் செய்துள்ளது. என் மனைவி வசிக்கும் உற்றெச்ட் நகரில் நகரின் ஓரத்தில், மிகப்பெரிய மடு உண்டு. அம்மடு சாதியில்/மதத்தில் குறைந்தோராகக் கருதப்பட்ட மக்களை, காலையில் எழுந்தவுடன் பார்க்கக்கூடாது என்று சாதியில் பெரியோர் சேர்ந்து அரசுக்குக் கூறி அம்மடுவை செயற்கையாக உருவாக்கினார்கள், இது நடந்தது இருநூறு வருடத்துக்கு முன்னர்.

சாதியை அறுத்தப்பின்னரும் அச்சமூகமும் வளரத்தான் செய்துள்ளது, இன்னும் பண்ணைவீடுகளில் இருந்து வளர்ந்து வரும் பிள்ளைகள் விஞ்ஞானிகளாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

//அதுவும் இப்போதுள்ள சாதி வெறுப்பு போல எடுத்துக்கொள்ளப்பட்டு, குடும்பம் என்பதற்குள் அடக்குமுறை உள்ளனதென பலராலும் சொல்லக்கூடும்.//

குழு என்றாலே அடக்குமுறை உண்டு. மென்மையானதா அல்லது கடுமையானதா என்பது அக்குழுவில் வாழும் மனிதர்களின் சிந்திக்கும் திறனைப் பொறுத்தது. பதின்பருவப்பிள்ளைகள் எம்மாதிரியானக் குடும்பத்தில் இருந்தாலும், புரட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பது அறிவியல் உண்மை. அதற்காக, நாம் பிள்ளைகளை அடக்குவதை அடக்குமுறை எனக் கருதுவோமா? ஆனால் அவர்கள் பார்வையில் பெற்றோர் அடக்குமுறையாளர்களே. ஆக என்ன நோக்கத்தில் நாம் செய்கிறோம் என்பதை சிந்தித்து செயல்படவேண்டும்.   மனிதர்கள் சமூகவிலங்குகள் என்பது இயற்கைவிதி, அது மாறினால் மட்டுமேக் குடும்பம் வேண்டாம் என்று கூறுவது மாறும்.

//திருமணம் செய்யாமலே சாதி மறுப்பு போல திருமண மறுப்போடு வாழ்ந்து கொள்ளலாம். அது தான் முன்னேற்றம்; அதுதான் பகுத்குத்தறிவு என போற்றப்படவும் வாய்ப்புண்டு. //

அதை நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. தெளிவான சிந்தனைகொண்டிருக்கிறவர்கள் அவர்கள் வாழ்வை வளப்படுத்துவார்கள். இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதன் வரையறை, சமூகவொழுங்கில் உண்டானது. அதற்காக சமூகவொழுங்கு மட்டுமே ஒருவரை வளர்த்தெடுததுவிடமுடியாது.
கிரேக்க தத்துவமேதைகளாகட்டும், தமிழ் சமற்கிருத தத்துவமேதைகளாகட்டும். அவர்கள் கொல்லப்பட்டதும் வணங்கப்பட்டதும், சிந்தியுங்க்ள் என்று சொன்னதற்காகத் தான். விதண்டாவாதத்தில் இது முன்னேற்றம் பகுத்தறிவு என்று யாராவது கூறுகிறார்கள் என்றால், அவர்களை அவர்களின் முடிவுகளை அவர்கள் வாழ்க்கையேப் பார்த்துக்கொள்ளும். அதையெல்லாம் நம்மால் மாற்றமுடியாது, கருத்துக்களை முன்வைக்கலாம், அதை அப்படியே பின்பற்றுக என்று வலியுறுத்துவது எதேச்சதிகாரம், சிறுபிள்ளைகளை அடித்துத் திருத்துவது, இக்காலத்தில் தவறாக ஆனது கூட இம்மாதிரிதான்.  வழிப்படுத்துங்கள், நெறிப்படுத்துங்கள், அது மட்டுமே நம் வேலை, மிச்சர் அவரவர் கைகளில் தான்.

 

//இங்கே யார் நலல்வன் கெட்டவன் என்பதை கேம் தியரிக்கள் போன்ற எந்தவொரு கோட்பாடுகளும் முடிவு செய்யப்போவதில்லை. எல்லாவிதமான கோட்பாடுகளும் இங்குண்டு.//

உங்களின் கேள்வியின் அடிப்படையேத் தவறானது.  இருப்பதை இருப்பதுபோல் படித்துச்சொல்வது தான் சமூக அறிவியலும், அதுசார்ந்த ஆட்டக்கோட்பாடும், இல்லாததைச் சொல்வது எதுவும் நிலைத்தும் நிற்காது, அறிவியலின் வேலையும் அதுவல்ல.  மேலும், எல்லாவிதமானக் கோட்பாடுகளும் நிலைத்துநிற்கும் என்றுக் குறிப்பிட்டது எப்படியெனத் தெரியவில்லை. அணுக்களைப் பற்றி நம்மவர்கள், சாக்ரடீஸ் காலத்திற்கு முன்னிருந்தகிரேக்கர்கள் முதற்கொண்டு பலபேர் உரைத்திருக்கின்றனர். இன்றும் தத்துவார்த்தமாகவும் கோட்பாட்டு அறிவியல் சார்ந்தும் அதைப்பற்றி சோதித்துவருகிறோம். அதேநேரம் அணுக்கொள்கைகளாகக் கூறப்பட்டப் பலவும் அறிவியலால் தூக்கியெறியப்பட்டுள்ளது.   அறிவியலல்லாதக் கோட்பாடுகளெல்லாம் பயன்படாவிட்டால் களையெடுக்கப்படும்..

ஐன்ஸ்டைனின் சார்புக்கொள்கையைக் கூறி நூறுவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அவ்விதியை ஐன்ஸ்டைன பகன்று இருபது வருடங்களிலேயே புதன் கிரகத்தின் ஒளியை வளைப்பதில் இருந்து அவர் விதிசரிதான் என்று அறியப்பட்டது. ஆனால் அந்த ஒரேயொரு வாதத்தை மட்டும்  அவரின் விதி சரியென அறிவியல் ஒத்துக்கொள்ளாது.   நூறாண்டுகள் கடந்தப்பின்னும், இன்றுவரைக்கும் வெவ்வேறு சோதனைகளும் அதன்மேல் கட்டப்பட்ட வெவ்வேறுக்கோட்பாடுகளும் அவ்விதிகளை சந்து சந்தாக அறுத்து ஆய்வுசெய்கிறது.

நல்லவன் கெட்டவன் என கோட்பாடு சொல்வதாகக் குறிப்பிடவில்லை, நல்லவரும் கெட்டவருமாக முரணோடு சேர்ந்திருப்பதில் தான் சமூகத்தின் ஓட்டம் இருக்கும் என்பதாய் இருப்பதை இருப்பதாகவேக்கூறுகிறது.   இதுதான் நாம் அனைவரும் அறிந்ததேயென்றுக் கூறினாலும்,  அறிவியலின் வீச்சுஅதோடு நிற்பதிலில்லை, மாறாக மாற்றத்தில் எவ்வளவு வேகம், எப்படி என்றெல்லாம் கேள்விகள் கேட்கும். இதற்கு எடுத்துக்காட்டு உலகப்போர்கள். இரண்டே இரண்டு உலகப்போர் உலகத்தின் வளர்ச்சியை திடீரென மாற்றியதோடு மட்டுமல்லாமல், இன்னொரு உலகப்போர் வந்தால் அனைவரும் அழிந்துவிடும் அளவுக்கு மாற்றிவிட்டது.

//இல்லையென்றால் அப்படியோரு கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு இமல் தியரி என்று எதோவொரு புதுப்பெயரை கூட இட்டுக்கொள்ளலாம். நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி.//

இப்படி ஒருக்கருத்தைக்கூறி மிகவும் அவசரப்பட்டுவிட்டீர்கள். இதற்கானப் பதில் முந்தைய கருத்திலிருந்தும் தங்களுக்குப் புரியும் என்றாலும், ஆட்டக்கோட்பாடோ/அறிவியலோ எப்படி இயங்குகிறது என்று கூறுவதற்கு உங்கள் கேள்வியை ஒரு சாக்காக எடுத்துக்கொள்கிறேன்.

எதையாவது எகனைமுகனையாகத் தங்கள் வீட்டில் பேசிவிட்டு, இதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நம்வீட்டினரிடம் கூட கூறிவிடமுடியாதுதானே?    அப்படியிருக்க, அறிவியல் என்பது உங்கள் வீட்டுப்புழக்கடையில் வளரும் நாய்க்குட்டி போல் இருக்கும் த்வனியில் நீங்கள்கூறியுள்ளீர்கள். அறிவியலில் ஆய்வுசெய்யவேண்டும் என்று விரும்பும் மாணவன் கூட இம்மாதிரி உரைக்கமாட்டார்.    என்னப்பா, ஒரு பல்கலைக்கழகத்தில் வேலைபார்ப்பவர் நீங்கள், இப்படியா எடுத்தோம் கவிழ்த்தோமென அறிவியலைப் பற்றிப் பேசுவது?

ஒரு தியரி உருவாகும் கதையை உரைக்கும் முன்னர், முதலில் நீங்கள் கூறுவதுபோல் இமல் தியரி எனும் பெயரை நமக்கு நாமே தரவும்முடியாது பிரஸ்தாபிக்கவும் முடியாது என்பதை உணர்தல் நலம். அதன்படிநிலைகள் இவ்வாறு செல்லும்:

  1. உங்களின் கோட்பாட்டை உருவாக்கும் முன்னர், பல நூறு ஆய்வுக்கட்டுரைகளைத் தேடிப்பிடித்துப் படித்து, அதைப் படிக்கும்போது ஏதோவொன்று உங்கள் மனதில் உதித்து, இதில் வேலைசெய்வோம் என்று ஏதோவொரு சின்னக் கேள்வியை எடுத்து, இதன் பின்னர், திரும்பவும் அக்கேள்வி சார்ந்த பல நூறு ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து, அதில் நீங்கள் யோசித்ததை ஏற்கனவே செய்திருக்கிறார்களா எனப் பார்த்து, அவ்வாறெனில், நீங்கள் யோசிப்பது புதிதா பழையதா என்றுக் கண்டறிந்து, பழையதானால், திரும்பவும், முதலில் இருந்து துவங்குவீர்கள். இதற்கே பலவருடங்களாகலாம். பின்னர், நீங்கள் நினைத்ததை வடித்து, அதற்குரிய கணித அல்லது ஏரண/logic வடிவங்களை அமைத்த பின்னர், அதற்கான சரியான உதாரணங்களையும், சரியான வடிவங்களையும்/மாடல்கள் தரவேண்டும். இவையெல்லாம் உங்கள் திருப்திக்கு வளர்ந்தப்பின்னர், பொதுவில் உங்களுடையக் கருத்தை வைப்பீர்கள்.  முதலில்
  2.  உங்களின் ஆய்வு, அறிவுசார்பாக முக்கியமானது என்று நீங்கள் கருதும் பட்சத்தில், முதலில் நீங்கள் வேலைபார்க்கும் பல்கலைக்கழக அல்லது ஆய்வுக்குழுவில் உரையாற்றுவீர்கள்.   ஒரு மனிதன் எல்லாவற்றையும் எல்லாநேரத்திலும் சரியாக செய்துவிடமுடியாது, ஆக சுற்றி வேலைபார்ப்பவர்கள், நீ சரியாகத்தான் கூறியுள்ளாய் என்றோ அல்லது, அவர்களுடைய அனுபவத்திலும் அறிவிலும் உதித்ததை சேர்க்க சொல்வார்கள். சரியானதென்றால் சேர்ப்பீர்கள், இல்லையென்றால் விடுவீர்கள்.   ஒரு வேளை யாருமே ஒத்துக்கொள்ளவில்லையெனினும், அடுத்தக்கட்டமாக.
  3.  நீங்கள் ஆய்வுசெய்யுந்துறையில் ஆய்விலுள்ளோர் அதிகம் வாசிக்கும் ஒரு நல்ல பனுவலுக்கு/journal அனுப்பிவிடுவீர்கள், அவர்கள் அதைத் தகுந்த அந்தந்த புலத்தில் வேலைசெய்யும் பெரிய ஆய்வாளர்கட்கு அனுப்புவார்கள். அவர்கள் உங்கள் கருத்தை ஒருவரி விடாமல் படித்து, நான் இப்பொழுது எழுதுகிறேனே, அது போல், ஒவ்வொரு வரிக்கும் கேள்விகளும் கருத்துகளுமாய் கொட்டித்தீர்ப்பார்கள்.
  4.  அவர்கள் கேட்டக் கேள்விக்கெல்லாம் ஒருவரி விடாமல் பதில் அனுப்பி, திரும்பவும் அவர்கள் நீங்கள் பதிலளித்ததிலிருந்து திரும்ப கேள்விகள் பல கேட்டு என 3, 4 முறையாவது தொடர்பாடல் நடந்தப்பின்னர், நீங்கள் அளித்த மொத்தத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டால், அப்பனுவலில் பதிப்பார்கள்.
  5.  ஒரு வேளை, உங்களுடையப் பதில்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லையெனில், மொத்தமாக உங்கள் ஆய்வை ஒதுக்கிவிடுவார்கள், அப்படி பதிக்கமுடியாது என்றுக்கூறிவிட்டால், அடுத்த பனுவலுக்கு அனுப்பவேண்டியது, அங்குமில்லையென்றால், அடுத்தது, இப்படிப் போகும்.
  6.  ஒரு வேளை, நீங்கள் எழுதியது அறிவுசார்ந்து இருக்கிறது என்றால், ஒருவருக்கொருவர், உங்களின் கோட்பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவர், இது பல வருடங்களுக்கு நடந்தால் மட்டுமே, இமல் தியரி என்று பெயர் வரும், அதையும் மற்றோர்தான் குறிப்பிடுவர்.

    விஞ்ஞானிகள் சிம்மங்கள் போன்றவர்கள், அவர்களிடம் போய் வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனறெல்லாம் பேசமுடியாது. அக்குவேறு ஆணிவேராக நாம் உரைத்தவற்றை கீறிப்பார்த்து அதனுள் உண்மை இருக்கிறதா எனப் பார்க்கும் அதேநேரம், அவர்களுக்கு ஒன்றைத் தெரியவில்லையென்றால், தெரியவில்லையென்றும் கூறிக்கடந்துவிடுவர்.   அதே விஞ்ஞானிகளில் பலர், தங்களின் பெயரில் வெளியானக் கோட்பாட்டைக் குறிப்பிடும்போது, தன் பெயரை தவிர்த்து சொல்லும் பணிவுடனும் இருப்பர்.  இருக்கட்டும்!

  7.  ஒரு வேளை எங்குமேப் பதிக்கவில்லையெனில், நம் ஆய்வை, நம் டைரியில் குறித்துவைத்துக்கொள்ளவேண்டியது தான். அத்தனைவருடம் நாம் செய்த ஆராய்ச்சியும் வீண் என்று அர்த்தம்.

    இத்தனைபேர் குறிப்பிட்டும் நம் ஆய்வுப்புலமையை நாம் சந்தேகிக்கவில்லையெனில்… ஒரு உதாரணம், நானிருக்கும் கட்டிடத்துக்கு பக்கத்துக்கட்டிடத்தில் தான் நோபல் விஞ்ஞானி பேரா. எரார்ட் டூப்ட் /Gerard t’Hooft இருக்கிறார். அவருக்கு, பிரபஞ்சத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்ததாகவோ ஐன்ஸ்டைன் போன்ற பெரிய விஞ்ஞானிகள் தவறிழைத்தார்கள் என்றோ, இயற்கை எல்லாவற்றையும் கண்டறிந்துவிட்டேனென்றோ, கான்ஸ்பிரசி தியரியென்றோ குறிப்பிடும் ஆயிரம் கடிதங்கள் அனுதினமும் வரும் என்று அடிக்கடி குறிப்பிடுவார். அதுபோல் ஆகிவிடும்.

  8.  ஒரு வேளை, பெரியதாகப் பாராட்டப்பட்ட ஒரு கோட்பாடு, செயல்முறையில் தவறு என்றுத்தெரிந்தால், அதன் மேல் கட்டப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளின் தரம் என்ன, அதாவது சரியாக இருக்கிறதா என்று அப்பொழுதும் ஆய்வுகள் நடக்கும். அறிவியலும் அறிவியல்சார் ஆய்வுகளும் பெருமுயற்சியாகும்.

ஆக விட்டேற்றியாக எதையும் சொல்லி செல்வது என்பது, மட்டமான sci-fi படங்கள் போன்றவை. தற்பொழுதெல்லாம், அறிவியற்கதைகள் கொண்டப் படங்களையே/ இண்டர்ச்டெல்லார், நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியரை/கிப் தார்ன்– வைத்து எடுக்கிறார்கள், அதில் செய்த ஆராய்ச்சியும் ஆய்வுக்கட்டுரையாகவும் வந்திருக்கிறது.

//நமக்கு எது பிடிக்குதோ அதுதான் நல்லது; எதெல்லாம் பிடிக்கலையோ அதெல்லாம் கெட்டது; இது தான் காமன் தியரி.//

அது நாம் மட்டும் வசிக்கும்வீட்டில் நடக்கலாம், நம்மோடு இன்னொருவர் இருந்தால் கூட நமக்குப் பிடித்ததையும் பிடிக்காததையும் வளைக்கவேண்டி வரும். நம் பேச்சை நம் வீட்டு நாய் கூட எல்லாநேரமும் கேட்காது என்பதுதானே உண்மை. அதை உணரும்பட்சத்தில் நாம் சற்று நிதானிக்கலாம். பொதுவுண்மையாக ஏதோவொன்றைக் குறிப்பிட்டால் வரும் பிரச்சினையும் அதன் பின்னாலான விசயங்களும் நம்மை சார்ந்தது.  சமூகம் வேறு அறிவியல் வேறல்ல, அறிவியல் வேகமாக செய்வதை, சமூகம் மெதுவாக செய்யலாம் அவ்வளவு தான் வித்தியாசம். ஆக நாம் குறிப்பிடுவது சரியானதெனில், சமூகமும் அங்கீகரிக்கவேச் செய்யும்.

// இன்று சாதி வேண்டுமென்பதும், நாளை குடும்பம் வேண்டாம் என்பதும், பெண்ணொ ஆணோ வாழ்நாளெல்லாம் துணையாக மற்ற ஒருவரோடு மட்டும் தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லையென்று சொல்வதும், எல்லாமே ஏதோவொரு தியரிக்கள் தான் முடிவு செய்யுமெனில் அப்படியான ஒரு தியரி தேவையேயில்லை.//

ஒன்றேயொன்று தான், தக்கனப் பிழைக்கும் அவ்வளவே!  இன்று நாம் தூக்கிவைத்துக்கொண்டாடும் சாதியை, 1400 வருடம் முன் நாம் செய்யவில்லையென்கிறார்கள், ஆங்கிலேயர் வரவுக்குப்பின்னும் மற்ற இனங்களின் வரவுக்குப்பின்னும் நடந்ததாகவும் கூறுகிறார்கள்.  ஆக நம் சமூகத்தில் இல்லாதது பெரிதாக வளர்ந்திருக்கிறது, ஆனால், அது தான் நம்மிடம் இல்லாதிருந்ததே, அப்படியானால் இல்லாதநிலைக்குப் போவோம் என்றும் கூட நாம் யோசிக்கலாம்.

நானும் நீங்களும் பேசுவதால் சிறுசிறுமாற்றங்கள் நிகழலாம், அதெல்லாம் தான் உண்மையாக நடந்துவிடும் என்றெல்லாம் கூறுவது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமம்.

மீண்டும் கூறுகிறேன் கோட்பாடுகள் வானத்திலிருந்து குதிப்பவை என்று நீங்கள் நினைத்திருந்தால், தத்துவார்த்தமாக நீங்கள் புரிந்திருப்பதில் மாறுபாடு தேவை.. இருப்பதைத்தான் தியரைஸ் பண்ணமுடியும், இல்லாததை அல்ல. நீங்கள் எப்படியிருக்கவேண்டும் என்றெல்லாம் தியரி கூறமுடியாது, ஆனால், இப்படியெல்லாம் இருக்கிறீர்கள் என பிரதிபலிக்கும் கண்ணாடியே சமூக அறிவியற்கோட்பாடுகள். நம் கண்ணாடியின் அளவீட்டை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் நம் விருப்பம் அவ்வளவு தான், அது கண்ணாடியைப் பாதிக்காது.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது தங்களுடைய நம்பிக்கையைத்தானே தவிர்த்து, சமூகமாற்றத்திற்கான தத்துவமோ, அல்லது அறிவியலின் கட்டுமானம் சார்ந்த கேள்வியோ அல்ல. ஆனால், நான் பதிலளித்திருப்பது எல்லாநிலைக்கும் பொதுவான ஒன்று. இதை எந்த அடிப்படையில் இருந்தும் புரிந்துகொள்ளலாம். அதாவது கேள்விகள் கேளுங்கள், அதன் அடியாழம் வரை. இருப்பதை சரியாகப் புரிந்துகொள்ளுங்கள், அப்படித்தான் இருக்கிறோமாவெனவும் சோதிக்க வேண்டும் என்பதே அதன் சாரம்.

போகிறப் போக்கில்.. 3

நேற்றெழுதியதற்கு எதிர்வினையாகக் கேட்கப்பட்டக் கேள்வி:  சாதியில் உயர்ந்தவர் பெரியப்பா ஆனார், ஆனால் சாதியில் சிறியோர் நம்மை சித்தப்பாவென்பர் என்ற வினையானக் கேள்விக்கு என் பதில்

என் அம்மா தன்னுடைய ஆத்தாளாகவேப் போற்றியழைக்கப்பட்டவரும் ஒரு பட்டியல் சாதி இனத்தவர் தான். அந்த அம்மாச்சியை வாழ்வின் கடைசிவரை வைத்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த அம்மாச்சி இருக்கட்டும் கங்கா, இப்படியே இருந்துக்கொள்கிறேன் என வர சம்மதிக்கவில்லை. பெரியப்பா என்று சாதியில் குறைந்தோராக அறிப்படுபவர்களையும் அழைத்திருக்கிறோம், இடத்தில் இருப்பதற்கு தகுந்த மரியாதை அவ்வளவுதான்.

உறவுகளுக்குள்ளேயே யாராவது அசிங்கம் செய்துவிட்டால் அவர்களை மகனென்று கூடப் பொதுவெளியில் கூறுவதற்கு அஞ்சும் நமக்கு, இப்படி அழைப்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்றாலும். பாரபட்சம் இல்லாமல் வாழ்வதற்குப் பழகியிருந்தோம், நாங்கள் வசித்த அந்த குறுகிய இடத்தில், வேற்று சாதிக்காரர்களுடன் சண்டைவந்ததேயில்லை. ஆனால், சொந்தக்காரர்கள் (சொந்தப் பிரச்சினைக்காக அல்ல) மல்லுக்கட்டி உருண்டதைப் பார்த்திருக்கிறேன் தடுத்திருக்கிறேன்.

மேலும் தற்பொழுது நடந்துவரும் காதல்-ஜிஹாத் போன்ற சாதிமறுப்புக் கல்யாணத்தைப்பற்றியும் பட்டியல்சாதியினர் புதுவரலாறு எழுதுகிறார்கள் என்பதைப் பற்றியும் இட்டக்கருத்துக்கு

…. உயர்ந்த சாதி வீட்டு பெண்ணை திருமணம் முடிக்க வேண்டுமென்ற வெறி உருவாகிறது. அதை வைத்து சாதி ஒழிப்பு புரட்சி படைகளும், ஆங்காங்கே பல தலைமைகளும் உருவாகிறது.

 

பிரச்சினைக்குத் தீர்வுகள் நமக்குப் புதிதல்ல. மற்றசாதியினருக்காகசண்டைக்கு நின்ற வரலாறும் எங்கள் சொந்தங்களில் உண்டு. பிற்காலங்களில் பொதுவுடைமையும் பெரியார் கழகங்களும், அம்பேத்கர் சிந்தனைகளும் அதற்கான விசயங்களையிடவே செய்திருக்கின்றன.

ஆனால், தாம் சார்ந்தக் கட்சியின் கொள்கைக்களங்கள் தத்துவக்களங்காணா கட்சிக்கடைநிலை ஆட்களும் எப்பொழுதும் தான் சார்ந்த விசயங்களுக்குக் காரணங்காரிய அறியாமல் பிழைசெய்வர் தான், இட்லரின், முசோலினியின் படையாட்கள் மாதிரி.   அதாவது, இட்லர், முசோலினி அளவுக்கு உந்தப்பட்ட ஆட்களாக கடைநிலைஊழியர்கள் உந்தப்பட்டிருக்கவேண்டிய அவசியமில்லை.   ஆனால், சர்வதேச நீதிமன்றங்கள் இன்றும், அந்த நாசிப்படைவீரர்கள் அல்லது அதிகாரிகளுக்கு தூக்கும், மற்றபிற தண்டனைகளையும் தந்துகொண்டிருக்கின்றன.

இந்த செய்திப்பரிமாற்றக்காலத்திலும் தான் சேர்ந்த கட்சியின் கொள்கையையோ, அல்லது கொள்கையிலாக் கட்சியினுடனான சேர்க்கையென்பதையோ அறியாமல் பிழைசெய்தால், அவர்கள் கொடுக்கும் விலை அதிகமாகத்தான் இருக்கும், அதற்கு கட்சி/சாதி வேறுபாடேக் கிடையாது, யாராக இருந்தாலும் அப்படித்தான்.   இதை, இட்லருடன் பணிபுரிந்தவர்களே இன்னும் தண்டனைப் பெறுகிறார்கள் என்பதில் இருந்து அடறிந்து கொள்ளலாம்.   உலகம் பிரிவுனைகளுடனோ, அல்லது இல்லாமலோ அதுபாட்டுக்கு வளர்ந்துப் போய்க்கொண்டேயிருக்கும்.  முன்செல்வதற்கான அத்துணை ஆயத்தங்களும் கண்முன்னர் கிடக்கிறது.   நம்மை ஒரு சமூகம் மதிக்கவேண்டுமென்றோ, கொண்டாடவேண்டுமென்றோ அவசியங்கள் இல்லை.  ஆனால், என்னுடைய வளர்ச்சி எனக்கானது. என்னால், இன்னும் எத்தனைபேரை உருவாக்கமுடியும் என்பதைச் சார்ந்தது.   நான் இதுவரை, வெளியாட்களுக்கே பலவழிகளில் உதவிசெய்திருக்கிறேன் என்றால் என் சொந்தக்காரர்களுக்கும் வழிகள் தராமல் இருப்பேனா?? ஆனால், அதைக் கொள்வார் இதுவரை, யாருமில்லை.   இங்கு தக்கனமட்டுமேப் பிழைக்கும். நாம் என்ன முட்டிமோதினாலும், அவர்கள் வரையறைக்குள்ளேயே வாழ்வதற்கு விரும்புகிறவர்கள்.   அவர்கள், நாம் முன்னேறி வரும்போது ஒருவேளை இவன் சொல்வது சரிதானோ என்று வருவார்கள்.  ஆக, இப்படித்தான் சமூகமானது இயங்குகிறது. இந்த சமூக இயக்கத்தில், நல்லவர் நாலுபேர் என்றால், மீதியிருப்பவர் எல்லாம் நல்ல/கெட்டத் தன்மைகளோடு கலந்தும் கெட்டவராகவும் இருக்கவேண்டும், என சமூகத்தை அளக்கும் ஆட்டக்கோட்பாடு/கேம் தியரி முன்மொழிகிறது.

தத்துவக்கூடை: இருப்பு/existence, அறியொணாமை/agnosticism, வெறுமை/emptiness and a physicist! :-p

நேற்று இராமசாமி செல்வராஜ் மற்றும் சுந்தர் இலட்சுமணன் அண்ணன்களின் மிக அழகான  ஆழமானத் தத்துவார்த்தப் பேச்சின் கருவைக் காணநேர்ந்தது.

“”வணக்கம் வணக்கம். எப்படி இருக்கீங்க?” என்று ஆரம்பித்து ஒரு சுழற்காற்றில் ஏறியமர்ந்துகொண்டால், அப்படியே சென்று வாழ்வியல் மெய்யியல் சமூகவியல் தத்துவவியல் உடலியல் உள்ளத்தியல் தமிழியல் மொழியியல் இலக்கணவியல் என்று ஒரு பெருஞ்சுற்றே வந்துவிடலாம். இன்னும்கூட இருக்கலாம். நம் வடிகட்டியில் சிக்கியது இவ்வளவுதான்.”

“ஏன் இங்கு இருக்கிறோம் சுந்தர்? இதற்கான விடை இல்லையே”, என்றேன்.
“இன்னும் ஒருபடி மேலே போங்க. இங்கு நாம் மெய்யாகவே இருக்கிறோமா?”, என்கிறார்.
ஆகா.
தின்ற உணவு செரிக்கக் குடித்த இஞ்சியெலுமிச்சைச் சாறும், மசாலாத் தேநீரும் கூட நமது இருப்புக்குச் சான்று தானே.” —

அதில் கலக்கமுடியவில்லையே என்ற நினைப்புடனேயே என்கருத்துக்களையிட்டிருந்தேன், பின்பு அவர்களின் கருத்தைத்தொடர்ந்து என்கருத்தை நாலேநாலு வரியில் எழுத ஆசைப்பட்டேன் ஆனால், “இம்புட்டுப் பெரிசையெல்லாம் போடமுடியாது போவென”, ஃபேஸ்புக்கே உமிழும் அளவுக்கு மிகப் பெரிதாக வளர்ந்துவிட்டது.  எனக்கும் வலைப்பூவில் எழுதினால் டைரிக்கு வசதிதான்!

சிசிறிது நேரத்திற்கு முன்பு, என்னுடையப்பதிவில் தங்களின் கருத்துக்கு கருத்திடும்போது, தற்செயலாக என்ற வார்த்தையை, எழுதும் போது, பல விசயங்கள் தோன்றியது. என்னுடைய அனைத்துப்பதிவுகளுக்கும் காரணங்களான, ஏனிந்தப்பதிவு என்றுக்கேட்பதற்கு எப்பொழுதும் ஒரு “தற்செயலான” காரணமிருக்கும்.   அதைப் பெரும்பாலும் என்னுடையக் கட்டுரைகளில் ஏனெழுதினேன் என குறிப்பிடவும்செய்வேன், தங்களுக்கு குறிப்பிட்டதுபோல்–நேரம், குவாண்டம் சீனோவிளைவு, வெப்பியக்கவிதிகள்! அவையனைத்தும் ஏதோவொரு கோணத்தில் இருப்பைக்கேள்விப்படுத்துவதைச்சார்ந்தே இருக்கும், ஆனால் ஏனிந்த இருப்பு, என்பதன் ஆழம் கொஞ்சம் அதிகமானாலும் பிடித்துவிடலாம் என்பது நம்பிக்கை, ஒருவேளை ஏனிந்த இருப்பு என்பது உப்புசப்பில்லா விசயமாகக்கூட இருக்கலாம்!

ஒரு நிலையில் நின்றுகொண்டு காரணந்தேடின் அந்நிலைக்கு பதில்கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், அதை தற்செயல் விளைவாகக்கொள்ளலாம், ஆனால், நாம் நிற்குமிடம் எல்லாவற்றுக்கும் மேலேயென்றிருந்தால் அனைத்து நிகழ்வுகளும் காரணகாரியத்தைச்சார்ந்தவையாகிவிடும் அல்லது அப்படியாகத்தோன்றக்கூடச் செய்யலாம், அல்லது ஒற்றையடிப்பாதையில் நான் மிதிக்கும் அந்த புல்லுக்கு காலையில் நீர்கிடைத்திருக்குமா என்பதிலிருந்து என் துன்பம் தொடங்கிவிடும் .

ஆழமான பக்தியோகத்திலும் கடவுளையும் கடந்துபோகவே வழிப்படுத்துகிறார்கள். கேள்விகள் கேட்காமல் ஞானயோகம் துவங்காதென்பதிலிருந்தே நாத்திகத்தின் ஆணிவேர் அங்கிருந்து உடனேக் கிளைக்கும். ஆக, ஏதோவொரு நம்பிக்கைபோல் தெரிந்திருக்கும் விசயங்களே மற்றொருஏதோவொரு நம்பிக்கையினின்று அகலச்செய்வனவாகவாகத்தானிருக்கிறது. அப்படியானால், நம்பிக்கையென்பது அன்றைக்கானத் துன்பத்தினின்று மேலேறுவதற்காக போலத்தான் தெரிகிறது.

கவித்துவம், அறிவு எல்லாம் அவ்வகையைச்சார்ந்தவைபோலத்தான் தோன்றுகிறது. அதாவது, என்னுடைய வலிக்கானக் காரணம், மூளையின் உணர்வுவாய்க்காலில் உண்டாகும் மின்னழுத்தவேறுபாடோ அல்லது வேதிவினையோதான் என்பதுத் தெரிந்தப்பின்னரும் எனக்கு வலித்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால் முதன்முதலில் நான் அதை அறியும்போது, வலியில் மாற்றம் இல்லாது இல்லை, அதே விசயம், நன்கு பரிட்சயம் ஆனப்பின்னர், அதன் அறிவு எனக்கு துணைபுரிவதில்லை. ஆக, துன்பமானத்தருணத்தில் நம்பிக்கைசார் அந்த அறிவால் நாம் நம்மை சற்று ஏமாற்றிக்கொள்வதுபோல் இருக்கிறது, அதற்கான ஆணிவேரின் ஞானம் கேட்பதோடு நிற்கவில்லையெனினும், இருப்பில் இருந்து / சாதாரண வாழ்க்கைமுறையிலிருந்தே பெறுவதைப்போலத்தான் ஆதிசங்கரர், நாகார்ச்சுனர், தர்மகீர்த்திப் போன்றோரும் கூறுகிறார்கள்.

== “உங்கள் பின்னூட்டத்தின் கருத்துச் செறிவு அடர்த்தியாகவும் ஆழமாகவும் இருக்கிறது. ஒருமுறைக்குப் பலமுறை படித்துச் சிந்தித்தால் தான் முறையாக என்னால் உள்வாங்க முடியும் போலிருக்கிறது 🙂
ஆழத்தை அறிந்துகொள்ள முடிந்தால், ‘அன்றைக்கான துன்பம்’ என்னும் ஒன்று இல்லாமல் போய்விடும் அல்லவா?

ஆம் ஆம் அதேதான்! அறிவானது வலிக்கு மாத்திரை செய்கிறது; மருத்துவம் பார்க்கிறது; அது சைபோர்க்/cyborg மாதிரியோ குருத்தணுக்கள்/stem cells dynamics மாதிரியோ எனவளர்ந்துகொண்டே சென்றாலும், அன்றைக்கானத்துன்பத்தைத்தீர்க்கும் அளவிலேயே நிற்கவேண்டியிருக்கிறது, ஆய்வாளர்கட்கு இதை ஒத்துக்கொள்ளவொப்பாது என்பது ஒரு விசயமானாலும், அவர்களின் தீர்க்கதரிசன- நீண்டகால ஆய்வுத்திட்டங்களுங்கூட, அன்றன்றைக்கான அல்லது பின்னாளில் ஒருநாளுக்கான விசயத்தின் தீர்வாகவேயிருக்கிறது. ஆனால், நாம் நினைப்பதும் வேலைசெய்வதும் நம்பிக்கையுடன் இருப்பதும், ஒரே நொடியில் என் துன்பங்களை அகற்றமுடியுமா என்பதை எட்டுவதற்காகத்தான், ஆனால் இந்த ஆசையை இரகசியமாகவே வைத்துக்கொள்கிறோமெனத் தோன்றுகிறது.   ஏனெனில் ஒருநொடியில் வலிநிவாரணியென்பது எல்லாநேரத்திலும் சாத்தியப்படுவதில்லை, இந்தமாதிரியானமருத்துவப் புள்ளியியல் இடர்களால், உடனடிநிவாரணம் உண்டு என்றுகூறுவதற்கு அஞ்சவேண்டிவருகிறது.  ஆக நம் புள்ளியியல் அறிவு இதை ஒத்துக்கொள்வதுமில்லை மனமொப்புவதுமில்லை, பெரும்பாலும்!  ஆனால், இது பொதுவான அறிவு, நமக்குநாமே நாம் அவ்வளவு நம்பிக்கையுடன் (பகுத்தறிவுடனும்) இருக்கிறோமா?

ஒரு எடுத்துக்காட்டு, நமக்காக ஒருவர் எல்லாவேலையையும் செய்கிறார் எனவைத்துக்கொள்வோம், நமக்கு எதையுமே செய்யவேண்டிய அவசியமேயில்லையென்ற நிலையில் இருந்தால், நாம் அந்நிலையை ஒத்துக்கொள்வோமா?! கேட்கும்போது இனிமையாகத்தோன்றினாலும், நாம் கர்த்தத்துவம் என்றவொன்றுக்காகவே ஏங்கிக்கொண்டிருக்கிறோம்!  இதில் இன்னொரு சிக்கலென்னனவென்றால், நமக்கு அந்த கர்த்தத்துவம் என்பது, சாதாரணமாய் கிடைத்தாலும் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறோம், ஒரு துன்பம் வந்து, அது நம்மை துவைத்துக்காயப்பட்டப் பின்னர், மீண்டெழுந்து அதைக் கைப்பற்றவேண்டும் என்ற மனனிலையேப் பெரும்பாலும் இருப்பதுபோலும் தெரிகிறது.

மிக எளிமையான “வெற்றிக்கான முதற்படிதோல்வி” என்பதாகட்டும், ஆழ்ந்த புத்தரின் ஞானத்தையறிவதாகட்டும், இம்மனனிலையிலேயேதான் நாம் இருப்பதுபோலும் தெரிகிறது, இம்மனனிலை மிகவும் ஆச்சரியமானவொன்றல்லவா?!  நமக்குவேண்டியதொன்று, ஆனால், நாம் விருப்பப்படுவது முற்றிலும் எதிரானவொன்றைப்பெற்று அதில் சாதித்து நமக்குவேண்டியதை அடைவதுபோன்ற மனனிலை.

பெரும்பாலும், ஆழ்ந்த அறிவையெட்டிப்பிடிக்க முயலும்போது, சொந்தபந்தங்கள் காலைப்பிடித்து இழுப்பதை மனம் உடனே ஒத்துக்கொள்ளும் என்றால், நம்முடைய சொந்த அறிவும் அதைத்தடுத்து, எட்டவிடுவதில்லையென்பது நகைமுரண்,, அதை எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்றும் அறிந்துகொண்டால் சிறப்பாயிருக்கும்.

இன்னொரு எடுத்துக்காட்டாக, ஒருவேளை, எதோவொரு விசயத்தில் அதிசயத்தை எதிர்பார்க்கிறோமெனில், அதிசயம் நடந்தபின்னரும், நிசமாவா என்று புத்தி தீவிரமாகத் தெரிந்துகொள்ளமுயலும். ஒருவேளை என்னால் அதிசயத்தைக் கண்டுகொண்டே, அதிசயத்தின் காரணத்துக்கான (நாமறியாத ஒரு) பரிமாணத்தைப் புரிந்துகொள்ளமுடிவதற்கு என்னுடைய மூளையை அனுமதித்தால் மட்டுமே அதையெட்டமுடியும், அதற்கு நாம் கற்றவற்றை சற்று மறக்கவேண்டியிருக்கிறது, உதாரணத்துக்கு மந்திரத்தில் மாங்காய் விளையாது, காரணகாரியமில்லாத (அது உண்மையில் நாம் அறியமுடியாத) தற்செயல்விளைவுகள் என்பதுபோன்றவை.

ஆக அன்றையத்துன்பத்தைத்தாண்டி நாம் யோசிக்கிறோம் என்பதும், ஒரு நம்பிக்கை போலத்தானேயிருக்கும்,  ஏனெனில் நம்முடைய சொந்த அறிவே நம்மைத்தடுக்கிறது எனப் பார்த்தோம், மேலும் நமக்கு சுதந்திரமானப் பார்வையுண்டு என்று நம்புவதும் சற்றுயோசிக்கவேண்டியிருக்கிறது,  சமீபத்தைய ஆய்வொன்றில் பூனையினங்கள் தான்தோன்றித்தனமாய் இருப்பதற்கு காரணம் குறிப்பிட்ட வைரஸ்கள் எனக் குறிப்பிடப்படுகிறது,  மேலும் சில உளவியல் ஆய்வுகள் (மருத்துவப்புள்ளியியலையும் இதில் கணக்கில் கொள்ளவேண்டும்!) பூனையை வளர்ப்பவர்கள் சமூகவிலங்காக இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு எனக் கூறுகிறது.  பூனையைப் போலவேப் பூனைப்பிரியர்களூம் இருப்பதற்கு காரணம், அதே வைரஸாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.   இதில் நான் என்பது உண்மையில் அவரா, அல்லது அந்த வைரஸின் பின்னூட்டமா?!

சராசரி மனிதரின் நிலையிலேயே  மறந்தும் நினைத்தும் சிந்தித்தும் சிந்திக்காமலும் இருந்தால் எப்படியிருக்கும்?! பார்க்க கொஞ்சம் கிறுக்கு சாமியார் போலத் தெரியுமென நினைக்கிறேன். அதனாலேயே, இப்படிக்குறிப்பிட்டேன், அடியாழம் எட்டியபின்னர் இருப்பு என்பதே உப்புசப்பில்லா விசயமாகக்கூட இருக்கலாம்.

நாகார்ச்சுனர் அவருடைய மூலமத்யமககாரிகாவில் இப்படி வினவுகிறார், வெறுமையைப்/emptiness பற்றிப்பேசும்போது, ஒன்றுமில்லாததிலிருந்து எப்படி ஒரு பொருள் தோன்றியிருக்கும், அப்படியானால், பொருட்களுங்கூட ஒன்றுமில்லாதவையா?! இதைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு இயற்பியல் ஞானம் உதவியதென்றாலும், இதையெழுதுவதற்கு பொருட்களை ஒன்றுமில்லாதவகையாக யோசிப்பதற்கு, பொருள் அல்லது பொருளின் தன்மையென்றால் இன்னதுதான் என்ற அடிப்படைஞானத்தை நான் மறந்தால் மட்டுமே இப்படியோசித்திருக்க முடியும்.

மன்னிக்கவும் அண்ணன், நான்குவரிகளில் முடித்துவிடவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன், மீண்டும் பெரிதாகிவிட்டது. ஆனால், தங்களுடைய இருவரின் அறிவார்ந்த உரையாடலையும் அங்கில்லாமல் தவறவிட்டுவிட்டேனேயென்று நேற்று இப்பதிவைப்பார்த்ததும் யோசித்தேன், அப்படி நினைத்ததிலேயே பேச்சு வளர்ந்துவிட்டது என நினைக்கிறேன். தங்களிருவரின்/மற்ற தத்துவவியலாளர்கள் கருத்துக்களையும் அறிய விழைகிறேன்!

கற்றலும் சமூகமும் – மூத்தோர்மொழி முதுநெல்லி! :-P

ஏன் புதிதாகக் கண்டுபிடிப்பனவற்றைப் பார்த்தவுடன், அன்றைக்கே முன்னோர் இவற்றையெல்லாம் அறிந்திருந்தனர் என்றுக்கூறும் போக்கு அதிகமாகவுள்ளது, மேலும் ஏன் பழமைவாதம் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றக் கேள்விக்கும்…

இதில் ஒரு சின்ன பிரச்சினை ஒளிந்துள்ளது. உண்மையென்பது எப்பொழுதும் உள்ளது. ஒவ்வொரு பரிணாமப்படிநிலையும், பின்னர் தலைமுறையும் அவரவர்க்கு எட்டிய விதத்தில், அவர்கள் அனுபவம் அறிவைக்கொண்டு உண்மையையறியவும் மற்றோருக்கு உரைக்கவும் செய்கிறார்கள். அது வேதம், உபநிடதம், பௌத்த சுத்தாக்கள் போன்ற நமக்குத் தெரிந்த அல்லது மறைந்த நூல்களின் மூலம் அவ்வப்பொழுது சொல்லிவைக்கப்பட்டது.

இவையனைத்தும் தனிமனிதரின் சிந்தித்தலின் மூலம் உணர்ந்தது, ஆனால், ஒருவர் உணர்வதை மற்றொருவருக்குக் கடத்துவதில் ஏகப்பட்டப்பிரச்சினைகள். அதே நேரம், அதற்குப் பொதுவான ஒரு வடிவம் இருப்பின் சரியாக வரலாம் என்பதன் விளைவே, எழுதப்பட்ட வேதங்களும் சுவடிகளும், அதிலும் உணர்தலில் அறிந்துகொள்ளும் பார்வையில் பல இடர்கள், உருவாகின்றன. இதற்கிடையில் நாம் அறிவின் வளர்ச்சியால் நவீன அறிவியல் உண்டுபண்ணுகிறோம். ஆனால், நாம் அதை வேறொருபார்வையில், பார்ப்பவரின் அறிவு, காணும் உண்மையைப் பாதிக்காவண்ணம், மூன்றாம்நிலை கண்காணிகளைப் பயன்படுத்தும் நிலைக்கு செல்கிறோம், அவை உணர்விகள்/sensors-ஆக அமைகின்றன. இதில் பார்க்கும் முறைமைதான் வேறு, மனிதகுலம் அதன் ஆர்வத்தின் விளைவாலேயே பரிணமித்திருக்கவேண்டும்.

ஏன், நேற்றுநாம் கண்ட சீனோ விளைவு கூட சீனோவின் தோற்றமுரணிலிருந்து வந்தவை தாம். அதற்காக அங்கேயே நின்றிருந்தால், புதிதாக வந்திருக்காது, அதே நேரம் ஏற்கனவே இருந்ததை முன்னோர்களின் யோசிக்குந்திறனையும் கற்றறிந்தனவற்றையும் அறிந்திருப்பதும் நல்லவிசயந்தானே!

அறிவியல் வளர, குவாண்டம், சார்பு இயற்பியல் போன்ற நவீன அறிவியல், ஏற்கனவே நாம் பயன்படுத்தும் கண்காணிகளின் கண்களின் வழியாகக் காண்பதில் உள்ள தவறுகளை எடுத்துக்காண்பிக்க, அதை சரிசெய்ய நாமெல்லாம் உழைக்கிறோம் .. நமக்கும் வாழ்க்கை ஓடுகிறது, உண்மை அதன்போக்கில் அதுவாகவே உள்ளது!

ஆக, எதையும் வியத்தலும் இகழ்தலும் வேண்டாவென்று “எங்கள் முன்னோர்” அன்றைக்கேக் கண்டுபிடித்துவிட்டனர்!!

கற்றலும் சமூகமும் -3: கேள்விகளும் சான்றோர்குழாமும்- யார் ஆய்வாளர்?

என் வாழ்க்கைத்துணை அம்மு கூறினார், பேராசிரியர். க்ளௌஸ் சூல்டன் (Klaus Schulten) இறந்துவிட்டார் என.  எனக்கு யாரென்று உடனேத் தெரியவில்லை, அம்மு அவருடைய மூலக்கூறியக்கவியல் கோட்பாட்டை அவர்கள் ஆராய்ச்சியில் பயன்படுத்தியதாகக் கூறினார், பின்னர் தான் உணர்ந்தேன், குவாண்டவியற்பியலை உயிரிகளிடம்-உயிர்வேதியியற்பியல் (Biophysical chemistry), ஒளிச்சேர்க்கை (photosynthesis), மூலக்கூறியற்பியல் (molecular dyanmics and physics), மீத்திறன் கணியம் (High Performance Supercomputing)-காணும் முறைமையில், அவரும் ஒரு முன்னிலை ஆய்வாளர்.

சரி, ஒரு ஆய்வாளர் என்பார் எப்படியிருப்பார்?  ஆய்வாளருக்கு சிறுவயதில் கல்லூரியில் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் போல் இருப்பாரா?  1970கள் முடியப் பிறந்த, கிராமத்தின் சூழ்நிலையில் இருந்து வந்த என் போன்றவர்களுக்கு அடுத்து மிகப்படித்தவராகத் தெரிபவர் அவ்வூரில் உள்ள மருத்துவர்!  நன்றாகப் படித்தவர்கள் உண்மையில் எவ்வளவு தெளிவாக உள்ளார்கள்.  ஆயினும், எனக்கு இவ்விரு தொழில் பார்ப்பவர்களின் மீதும் எப்பொழுதும் கடுமையான வருத்தங்கள் இருந்ததுண்டு.

ஆசிரியப் பணியாற்றுபவர்கள் மாணவர்களைக் கேள்விகேட்கத் தூண்டுகிறார்களா?! நிசமாகவே, மாணவர்களுககு கல்வியென்றால் விவாதம் சார்ந்தது என்பதேக் காண்பிக்கப்படுவது இல்லை.

நோயாளியொருவர் ஒரு கேள்வியை மருத்துவரிடம் கேட்கும் போது அதற்கான பதில் எவ்வளவுத் தரப்படுகிறது அல்லது பதிலளிப்பதற்கு ஏற்ப கொஞ்சமாவது, மருத்துவர்கள் தயாராயிருக்கிறார்களா?

ஒரு கதை:
என் அப்பா ஒருமுறை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது,  அங்கிருந்த என் தங்கையிடம் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன்.  “என்ன? அவன் எந்திரித்துவிட்டானா” என ஒரு சத்தம் கேட்டது! அது அங்கு வந்த மருத்துவர்! கேட்டது என் அப்பாவை!!  அப்போது என் அப்பாவின் வயது 57, தமிழக அரசின் ஒரு பொறுப்பானப் பதவியில் அப்போது இருந்தார்கள். –பதவிக்குரிய மரியாதையென்பது நோக்கமல்ல– ஆயினும் மருத்துவர்களின் அதிகாரத்தோரணை. அங்கிருந்த மொத்தநாட்களும் இப்படித்தான் என் அப்பாவின் நான் எனும் அகங்காரத்தை உடைப்பதாகவேயிருந்திருக்கும். என்ன ஏது என்பதற்கு வழக்கம் போல் பதில் இல்லை.  எதேச்சதிகாரத்தில் வாழும் குடிமகனுக்குக் கூட ஏதோக் கொஞ்சம் மரியாதைக் கிடைக்கும் போல..

மற்றொரு கதை:
அம்முவின் அம்மா, கடந்த வருடம் தனியார் மருத்துவமனை இராமச்சந்திராவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள், பலக் குளறுபடிகளுக்கு மத்தியில், மருத்துவர்களை, என்ன பிரச்சினை என்று கேட்டதற்குக்கூட யாரும் பதிலளிக்கத் தயாராயில்லை.  மருத்துவர்களும் என்னப் பிரச்சினை என்பதை அறிந்திருக்கவில்லை என்பதும் ஒரு பிரச்சினை.

ஒரே சோதனையைத் திரும்ப திரும்ப செய்துக் கட்டணத்தை வேறு ஏற்றிக் கொண்டே இருந்தார்கள்.   ஆனால் அங்கும் கேள்விக்கேட்டதற்கு சரியான பதிலில்லை. லட்சக்கணக்கில் செலவும் ஆகிவிட்டது, அப்பொழுது கூட கேட்பதற்கு உரிமையில்லையென்பதை சொல்லாமல் சொன்னார்கள்.  சரி மருத்துவர்கள் அவ்வாறெனில், வரவேற்பறையில் உட்கார்ந்திருப்பவர் முதற்கொண்டு கணக்கர் வரை, அவர்கள் கொடுக்கும் செலவினச்சிட்டையை வைத்துக் க்கொண்டு கேள்வியே கேட்காமல் கேட்கும் பணத்தைத் தரவேண்டும் என்கிறார்கள்!  கேட்டால், கடுமையாக இருக்கிறது அவர்களின் பதிலும் மற்ற செயல்பாடுகளும்.  யாரும் பதில்தரமாட்டார்கள் கேட்பதைத் தரவேண்டும்.  அப்படியானால் பதில்தரா மருத்துவர்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் என்ன வேறுபாடு?
சரி, பதிலளிக்காத ஆசிரியர்களுக்கும் பதிலளிக்கவிரும்பா மருத்துவர்களுக்கும் என்ன பிரச்சினையாயிருக்கும்?  உனக்கு நான் சொன்னாலும் புரியாது என்பதா? அல்லது அடுத்த கேள்வி உன் வாயின்னுள்ளேயே அடக்கமாகிவிட வேண்டும் என்பதா?  இம்மனநிலை எங்கிருந்து வருகிறது?

இதில், நம்முடைய மக்களையும் குறைசொல்லாமல் இருக்கமுடியாது, எனக்கு இக்கேள்விக்கு பதில்தெரியாது என ஆசானோ, மருத்துவஞ்செய்யும் மருத்துவனோக்கூறினால், அவர்களை அடுத்து சுத்தமாக மதிப்பதில்லை.

ஆயினும், படித்தவர்கள் முற்றுமுதலாக அறிவதென்னவெனில், சாகும் தருவாயிலும் நான் ஏதும் அறிந்தேனில்லையென்பதாகத்தான் இருக்கும்.  சொல்லிக்கொடுக்கப்படும் அறிவியலும் தெரிந்த அறிவியிலும், அறிவியலின் ஒரு சிறுப்பகுதியே.

இன்னுமொரு கதை:
பகுத்தறிவை அறிவியல்தரும் எனும் போது அறிவியல் எப்படிப் போகுமோ அப்படிப் போய்த்தான் காணவேண்டும், எனக்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக, ஓரிடத்தில் நின்று கொண்டு, நான் பிடித்ததே சரியென்பது அறிவியலாளனின் போக்கு அல்ல, அது, ஒரு பக்கம் சார்ந்தக் கருத்தேயன்றி, உண்மையானத் தெளிவினையோ இயற்கையின் இயக்கத்தைப் பற்றிய அறிவையோத் தராது.  இன்று ஒரு விவாதத்தில், ஒரு மருத்துவரிடம் பேசும் போது இதுவே நிகழ்ந்தது,  குறிப்பிட்ட உணவுமுறை, பாடப்புத்தகம், குறிப்பிட்ட புள்ளியியல்முறை என்பதையும் தாண்டி, ஒரு போக்கு போய்க்கொண்டிருக்கிறதென்றால், அது என்னவெனக் காணவேண்டுமேயன்றி, நீ கூறுவதேத் தவறு என்பதும், எதிரில் பேசுபவரின் ஆய்வு அனுபவத்தின் அளவு எவ்வளவு என்பதையும் காணாமல் பிடித்தப்பிடியில் நிற்பதுவுமாக, “நீ பேசுவது தவறு, நான் பேசுவது மட்டுமே சரி” என்பதாக இருந்தது. அதே விவாதத்தில் வந்து கேள்விகள் கேட்ட உயிரியலாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் கூட எனக்குக் கூறியப் பதிலே வந்தது.  ஒருவர் அவரை– மிகக்கடுமையாக, அனாவசியமாக — விமர்சித்திருந்தவிடத்தில் “நான் அறிவியல் பேசுகிறேன், நீ எதைப் பேசுகிறாய்” எனக்கேட்டிருந்தது மிகக்கடூரமான நகைமுரண்!!

இதில் பிரச்சினையென்னவெனில், பொதுவாகப் பேசுவோர்க்கும் விஞ்ஞானிகளுக்கும் தாங்கள் பேசும் போது தெரியும் வேறுபாட்டைக் கூட உணரவியலா அளவுக்கு இன்னொரு விஞ்ஞானம்பேசும் ஆளிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது, அல்லது மற்ற எல்லோரும் மொண்ணையானவர்கள் என்ற பொதுக்கருத்தா எனவும் விளங்கவில்லை.

பகுத்தறிவு என்பதும் யாதெனவும் விளங்கவில்லை, எதையோவொன்றைப் பகுத்தறிவு எனப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.  பேசிக்கொண்டேயிருப்பதால் மட்டுமே, எப்படி அது பகுத்தறிவாகப் பரிமளிக்கும் என நினைக்கிறார்கள் எனவும் விளங்கவில்லை.  அறிவியலின் சில விசயங்களைப் பேசினாலே பகுத்தறிவா?? அறிவியில் என்பது யாதொரு விசயத்தையும் அக்கக்காகக் கழற்றி, என் விருப்பம் நான் கண்டறிந்தது, பழங்கருத்து, புதுக்கருத்து, நோபல்பரிசு வாங்கியவர் கூறியது, என்பதையும் தாண்டியதாக இருந்தால் மட்டுமே அறிவியல்.

அதே போல், பொதுவெளியில் ஜிஎம் விதைகள் போன்ற விசயங்களை எதிர்ப்பதோ, ஆதரிப்பதோ இல்லை, உண்மையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிவதே அதன் வேலை.  தயவுசெய்து பெரிய பொறுப்பில் உள்ளவர்கள், சமூக மாற்றம் என்ற ஒன்று வேண்டுமெனில் அதற்காக உழையுங்கள்.  முடியவில்லையெனில், அரைகுறை அறிவியல் பேசுவதையும் பாரம்பரியம் பேசுவதையும் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.

சரி, வழக்கம் போல, ‘தென்னைமரத்தைக் கொண்டுவந்து பசுவோடு ஏன் கட்டினேன்’ எனில், சூல்டனைப் பற்றி ஆரம்பித்ததற்கு காரணம், கோட்பாட்டு இயற்பியலரான அவர், அதையும் தாண்டி உயிரியல், நேனோ உயிர்நுட்பம் சார்ந்து யோசித்ததற்கு கேள்விகளும் பாரம்பரிய அறிவியல் மற்றும் அறிவைத்தாண்டியத் தேடலுந்தான் காரணமாக இருக்கிறது. இங்கு பழங்கால அறிவியல் மாதிரி ஒன்றைப் பேசிக்கொண்டே, ஆனால், அறிவியலின் உயிர்நாடியை அடக்கிவிடும் வேலைகளைத் தான் பெரும்பாலும் செய்கிறார்கள்.  தொழில்முறையில்லா அறிவியலாளர்கள் எனில் தங்களின் உண்மைநிலையைப்  புரிந்துகொண்டும் அறிவித்தும் அறிவியலை அணுகுவதே நலம்!

இதன் வரிசையில் முன்னால் எழுதப்பட்டவை:

  1. கற்றலும் சமூகமும் – 1: பள்ளிக் கல்வியமைப்பும் சூழலும்
  2. கற்றலும் சமூகமும் -2: ஆய்வும் கல்வியமைப்பும் சூழலும்
  3. ஏதும் தெரியாத ஆசிரியர்களும், எல்லாம் தெரிந்த மாணாக்கனும்!
  4. மூத்தோர் பெருமை, தடுமாறும் அறிவியல் மற்றும் கணித வரலாறு

தனிமனித அந்தரங்கமும் இணையமும்

ஆதார் அட்டையைப் பொறுத்தவரை, முதலில் காலை உள்ளேவிட்டு, சிறிதுசிறிதாக உடம்பைக் கூடாரத்துக்குள் நுழைக்கும் ஒட்டகம் போல், குடும்ப அட்டை வாங்குதற்குக் கூட , ஆதார் அட்டை வேண்டுமென சொல்வது துப்புரவாக, நல்லவிசயமே இல்லை.  கீழேயுள்ள வாதங்கள், ஆதார் அட்டையினால் ஏற்படக்கூடிய வீச்சை, வெவ்வேறு இழைகளாக சுட்டிக்காட்டுவன.  மேலும், யாரொருவரும் திறந்தப் புத்தகமாய் இருக்க விருப்பப்பட்டால் இருந்து கொள்ளலாம், ஆனால், தான் திறந்தவெளியாய் இருப்பதனாலேயே, மற்றவரின் வாழ்க்கையில் மூன்றாமவர் மூக்கை நுழைப்பது சரியென்று கூறுவது எவ்வகையானது?

செர்மனியில், முகநூல், விண்டோஸ், மேக் தளங்களிலுள்ள சில பயனர் உடன்படிக்கைகள் (EndUser Policy) (நாம் உடன்படுகிறேன் என ஒத்துக் கொண்டவை), தனிநபர் விசயத்தில் மூக்கை நுழைக்கும்விதமாக இருப்பதனால், அந்நிறுவனங்கள் மிகக் கடுமையான அபராதத் தொகைகளை செலுத்தியும், இன்னும் சில வழக்குகளையும் சந்தித்து வருகின்றன. முகநூல் லைக் பொத்தானையும், தற்பொழுது இன்னபிற பொத்தான்களும் கூட தனிநபரின் விருப்பு வெறுப்புகளை பொதுவெளியில் வைப்பது என்பது, அந்நபரைப் பற்றிய வாழ்வினையும் அவரது மனோநிலையையும் பிறர் புரிந்துகொள்வதற்கும் புரிந்துகொண்ட விவரங்களை தவறாகப் பயன்படுத்துதற்கும் வாய்ப்புகளுண்டு என்றநிலைப்பாட்டால் இவ்வழக்குகள் பாய்ந்திருக்கின்றன.

நாம் எல்லாம் “பேரைச் சொன்னாலும் ஊரை சொல்லக்கூடாது” என்றுக் கூறுவனக்கூறல் அழுத்தம் திருத்தமாய் இருந்தவர்கள்.   இருப்பினும் இன்றையப் பொதுவான மனநிலை, “நானொரு திறந்தப் புத்தகம், தெரியுமா” எனக் கூறும் அளவுக்கே இருக்கிறது.   தத்தமது அரசியல் சார்புவிவரமன்றி மற்றவையெல்லாம், பொதுவெளியில் இருந்தால் ஒன்றும் பிரச்சினையில்லை என்றதொருநிலை இருந்தேவந்திருந்த போதும்   இந்நிலை சற்றுமாறிவருகிறது.  ஆனால் எல்லோரும் புரிந்துகொண்டு மாறுவதற்குள்,  நம் மரபணு தகவல் முதற்கொண்டு எல்லாம் அரசுக்குப் போய்விடும் போல் தெரிகிறது.  மைனாரிட்டி ரிப்போர்ட், மேட்ரிக்ஸ் போன்ற திரைப்படங்களில் வரும் மெய்நிகர் வாழ்க்கை போன்ற விசயங்களெல்லாம், வெகுவிரைவில் உண்மையாகலாம்– (சொல்லிவாயை மூடவில்லை, கீழே புதிதாக இது சார்ந்த சோதனை நடந்திருக்கும் சேதியைக் காணலாம்).  அவையெல்லாம் படத்தில் பார்க்க நன்றாக இருந்தாலும், உண்மையாகும்பட்சத்தில் இப்புவியில் வாழ்க்கையென்பதேக் கொடுமையான ஒன்றாகிவிடும்.

தமிழில் கோரி டோக்டோரோவ் (Cory Doctorow), இரிச்சர்ட் ஸ்டால்மேன் (Richard Stallman, நிறுவனர் Free software foundation) மாதிரி யாரும் எழுதுவதில்லையென நினைக்கிறேன்.   இத்தனைக்கும் இரிச்சர்ட் சுடால்மேன் போன்றோர் இந்திய அரசாங்கம், தனிமனித இணைய சுதந்திரங்களில் தலையிடும் போது எல்லாம் (காங்கிரஸ் அரசில் வலைப்பதிவுகள் தடைசெய்யப்பட்ட விவகாரங்களிலும், இன்னபிற தனிமனித பேச்சுரிமை விசயங்களிலும்), இங்குள்ள மக்களுடன் (கட்டற்ற மென்மக்குழுக்கள் -Free and Open Source Software groups) சேர்ந்து குரல் கொடுப்பவர். கீழேயுள்ள சேதி தான், நான் தமிழில் பார்த்த ஆதார் பற்றி எச்சரிக்கை செய்யும் முதல் பதிவு. நான் பலமுறை இதழ்களில் வரும் கருத்துப்பக்கங்களில், இது பற்றி கருத்து சொல்லும் போதெல்லாம், மக்கு கிராமத்தான் போலவோ நீ இந்தியனா என்பது போலவோ உள்ளது, பெரும்பாலானோரின் பார்வை. இத்தனைக்கும் நம்நாட்டில் தகவல்தொழில்நுட்பத்துறையில் மிக அதிகம்பேர் உள்ளனர். கல்லூரிகளிலும், கணிசமான க்னூ/லினக்ஸ் ஆட்களும் இருக்கிறார்கள். ஆயினும், போதுமான விழிப்புணர்வில்லாமல் இருக்கிறது.

எழுத்தாளரும் இணையவுரிமை ஆதரவாளருமான கோரி டோக்டோரோவ் இணையம் பற்றியத் தெளிவினையும் கட்டற்றத்தளங்களைப் (எ.கா. Free Software Foundation, Electronic Frontier Foundation) பற்றிய விழிப்புணர்வையும், அரசு அல்லது குடியமைப்பில் தனிமனித உரிமைமீறல் வாய்ப்புகளைப் பற்றியும் எழுதிவருகிறார்.  அவர் எழுதிய “லிட்டில் பிரதர்” எனும் நூல்(PDF), இணைய உரிமைமீறல் பற்றிய அடிப்படை விசயங்களைப் பற்றிய ஒரு கற்பனை கதை.  ஒரு பள்ளியில் படிக்கும் பள்ளிச்சிறுவர்களும் அப்பள்ளியில் சிறுவர்களைக் கண்காணிக்க ஆசிரியர்கள் செய்யும் விசயங்களையும்  நாட்டுத்தலைவர்கள் அல்லது அரசு எந்திரங்கள் எப்படி மக்களைப் பாதிக்கின்றனர் எனும்வகையில் தற்குறிப்பேற்றிக் கூறியிருப்பார்.   இந்நூலை படைப்பாக்கப் பொது உரிமத்தின் கீழ் (Creative Commons license), இலவசமாக இட்டுள்ளார்.

இக்கதையில் பேசப்படும் பொருட்களாவன: (wikipedia)
தனியொருவரின் அந்தரங்க வாழ்வு (privacy), தாராள-அரசியல்வாதம் (Libertarianism), காவற்றுறை–ஏவல் துறையாவது (ஜெயலலிதாவின் உடல்நிலைப் பற்றி எழுதுவதை காவற்றுறையின் கைது நடவடிக்கை போன்றவை), தீவிரவாதம், தகவல் மறைப்பியல்(Cryptography), கொந்தர்கள் (hackers), சமூகப் பிறழ்ச்சி (dystopian society).

உபரி தகவல்
போனவாரம், இணையத்தை முடக்கும் விதமாக, சேவைமுடக்கும் தாக்குதலை (DoS- Denial of Service) சிலர் செய்ததாக சேதியில் காணநேர்ந்தது.  இது IoT எனப்படும் Internet of Things (இணையத் தொலைக்காட்சி, இணையத்தில் இணைக்கக்கூடிய வகையிலான, குளிர்சாதனப் பெட்டி, காபி இயந்திரம், போன்ற பலவிதமான மின்னணுக்கருவிகள்) –  இணையவழியியங்கும் கருவிகளின் வழியாக நடந்த பரந்துபட்டத் தாக்குதலாகும் (DDoS- Distributed Denial of Service).  இம்மாதிரியான இணையஞ்சார்கருவிகள் தகவல் நுட்பம் அடிப்படையில் மிகவும் வலுவில்லாதவை.  இது போன்ற வலுவிலாநுட்பங்களை வலுப்படுத்தக் கொந்தர்கள் (hackers) கைகொள்ளும் தாக்குதல் நன்மைபயப்பன (போன வாரம் நிகழ்ந்தவை, எப்படியானது எனத் தெரியவில்லை.)

ஆனால், நம்முடைய அரசுத்தளங்களும் அரசுசார் நிறுவனங்களின் தளங்களும் அடிக்கடி, பழிவாங்கும் முறைகளில் முடக்கப்படுகின்றன என்பதை எல்லா நேரமும் பார்த்து வருகின்றோம்.  செர்மனியில், நாட்டின் தலைவியின் அலுவலகசெயல்பாடுகளையும் இரகசியங்களையும் சீனக்கொந்தர்கள் உளவுபார்த்ததாகத் தகவல் வெளியானது.  NSA-ந் தளங்களும் தாக்குதலுக்கு உள்ளாவதாகவே செய்திகள் வருகின்றன. இப்படி முன்னேறிய முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் அனைத்திலும் இணையப்போர்த் தாக்குதல்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.

ஒருபுறம் சர்க்கரைத் தொழிற்சாலைகள் நிதிவழங்கியதனால், பெரிய பல்கலைக்கழகத்தில் உள்ள பெரிய ஆய்வாளர்கள் கூட, சர்க்கரையைப் பற்றிய சரியான அறிவியல் ஆய்வுகளை உண்மைகளை தாங்கள் வெளியிடவில்லை என்பதை ஒத்துக்கொள்ளும் நிகழ்வுகளையும் காண்கிறோம்.   அதாவது பொதுமக்களின் நல்வாழ்வுக்கென உருவாக்கப்பட்ட ஒரு பொறுப்பானக் கட்டமைப்பில், தனியார்நிறுவனங்களின் சிறப்பான கைங்கர்யங்கள் இவை.

அவ்வப்போது சர்வதேச மருந்துவியாபாரிகளாலும், அரசு உளவுத்துறைகளினாலும் உயிரித்தாக்குதல் போன்ற சதிகள் நடைபெறுவதாக ஒரு பொது கருதுகோள் உள்ள நிலைமையில் (அது பொய்யாகவே இருந்தாலும் கூட), நம் வாழ்க்கையின்அடிப்படை சாராம்சமான சிலவிசயங்களை மற்றொருவருக்குப் பகிர்தல் என்பது எவ்வகையிலும் நன்றன்று.

இப்படி ஒன்றைப்பிடித்து ஒன்றைத்தொட்டு பெரிய பிரச்சினைகளை உண்டுபண்ணக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்பதை உணரவாவது செய்யவேண்டும்.   சட்ட அமைப்பு/உச்ச நீதிமன்றம் தேவையேயில்லை என்றது, ஆயினும், அதை கட்டாயம் ஆக்குவது என்பது எப்படியென விளங்கவில்லை.  இனியும் ஆதாரிடமிருந்து தப்பிப்பது எப்படியென விளங்கவில்லை.

இதை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில், ஒரு செய்தி, இரண்டு செயற்கையறிவுத்திறன் பெற்ற கருவிகள் (Artificial intelligence) தங்களுக்குள் தகவலை மறைத்துப் பரிமாறிக்கொள்ளப் பழகியுள்ளன, அவை எம்மாதிரியான தகவல் மறையீட்டுமுறையைப் பயன்படுத்துகின்றன என  விஞ்ஞானிகளும் அறிந்தாரில்லை.  கதை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதா?! “Me me me…”, “Me TOO”.

அரசு இயந்திரங்களை மனிதர்கள் தங்களின் நல்வாழ்வுக்காக, தாங்களே வகுத்த சட்டங்களால் உருவாக்கி இயக்கும் போதே, மனிதர்களுக்கு எதிராக மாறக்கூடிய வகையில் இருக்கும்பட்சத்தில், கருவிகள் சட்டம் இயற்றினால்?  ஆதார் அட்டை நெற்றியில் பச்சைக்குத்தப்படலாம்.