தேசபக்தி யாதெனில்..? – ஆட்டக் கோட்பாட்டின் வழியாக. (Nationalism and Game theory)

பாரத ஆத்தாளே நீ வாழ்க! — தேசத் துரோகம்,
பாரத் மாதா கீ ஜே — தேச பக்தி..

இப்படித் தான் போகிறது, இந்திய தேசியம் பேசுபவர்களின் கருத்துகள். மேலிருக்கும் சொற்றொடரில் உள்ள ஒரே பொருள் கொண்ட விசயங்களில் இரு வேறு நிலைப்பாடுகளின் மீநிலைப்பாடே இக்கட்டுரையின் போக்கு.  இச்சொற்றொடரில் இரு கருத்துகளுண்டு.

ஒன்று மக்களின் சொந்த மொழியை வெறுக்கவோ அல்லது முக்கியத்துவத்தை இழக்கவோ செய்வது போல் செய்வது

இரண்டாவது, தேசபக்தர்கள் கூறுவதையே மற்ற தரப்பினர்,  தத்தம் வழியிலோ மொழியிலோக் கூறுவதை தேசபக்தர்கள் எதிர்ப்பது.  சாதி மத மொழி இன வேறுபாட்டைக் கொண்டிருக்கும் போழ்து, நாட்டின் முன்னேற்றத்திற்காகாது என்பதை இரு வகுப்பினரும் கூறத் தான் செய்கிறோம். ஆயினும் அவர்கள் அதை வைத்து வேறொரு குழப்பமான அரசியலை முன்னெடுக்கும் பொழுது, அதில் துவேசம், வெறுப்பு, அரசியல் என மற்றையவரின் மீது சேறுவாரித் தூற்றுகின்றனர்.  இவ்விருக் கருத்துகளுக்கும் இடையே உள்ள தொடர்பு மிகவும் வியப்புக்குரியது, இவ்விரண்டும் கல்வி சாலைகளில் நிகழ்வது ஆச்சரியகரமாணது அல்லவா!  வடமொழித்திணிப்பு, ஜவஹர்லால் நேரு, ஹைதராபாத் பல்கலைக் கழகங்களைப் பற்றிய கருத்துகளும் அவை கையாளப்படும் விதங்களூம் இரண்டாம் வகையினது.

உணர்ச்சி பொங்க சமக்கிருதத்திலேயோ இந்தியிலேயேக் கத்தினாலேயே தேசபக்தி என்பது படுமுட்டாள்த் தனமானது இல்லையா.  அது பற்றி சிலக் கட்டுரைகளில் விவாதித்திருந்தேன் [1, 2].

மேம்போக்காய் உலகம் முழுவதும் ஒரு மாதிரியான தன்னலம் எனும் தீவிரவாதம் தலைதூக்குகிறது போல் ஒரு மாயை உண்டாகிறது, இது கிட்டத்தட்ட, நாம் படிக்கும் போது, வகுப்பில் ஆசிரியர்கள் போன வருடம் இருந்த மாணவர்கள் தங்கம் என ஒவ்வொரு வருட மாணவர்களிடமும் கூறுவது போலானது.  சரியாக உற்றுக் கவனித்தால் ஆரம்பகாலம் தொட்டே மனிதர்கள் ஒரு மாதிரியான ஆக்கிரமிப்பைப் பண்ணியுவர்கள், நியாண்டர்தால் மனிதர்களுடன் கூடிக் கெடுத்ததாய் கூட சில மாதங்கள் முன்னால் வந்த ஆய்வில், உயிரி ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மனிதர்கள் ஒரே விசயத்துக்கு வெவ்வேறு காலதேச வர்த்தமானங்களில் வேறுபடுவது ஒன்றும் தவறில்லை.  ஆயினும், பேசப்படுபொருள் ஒன்றாயிருக்குங்கால், அதன் கருத்தின் பொருட்டு எதிரெதிர் கருத்துகள் கொண்டிருந்தாலும் கூடியிருத்தல் நலம்! இதன் மூலம் பல விசயங்களை சரிசெய்ய முடியும்.  இவை புரிந்தும் புரியாதது போல் கையாளப்படுகின்றனவா என விளங்கவில்லை.  பல்கலைகளில் அரசியல் பேசவேக் கூடாது என்று ஒரு கூட்டம் கிளம்பியிருப்பது எதன் பொருட்டு எனவிளங்கவும் இல்லை.  முரண்படுதலும் கூடுதலும் ஆட்டக் கோட்பாட்டின் (Game theory) படி நல்ல வளர்ச்சியான சமூகம் அமைக்க வழிகுக்கும் எனப் பல சமூக சோதனைகளில், சமூக இயற்பியலாளர்களாலும், கணிதவியலாளர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது.  இரு பக்கமும் வெற்றிகளை விளக்கும் நாஷ் சமநிலையிலும் (Nash Equilibrium) கூட இரு பக்கத்திலும் உள்ள சாதகபாதக நிலைகளைக் எடுத்து சீர்தூக்கி அமைப்பதே ஆகும்.   உதாரணமாக, தற்பொழுது உள்ள சமூகத்தைக் கூட சில நிலைப்பாடுகளை வைத்து மேம்போக்காகப் பிரிக்கலாம்.

1:  இரு புறத்திலும் நன்மையே இருக்க.
2:  இரு புறத்திலும் குறைகளையேக் காண.
3, 4:  இருபக்கத்திலும் உள்ள சாதக பாதகங்களை எடுத்தியம்புதல்.

சத்திய யுக நிகழ்வாக முதலாம் நிலைப்பாட்டை, பெரும்பாலும் யாரும் கலியுகத்தில், யோசிப்பதேயில்லை என்பது வருத்தத்திற்குரியது.  யாரையாவது யாராவது ஒத்துக் கொள்ளும் தன்மை, அப்பனாத்தாளானாலும் பிள்ளையரானாலும் எவரிடமும் இருப்பதேயில்லை.  பெரும்பாலானோர் இரண்டாவதையே தத்தமது நிலையாகக் கொள்கின்றனர், பொது வாழ்வில் “எங்ககிட்டயேவா?” என எக்காளம் பேசுவோர், “அடுத்தவனிடம் நீ எப்பொழுதும் சீப்படுவாய்” என ஜோசியக்காரர் கூறும் போது “ஆமாஞ் சாமி, கரேட்டு” என்பது மாதிரி, அவர்களுக்கே அவர்களைப் பற்றி சந்தேகம் இருப்பதால் எல்லாரிடமும் குறைகளைக் காண முடிகிறவர்கள்.  3, 4 ஆவது நிலைகளைக் கொண்டவர்கள் யாராலும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாவிட்டாலும், இம்மாதிரியானவர்கள் ஆல்ஃபா விலங்குகளாக இல்லாமல், சமூகத்தை சிறிது சிறிதாக நேர் செய்யக் கூடிய ஆல்ஃபா விலங்குகள்.  சில விலங்குகள், ஆல்ஃபாத்தனம் கொண்ட சண்டியர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பதும் ஓர் அதிசயமான சங்கதி! இருக்கட்டும்!

இப்படி படிநிலைகள் மிகவும் எளிமையானது, ஆனால், நாம் எங்கிருக்கிறோம் என்றே நிறையப் பேருக்கு விளங்கவில்லை அல்லது, விளங்கிக் கொள்ள மறுக்கின்றனர்.  எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தால் என்ன ஆகும்?  சமூகம் வளராது அல்லது அழியும்,   அதுவும் இரண்டாவது நிலைப்பாட்டின் pay-off – அந்நிலைப்பாட்டிற்கான விலை –  மிகவும் கொடுமையாக இருக்கும். உதாரணத்திற்கு ஹிட்லரின் தத்துவங்கள், சர்வாதிகாரியின் கீழுள்ள தேசத்தில் மக்களின் நிலை.  மாற்றுக்கருத்து இருக்கும் போது, ஒன்றைத் தொட்டு ஒன்றைப் பிடித்து சமூகம் வளரும், எடுத்துக்காட்டு, மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகள்.  மக்களின் போக்குக்கேற்ப மாறும் ஸ்காண்டிநேவிய நாடுகள்.

சரி நம் நாட்டிற்கு வருவோம், கல்விச்சாலைகள் அரசியல் பேசுவதற்குரியது இல்லையெனக் கூறுபவர்களின் தன்மை எத்தகையது?   பெரும்பாலானோர் ஆள்வோர் சார்ந்து பேசுவோர். அல்லது 2வது நிலைப்பாடான எதிலும் குற்றம் காண்பவர்.

ஆள்வோரை ஆதரிப்போராய் இருந்தாலும் குறைகளைக் காண்போராய் இருந்தாலும் சரி,  பழம்பெருமைப் பேசுவதே பிடித்திருக்கிறது, பெரும்பாலானோர்க்கும்,  உலகத்தின் மிகவும் பழையப் பல்கலைகளான, தக்கசீலமும், நாளந்தாவும்  வெறும் வேதத்தைப் பற்றி மட்டுமாப் பேசின,   அரசியல், போர்முறைப் பற்றியும் பேசின.  குறளும் சாணக்கியமும் அரசன் செய்யவேண்டியன பற்றி பேசினவும் கூட அதன் தாக்கத்தினாலேயே தானே.  தத்துவங்கள் ஊடாக அக்காலத்திற்கேற்ற வகையில் அறிவியலும் பேசப்பட்டது.

ஆனால், இப்படிப் போகும் விவாதமானது, எல்லாவற்றிலும் குறைகளைக் காணும்படிக்கு எல்லாநிலைகளிலும் மாற்றிக் கொண்டே வருவதையும் காண முடிகிறது.

  • பொய்யான காணொலிகள் அதை வைத்து விவாதங்கள்
  • மாணவர்களை தீவிரவாதிகள் அல்லது தேசத் துரோகிகள் என்பது,
  • பல்கலைக் கழகங்கள் மூடப்பட வேண்டும் என்பது
  • சமூக விவாதக் குழுக்கள் மூடப்படவேண்டும் என்பது
  • ஒரு மாணவனின் இறப்புக்கு உலகவே வருத்தம் தெரிவிக்கும் போது, “நான் அங்கிருக்கிறேன்இங்கிருக்கிறேன்” என ட்வீட் போட்டுவிட்டு, நாட்கள் கழித்து வருத்தம் தெரிவிப்பது.
  • இதில் ஒரு பெண்ணை சுடச்சொல்வது தேசபக்தி; சாதியப் பிரச்சினைகளைப் பேசுவது தேசத்துரோகம்
  • இவ்வளவு பிரச்சினைகளுக்கப்புறம் நேற்றே வாயைத் திறந்தது
  • நடக்கும் எல்லாவற்றையும் தேசியத்தின் பேரில் சேர்ப்பது.

அதற்கு ஆதரவுகள் வேறு.

சரி, அதன் பின்னால் இருக்கும் நியாயங்கள் எவ்வகையானது எனக் காண்போம்.

பள்ளியிலும் கல்லூரியிலும் கண்களை மூடிக் கொண்டு இருந்துவிட்டு, திடீரென ஒரு நாள் கண்விழித்து வாக்களித்துவிட்டுத் திரும்பவும் கண்களை மூடிக் கொள்ள வேண்டும் என நினைப்பது எத்தகையது??  என் தந்தையார் பெரிதாக அரசியல் நாட்டம் இல்லாதவர்கள், ஆனால் அவர்களே என்னை குறைந்தபட்சம் தேநீர்க் கடை அரசியலாவது பேசவேண்டும், தேநீர் கடைக்குப் போய் செய்தித்தாள்களைப் படித்து அவர்கள் பேசுவதையாவதுக் கவனி என்பவர்கள்.  ஆனால், எனக்கு அடிப்படையேப் புரியாததால், திருவள்ளுவம், பிளேட்டோ, சாக்ரடீஸ் எனச் சுற்றிக் கொண்டிருந்தேன், இருக்கிறேன்.  என் தந்தையையும், தம் குழந்தைகள் அரசியல் பேசக்கூடாது என குதிக்கும் பெற்றோரையும் ஒப்பிடும் போது எனக்கு என்ன சொல்வது என்றுத் தெரியவில்லை.  அதுவும் நாட்டின் அரசியலையும் பிற நாட்டு அரசியல், பிறநாடுகளுடனான உறவைப் பற்றியும் அலசி ஆராய்ந்து, அதற்கான கொள்கைகளை வரையறுக்கும் பல்கலைக்கழகத்தில்..  இவர்களுக்கெல்லாம், என்ன பேசுகிறோம் என விளங்கவாவது செய்கிறதா எனத் தெரியவில்லை.

அக்காலத்தில் அவர்கள் பேசிய அளவே அறிவியலும் பேசப்படவேண்டும் என நினைப்பதும், கொடுக்கும் காசை வைத்து கொஞ்ச காசில் நிறைய அறிவியல் செய்யலாம் எனக் கூறும் அமைச்சரைக் கொண்டாடுவதற்கு பதில் தலையை வடக்குப் பக்கம் வைத்து தினமும் படுக்கலாம்.   இந்தம்மாள் தான், கொஞ்ச நாளை முன்னர் ஐஐடி மாணவர்கள் ஏன் வெளிநாடு செல்கிறார்கள், அவர்களுக்குரிய மானியக் கணக்கு என்று பிதற்றியவர்.  இப்படி செய்தால், இன்னும் அறிவியலை வெறியுடன் செய்வோர் வெளிநாட்டை நோக்கி வரத்தானே செய்வார்கள்.  இதில் இவர்கள் சீனாவுடன் போட்டியிடச் சொல்கிறார்கள்.  ஒரு மானியக்குழுவைக் காட்டிக் காக்க துப்பில்லாத அரசும் அதன் இயந்திரங்களூம் விஞ்ஞானிகளை கைநீட்டுவதற்கு முன், இது சரியானவழியா எனக் கேட்டுக் கொள்ளுங்கள்! சரி, போதும்!

மக்களின் கைவரை இணையம் வளர்ந்திருக்கும் இவ்வேளையில்,  பல்கலைக் கழகத்தில் கூட அரசியல் கூடாது என்றும் நாங்கள் சொல்லும் அளவுக்கு. கொஞ்சமே கொஞ்சமான அறிவியல் போதுமென்றும்,  பொதுமக்களை சிந்திக்கச் சொல்லும் சிந்திக்க வைக்கும் அரசு, அடுத்து அது செய்யும் எல்லாவற்றையும் சரியென சொல்ல வைக்க நிறைய நாட்களாகாது.   Make in India எனக் கூறும் அதே நேரம், உள்ளூர் கடைகளை மூடியும், அறிவியலுக்கானப் பாதையைக் குறுக்கியும், மக்களை எப்பொழுதும் பயனர்களாகவும் கண்டுபிடிக்கும் திறனை முடக்கியும், இயந்திரங்கள் போல் ஆக்கவும் முயல்கின்றன.  விளம்பரப்படுத்துவது ஒன்று, நடப்பது அதற்கு நேரெதிர்.  ஆயினும் சமூகம், அரசின் பக்கம் வருமாறு ஊடகங்களின் அமைப்புகள்!  ஆக சமூகத்திற்கான pay-off ‘ஞே!’.

செர்மனியில் குழந்தைகளுக்கான அரசியல் செய்தி:

வெளிநாட்டுக் குழந்தைகள் கற்பது போல வேண்டும் என்பவர்கள் கவனிக்க.
செர்மனியில், குழந்தைகளுக்கான அரசியல் செய்திகள் என்று ஒன்று உண்டு.  என் தோழியினுடன் வேலைபார்க்கும் பேராசிரியையின் மகனுக்கு 9 வயதே ஆகிறது.  அவனுக்கு அரசியல் மிகவும் விருப்பம்!  சில வருடங்களுக்கு முன்னர் அவனை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.  அவனுக்கு ஆங்கெலா மெர்க்கல் (Angela Merkel) சார்ந்த ஆளுங்கட்சியே (CDU) மிகவும் பிடித்தம், நாம் வேண்டுமென்றே, நம் செர்மனில், பெரிய எதிர்க்கட்சியான SPD (சோஷலிச)க் கட்சியைப் பற்றி என்ன நினைக்கிறாய் எனக் கேட்டதற்கு, அவர்களின் கொள்கைகள் முட்டாள்தனமானது எனக் கூறினான். திரும்பவும் வேண்டுமென்றே எனக்கு SPD-யேப் பிடிக்கும் எனக் கூறியதற்கு, என்னை ஆழ்ந்துப் பார்த்துவிட்டு, அவனுக்கு ஏன் ஆளுங்கட்சிப் பிடிக்கும் என சில காரணங்களை அடுக்கினான்.   அதை அவன் தந்தையிடம் கூறிய போது, அவருக்கு மிகவும் அதிர்ச்சிகரமான மகிழ்ச்சி!  அவனுடைய சார்பைப் பற்றியும் பொதுவெளியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதையும் அவர்கள் அவ்வளவு எதிர்பார்த்திருக்கவில்லை! சிறுவனுக்குரிய விசயங்கள் இருந்தாலும், அதன் தீவிரத்தை உணர்ந்திருந்தான்.

நான் கல்லூரியில் படித்தக் காலத்தில்,  சிறுவயதில் நான் படித்தப் பள்ளியிலேயே, கணிதம் சொல்லித்தர அழைக்கப்பட்டேன், அப்பொழுது சில கிராமத்துப் பெண் பிள்ளைகள், 10-வதுப் படிக்கும் போதே, அரசியல் நோக்கைக் கொண்டிருந்தனர், அவர்கள் இந்நேரம் அரசியலில் பெரிதாக ஆகியிருக்கலாம், அப்படியில்லாத பட்சத்தில், அடுத்த தலைமுறைக்குத் தேவையான படிப்பைத் தந்து கொண்டிருக்கலாம்.  அரசியல் வேண்டாம் என்று சொல்லுபவர்கள், பெரும்பாலும் நம்மூரில் தம் பிள்ளைகள் வளர்ந்து வெளிநாடுகளுக்குப் போய் இருக்கட்டும் என நினைப்பதால் தான், அரசியல் பேசக் கூடாது என்கிறார்களா எனத் தெரியவில்லை.   தாம் வாழும் சமூகத்தைப் பற்றி விமர்சிப்பது என்பது, சமூக ஓட்டத்தைத் தாண்டியும் அச்சமூகம் நன்றாக இருக்க முடியும் என்று நினைத்தும், மேலும் சிந்தனைகளால் மாற்றம் எப்படியாகப்பட்டதாக இருக்க வேண்டும் என யோசித்தாலும் தான் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படை அறிவினாலேயே விவாதிக்கிறார்கள்.  ஆனால், தேசத்தின் வளர்ச்சியைப் பற்றி யோசிப்பவர்களைத் தடுப்பவர்கள் தேசபக்தர்களாகின்றனர். செய்பவர்கள் தேசத்துரோகிகள் ஆவது வினோதமான விசயம் அல்லவா.

சரி இதில் மிதவாதம் பேசுபவர்களின் (பேசுவதாக நினைப்பவர்களின்) நோக்கு எப்படியானது?

கைது செய்யப்பட்ட மாணாக்கர்கள், ஆய்வாளர்கள் அவர்களின் கல்விநலனையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு வெளிவிடுதல் நலம் என்கிறார்கள்.  மேலும், ஏதோ இதற்கு முன்னர் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் விவாதங்களே நடக்காத மாதிரி, தற்பொழுது தான் இவையெல்லாம் நடக்கின்றன என்பது போலும் மக்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளது, மிகவும் ஆபத்தானது.   அரசைக் காட்டமாக எதிர்ப்பதில் ஏற்படும் சுணக்கம்.

ஆனால் அது கல்வி நலனை மட்டும் கொண்டு செய்வது என்ற சிந்தனையில் பெரிய ஓட்டை உள்ளது.  அதுவும் நல்ல வழியாகத் தெரியவில்லை.  ஆளும் ஆட்சியர்களுக்கெதிரான ஒரு விசயத்தை முன்வைக்க கல்விச் சமூகத்துக்கும் உரிமை உண்டு.  மொண்ணையானக் கல்வியை வழங்கும் கல்விநிறுவனங்களைக் கேள்விகேட்கவோ, அதன் அதிகப்படியானக் கட்டணக் கொள்கைகள் அதன் தரம் பற்றிய கொள்கைகள் மீது கைவைக்கவோ வக்கில்லாதவர்கள்,  ஐஐடி மத்தியப் பல்கலைக் கழகக் கல்விநிறுவனங்களின் சுயசிந்தனையைத் தூண்டும் சூழ்நிலைகளில்  கைவைக்கத் துணிகிறார்கள்.   சோறு போட்டால் செஞ்சோற்றுக் கடனைச் செய் என்பது போல் உள்ளது, இந்நிலைப்பாடு.

எங்கெங்கும் புரட்சி நடக்கப் போகிறதென்றால், முதலில் ஆள்வோர்கள் கைவைப்பது, பல்கலைக்கழகங்கள் தான் என்கிறது வரலாறு!  அது சீன பர்மிய கிரேக்க இலங்கை ருஷ்ய அடக்குமுறை இப்படி எந்த நாட்டுப் பிரச்சினையானாலும் அதைக் காண முடியும்.  தேசியவாதிகளானாலும் இடதுசாரியானாலும் முதலில் சொல்வது, “இதை நாட்டுக்காகத் தான் சொல்கிறோம், அதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையென்பதேயன்றி வேறு கிடையாது,  அதனால் பல்கலைக் கழகங்களை மூடுகிறோம்” என்பர்.  நன்றாக கவனித்தால், அதே போல சமூகத்தில் நிகழ்வதும், நம் கல்விக்கூடங்களும் அவ்வழியில் சேரும் அபாயம் இருக்கிறது.     நாட்டின் ஒழுங்குமுறையில் முனைப்புக் காட்டாமல், இப்படி இருக்கிறார்கள்.   நானும் என் பாரம்பரியத்தை மதிப்பவன் அதனாலேயே தான் கேள்விகளை எழுப்புகிறேன்.  இவர்களின் போக்கு சன்னியாசிகள் ஆனாலும் கோபம் கொள்ளச் செய்யும் என்றேத் தோன்றுகிறது.   சுற்றியுள்ள நாடுகள் கேள்விகேட்கும் போதும் ஹிட்லரும், கிம் ஜாம் உன்னும் உருவாகத் தான் முடிகிறது  அது இணையம் இல்லாதக் காலமானாலும், இணையமிருக்கும் காலாமானாலும். எப்படியானக் காலமானாலும்.

சிலரின் கருத்துகள், பல்கலைக்கழக விவாதங்களை ஆதரிக்கும் பேராசிரியர்களை உலகச் சமாதானம், தீவிரவாதச் சமாதானம் பேசச் செல்லுங்கள் எனக் கூறுகிறார்கள்.  இவர்கள் பல்கலைக்கழகங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றே விளங்கவில்லை.   வெளியுறவு, அரசியல் சார்ந்த முடிவுகளை ஆராய அதிகாரிகள் மட்டும் இருப்பார்கள் என நம்புவது மிகவும் மேலோட்டமான எண்ணம்,  எல்லோராலும் பாராட்டக்கூடிய வகையில் ஒரு எந்திரம் செய்வதற்கு அதன் பின்னால் உள்ளவர்களின் உழைப்பும் ஆய்வும் மிகவும் முக்கியமானது, ஆனால் அவை பற்றி பயனர் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, அதே போல் தான் இதுவும் எனத் தோன்றுகிறது.   வெளியுறவுக் கொள்கைகளும் அரசியல் கொள்கைகளும் பல்க்லைக் கழக அளவில் வெவ்வேறு விதங்களில் அலசப்பட்டும்  ஆராயப்பட்டும் பிரசுரிக்கப்படுகின்றன, அவை பெரும்பாலானத் தருணங்களில் இக்காலத்திற்கும் நடப்பு அரசியலிலும் தாக்கத்தை உண்டு பண்ண முடியும் எனக் கூறிவிட முடியாது, ஆயினும், எல்லா நேரமும் தாக்கத்தை உண்டு பண்ணாமலும் இருப்பதில்லை.  தாக்கம் இல்லாதிருத்தலுக்கானக் காரணங்களும் பல நிலைப்பட்டவை.   பின்னர் இது பற்றி விவாதிக்கலாம்.

நான் ஐஐடியில் படித்த போது, எனக்கு கற்றுக் கொடுத்த ஒரு குவாண்டம் இயற்பியல் பேராசிரியர்,  காஷ்மீர் விவாகாரத்தைப் பற்றி நம் நாடாளுமன்றத்தில் இருந்து, அமெரிக்க சபைகள் வரை பேசியவர், அதற்காகத் தொடர்ந்து கொலைமிரட்டல்களையும் பெறுபவர். ஆனால் அவர் கூட இப்படி முடக்கும் வேலைகளை ஆதரிப்பவர் இல்லை.  நாட்டை ஆதரியுங்கள், ஆனால் நடப்பவற்றையும் கண்கொண்டு வாளாவிருப்பது எவ்வகையிலும் நல்லதல்ல.   இப்படி சுயசிந்தனையை ஆதரிக்கும் ஆசிரியர்களை விட்டுவிட்டு, பிள்ளைகளுக்கு நூலில் இருக்கும் விசயங்களைக் கற்றுத் தரமட்டும் போதுமான ஆசிரியர்கள் வேண்டுமென்பதால் தான், சமூகத்தில் கல்விச்சீரழிவும் பின்பு நாமே அதைக் குறை சொல்வதும் நிகழ்கிறது.   எல்லையில் நின்று போராடும் போர்வீரர் எவ்வளவு முக்கியமோ, அதே போல் விமர்சனத்தை நோக்கும் பக்குவமும் வேண்டும்.  வெறும் வலுவான எல்லையை வைத்துக் கொண்டு, உள்ளேக் குப்பையைக் கொட்டிக் கொண்டே இருந்தால் எப்படி?

ஆக, எல்லாநேரமும் கண்களை மூடிக் கொள்ளவேண்டும், அவர்களுக்கு வேண்டும் நேரம் மட்டும் கண்திறந்து பார்த்து அவர்களின் துயரம் போக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய தன்னலக் கருத்து?

குறைகளை மிகுதியாக்கிக் கொண்டே இன்னொரு பக்கம் எதற்கு ஆதரிக்கிறோம் எனத் தெளிவான ஆய்வுநோக்கில் கருத்துகளை விடாமல், உணர்ச்சிவசப்பட்டுக் கத்துவதன் சம்பளம் சாதிய மத இன வெடிகளை ஆயத்தப்படுத்தி குழப்பம் மிகுந்த நாடாக்குவதே ஆகும்.  வேண்டாதவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டால், நாடு என்பது யார் வாழ்வதற்கு?   இது மிக எளிதான விசயமாக ஆகிவிட்டால், உள்ளே இருக்கும் பிரச்சினைகள் பூதாகரமாய் ஆகும், வீட்டில் இருப்பவர்களின் பிரச்சினை கூட பெரிய சமூகப் போராட்டமாக வெளிவரும்,  நீதிமன்ற வளாகத்தில் மாணவர்களையும் பத்திரிகையாளர்களையும் அடித்தவர்கள் வெளிவந்துவிட்டார்கள், பொய்யானக் காணொலிகள், மாணவ தற்கொலை, விவசாயத் தற்கொலைகள் என்றாலும் அது எளியோர் பக்கமேப் பாதிப்பதும் அதற்கு மிகக் கேவலமாக, புதுப்பாணி என்பதும், மேலும் அதற்கு சரியான வழிக் காணாது, மாணவர்கள் காமுகர்கள் என்பதும் மிகவும் தரங்கெட்ட நிலையில் அரசின் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைக் காணமுடிகிறது.

திரும்பவும் ஆட்டக்கோட்பாட்டு வழியிலான அனுமானம்

ஆக, மேலிருக்கும் விசயங்களை வைத்து உய்த்துணரும் போது,  சில ஆட்டக்கோட்பாட்டியலின் படி அனுமானிக்க முடிகிறது. அரசின் தற்போதைய காரியங்கள் பார்ப்பதற்கு சென்னின் தோற்றமுரண் (Amartya Sen’s Paradox) போல் அமைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு யோசிப்பவர்கள் லிபரல் மினிமலிசம் (சிலர் மட்டும் ஒரு விசயத்தை விரும்புவது) எனும் ஒரு நிலையில் இருந்து பேரட்டோ உவப்பு (எல்லோரும் ஒரே விதமான விசயத்தை விரும்புவதைப் போல் ஒரு மாயை உருவாக்குவது) என்பதை நோக்கிச் செலுத்துவது போல் உள்ளது.  மேலும் சமூகக் குழப்பத்திற்கான ஒரு விசயமாக எல்லோருக்கும் தன்னலமும் மற்றும் என்ன யோசிக்கிறோம் அல்லது பேசுகிறோம் எனத் தெரியாமலேயே நினைப்பதும் பேசுவதும் போல் அமைவது, பற்பல சிக்கல்களுக்கே இட்டுச் செல்லும்.

திரும்பவும் சொல்கிறேன்..  வாழ்க தமிழ்! வாழ்க பாரதம்!!  ஆனால், உங்களின் வழியிலல்ல… 2000 வருடம் முன்னர் இருந்த எதோவொரு அனுமானத்தில் ‘அந்த நல்ல வாழ்க்கை’ தான் வேண்டுமென்கிறீர்கள், ஆனால், இருப்பவர்களின் மத்தியில் பிரிவினையை உண்டு பண்ணவும்செய்கிறீர்கள்.  இதுவே தாங்கள் முரணுடன் செயல்படுகிறீர்கள் எனத் தெரியவில்லையா?!

உடன்படுவோர் எதிர்ப்போர் ஆட்டக் கோட்பாடுகளில் கருத்து கொண்டோர் விமர்சிக்கலாம்.  நன்றி!

முகநூல் அளவே ஆகுமாம் அறிவு?!- The philosofby :p

பொதுவெளியில்,  சகோதரர்களுக்கிடையே நடந்த உரையாடலின் தொகுப்பு  (drumming up an apologetic philosophical discussion supposed to be like “Man from Earth”,  ended up something charlatan!).

பின்னணி:  (பின்னணியும் பேசப்படுபொருளும் வேறு!) சில வருடங்களுக்கு முன்னர் எல்லோருடைய வாயிலும் அவலாய் ஆன நித்யானந்த சாமியார் ஒரு வெளிநாட்டுப் பெண்ணுடன் அமர்ந்திருப்பது போல் உள்ளப் படம்!  இருந்தாலும் அதைப் பற்றிய விமர்சனம் அல்ல!

கருத்தாள்வோர்:
நான்                         : ஒரு அஞ்ஞானி
ஒரு தம்பி                  : சமூக ஒழுக்கநிலை சார்ந்து
மற்றொரு தம்பி        : நல்லதையெடு -மற்றன விடு- சார்ந்து
என்வயதொத்தவன்  : மூத்தோர்சொல்-முதுநெல்லிக்கனி-சார்ந்து

பண்டையக் காலத்தின் அறிவு நவீன காலத்தின் சிந்தனை, எந்தவொன்றும் எது எப்படியிருக்கவேண்டும் என்றப் பார்வையை ஒரு பொதுப்படையானப் பார்வையிலும்,  கொஞ்சமே கொஞ்சம் அறிவியல், சமூக அறிவியலின் பார்வையிலும், மிக முக்கியமாக முகநூல் பிரசங்கங்களின் அறிவேப் பிரதானமாகவும் அமையும் பார்வையிலும் அமைந்தது.  வழக்கம் போல பல விசயங்களைக் கலந்துகட்டி அடித்த ஒரு வெகுசன அறியாமைப் பற்றியதொரு பதிவு!

நன்மைவிரும்பி: நல்லதையெடு -மற்றன விடு! ( கூறிவிட்டு சென்றுவிட்டார்!)

ஒழுக்கவாதி:  இது குழப்பத்தின் விளைவு 

அஞ்ஞானி  : ஏனெனில் எல்லோரும் தான் குழப்பத்தில் இருக்கிறோம். யாருக்கும் தெளிவான பதில் தெரியாது. அப்படித் தெரிவது போல் தோன்றும் அவ்வளவு தான்.

அடுத்தவனை என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என யாரும் கூற முடியாது. உன் கேள்வியை, சாமியார் எனில் இப்படித் தான் இருக்கவேண்டுமெனவும் பெண்ணைத் தொடவோ கூடவோக் கூடாது என்று யார் தீர்மானித்தது என மாற்றிக் கேட்டுக் கொள்.

பொதுவாகவும் நல்லது கெட்டது என எதைச் சொல்கிறார்கள் எனக் கேள். விடைக் கிடைக்கும் வழி கிடைக்கலாம், அதை விட்டுவிட்டு இது இப்படித்தான் இருக்க வேண்டும் எனக் கேட்டால், வர்ணாசிரமக் கோட்பாட்டை, இது தான் பாரம்பரியம் என்று பின்பற்றுபவர்களுக்கும், அதை விமர்சித்து உலகம் வளர்ந்துவிட்டது, அதெல்லாம் இப்போது செல்லாது எனக் கேள்வி கேட்பவர்களுக்கும் வித்தியாசம் இருக்காது.

யாரொடு சேர்கிறோம் என்பது முக்கியமில்லை. எதை புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதே முக்கியம்.

ஒழுக்கவாதி:  மனிதர் உருவாக்கிய விதிமுறைகள் ஆனாலும், சராசரி மனிதர் என்பவர் வேறு, சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவரின் நிலை வேறு.  வேதங்களை இம்மாதிரியானவர்கள் மதிப்பதில்லையா! வேதங்கள் தவறா அல்லது இவர்கள் தவறா?  பொதுவாழ்வில் ஒழுக்கம் தவறுவோரை விமர்சிக்கும் உரிமையுண்டு!  (வேதங்கள் ஒழுக்கங்களைப் போதிக்கும் என்பது இவரின் நம்பிக்கை!)

அஞ்ஞானி:  சில விசயங்களை (எல்லாவற்றிலும் அல்ல!) நீ தெளிவாகத் தான் கேட்டிருக்கிறாய், ஆனால், இன்னும் உன் சித்தாந்தத்தில் இருந்து தான் யோசிக்கிறாய். அதில் ஒன்றும் தப்பில்லை, எனினும் அறிவுக்கு அது போதாது. பொது வெளியில் ஒருவரைக் குறை கூறுவது என்பது நாகரீகத்தையும் வசதியையும், அதனால் வரும் பின்விளைவுகளை எதிர்கொள்வதையும் சார்ந்தது. அதை நீ தான் முடிவு செய்யவேண்டும்! வேலைசெய்யாத அரசையும், கல்வித்துறையையும் ஆய்வுத்துறையையும் பொருளாதார கலாச்சார தத்துவார்த்த விசயங்களையும் என்னால் குறைகூறவும் விமர்சிக்கவும் முடியும். ஆனால், இது போல் பொதுவெளியில் உள்ள நடிகர்களையோ, சாமியார்களையோ, அல்லது எந்தவொரு தனிமனிதரைப் பற்றி கருத்து இருந்தாலும் அது என் வேலையில்லை என விட்டுவிடுவேன். அவனவனுக்கு ஒரு விசயத்தைச் செய்ய ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

பொதுவெளியில் உள்ள ஒருவர், சில விசயங்களைச் செய்யலாம் செய்யக்கூடாது என்பது அப்பொழுது உள்ள சமூகத்தைப் பொறுத்தது!  ஒரு இடத்தில் சாராயம் விற்பதும், பலியிடுதலும் சரியாக இருக்கும், இன்னொரு இடத்தில் அதே விசயம் தவறாகவும் இருக்கும். அதே இடத்திலேயே கூட ஒரு நேரம் சரியாக இருக்கும் மற்றொரு நேரம் தவறாகிவிடும்.

இப்படி ஒரே சமூகத்தில் பற்பல விசயங்கள் இருந்ததால் தான் யோகா, காமசூத்திரம், கொக்கோகம், நீதியொழுக்க நூற்கள் போன்ற (தோற்றத்தில் முரண்படும் தத்துவங்கள் ) எல்லாம் நம்மிடம் இருந்து வந்தது, காதல் களவு பற்றி எழுதியவர்கள் பிரம்மச்சரியம் கடைப்பிடித்தவர்கள், ஒரு சாமியார் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லாததும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதும் நம் கலாச்சாரத்தில் உள்ள சுதந்திரம். அதைத் தடுப்பதை விமர்சிக்கிறேன். நீ என்ன சொல்கிறாயோ, பிஜேபி ஆட்களும் இதையே தான் செய்கிறார்கள். அதில் தான் பிரச்சினை.

எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது மிகப் பெரிய சுதந்திரம் மட்டுமல்ல அது மிகப் பெரிய பொறுப்பும் ஆகும்.  உதாரணத்திற்கு, இதையே ஹிட்லர் செய்தார், அவர் கூட்டத்தை விரிவுபடுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஆரியர்கள்’ யாரோடு வேண்டுமானாலும் கூடலாம் என்று ஒரு ஏற்பாடு இருந்தது, அப்படி உருவான பல அனாதைகள் இருந்தனர்.  இதே மாதிரி ஒருக் கூற்றையே கணவன் மனைவி பெற்று குழந்தைகளை தனித்து விடுவதை பெரியார் அவர்தம் உடோபியன் சமூகத்தில் பரிந்துரைத்தார். சொன்னதன் நோக்கம், கிட்டத்தட்ட இரண்டுக்கும் ஒன்று தான். ஆனால் எதை முன்னிறுத்தி அதைச் சொல்கிறார்கள் என்பது மிக முக்கியம். ஆயினும் மிகப் பெரிய சுதந்திரம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம், என்பதே இவ்வெடுத்துக்காட்டின் கருத்து.

வேறு மதங்கள் பிறந்த கலாச்சாரங்கள் போலல்லாமல், நம் கலாச்சாரம் இல்லறம், காடேகுதல், இல்லறத்தில் பிரம்மச்சரியம்/ இல்லறத்துறவு என ஒருங்கே பல முரண்பாடான விசயங்களை அமைக்கிறது, வாழ்க்கையின் வேறுபட்ட விசயங்கள் சில முக்கியமானவற்றை விளங்க வைக்கும் என்பதே அதன் சாராம்சம். இவ்விடத்தில், தந்திர யோக முறைகளில் சில உண்டு, அதை அவர் பயன்படுத்தியிருக்கலாம், அம்மாதிரியானவை சாதாரண ஆட்களுக்கு தவறாகத் தான் தெரியும். வேறுமாதிரி கூறினால், கோவிலில் அபிசேகம் எதற்கு, அதை பசித்தவருக்குத் தரலாமே என்ற நோக்கில் பார்ப்பது போல் பார்த்தால், கோவில்சிலைகளுக்கு செய்யவேண்டியவையென சில முறைகள் தடைபடும். ஒன்றை விட்டு ஒன்றை எப்பொழுதும் பிடிப்போம் ஆனால், அது எதன் பொருட்டு நியாயம் என்பதையும் எது தர்மம் என்றும் யாராலும் அறுதியிட்டு எல்லாம் சொல்ல முடியாது. சொன்னால், ஹிட்லர் செய்தது போலவும், இப்பொழுது இந்துத்துவ குழுக்கள் செய்வது போலவும் ஆகிவிடும்.

ஒழுக்கவாதி: ஆனால், முன்னால் இருந்த சாமியார்கள், ஞானியர் எல்லாம் தமக்கென்று ஒரு ஒழுக்கத்தை வைத்துள்ளனர்.  அதனால் அஞ்ஞானியே, உன் பதிலில் திருப்தியில்லை.  [அக்காலத்தில் ஹிட்லரை ஒப்புக் கொண்டார்கள் அவர் மாவீரனாய் பார்க்கப்பட்டார், ஆனால் தற்பொழுது அப்படியில்லை.]

அஞ்ஞானி:  உனக்கு நான் எழுதியது புரியவில்லையென்பது தெரிகிறது!

முதலில், நான் உனக்கு பதில் சொல்லவில்லை!  நான் கூறியதெல்லாம்  உலகத்தில் நடந்த நடக்கும் விசயங்களையேக் கூறியுள்ளேன். அதனால் நீ திருப்தி அடைவதற்கும் அடையாததற்கும் அதில் ஒன்றுமிலலை.  கொஞ்சம் நேராக, முகத்திலடித்தாற் போல், பதில் சொன்னால் உனக்குப் புரியலாம்.

நீ புத்தர் பற்றியெல்லாம் பேசுகிறாய், ஆனால் அவர் தத்துவத்தைப் பற்றி என்னப் படித்தாய் எனத் தெரியவில்லை. பெரிய ஆட்களின் பெயரில் வரும் பொன்மொழிகளூம் அவர்களைப் பற்றிய எல்லாக் கதைகளும் உண்மையாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு அப்படி நிறைய பொய்யானவை உலவுகின்றன. நிசமாகவே புத்தரைப் படிக்க வேண்டுமென்றால், நீ அவரின் சுக்தங்களைப் படித்தால் தான் அவரைப் பற்றிப் பேச முடியும்.

விவேகானந்தர் புத்தர் போன்ற ஞானியர் எல்லாரும் வாழ்க்கையை நாம் இப்படி அணுகுவது போல் அணுகவில்லை.  ஒரு எடுத்துக்காட்டாக, புத்தர் அவருடைய சோதனையொன்றில், பல உயிரினங்களின் சாணத்தை எடுத்துத் தின்றதாக சாதகக் கதைகள் உண்டு.  பயங்கொள்ளாதிரு எனக் கூறிய விவேகானந்தர், மிகவும் பயந்த சம்பவங்களில் இருந்தே அதைக் கற்றுக் கொண்டார். இதன் அர்த்தம்,  நீ கற்க வேண்டுமென்றால், நிஜமாகவே கற்க வேண்டும், இது தான் சரி, இது தான் தவறு என்பதெல்லாம் கற்பவனின் வேலை கிடையாது,  அல்லது குறைந்தபட்சம் நமக்குத் தெரிந்தது எல்லாம், நாம் அடுத்தவனின் சோதனைகளைப் படித்தது கேட்டதால் தான் என்றும் அடுத்தவன் சொன்னதால் தான் என்பதையும் உணர்ந்திருக்க வேண்டும்.

உனக்கு வர்ணாசிரமம், வேதம், தந்திரம், பெரியார், ஹிட்லர் –(மாவீரன் என்பதெல்லாம் சும்மா கதை,  மேலும் ஹிட்லரை அந்தக் காலத்திலேயே வையாத ஆள் கிடையாது நம் காந்தி முதல் ஹிட்லரின் ஆரிய படைத்தலைவர்கள் வரை பலர் விமர்சித்தனர். பல முறை அவரின் படையாட்களே கொல்ல முயற்சி செய்தும்,  முடியவில்லை)..– இவை எல்லாம் சொன்னது நீ ஒத்துக் கொள்வதற்காக இல்லை, அவையெல்லாம் நடப்பவை நடந்தவை.  மேலும் உன் கருத்துகளில், சில கேள்விகள் நீ கேட்டிருந்தாய், அந்த கேள்விகளுக்கும் நாம் பேசுவதற்கும் பெரிதாக சம்பந்தமில்லை, ஆனாலும், அதற்கானப் பதிலைக் கூறுகிறேன்.

வேதம் என்ன சொன்னது என்று நீ படித்து அறியவில்லை என நினைக்கிறேன், அப்படியிருக்கும் பட்சத்தில், அதனால், வேதம் சொன்னது பொய்யா என்றோ, வேதம் படி நடக்கிறார்களா என்று வேதத்தைப் பற்றித் தெரியாமலேயே அல்லது ஒன்றைப் பற்றித் தெரியாமலேயே அதைப் பற்றி பேசுவது ஞானத்தைப் பெற வேண்டும் என்று நினைப்பவன் செய்யும் செயலா?!  இருக்கட்டும், இருப்பினும் அதற்காகவே  தான் தந்திர முறைகளைப் பற்றிக் கோடுகாட்டியிருந்தேன், (ஆனால் அது என்னவென வேண்டுமென்றே நான் கூறவில்லை, நீ அதைப் பற்றி கேட்பாய் என நினைத்தேன்)! 🙂

நீ யாரைப் பற்றிப் பேசுகிறாயோ அவரைப் பற்றிப் பெரிதாக நான் ஏதும் கூறவில்லையே அதையும் கவனித்திருப்பாய் என நினைக்கிறேன்.  அது ஏன் எனப் புரிந்திருந்தால் மட்டுமே, என் பதில் விளங்கும்.

நீ கற்க வேண்டுமென்றால், நிஜமாகவே கற்க வேண்டும், அப்படியில்லாமல், வெறும் பொழுதுபோக்குக்காகவும் புரணி பேசுவதிலும் இது தான் ஒழுக்கம், தேசபக்தி, தெய்வபக்தி, ஞானம், பகுத்தறிவு மண்ணு மட்டை என்றெல்லாம் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமலும் கற்க அணியமாய் இல்லாமலும் பேசுவதில் எனக்கு விருப்பமுமில்லை, நேரமும் இல்லை.  கற்பதாக இருந்தால் பேசலாம், இல்லையெனில், இப்படியே விடுவதே சிறந்தது! இல்லையெனில் இது துப்புரவாக வெட்டிவேலை.   :D

“மூத்தோர்-முதுநெல்லி”வாதி:   நீ இப்பொழுது தம்பிக்கு சொன்ன பாயிண்ட் ரொம்ப சரி அதாவது ஒரு விசயத்தை  அதை பற்றி நமக்கு முழுவதும் தெரியுமா என்று பார்த்து தான் சொல்ல வேண்டும் அதை விட்டு நம் கருத்த சொல்ல கூடாது ஒரு ஊர்ல ஒருத்தன் மோசம்னா அந்த ஊரா மோசம் இல்ல அது போல தான் இந்த சாமியார் விசயமும் இவன் மோசமெனில் மொத்த ஹிந்து மதமே மோசம் இல்லை அது போல நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை, ஒவ்வெரு விசயத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கும் எனவே அனைத்தையும் தவறாக சொல்ல வேண்டாம்.

அஞ்ஞானி:  நம் ஒழுக்கவாதி தம்பி எல்லாவற்றையும் கேள்விகேட்டுப் பழகுகிறான், அது நல்ல விசயம் தான். ஆயினும் சில முற்சார்பு கொண்ட முடிவுகளை நம் எல்லோரையும் போல் அவனும் எடுக்கிறான்.  அதைத் தான் குறிப்பிட்டுள்ளேன்.   நம் முன்னோர்கள் சொன்னதெல்லாம் எல்லாக் காலத்திலும் சரிப்பட்டுவருமா என நாம் தான் கண்டுணர வேண்டும்!

ஆதலால், முன்னாடியே அவர்கள் கூறியது சரியென்றோ தவறென்றோக் கூற முடியாது, வாழ்வதில் இருந்து அதன் அர்த்தங்களை எடுத்துக் கொள்ளலாம். வாழ்க்கையை வாழ்வதைத் தவிர வேறென்ன வேலை நமக்கு!   நம் கண் முன்னாலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த விசயங்களும், ஹைதராபாத் பல்கலைக் கழகத்திலும் நடந்தவையெல்லாம், பழைமைக்கும் புதுமைக்கும் நடக்கும் யுத்தங்கள்.  சாதிகள்/சமூக நிலைகளையும் கொண்டிருந்த வேற்கத்தியர்களும் காலத்திற்கேற்ப மாற்றமடைந்துள்ளனர்.  நாமும் எதையெடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, நம் இரத்தத்தினை எடுத்துப் பரிசோதித்தால் தெரியும் நாம் எல்லோரும் சொல்லும் ஜாதிக்கும் மரபணு சொல்லும் ஜாதிக்கும் உள்ள வித்தியாசம். 1500 வருடங்களுக்கு முன்னர், அதாவது குப்தர்கள் காலம்,  தான் சாதிக்குள் கல்யாணம் பண்ணும் வழக்கம் பெருவாரியாகப் புகுத்தப்பட்டுள்ளது, என புதிய மரபணு ஆய்வு கூறியுள்ளது (சில வாரங்களுக்கு முன் வந்த ஆய்வுக் கட்டுரை! (http://www.pnas.org/content/113/6/1594.abstract).  இதன் அர்த்தம், நம் இரத்தத்தில் அனைத்து ஜாதியின் கூறுகளும் பெரும்பாலும் இருக்க வேண்டும்.  ஆக, 1500 வருடம் முன்னர் ஒரு மாற்றம் வந்துள்ளது,  1500 வருடம் முன்னால் இருந்ததும் முன்னோர் தான், அடுத்து வந்தவர்களும் முன்னோர் தான்.  இதில்  இருவரும் முன்னோர் தான்,  எது முன்னோர் சொன்னது?   1500 வருடம் முன்னாடி என்றால், வேதகாலத்தையொட்டி, அப்படியானால், வேதகாலத்தாட்கள் ஒழுங்காக இருந்துள்ளனர். இப்படி நமக்குத் தெரியாத பல விசயங்கள் உள்ளன..   நாம் தான் தெளிவைத் தேடிக் கொள்ளவேண்டும்.  அதன் துவக்கம் தான் இந்த உரையாடல்!

எல்லாவற்றையும் கேள்வி கேட்கலாம் புரட்சி செய்யலாம், அமைதியாகவும் வாழலாம், இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்பதும் இரண்டுமே கர்மயோகத்தில் சேர்த்தி என்று கூறுவதும் தான் நம் கலாச்சாரத்தின் அழகு!!

ஒழுக்கவாதி: எல்லாம் சரி,  இவர் தனிமனிதர் கிடையாது.  இந்த ஆள் செய்வதெல்லாவற்றையும் செய்துவிட்டு தான் ஆண்மையற்றவன் என்று சொன்னாரே!  புத்தர் இல்லற வாழ்வைவிட்டு வந்தப் பின்னர் பிரம்மச்சாரியாய் தானே இருந்தார்.  [உள்ளர்த்தம்: சாமியாரானால் பிரம்மச்சரியம் அவசியம்.. இதே போல் அவரைத் தொடர்பவுரும் தவறுகள் செய்ய வாய்ப்புண்டு]

அஞ்ஞானி: பிரம்மச்சரியத்துக்கும் கல்யாணத்துக்கும் சம்பந்தம் கிடையாது. கல்யாணம் ஒருவர் கூட பிரம்மச்சாரியாய் இருக்கலாம், கல்யாணம் ஆகாத ஒருவர் பிரம்மச்சாரியாய் இல்லாமலும் இருக்கலாம்.  அவரின் யோகமுறையைப் பார்த்தால் தெரியும்.

 

எனக்கு இவரின் யோகமுறைத் தெரியாது, ஆனால், அவை தந்திர யோக சார்ந்தவையென்று என்னால் அவர்களின் சில முறைகளைக் கொண்டுக் கூற முடியும். அவை நாம் நினைப்பது போலானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. அவ்வளவு தான்! தனிமனிதன் என்பவன் எப்பொழுதும் தனிமனிதன் தான், சமூகம் கூட்டம் என்பதெல்லாம் எல்லோருடைய வசதிக்கானது.

ஒழுக்கவாதி:  நமக்குள் புரிதல் இல்லை எனத் தோன்றுகிறது! ஆனால் நீ வேறொருப் பாதையைக் காட்டுகிறாய்.  புரிதல் முக்கியம்தானே!

அஞ்ஞானி: இங்கு உன் புரிதலும் என் புரிதலும் ஒன்றும் செய்யப் போவது கிடையாது. அது அங்கு இருப்பதை அறிவதே முக்கியம். பிரம்மச்சரியம் பற்றியோ யோகம் பற்றியோ, தந்திரம் பற்றியோ குறைந்தபட்சம் அறிதல் நலம்!  அவற்றையெல்லாம் படித்தால் கூடப் புரியும், நீ கேள்விப்பட்டதற்கும் உண்மைக்கும் இடையேயான தூரம் எவ்வளவு என்பதை.


ஒரு மனிதனின் ஆண்மைத் தன்மையை மாற்றுவது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. யோகமுறையானாலும், அல்லது வேறு வேதி மருந்து வகையிலும் அதை மாற்றிவிடலாம். அது அவருக்கு சாத்தியமா இல்லையா என்பதெல்லாம் நம் விவாதத்திற்குரியது இல்லை. ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று இல்லை.  இப்பொழுது, புரிதல் முக்கியம் தான், ஆனால், அது எவ்வளவு சரியானது.. ஏனெனில் நம் புரிதலே முழுவுண்மையில்லை. உதாரணத்திற்கு, ஒரே நிறத்தைப் பார்க்கும் போது கூட நாம் இருவரும் மனிதர்களாகவும் அண்ணன் தம்பியாகவும் இருக்கும் போது கூட, உன் மூளையும் என் மூளையும் ஒரே அளவு நிறத்தைக் காண்பதில்லை. முழுவுண்மை மிகவும் வித்தியாசமானது. அதனால் புரிதல் என்பதே ஒரு எல்லைக்குட்பட்டது.

 திரும்பவும் சொல்கிறேன் நான் சொன்னதில் கருத்து என்ற ஒன்றிருந்தால் அது “கருத்தே இல்லாமல் இருப்பது, அதாவது, கற்றுக் கொண்டேயிரு!” என்ற ஒன்று தான்!   மற்றவையெல்லாம் வரலாறும் இருக்கும் தத்துவங்களும் மட்டுமே!  முடிவைத் தேடாதே… அவை நடந்தேத் தீரும்.  அறியாமையென்பதை உணர்வதே அறிவைத் தேடவைப்பது. ஆனால் அறிவுத் தெளிவு போல் தோன்றுவது/ இருப்பது உண்மையில் அறிவு கிடையாது, கிழக்கத்தியத் தத்துவங்களின் பிரகாரம்!
ஒரு தத்துவவியலாளர், ஒரு வசதியுமில்லாக்  காலத்திலேயே கிரேக்கர்களும் இந்தியர்களும் அவ்வளவு தத்துவம் வளர்த்தார்கள், ஆனால் தற்காலத்தில் உருப்படியாக ஒரு விவாதம் கூட நடைபெறுவதில்லை எனக் கூறியிருந்தார், ஆனால், அதுவே 30 வருடங்களுக்கு முந்தைய நூல்!   ஆனால் இப்படியெல்லாம் பேசுவதையும் எழுதுவதையும் பார்த்தால்,  நாம் இன்னும் பின்னோக்கி செல்கிறோம் என நினைக்கிறேன்.  “அறிவுக்கும்/கற்றலுக்கும் முகநூல் கேலிப்படங்களுக்கும் சந்தத்துடன் வரும் பொன்மொழிகளுக்கும் சம்பந்தமில்லை” எனக் கூறும் அளவுக்கே நம் அறிவு உள்ளதே.. 😦

அறிவியற்பா: பொருண்மையீர்ப்பு அலைகள்!

பொருண்மையீர்ப்பு அலைகளில் முக்கியப் பங்காற்றியுள்ள இந்திய
Tata Institute for Fundamental Research, Chennai Mathematical Insitute, Indian Institute of Sci. Ed. and Research – Trivandrum and Kolkata, Inter-University Campus for Astronomy and Astrophysics, IIT Gandhinagar, Raja Ramanna Center for Advanced Tech.-Indore -ஆய்வாளர்களுக்கு வாழ்த்துகள்!

நேற்று வெளிவந்த பொருண்மையீர்ப்பு அலைகளைப் பற்றிய கண்டுபிடிப்பை வைத்து ஒரு வெண்பா!

சொற்பிழை பொருட்பிழை யிருப்பினும் பொறுத்தருளிக் கோடி காட்டுக!  தளை தட்டினாலும் தலை தட்டாமல் கூறுக!

ஈரேழ் உலகைச் சூலகத்தில்  இட்டவள்
சீராய் விரித்த வியன்செயல் ஓதுவோம்
கூராய் குறுக்கி, பலகணியில் நோக்கிலும் (அதன்)
தீரா அழகே/அறிவே சிறப்பு

[இரண்யகர்ப்பம் போன்ற பேரண்டம் வெடித்து வந்ததை, தெரிந்தவற்றைக் கொண்டுக் காணும் போதும், அதன் அழகு பீடுடையது.]

ஏந்திழையின்பொன்சூல் வெடித்தே விரிய
இழையெங்கும் சூழ்கொண் டுழன்றுப் பொடிக்க
மழையாய், களிகொண்டத் தூள்கூடி கூட்டுத்தூள்
விசைபெற்றே ஆன தணு!

[பெருவெடிப்பு சூல் கொண்டு வெடித்தப்பின்பு, ஆற்றல் இழைவடிவாக இருந்து, அதனின்று மென் துகள்கள், அதனின்று வன்  துகள்கள், அணுவும் உண்டானது ]

அணுக்கள் அணுக்கமாகி ஈங்குப் பொருளமைய
ஆழியது வெந்தது போல் கோளமெங்கும் விரிய
இணுங்கிய தூள்கூடி விண்மீனாய் ஆகியே
ஈன்றவே தீப்பிழம்(பு) உலகு.

[அணுக்கள் கூடி ஒளிப்பிழம்பாகப் பொருளாகவும், அவை கூடி விண்மீன் உண்டானது]

விண்மீன் உமிழ்ந்த ஒளிவெளி செல்ல
விழுகூன் கிழமீன் உளதில் இடுங்கிட
வில்லதின் நாண்போல் அழுத்தும் இழுவிசையின்
வன்மை சமன்செய் அடர்வு.

[அப்படிக் கூடிய விண்மீன் கிழப்பருவமெய்தி இறக்கத் தலைப்படும் பொழுது, அதன் கதிர்வீச்சு அமர்ந்து உள்ளுக்குள் ஈர்ப்பு அதிகமாகி அடர்த்தி அதிகமாகும்]

விதைத்தாள் அன்னை, துயில்விப்பான் பிறைசூடி (இவ்வண்ணம்)
விண்மீன் இயக்கம் வியனுறு வல்வித்தை
விரித்துரைத்த சந்திர சேகரன் பாடியதே
விண்மீனின் மீளாத் துயில்.

[சக்திப் படைத்ததை, சிவம் அழிப்பது போல், சந்திர சேகரின் விண்மீன் அழியும் காலம் சொன்னார்]

துயின்றமீன் உண்ணும் பசிமட்டும் ஆறாதே
எயின்று சுழற்றி வளைத்தே அருந்தும்
அருந்தவசி கொள்ளும் அருளொளி போல
வெறுமிடஞ்செய் கார்துளை இயல்பு.

[விண்மீன் இறந்து கருந்துளையாக, சுற்றி இருப்பவறறை விழுங்கிவிடும்]

களவாடும் கார்வண்ணன் பொன்வெண்ணெய் கொண்டதேபோல்
நலமோடு வெள்ளிசிந்தும் சீரொளியை விள்ளுமது
பலமோடு உள்ளிழுத்தே சேர அதன்பால்
விளமற்றே விழும் ஒளி.

[வெண்ணெயால் கவரப்பட்ட கண்ணன் போல், ஒளி முதற்கொண்டு விழுங்கும்]
அஃதோடு நிற்பதில்லை

சிந்திய மீன்களெல்லாம், நேரவெளிப் போர்வையில்.
சீந்தில் கொடிகொள் வேலியன்ன கார்துளையும்.
வீழ்ந்ததும் கூடிட வீரியம் ஏறிடும்
சந்ததமும் கூடும் நிறை

[அனைத்தும் நேர வெளிதனில் இருக்க, கருந்துளையின் அண்மையில் இருப்பவற்றை இழுத்து, அதன் நிறை அதிகமாகும்]

கந்தலாகும் காலவெளி, கார்துளையின் மீநிறையால்
பந்தல் தோரணம் தென்றலுடன் இசைவதுபோல்
வந்தவை சூழ்ந்தோட வெளியில் அலையடிக்கும்
சேந்தசிவை வேய்குழல் போல்.

மரிக்காதக் கடலலையாய், இடித்த கணந்தாண்டி
மாயை சுமந்தே அகண்டம் திரிந்து
மயங்கா வியற்கைப் புலவர் படித்த
மலராக் கொடிப்பூத்த மலர்.

[கருந்துளை நேரவெளி அமைப்பை துளையிடும், அதன் இயக்கம் அனைத்தும் நேரவெளி அமைப்பில் அலைகளை உண்டு பண்ணும்]

லீகோ செங்கல் அடுக்கி ஓரியல்பு
நீளொளிக் கொண்டுக் குறுக்கிடச் செய்ய
வீழ்ந்தமலர் ஓர்முத்தோன் (Einstein) கற்பனையின் ஈற்றுண்மை
இன்னும் அறிவோம் சிறப்பு!

ஓர்முத்தோன் விட்டெறிந்த வித்துகளில் ஓர்முத்து
ஓர்ந்திரு ஆய்வர் அலமாந்து அயர்வாய்
ஆடிய லீகோவில் சிக்கும் அலையது
உள்ளங்கை நெல்லிக் கனி.

[ஐன்ஸ்டைனின் சார்புக் கொள்கையினால் உண்டான ஈர்ப்புவிசையின் அளவு லீகோ அறிவியற் கூட்டமைப்பின், லேசர் குறுக்கீட்டுவிளைவின் வழியாக உணரப்பட்டது!  ஓர்-முத்து என்பது Einstein-நின் தனித்தமிழ் சேட்டை!]

வளர்ந்தாலும் வளரலாம்! 😛

கலாச்சாரக் கண்ணோட்டத்தில் தோற்றமுரண்!

நண்பர் சுதாகருக்கு அவர்களின் பிரித்தானிய ஆய்வுக்குழு தலைவர் தமிழில் பிறந்த நாள் வாழ்த்துக் கூற பிரயத்தனப்பட்டு தமிழில் எழுதி வாழ்த்தியதையொட்டியும் அதே நேரத்தில் இந்தியப் பாரம்பரியம் என்றால் என்னவெனத் தெரியாமல் இருந்தது பற்றியும், அதே சமயம், இந்தியத்தனமானது தான்சானியா நாட்டுப் பெண்ணை அவமானப்படுத்தியத் தருணத்தில் போகிற போக்கில் எழுதியது…

மற்ற நாட்டினர் நம்/கிழக்கத்திய கலாச்சாரங்களைப் பற்றிக் கற்கும் ஒரு ஆவல் உள்ளதை, பெரும்பாலான சமயங்களில் காண்கிறேன், இந்தியன் என்பதற்கான முன் முடிவுகள் இருந்தாலும், கவனித்து உள்வாங்குதல் அவர்களிடம் கற்க வேண்டிய ஒரு நல்ல குணம். என் குழுவில் இருந்த சில இந்தியர்கள், இந்தியாவையும் கலாச்சாரத்தையும் கேவலமாகக் குறிப்பிடுவதை பெரும் பாக்கியமாகக் கருதி செய்வார்கள். ஆயினும், என்வரையில் இந்தியத்தனம், “தமிழன் டா” எனக் காண்பிக்க நேரங்கள் வரும்பொழுது அதைக் காண்பிப்பதுண்டு. உதாரணத்துக்கு, எனது குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பொழுது, நானும் தமிழோடு ஆங்கிலம் அல்லது டாய்சில் எழுதுவதுண்டு!

இதில் மற்றநாட்டினர் நம் நாட்டவர்க்கு இந்தியராய் இருப்பதற்கு கூச்சமோ தாழ்வுமனப்பான்மையோ இருக்கிறதா எனவும் உங்களுக்கெல்லாம் identity crisis இருக்கிறதா என என்னிடம் கேட்கும் அளவுக்கு செய்திருக்கிறார்கள். எம் செர்மானிய நண்பர்கள், நிறைய நேரங்களில் நானும் என் தோழியையும் மட்டுமே இந்தியர்கள் போல் தெரிகிறீர்கள் என்பர். ஆனால், நம் நாட்டவர் நாங்கள் சேர்ந்து வாழ்வதைப் பார்க்கும் பொழுது, நாங்கள் இந்தியத் தன்மையோடு இருந்தாலும் எங்களின் வாழ்க்கையைக் கேட்டு ஒரு நிமிடம் நிலைதடுமாறுவதும் அப்பொழுது மட்டும் இந்தியக் கலாச்சாரத்தை அவர்களுக்குள் “பேசுவதும்” வேறுகதை!

இங்கு இந்திய விழாவொன்றில், “ஈஸ்வர், இந்தியனென்றாலே இவர்கள் கீழாகப் பேசுகிறார்கள், நீ தான் இவர்களுக்கு தக்கப் பதிலடி தரவேண்டும்” என என்னை இந்தியக் கலாச்சாரம் பற்றிப் பேச அழைத்தார்கள். போய் பேசும் பொழுது, தெரிந்தவற்றைப் பேசுவதில் என்ன இருக்கிறது என்பதால், பழைய விசயங்களில் நவீனக் கண்ணோட்டம் அமையுமாறு, வெவ்வேறு புதிய நிரூபணங்களையும் ஆய்வுகளையும், சிலவற்றில் சில வாரங்களுக்கு முன்னர் வந்த இனப் பண்பாட்டு மொழியியல் மற்றும் மரபியல் சார் ஆய்வுகளையும் என் உரையில் சேர்த்திருந்தேன். இதனிடையே அரங்கில் வேண்டிய வசதிகள் செய்யாமல் ஏகப்பட்டக் குழப்பங்கள் வேறு, இந்தக் குளறுபடிகளுக்கு நடுவிலும், பல வெளிநாட்டவர்கள் என்னுரை முடிந்த பின்னரும் ஆர்வமாக என்னிடம் பேசிக் கலந்து கொண்டார்கள். நம் நாட்டவர்கள் “நான் இதையெல்லாம் பள்ளியிலே படித்திருக்கிறேன்” என ஒருப் பொத்தாம் பொதுவான கருத்தைத் தெரிவித்தனர்! இதைக் கேட்டதும் என் தோழி “முடியல அத்தான், இவங்களோட! நம்ம வேலையை செஞ்சுட்டுக் கிளம்புவோமா..” என்றார்.

போதாதற்கு நம்மவர்களின் குளறுபடிகளை, முகத்திலறைந்தது போல் பேசுகிறோம் என்பதால், இன்னும் வசதியாக, “எங்களுக்கு இந்தியப் பாரம்பரியம், பணிவைப் போதித்திருக்கிறது ஆனால், நீங்கள் இந்தியப் பாரம்பரியம் என்னவென்றே அறியவில்லை” யெனப் போட்டார்களே, ஒரு போடு! அட, எப்படியாப்பட்டது அப்பா நீங்களறிந்த இந்தியப் பண்பாடு.. நல்லதாப் போச்சு நீங்க அங்கிட்டு இருங்க, நாங்க இங்கிட்டு இருக்கோம் என்று கூறிவிட்டோம்!! பெரும்பாலானோர்களுக்கு, நம் பாரம்பரியத்தை அறியவே நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை! இதில், அடுத்தவர்கள் நம் பாரம்பரியத்தைப் புகழ்ந்துரைத்தால், ஒன்று மறுதலிப்பது, அல்லது தேவையில்லாதவொன்றை ஏற்றிக் கூறுவது என வேறுநிலைக்கு செல்வதை நிறைய நேரம் கண்டிருக்கிறேன்!

இதில் வரிக்கு வரி மேற்கோளாகப் பல குறள்களைத் தரலாம்! ஆனாலும், பல விசயங்களிலும் சமயங்களிலும் எனக்கானது, இவ்விடத்தில் முரண்நகையாக அமைவதும், ஒரு சிறப்பு! “அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டிக் கொளல்!” (அவையறிதல்).

 பிற்சேர்க்கை:நேற்று சுதாகரின் பிரித்தானிய குழுவினர் தமிழில் வாழ்த்தளித்ததைப் பார்த்தோம் அல்லவா.. அந்நேரத்தில், எனக்குக் கிடைத்த ஒரு அனுபவத்தைக் கூற மறந்துவிட்டேன்.  ஏற்கனவே, இதைப் பற்றி சிலக் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

சரியாக, இன்று இராபர்ட் ஹோப்ஸ்டாட்டர் எனும் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளரின் பிறந்த நாளாம்! பார்த்ததும் நினைவு வந்தது! இவரின் மகன் பேராசிரியர் டக்ளஸ் ஹோப்ஸ்டாட்டர், கணிதவியலாளரும் அறிதிறன் சார்ந்தப் புலங்களில் ஆராய்ச்சி செய்பவரும் ஆவார். இவருடைய மிகவும் புகழ்பெற்ற சனரஞ்சக “கோடல் எஸ்சர் பாஹ்” (Gödel, Escher, Bach) புத்தகத்துக்காக புலிட்சர் விருதைப் பெற்றவர். நான், அவரிடம் ஒருமுறை விவாதத்தில் ஈடுபட நேர்ந்தது. என்னுடைய பலக் காட்டமானக் கேள்விகளுக்கு அமைதியாகவும் பொறுப்புடனும் பதிலளித்திருந்தார். தவிரவும், தமிழ் பற்றி மிகவும் புகழ்ந்திருந்தார்.

அப்பொழுது, அவர் தமிழின் எழுத்துவடிவையும் இலக்கணத்தையும் பார்த்து வியந்து, தமிழைக் கற்றுக்கொண்டதாகவும், இன்னும் அந்நாட்களில் அவர் வாங்கிய விகடன் போன்ற சஞ்சிகைகளும், அவர் சேர்த்த தமிழ் புத்தகங்களும் இன்னும் அவரிடம் உள்ளதாகவும் அவ்வப்பொழுது தமிழில் படிப்பதாகவும் கூறினார்.

ம்ம்ம்ம்… நம் தமிழ் பெற்றோர்களை நினைத்தால் என்ன சொல்வதென்றே விளங்கவில்லை!