கற்றலும் சமூகமும் – 4 : யோகநாளும் அதைத் தொடந்த சலசலப்பும்!

வழக்கம் போல, கமெண்ட் கம்பனாய்க் கருத்துச்சொல்லப் போய், அதுவேவொருப் பதிவான கதை. இந்த யோகநாள் வந்தததும் வந்தது, விதவிதமாய் கதைகள் சுற்றிவருகின்றன! சிந்துசமவெளி நாகரீக பசுபதி யோகநிலையை வைத்து யோகக்கலை அந்நாகரீகத்திலேயே இருந்தது எனக் கருதுவோரும் உண்டு. பிலாடஸ் போன்றவற்றில் இருந்து யோகா வந்தது என விளங்காமல் கேட்ட மேற்கத்தியோரையும் கண்டிருக்கிறேன்– பாவம், அவர்களுக்கு இந்திய வரலாறுத் தெரிய நியாயமில்லை. ஆனால், சிலநாள்களாக இணையத்தில் நடப்பவற்றை வைத்துப் பார்க்குங்கால், நமக்கு உண்மையில் வரலாற்றையறிய விருப்பமா, இல்லை எவனையாவது போட்டுமிதித்தால் நலம் என்ற உளவியல் பிரச்சினையா எனத் தெரியவில்லை!

நேற்று ஒருவர், அவர்தம் கட்டுரையில், தான் எப்படியெல்லாம் வலதுசாரி எனும் வரையறைக்குள் அடங்காதவர் என்று இடதுபக்கட்டு இண்டிகேட்டரை எரியவிட்டார். அப்படியே, இடதுசாரிகள் எப்படியெல்லாம் நேர்மையாகப் போராடினால் எப்படியெல்லாம் முட்டுக்கொடுத்து ஆதரிப்பார் என சொல்லிக்கொண்டே வலதுபக்கம் கையைப்போட்டு, ஆதலால் வலதுசாரிகள் தான் நாட்டை நன்றாகவும் ஒழுக்கமாகவும் நடத்தமுடியும் எனக்கூறி நேராக விட்டு அடித்துக் கொண்டேப் போனார். (சிலவருடங்களாக, இம்மாதிரிப் பேசும் நிறையப் பேரைக் காண நேர்கிறது )

இன்னொருவர் வெகு குதர்க்கமாக, யோகாவில் உள்ள சில விசயங்களை அந்தக்கால மேற்கத்திய உடற்கட்டுவீரர் சாண்டோவின் பயிற்சியில் இருந்து எடுத்ததாகக் கூறினார். எப்படியெல்லாம் வலதுசாரிகள் வரலாற்றுத்திரிப்புவேலைகளைச் செய்கிறார்கள் எனக்கூறும் கூட்டத்தைச் சார்ந்த அவரே வரலாற்றுத்திரிப்பு வேலைகளைச் செய்திருந்ததையும் காண நேர்ந்தது.

இவர்கள் இருவரும் யாருக்காக வேலைசெய்கிறார்கள் என விளங்கவில்லை.

இன்னொருப் பதிவில், யோகாவினை வைத்துச்செய்யப்படும் அரசியலைக் கிண்டல் செய்திருந்தார், நம் நண்பர் <span class=”_247o”>Ganesh Ezhumalai! </span> நான் அதில் சீரியசாக ஒருப் பதிலைப் பதிய, ஒரு நண்பர், யோகாவின் வரலாறு தான் என்ன எனக்கேட்க, இப்பதிவு வளர்ந்துவிட்டது.

நம்மிடம் இருந்து சென்ற திபெத்திய புத்தமத தந்திர யோகங்களே, ஓரளவுப் பழமையானது எனும் போது, அதன் அழகைக் காண நேர்ந்தாற்நல்லது, சைக்கோசோமாட்டிக்காக உடலில் அது ஊடாடுவதைக் கண்டு இன்புற்றால் நலம். அரைகுறை வரலாற்றறிவு யாருக்கும் நல்லதில்லை. தற்போதைய அறிவியலும் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள், வயிற்றின் இயக்கம் சார்ந்தே நம் மூளை இயங்குவதாகக் கூறுகிறது. IBS போன்ற வயிற்றுபாதைகளுக்கு நமக்கு இன்னும் மருந்து என்னவெனத் தெளிவாகத் தெரியவில்லை என்கின்றனசில மருத்துவ ஆய்வுகள். ஆனால், மனது சரியில்லாமல் போவதற்கு வயிறும் அதற்கு பின்னுள்ள சூக்கும முடிச்சுகளும் (நாபி, மணிப்பூர சக்கரம்) ஒரு வகையில் காரணம் என ஊகித்திருக்கிறார்கள். சப்பான் முன்னோர்கள் கூட முட்டாள்களல்லர் போலிருக்கிறது, உதாரணத்துக்கு அவர்கள் மனநிலை பிரண்டவர்களை வயிறு சரியில்லாதார் எனக் குறிப்பிடுவதாக, என்னுடைய யோக குரு குறிப்பிடுவார்.</div>

இன்னொரு உதாரணம், களரி, பரதம் போன்றவை, வேட்டையாடும்போது கற்ற விசயங்கள், உடற்பயிற்சி ஆயின, களரி போன்ற போர்முறைகளாயின, பின்னர் போரல்லாத காலத்தில் அவை ஆடும் போது பரதம் போன்ற கலை பிறந்தன, இவையெல்லாம் இருக்கும் போதே, மெதுவாகவும், வேகமாகவும் பயிற்சிகளாகும் போது, கிரியைகளூம் ஆசனமும் வந்திருக்க வேண்டும். நான் செர்மனி வந்தப்புதிதில், அப்போதெல்லாம், யூட்யூப், விக்கி போன்ற விசயங்கள் இல்லாத நேரம், எங்கள் ஊரில் களரி, சிலம்பம், மல்யுத்தம், மல்லர்கம்பம் போன்ற பலபோர் விளையாட்டுகள் உண்டு எனவொரு விவாதத்தில் பேச, “நீ காந்தி ஊர்க்காரன், யோகா நாட்டுக்காரன், உங்கள் ஊரில் என்ன போர்க்கலை?” என ஆச்சரியமாகக் கேட்டனர். யோகா போன்ற விசயங்களே போர்க்கலையின் நீட்சிதான் என்று சொன்னால் அவர்களுக்கு அவையெல்லாம் முரணானவைப் போலத் தோன்றும். ஆச்சரியம் என்னவென்றால் நம்மாட்களும் வெள்ளைக்காரர்கள் மாதிரியே தற்காலத்தில் ஒரு நேர்க்கோட்டில் யோசிப்பது தான். ஒரு முன்முடிவை வைத்துக்கொண்டு யோசித்தால் எங்கிட்டும் போக இயலாது.

எல்லாக் கலாச்சாரமும் படிப்பினைகளைத் தரும். எல்லாக் கலாச்சாரமும் எதிரிகளிடமிருந்துத் தப்பிக்க யோசனைகள் சொல்லும், சந்ததிகளை விருத்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் போதிக்கும். யாரையும் குறைத்து மதிப்பிடுவது நல்லதல்ல. கற்றுக் கொள்ள ஆசையாயிருந்தால், தலையைத் திறந்து வைத்திருந்தால் போதும், மெய்யும் விழும் பொய்யும் விழும், அதை சந்ததியினருக்குக் கடத்துவது மட்டுமே நம் வேலை, பொய்யாய் இருந்தால், அறிவியல் அறிவு ஒதுக்கித் தள்ளிவிட்டு சென்று கொண்டேயிருக்கும்.

செயற்கை அறிவுத்திறமுள்ளப் பாவைகள் ஏற்கனவே இணையத்தைப் படித்து அவற்றுக்குள் ஏதேதோப் பேசிக் கொள்கின்றன. மேலும், அவை, இணைய அகராதிகளில் இருக்கும் கெட்டவார்த்தைகளைத்தான் முதலில் கற்றுக்கொள்கின்றன. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாம் பண்ணுகிற அரசியலையெல்லாம் அவை படித்துப் புரிந்து கொண்டால், இவய்ங்கக்கிட்ட இருந்து வந்தோமே என நொந்து இகழாதா, நம்மையெல்லாம். கரடியேக் காறித்துப்பிய குலம் என்றபேர் நமக்குத் தேவையா?

இதைப் போய் கற்றலும் சமூகமும் தொடரில் சேர்த்த என்னை என்ன சொல்ல? அதாவது கற்றலும் சமூகமும் தொடரில் 5வது பாகம் வந்துவிட்டது, ஆனால் சல்லிக்கட்டைப் பற்றியெல்லாம் ((எம்புட்டு நாளா??)) பேசும் 4-ஆம் பாகம், இன்ன்ன்ன்ன்ன்னும் ட்ராஃப்டில் கிடக்கிறது. ஆதலால், பாகம் நான்கு, வெசனப்படாதீய!